54 மாதங்கள் நிறைவு செயல்பாட்டு அறிக்கை

/

54 மாதங்கள் நிறைவு செயல்பாட்டு அறிக்கை

May 2020 - Oct 2020

கொரோனா நோய்த்தொற்று எனும் பேரிடரால் மக்கள் அவதியுற்று, தங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளை இழந்து, ஆளும் மத்திய மாநில அரசுகளால் அவர்களின் பொருளாதார நிலைமை மேலும் கவலைக்குள்ளாகி, அல்லல்பட்டு, ஒரு மிகப்பெரிய தாக்கத்துக்கு உள்ளான இந்த 6 மாதங்கள் (மே 2020- நவம்பர் 2020) உள்ளபடியே நமது தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்திய மாதங்கள் ஆகும்.

கொரொனொ காலம் ஆரம்பித்த முதல் 2 மாதங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்கள் கிடைத்திட, என்னாளான முன்னெடுப்புகளை நான் தொடர்ந்து செய்து தந்ததோடு, நேரடியாக எனது சொந்த நிதியின் மூலம் 10000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளேன்.

ஊரடங்கு காலத்தில் எனது அலுவலகத்தை முழு செயல்பாட்டில் வைத்திருந்தேன். எனது அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் நிவாரண மைய தொலைபேசிக்கு வரும் அழைப்புகளுக்கு செவிமடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தேன். 

கொரொனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் எனது தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகள் தற்காலிகமாக தடைபட்டது. ஆனாலும் ஊரடங்கு தளர்வு ஏற்பட்ட குறுகிய காலத்தில் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.

சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகளை, 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் மன்றத்தில் அறிக்கை வடிவில் தொடர்ந்து சமர்ப்பித்து வருகிறேன். நான் ஆற்றிய பணிகளை மறு ஆய்வு செய்யும் பொருட்டும், உங்களிடமிருந்து ஆலோசனைகளை உள்வாங்கிக் கொள்ளவும் தவறாமல் இவ்வறிக்கையை சமர்ப்பித்து வருவதோடு இந்த 54 மாதங்கள் நிறைவுற்ற கடைசி 6 மாதங்களுக்கான (மே 2020 – நவம்பர் 2020) செயல்பாட்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

மக்களின் அடிப்படை பிரச்சனைகள்

ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் என் கடமையை தவறாது செய்து வருவதோடு அதிமுக அரசின் மெத்தனத்தால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மாநகராட்சி மன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இல்லை. இந்நிலையில் மக்களின் அடிப்படை பிரச்ச்னைகளுக்கு தீர்வு காண என்னால் இயன்ற அளவில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனது தொகுதி முழுவதும் ஆங்காங்கே என்னால் நிறுவப்பட்டுள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும், மக்கள் தொடர்பு மைய தொலைபேசி (7305519999)  வழியாகவும், வாட்சப் மற்றும் மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com மூலமாகவும், தொகுதி அலுவலகம் மற்றும் இல்ல அலுவலகத்தில் நேரடியாக பெறப்படும் புகார்கள் மீதும் துறை சார்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

தொகுதி மேம்பாட்டு பணிகள்

சராசரியாக வருடத்திற்கு 30 திட்டங்கள் என்றளவில் 5 வருட காலத்திற்கு 150 மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இலக்கை நிர்ணயித்ததில் இதுவரை 136 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. துறை வாரியாக நான் நிறைவேற்றிய பணிகளை கீழே பட்டியலில் தொகுத்துள்ளேன்.

இது தவிர 14 திட்டங்களுக்கு திட்ட வரைவு முடிந்துள்ளது. விரைவில் 150 திட்டங்களை நிறைவேற்றி அதனையும் ஒரு அறிக்கையாக உங்களுக்கு சமர்ப்பிப்பேன்.

அங்கன்வாடி கட்டிடங்கள்

ஏழை எளிய குழந்தைகள் கல்வி கற்றிட ஒரு நுழைவாயிலாக திகழ்ந்திடும் அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டிடங்களை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித் தந்துள்ளேன். இதுவரை 11 புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகள் நிறைவுற்று திறந்து வைத்துள்ளேன். மேலும் 2 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

கொரொனா பேரிடர் ஊரடங்கு சமயத்தில் தொகுதி மேம்பாட்டு பணிகளில் சிறு தாமதம் ஏற்பட்டாலும்  வார்டு 86 க்ரைம் பிரான்ச் காவலர் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டு வந்த புதிய அங்கன்வாடி கட்டிட கட்டித்தை விரைந்து முடி.

தண்ணீர் மேலாண்மை பணிகள்

இதுவரை எனது தொகுதிக்குட்பட்ட 22 வார்டுகளில் 42 போர்வெல் அமைத்து தந்துள்ளேன். அதில் கடந்த மே 2020 - நவம்பர் 2020 6 மாத காலத்தில் மட்டும் கீழ்க்கண்ட பகுதிகளில் 4 புதிய போர்வெல்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளேன்.

1. வார்டு 77 JR சாலையில் போர்வெல் மற்றும்  2 சின்டெக்ஸ் தொட்டிகள்

2. வார்டு 77 இராமலிங்க நகர் பகுதியில் போர்வெல் மற்றும் 2  சின்டெக்ஸ் தொட்டிகள்

3. வார்டு 79 அமெரிக்கன் மிசன் சந்து பகுதியில் போர்வெல் மற்றும் 2 சின்டெக்ஸ் தொட்டிகள்.

 

4. வார்டு 9 முனியாண்டி கோவில் தெருவில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி.

போர்வெல் அமைத்திட வாகனம் செல்ல இயலாத இட நெருக்கடியான பகுதியில் மக்கள் தண்ணீர் கிடைக்காது அவதியுற்றதை தொகுதி ஆய்வின் போது அறிந்தேன். அதன் தீர்வாக பொதுவான ஒரு இடத்தில் போர்வெல் அமைக்கப்பட்ட பின், எனது சொந்த நிதியின் மூலம் குழாய்கள் பதித்து வெவ்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வண்ணம் பிரித்து தண்ணீர் விநியோகித்திட நடவடிக்கை எடுத்துள்ளேன். குறிப்பாக திடீர் நகர் பகுதியில் மூன்று வெவ்வேறு பகுதிகளுக்கு தண்ணீரை விநியோகித்திட குழாய் பதித்து தந்துள்ளேன். 

நியாய விலைக்கடை கட்டிடம்

ஏழை எளிய மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதே நியாய விலைக் கடைகள்.  நியாய விலைக்கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, எடை குறைவு, கைரேகை வைப்பதில் பிரச்சனிகள் குறித்து தொடர் புகார்கள் எனக்கு வந்ததன் அடிப்படையில் தொகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரடி ஆய்வுக்கு சென்றேன். அதில் பல கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்தது. ஒரு சில கடைகள் பழுதான கட்டிடங்கள் . அதை அறிந்து தொடர்ச்சியாக பல இடங்களில் நியாய விலைக்கடைகளுக்கான புதிய கட்டிடங்களை எனது தொகுதி நிதியின் மூலம் கட்டி தந்துள்ளேன். 

வார்டு 83 வக்கீல் புதுத்தெரு பகுதியில் புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை கட்டி தந்துள்ளேன். இன்னும் சில நியாய கடைகளுக்கு என் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

நவீன ஸ்கேன் சென்டர் கருவிகள்

எனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 13 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஒரு முழு ஆய்வு செய்து, அவ்வப்போது தொகுதி ஆய்வின் போது கேட்டறிந்து தேவையான உபகரணங்களை வழங்கி வருகிறேன். அவற்றுள் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சக்கர நாற்காலிகளை முன்னர் வழங்கியிருந்தேன். 

அதனை தொடர்ந்து..

1. வார்டு 83 முத்து சாரதா ஸ்கேன் நிலையத்தில் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் கலர் டாப்ளர் ஸ்கேன் கருவியினையும், வார்டு 13 புட்டுத்தோப்பு தேவசகாயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்* ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டிலும்,  வார்டு 9 அருள்தாஸ்புரத்தில்* ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டிலும் நவீன ஸ்கேன் கருவிகளை வழங்கியுள்ளேன்.

எனது தொகுதியை சேர்ந்த பெண்கள் ஸ்கேன் எடுக்க வேண்டுமெனில் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அல்லது அருகிலுள்ள தனியார் ஸ்கேன் செண்டர்களுக்கு தான் செல்லவேண்டும்.  அரசு இராஜாஜி மருத்துவமனையோ தொலை தோரத்தில் இருப்பதோடு  தனியார் ஸ்கேன் சென்டரிலோ ஸ்கேன் செய்ய அதிக பணம் செலுத்தியாக வேண்டும்.

பெரும்பாலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை செய்து வரும் இந்நிலையங்களில் ஸ்கேன் கருவிகளின் தேவை இருந்த நிலையில் புதிய ஸ்கேன் கருவிகளை வழங்கியுள்ளேன்.

சூரிய ஒளி பேருந்து நிழற்குடை

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை செயல்படுத்தி எனது தொகுதி பணிகளை நிறைவேற்றி வருகிறேன். அவ்வகையில் வார்டு 81ல் மாணவர்கள் அதிகமாக வந்து செல்லும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி பேருந்து  நிறுத்தத்தில் சூரிய சக்தியில் இயங்கும் விளக்கு, விசிறி, செல்போன் சார்ஜருடன் கூடிய பேருந்து நிழற்குடையினை CCTV மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளத்துடன் அமைத்து தந்துள்ளேன்.

சேதுபதி பள்ளி நிழற்குடையில் WIFI வசதி செய்யப்பட்டுள்ளது. குற்றங்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்புக்கிற்காகவும் நிறுவப்பட்டுள்ள CCTV கேமிரா மூலம் காட்சிகள் திலகர் திடல் காவல் நிலையம் மூலம் கண்காணிக்கப்படுகிறது

சட்டசபையில் எனது செயல்பாடு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றம் கூடியது. சட்டமன்ற அவையில் ஜனநாயகம் கேள்க்குள்ளாக்கப்பட்டு வரும் இந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினருக்கு அரிதினும் அரிதாக பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனாலும் என்னை தேர்ந்தெடுத்த மக்களின் குரலை எதிரொலிப்பதில் எனக்கு கிடைக்கிற வாய்ப்பை நான் எப்போதும் தவறவிடுவதில்லை.

மெட்ராஸ் பொருளாதார பள்ளி (Madras Economic School) பற்றிய சட்ட முன்வடிவு ஒன்றை மாண்புமிகு துணை முதல்வர் பேரவையில் அறிமுக செய்ய அனுமதி கோரினார். 

தன்னாட்சி அமைப்பாக அப்பள்ளியை மாற்ற கோரிய அந்த சட்ட முன்வடிவு நம் மாணவர்களுக்கு பயன் தராது என அதனை அறிமுக நிலையிலேயே எதிர்த்து என் கருத்துகளை முன்வைத்தேன்.

மாநில நலனில் எனது பங்கு

பொதுக்கணக்கு குழு

எனது கல்வி, அனுபவம் மக்களுக்காக பயன்படவேண்டும் என்ற கொள்கை கொண்டுள்ள என் எண்ணத்தின் விருப்பப்படி கூடுதல் பொறுப்பாக கழக தலைவர் தளபதியார் அவர்கள் என்னை சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் உறுப்பினராக இருக்கவேண்டி பணித்தார். மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களுக்கும் சென்று நடைபெறும் வளர்ச்சி பணிகளை அரசின் சார்பாக இந்த குழு ஆய்வு செய்யும். அதில் உறுப்பினராக இருப்பதன் மூலம் எனது தொகுதிக்கு நான் ஆற்றவேண்டிய பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டிய ஒரு வாய்ப்பாக கருதி பணியாற்றி வருகிறேன்.

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை தொடர்ந்து 5வது வருடமும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் இடம் பெற செய்ததை கிடைத்ததற்கறிய ஒரு நல்வாய்ப்பாக கருதி அதன் மூலம் அரசு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேல் ஆய்வு செய்திடவும், தமிழகம் முழுக்க நடைபெறும் அரசின் பணிகளை கண்காணிக்கவும் நம் தொகுதிக்கு தேவையான திட்டங்களை உடனடியாக கொண்டு வரவும் முடிகிறது. 

மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA)

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு சரிவரை செயல்படுத்துகிறதா? என  கண்காணிக்கும் DISHA கூட்டத்தில் கலந்துகொண்டேன். கடந்த பல வருடங்களாக இந்த குழு கூட்டப்படாமல் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் கூட்டப்பட்ட கூட்டத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பினேன். Smart City திட்டத்திற்கு இதுவரைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு ஆலோசனை குழு அமைக்கப்படாதது குறித்தும், நடைமுறையில் உள்ள Smart City திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து அக்கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.

கொரொனா விழிப்புணர்வு

கொரொனா நொய்த்தொற்று குறித்து அதன் ஆரம்பகட்ட முதல் தொடர்ந்து கண்காணித்து மக்கள் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன்.

• கொரொனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட வாரியாக 1.நோய்த்தொற்று உள்ளவர்கள் 2.இறந்தவர்கள் 3. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் என 3 வெவ்வேறு வரைபட அறிக்கைகளை தொகுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஜுலை மாதம் தொட்டு தொடர்ந்து வெளியிட்டேன். 

• அரசு வேளியிடும் கொரொனா குறித்த தகவல்கள் வெளிப்படையாக இல்லை எனவும், அதன் நம்பிக்கைத் தன்மை குறித்தும் உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நீதிமன்றம் அரசின் வெளியிடும் அறிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது.

• ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா?, தளர்த்த வேண்டுமா? என்ற தலைப்பில் தேசிய அளவில் பல தலைவர்கள் பங்கேற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு என் கருத்துகளை முன்வைத்தேன்.

• ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து நடத்தும் இதழுக்கு நான் அளித்த இணையவழி நேர்காணலில் இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து என் கருத்துகளை முன்வைத்தேன்.

அதுமட்டுமன்றி எனது கல்வி மற்றும் உலக அனுபவத்தைகொண்டு பல்வேறு ஊடகங்கள், இணைய வழி கருத்தரங்கங்கள் வாயிலாக எனது அரசுக்கு ஆலோசனைகளையும், மக்களுக்கு பேரிடர் குறித்த அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வையும் அளித்துள்ளேன்.

தனிநபர் சார்ந்த உதவிகள் & நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்

கொரொனா நோய்த் தொற்றால் கல்லூரிகளில் தற்பொது ஆன்லைன் கல்வி நடந்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த நன்றாக படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் ஆன்லைன் கல்வி கற்க கணிணியின்றி சிரமப்பட்டதை அறிந்தேன். அவர்கள் இல்லம் சென்று அம்மாணவிகளை சந்தித்து லேப்டாப் வழங்கியதோடு, எக்காரணம் கொண்டு கல்வி கற்பதை நிறுத்தக்கூடாது என அறிவுரை கூறினேன். 

கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, மருத்துவ உதவி, கோயில் பராமரிப்பு நன்கொடை, திருமண உதவி என கேட்டு வரும் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

தொடர்கிறேன்...

எந்த நம்பிக்கையில் என்னை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களோ அந்த நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இன்னும் சில மாதங்களில் 15வது சட்டமன்றத்திற்கான காலம் நிறைவடையவிருக்கும் சூழ்நிலையில் எனது தொகுதி மேம்பாட்டு திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி வருகிறேன்.  

எனக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியினை 100 விழுக்காடு செலவழித்து எனக்கு அளிக்கப்பட்ட 5 வருட காலத்திற்குள்குள் திட்டமிட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்றிட முடிவு செய்துள்ளேன்.  பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து 4.5 வருடங்கள் நிறைவுற்ற நிலையில் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட நீங்கள் எனக்களித்த வாய்ப்பை சிறப்புடன் நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.

இந்த இக்கட்டான பேரிடர் காலம் பலரது வாழ்க்கையையும் புரட்டிபோட்டுவிட்டது. இந்த கையாலாகாத அரசு நமது உரிமைகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டது. விரைவில் இந்த நிலைமையிலிருந்து அனைவரும் மீண்டெழுந்து, அனைவரது வாழ்க்கையும் மேம்படும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.

நன்றி.