படிப்படியான வளர்ச்சியில் 18 மாதங்கள்

/

படிப்படியான வளர்ச்சியில் 18 மாதங்கள்

May 2017 - Oct 2017

"மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் மூன்றாம் அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை"

என் மரியாதைக்குரிய மதுரை மத்திய தொகுதி மக்களுக்கு வணக்கம்!

மக்களோடு முன் நின்று மக்களுக்காக செயல் ஆற்றிடும் மரபு வழி வந்த மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினராக நான் பொறுப்பேற்று 18- மாதங்கள் “ நிறைவடைந்துள்ளது. அரசியல் பாரம்பரியமிக்க குடும்ப அடையாளம் என்பதை ஆதாரமாக மட்டுமே எடுத்து கொண்டு தலைவர் கலைஞர், செயல் தலைவர் தளபதியார் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நான் மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்திலுமே என்னுடைய தனித்தன்மை வெளிப்படுத்தி உள்ளதோடு அதனை எனது தொகுதி சார்ந்த படிப்படியான வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகிறேன். என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ததது மிகச்சரியான தேர்வு என கட்சி மாறுபாடின்றி ஒவ்வொரு வாக்காளணும் நினைக்கின்ற அளவில் அடிப்படை பிரச்சனைகளில் முக்கியத்துவம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதற்க்கு எப்போதும் ஒத்துழைப்பு தரும் மதுரை மத்திய தொகுதி மக்களாகிய உங்களுக்கு எனது நன்றிகள்.

சாதராண மனிதர்களும் அதிகாரம் பெறவேண்டும் என்பதற்க்காகவும் அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து இருக்க கூடாது என்பதற்க்காகவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் நடத்திட வேண்டியது அவசியம் தமிழகத்தின் அசாதாரண சூழல், ஆளும்கட்சியின் அலைச்சியத்தால் ஒரு வருடம் ஆகியும் தேர்தல் நடைபெறவில்லை. இதனால் வார்டுகள் வாரியாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட கவுன்சிலர்கள் இல்லாத சூழ்நிலையில் மாநகராட்சி தொடர்பான அனைத்து பணிகளையுமே நானே நேரடியாக தலையிட்டு தீர்வு கண்டு வருகிறேன்.

1. நமது மதுரை மத்திய தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு மட்டும் கடந்த ஆறுமாதங்களில் 31 கடிதம் எழுதி அதன் மூலம் பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது

ஆனால் இதற்க்கு முற்றிலும் எதிரான முடங்கி போய் இருக்கின்ற ஆளும் கட்சியின் செயல்படாத தன்மைக்கு மத்தியிலும்,மதுரை மத்திய தொகுதியின் எதிர்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஒரு ஆண்டில் என்னால் முடிந்த ஆக்கப்பூர்வமான பணிகளை செய்துள்ளேன்.

2. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் நமது மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மீனாட்சியம்மன் திருக்கோவில் சித்திரை வீதியில் கழிப்பறை அமைத்திடவும், மாநகராட்சி ஆணையாளருக்கு கடந்த மார்ச் மாதம் ஜூலை மாதங்களில் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் கோரிக்கை ஏற்கப்பட்டு நவீன மின்னணு கழிப்பறைகள் அமைக்கும் பணியும் மழைநீர் வடிகால் தங்குதடையின்றி செல்ல மணல்களும் அகற்றப்பட்டு மழை காலங்களில் கோவிலுக்குள் தண்ணீர் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

3. இதை போலவே பல்வேறு பிரச்சனைகளில் நான் நேரடியாக ஆய்வு செய்து மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலமாக தீர்வு காணப்பட்ட பிரச்சனைகள்.

3.1. எல்லிஸ் நகர் 70 அடி ரோடு கால்வாயில் உள்ள பாலத்தின் தடுப்புசுவர் புதிதாக அமைக்கப்பட்டது.

3.2. போடி லைன் பகுதியில் செயல்படாமல் இருந்த சின்டெக்ஸ் தொட்டி சீரமைக்கப்பட்டது.

3.3. வைகை குடியிருப்போர் பகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நீரேற்ற இணைப்பு எற்படுத்தப்பட்டது.

3.4. தத்தனேரி சிவகாமி நகரில் மூன்று ஆண்டுகள் செயல்படாமல் இருந்த மாநகராட்சி கழிப்பறை தண்ணீர் வசதிகளுடன் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டது.

3.5. கீழ வைத்தியநாதபுரம் தனியார் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

3.6. தொலைநோக்கு பார்வையோடு மழைக்காலங்களில் மீனாட்சியம்மன் கோவில் நடைபாதையில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் சென்று விடும் என்பதை முன்கூட்டியே அறிந்து கடந்த மே மாதமே மாநகராட்சி செயற்பொறியாளருக்கு நான் கடிதம் அனுப்பினேன். தாமதமாக நடைபெற்றாலும் தற்போது அந்த பணி நான்கு சித்திரை வீதிகளிலும் நடைபெற்று வருவதோடு கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாசல்களில் இப்பணி நடைபெறுகிறது.

3.7. இதனை தவிர்த்து குடிநீர் லாரி தண்ணீர் சப்ளை, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக தானியங்கி அழைப்பு வசதி (7305519999),வாட்ஸ் அப் மூலம் (7530048892), புகார் பெட்டிகள் மூலம், மின்னஞ்சல் (ptrmadurai1@gmail.com), தொகுதி ஆய்வு மூலம்,சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், இல்ல அலுவலகம் மூலம் 600 புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது.

வருவாய் துறை சார்ந்த முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை சம்மந்தமாக 63 மனுக்கள் பெறப்பட்டதோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைத்திட சம்மந்தப்பட்ட வருவாய் துறை வட்டாச்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய தொடர்பாக வயர் மாற்றுதல், மின்கம்பம் மாற்றியமைத்தல் தொடர்பாக 11 கடிதம் செயற்பொறியாளருக்கு நான் அனுப்பியுள்ளேன்.

4. தொகுதியில் நடைபெற்று வந்த சமூக விரோத செயல்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் பற்றி மாநகர காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதி பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்தேன்.

5. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தேன். ஆனால் தற்போதைய நிலையற்ற அரசு வருமானத்திற்க்காக பொறுப்பற்ற முறையில் அகற்றப்பட்ட கடைகளை மீண்டும் திறந்து வைத்துள்ளது.

பொது பிரச்சனைகள் சார்ந்த எனது செயல்பாடுகள்

1. முற்றுலுமாக முடக்கி போன தமிழக சுகாதார துறையின் அலைச்சியித்தால் தமிழகம் அதிக அளவில் உயிர் இழப்புக்களை சந்தித்து வருகிறது. எப்போதும் பொறுப்புடன் செயல்படும் எதிர்க்கட்சி என்ற முறையில் கழக செயல் தலைவர் தளபதியார் வேண்டுகோளின் படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று டெங்கு பாதிப்புகுள்ளான பொதுமக்களை சந்தித்ததோடு கழக இளைஞர் அணி உடன் பிறப்புகளின் ஏற்பாட்டில் தொகுதி முழுவதிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயத்தை வழங்கியதோடு மட்டுமல்லாமல் தூய்மை பணிகளிலும் ஈடுபட்டேன்.

2. தமிழர்களின் வரலாற்று தொன்மையை மெய்ப்பிக்கும் நிகழ்கால சான்றான கீழடி மண்ணில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை நேரில் பார்வையிட்டதோடு அது குறித்த விளக்கங்களை தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தேன்.

3. மத்திய அரசால் அவசர அவசரமாக தமிழக மாணவர்களிடம் திணிக்கப்பட்ட நீட் தேர்வினால் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கபட்டு அதனால் ஏற்பட்ட கிராமப்புற மாணவி அனிதாவின் மரணம் என்னை நேரடியாக பாதித்ததோடு அது தொடர்பாக அரசியல் வாதிகளின் கையில் அனிதாவின் இரத்தம் என்று அறிக்கை ஒன்றை எனது முக நூலில் வெளியிட்டதோடு, இரட்டை இருப்பிட சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்க்கான ரேங்க் பட்டியலில் (ஒரே நபரின் பெயர் இரண்டு மாநிலங்களில் இடம் பெற்றிருப்பது) கண்டறிந்து அதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை மாற்றியமைத்திட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நான் தொடர்ந்த வழக்கில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை பெறப்பட்டது.

4. பொதுமக்களின் விமர்சனங்களுக்கு பயந்து அரசு இணையதளங்களில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி திட்டமிட்டே மறைக்கப்பட்டதை கண்டறிந்து வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

5. மதுரை தொழில் நகரமாக மாற்றவேண்டியதன் அவசியத்தை உணர்த்து மதுரை விமான நிலைய விரிவாக்கம் பற்றி தமிழக சட்ட பேரவையில் உரை நிகழ்த்தினேன்..

6. நீட் தேர்வு எதிராக நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் முன் நின்று பங்கேற்றேன்.

தனிநபர் சார்ந்த உதவிகள் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்

இல்லையென்று வருவோரின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் பாளையம் இல்லத்தின் பாரம்பரியத்தின்படி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக உதவித்தொகை கேட்டு பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் கடந்த 2016-2017-ஆம் ஆண்டு எனது சொந்த நிதியில் 46,501-ம் 2017-2018 -ஆம் ஆண்டில் ரூபாய் 1 லட்சம் வரை நிதி உதவி அளித்துள்ளேன்.

தொகுதி நிதியிலிருந்து ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்கள்

#1 வார்டு – 9 தத்தனேரி எரியூட்டு மையத்தில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் அமைத்தல்.

#2 வார்டு - 17 போடி லைன் பகுதியில் போர்வெல் மற்றும் RO- பிளான்ட் அமைத்தல் .

#3 வார்டு -12 மோதிலால் சாலையில் போர்வெல் மற்றும் RO- பிளான்ட் அமைத்தல்.

#4 வார்டு – 14 கோமஸ்பாளையம் வாய்க்கால் கரையில் போர்வெல் மற்றும் RO- பிளான்ட் அமைத்தல்.

#5 வார்டு – 15 முரட்டன் பத்திரியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்.

#6 வார்டு – 77 LL ரோடு சுந்தர்ராஜபுரத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்.

#7 வார்டு – 9 திரு.வி.க ஆரம்பபள்ளியில் அங்கன் வாடி கட்டிடம் கட்டுதல்.

#8 வார்டு – 17 ஸ்டேடியம் குடியிருப்போர் அருகில் சமுதாயக்கூடம் அமைத்தல்.

#9 வார்டு – 10 மஞ்சள்மேடு காலனியில் சமுதாயக்கூடம் அமைத்தல்.

#10 வார்டு – 18 கண்ணதாசன் தெரு அருகில் உள்ள பூங்காவிற்கு சுற்றுச்சுவர் கட்டுதல்.

#11 வார்டு – 81 எம்.எம்.சி.காலனியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்.

#12 வார்டு – 83 குருநாதர் கோவில் தெருவில் பேவர்பிளாக் சாலை அமைத்தல்.

#13 வார்டு – 86 காஜிமார் தெரு, குறுக்குத்தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்.

#14 வார்டு – 78 மேலவாசல் பகுதியல் அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்.

#15 வார்டு – 80 திலகர் திடல் ஞாயிற்றுக்கிழமை சந்தை பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்.

#16 வார்டு – 81 வைத்தியநாத அய்யர் பூங்கா பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்.

#17 வார்டு – 82 தைக்கால் 4-வது தெருவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்.

#18 வார்டு – 84 அவ்வை பள்ளியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்.

#19 வார்டு – 11 வெள்ளி வீதியார் பள்ளியில் ( கிழக்கு கட்டிடத்தில்) புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுதல்.

#20 வார்டு – 81 கஸ்தூரிபாய் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் கட்டுதல்.

#21 வார்டு – 78 திடீர் நகர் பகுதியில் உள்ள பழைய சமுதாயக்கூடத்தை இடித்து புதிய சமுதாயக்கூடம் கட்டுதல்.

#22 வார்டு – 10 வேளாளர் முதல் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்.

#23 வார்டு – 11 வெள்ளி வீதியார் பள்ளியில் போர்வெல் அமைத்தல்.

தொய்வின்றி தொடரும் பயணம் சட்டமன்ற உறுப்பினர்

சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு மனநிறைவு ஏற்படுகிற வகையில் உங்களின் ஒத்துழைப்போடு எனது பணிகளை தொய்வின்றி தொடருவேன். மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக கட்சி சார்ந்து பொறுப்பேற்று உள்ள போதும் எனது எண்ணமும் செயல்பாடுகளும் மதுரை மத்திய தொகுதி மக்களின் வளர்ச்சியை எண்ணியே இருக்கும் என்பதை உளமார்ந்த உறுதியாக தங்களுக்கு அளித்து எனது அடுத்த கட்ட பயணத்தை தொடருகிறேன்.

நன்றி.