48 மாதங்கள் நிறைவு செயல்பாட்டு அறிக்கை
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையாக பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நான், தலைவர் கலைஞர் மற்றும் தலைவர் ஸ்டாலின் அவர்களால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மதுரை மத்திய தொகுதி மக்களான உங்களது பெரும் ஆதரவால் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று, சமத்துவம், சமூக நீதி, சமவாய்ப்பு, மதச்சார்பின்மை, கல்வி மேம்பாடு முதலிய கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைபடுத்தும் நோக்கோடு, அக்கொள்கைகளை முன்னிறுத்தி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை புதுமையான வழிகளில் திட்டங்களாக எனது மத்திய தொகுதியில் செயல்படுத்தி வருகிறேன்.
சீராக சென்று கொண்டிருந்த தமிழகம் இடையில் சில எதிர்பாராத சிக்கல்களை சந்தித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அதை தொடர்ந்து இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சி அமையும்என்று நான் கருதவில்லை. அதுமட்டுமன்றி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாது எனவும், மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் என்றும் நான் நினைக்கவில்லை.
என் சட்டமன்ற பணிகளை ஆற்றும் அதே வேளையில் உள்ளாட்சி தேர்தல்கள் நடக்காத சூழ்நிலையில், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 உள்ளாட்சி பிரதிநிதிகள்(கவுன்சிலர்கள்) ஆற்ற வேண்டிய பணிகளையும் நான் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். என் தொகுதி முழுக்க மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அனைத்து மட்டங்களிலும் நான் நேரடியாக தொடர்பு கொண்டு பணியாற்றும் தேவையும் இருந்து வருகிறது.
மிகத்தீவிரமான இப்பணிச்சூழலில் என் கற்றலையும் உலகளாவிய அனுபவத்தையும் பயன்படுத்தி மக்களுக்கு பணியாற்ற எனக்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகவே இந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை கருதுகிறேன்.
சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகளை, 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் மன்றத்தில் அறிக்கை வடிவில் தொடர்ந்து சமர்ப்பித்து வருகிறேன். 48 மாதங்கள் நிறைவுற்ற கடந்த 6 மாதங்களுக்கான (மே 2016 – மே 2020)செயல்பாட்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
மக்கள் தொடர்பு
“மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து” என்றார் பேரறிஞர் அண்ணா.
பல முன்னணி பத்திரிக்கைகள், தேசிய ஊடகங்கள், பொதுமக்களான நீங்கள் என் பணிகளை பலவாறு பாராட்டினாலும் கூட நான் உங்களுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்துக்கொள்ள, பல்வேறு வகைகளில் மேம்படுத்திக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
என்னை தொகுதி மக்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் கோரிக்கைகளை அளிக்கும் வண்ணம் எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இல்ல அலுவலகம் விடுமுறை ஏதும் இன்றி எல்லா நாட்களிலும் செயல்பட்டுவருகிறது. நேரில் மனுக்களை அளிக்கவும், நேரில் வரஇயலாதவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் 22 வார்டுகளில் ஆங்காங்கே 25 புகார் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் எனது குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண் 730551999, வாட்சப், மற்றும் மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com மூலமாகவும் எந்த நேரமும் புகார் அளிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மாநகராட்சி நிர்வாகத்தால் தீர்க்கப்படவேண்டிய அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உள்ளாட்சி அமைப்பு இல்லாத காரணத்தால் மக்கள் என்னை தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற உறிப்பினரின் கடமையை தாண்டி மக்களின் இந்த அடிப்படை பிரச்சனைகளையும் நான் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
புகார் மற்றும் கோரிக்கை கடிதங்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டு அதன் தகவல்களை சேகரித்து அதன் மீது தொடர் ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. தொகுதி மக்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய தரவுகளை ஆராய்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன்.
பேரிடர் கால நிவாரண உதவி
நாம் யாரும் எதிர்பார்க்காத கொரொனா எனும் பெரும் துயரம் நம்மையெல்லாம் சூழ்ந்து பலரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிர் இழந்து, வேலை இழந்து, பொருளாதாரம் நலிந்து கடந்த 6 மாதங்கள் சென்றுவிட்டது. எனது தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க என்னை நான் தயார் படுத்திக் கொண்டேன்.
தமிழகத்தில் கொரொனோ நோய் பரவ ஆரம்பித்த முதல் கட்டத்திலேயே தொகுதி மக்களான உங்களது ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் வந்து செல்லும் என் தொகுதி அலுவலகத்தை 21.03.2020 தொடங்கி தற்காலிகமாக மூடினேன். அலுவலகத்தை திறந்து வைப்பதன் மூலம் கொடியநோய் பரவுதலுக்கு நாமும் ஒரு காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதால் அம்முடிவினை எடுத்தேன்.
அதற்கு பின் 2 நாள் கழித்து மார்ச் 23 –அன்றுதான் அரசு ஊரடங்குக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 24 முதல் தொகுதி அலுவலகங்கள் இரண்டையும் COVID19 பேரிடர் நிவாரண மையங்களாக மாற்றினேன். ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை தெரிவிக்க ஏதுவாக கொரொனா நிவாரண மைய இலவச தொலைபேசி எண்: 73055-19999 மற்றும் வாட்சப் எண்: 7530048892ஐ அறிவித்தேன். தொகுதி முழுவதிலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க 50 பேர்கொண்ட இரண்டு குழுக்களை நியமித்து நிவாரண பணிகளை முடுக்கிவிட்டேன்.
எனது COVID 19 பேரிடர் நிவாரண மைய இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைத்து உதவி கேட்ட குடும்பங்களுக்கு அவர்கள் இல்லம் தேடி சென்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்குபோடப்பட்டு முதல் 50 நாட்களில் முதற்கட்டமாகவும், இரண்டாம்கட்டமாகவும் மற்றும் எனது நிவாரண மையத்தின் மூலமும் 12000 குடும்பங்களுக்கு மேல் பேரிடர் காலத்தில் நிவாரணம் வழங்கியுள்ளேன்.
இது தவிர துப்புரவு தொழிலாளர்களுக்கு மாஸ்க், பல ஆயிரம் மக்களுக்கு உணவு என மொத்த நிவாரன பயனாளிகள் 23000 குடும்பங்களை சென்று சேர்ந்துள்ளது.
அவசர காலத்தில் உதவும் விதமாக மக்கள் பணியில் விரைந்து செயல்பட்ட மன நிறைவை தந்த கொரொனா நிவாரணப்பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடுக்கிவிட்டதால் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் செயல்படுத்திய ”ஒன்றிணைவோம் வா” திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் வந்த நிவாரண கோரிக்கைகளை காட்டிலும் எனது மதுரை மத்திய தொகுதியில் பெறப்பட்ட கோரிக்கைகள் சுமார் 60% சதவிகிதம் குறைவாகும்.
தொகுதி மேம்பாட்டு பணிகள்
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் எனக்கு ஒதுக்கப்படுகிற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்து மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட முடிவெடுத்தேன். கல்வி, தண்ணீர் மேலாண்மை, சாலை மேம்பாடு, உட்கட்டமைப்பு என தூறைசார்ந்து தனித்தனியே திட்டமிடப்பட்டு முற்றிலும் புதுமையான வழிகளில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. சராசரியாக வருடத்திற்கு 30 திட்டங்கள் என்றளவில் 5 வருட காலத்திற்கு 150 மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இலக்கை நிர்ணயித்து பணியாற்றி வருகிறேன்.
பள்ளி மேம்பாடு
திராவிட இயக்கம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அனைத்து சாதியினரும் கல்விகற்க வகைசெய்யும் செய்யும் திட்டம், ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்விகற்கும் உரிமையை உறுதிசெய்யும் சட்டம் என 1920களிலேயே பல எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது திராவிட இயக்கம். ஆயிரக்கணக்கில் பள்ளிகளை திறந்து வைத்ததோடு ஏழை மாணவர்கள் கல்விச்சாலை நோக்கி படையெடுக்க பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது.
மாணவர்களோடு உரையாற்றுகையில் கல்விச்செல்வம் என்றென்றும் நீங்காத செல்வம் என்றும் அவர்களது ஏழ்மை நிலையை உயர்த்தும் ஒரேவழி கல்விதான் என்பதை என்னையே நான் உதாரணமாக காட்டி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். என்னைப்போன்ற பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து இன்று இந்த நிலைக்கு நான் உயர்ந்துள்ளது பெரிய விஷயமல்ல. வறுமையின் காரணமாக கல்வி வாய்ப்பு இழந்தவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கல்வியை உறுதியாக பிடித்துக்கொண்டு வாழ்வில் முன்னேறவேண்டும் என்பதை எல்லா இடங்களிலும் நான் வலியுறுத்த தவறுவதில்லை.
எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் மேம்பாட்டுக்கு கழிப்பறைகள், குடிநீர், வகுப்பறை, சமையற்கூடம் என அதன் உட்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தி பலதி ட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். அதிலும் பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெண்கள் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறேன். அதில் இந்த 6 மாத காலத்தில் நான் நிறைவேற்றிய திட்ங்கள் கீழே.
2020 ஆங்கில புத்தாண்டு அன்று வார்டு 81 ஆதிமூலம் ஆரம்பபள்ளியில் ரூபாய் 3 லட்சத்து 25ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மதிய உணவு சமையல்கூட கட்டிடத்தை கட்டித் தந்துள்ளேன்.
இதுவரை 9 அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தொகுதியின் பல பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுவதற்கான திட்டவரைவுகள் தயார் நிலையில் உள்ளது.
இதுதவிர என் தொகுதிக்குட்பட்ட 9 மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளுக்கு மாதந்தோறும் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் கல்வி இதழ்களை என் சொந்த நிதியின் மூலம் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து வழங்கிவருகிறேன்.
அரசு பள்ளிமாணவர்கள் பயன்பெறும் வகையில் வருடந்தோறும் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்களை அவர்களின் குடியிருக்கும் பகுதிக்கு செண்று வழங்கியும் வருகிறேன்.
மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, கல்வியால் பல உயர்வுகளை பெற்ற நான், என் தொகுதி ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக திட்டப்பணிகளை நிறைவேற்றி தருவதை என் கடமையென கருதுகிறேன்.
சலவையர் கூடம்
தொகுதி ஆய்வின் போது, புகார்கள் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஆராய்ந்து அவர்களுக்கு தேவைப்படும் திட்டங்களையும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நிரைவேற்றி வருகிறேன்.
சலவையர் கூடம்: வார்டு 9 அருள்தாஸ்புரத்தில், ஆரப்பாளையம் பாலம் கட்டும் பணியின் போது வைகை கரையூரம் இருந்த சலவையர் கூடம் இடிக்கப்பட்டு பழுதானது. அப்பகுதி சலவைத் தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கு புதிய சலவை கட்டிடம் கட்டி தந்துள்ளேன்.
சமுதாய கூடம்
ஏழை எளியவர்கள் வாழும் பகுதியில் ஒன்றும், நடுத்தர மக்கள் வாழும் பகுதியில் ஒன்றும் என இதுவரை 2 சமுதாயக்கூடங்களை கட்டி தந்துள்ளேன்.
1. வார்டு 78 திடீர் நகர் பகுதியில் உள்ள எளிய மக்கள் தங்கள் இல்ல விழாக்களை நடத்திட போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை கடந்து பெரியார் பேருந்துநிலையம் அல்லது கூடலழகர் பெருமாள் கோவில் பகுதிக்கு சென்று மண்டபங்களை பிடிப்பர். இதனால் அவர்களுக்கு பொருட்செலவு, பணிச்சுமை மற்றும் காலவிரயமும் ஏற்பட்டது.
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று தொகுதி ஆய்வுக்கு சென்றபோது உடனடியாக அங்கு வாழும் மக்களுக்கு முற்றிலும் நவீன முறையிலான சமுதாயக்கூடம் ஒன்றை அமைத்திடவேண்டும் என முடிவெடுத்தேன்.
பெரியார் பேருந்து நிலைய தென்மேற்கு பகுதியில் உள்ள இடம் கையகப்படுத்தப்பட்டு பணி ஆரம்பிக்கப்பட்டது. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் அமைந்திடுமாறு திட்டவரைவு உருவாக்கப்பட்டது.
அடித்தளம் அமைத்தது முதல் கட்டிடம் உயர்ந்து நிற்கும் வரை ஒவ்வொரு பணியும் சரியான திட்டமிடுதலுடன் உருவாக்கப்பட்டு, பலரது வியர்வை சிந்திய அயராத உழைப்பினாலும், ஆதரவினாலும் 3 வருட காலமாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து இன்று கம்பீரமாக காட்சியளிகிறது.
பொதுவாக சமுதாயக்கூடங்களில் மணப்பெண் மற்றும் மணமகன் அறைஎ ன தனியாக அறைகள் வைத்து கட்டப்படுவதில்லை. ஆனால் இங்கு அமைக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடம் மணப்பெண் அறை, மணமகன் அறை மட்டுமன்றி முதல்தளத்தில் உணவு அருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திருமணவிழாவே நடத்திவிடலாம் எனும் அளவிற்கு விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது திடீர் நகர் சமுதாயக்கூடம்.
சாலை மேம்பாட்டு பணிகள்
நமது மதுரை மத்திய தொகுதிக்கு நான் வாக்கு சேகரிக்க வரும்பொழுதே சாலைகளின் நிலைமை குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்தேன். அதனை பரிசீலித்து நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தொகுதியில் உள்ள 22 வார்டுகளிலும் எந்தெந்த பகுதிக்கு சாலை வசதி தேவை என்பதை பட்டியலிட்டு அப்பணியை நிறைவேற்றி தந்துள்ளேன்.
இதில் பல இடங்களில் சாலைகள் அமைக்கும் முன்பாக பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு சரி செய்யப்பட்டு அதற்கு பின் சாலைகளை அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு 8 KTK தங்கமணி சாலையில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்து தந்துள்ளேணன்.
தண்ணீர் மேலாண்மை பணிகள்
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு அரசின் மெத்தனமே காரணம். தூர் வாராத நீர் நிலைகளால் மழை பெய்தும் தண்ணீர் இல்லாத நிலை கோடை கால்த்தில் ஏற்படும் வாய்ப்பு அதிகம். நீர் மேலாண்மை, நீராதாரங்களை தூர் வாருதல், தண்ணீர் திருட்டு முதலியவற்றில் இந்த அரசின் கவனக்குறைவை நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன்.
மதுரை மாநகரின் குடிநீரின் தேவை வைகை அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை நம்பியே உள்ளது. தற்சமயம் 60 கன அடி நீர் மதுரை நகரின் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுவதாக அரசின் சார்பாக தெரிவித்தாலும் வைகை அணைப்பகுதியிலேயே தண்ணீர் திருடப்படுவது தொடர்கிறது. இதனால் மதுரைக்கு முறையாக விநியோகிக்கப் படவேண்டிய தண்ணீர் அளவு குறைகிறது. பத்திரிக்கைகளில் இது குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டியும், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் இது குறித்து தொடர்ந்து கடிதங்கள் மூலமும், துறை சார்ந்த அதிகாரிகளிடத்திலும், செய்தி ஊடகங்கள் மூலமாகவும் நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் என் தொகுதியின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு என் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் வார்டு வாரியாக போர்வெல் அமைத்து தந்துள்ளேன். தொடர்ந்து தண்ணீர் பிரச்ச்சனையை நிரந்தரமாக தீர்க்கும் வழிகளை ஆராய்ந்து வருகிறேன்.
வார்டு 81 மாநகராட்சி சலவையர் கூடத்தில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து மற்றும் 2 சின்டெக்ஸ் தொட்டிகள் நிறுவியுள்ளேன்.
வார்டு 17 எல்லீஸ் நகர் வசந்தம் அபார்ட்மென்ட்டில் ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து மற்றும் 2 சின்டெக்ஸ் தொட்டிகள் நிறுவியுள்ளேன்.
சட்டசபையில் எனது செயல்பாடு
ஜனநாயகம் கேலிக்குறியதாக ஆக்கப்பட்டு, எதிர்கக்ட்சிகளின் குரல் நசுக்கப்பட்டு வரும் தற்போதைய சட்டசபையில் எனக்கு கிடைக்கிற எந்த வாய்ப்பையும் நான் தவற விடுவதில்லை.
நமது தொகுதி சார்ந்த வளர்ச்சி, மேம்பாடு குறித்த தொலைநோக்கு பார்வையோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களும் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளான போக்குவரத்து நெருக்கடி, சுகாதார பிரச்சினை, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ஏற்படும் இட நெருக்கடி, நகர் மயமாக்கலால் ஏற்படும் இதர பிரச்சனைகள், மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதி குறித்து விரிவானதொரு அறிக்கையை நான் சட்டசபையில் சமர்ப்பித்துள்ளேன்.
மாநில நலனில் எனது பங்கு
பொதுக்கணக்கு குழு
எனது கல்வி, அனுபவம் மக்களுக்காக பயன்படவேண்டும் என்ற கொள்கை கொண்டுள்ள என் எண்ணத்தின் விருப்பப்படி கூடுதல் பொறுப்பாக கழக தலைவர் தளபதியார் அவர்கள் என்னை சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் உறுப்பினராக இருக்கவேண்டி பணித்தார். மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களுக்கும் சென்று நடைபெறும் வளர்ச்சி பணிகளை அரசின் சார்பாக இந்த குழு ஆய்வு செய்யும். அதில் உறுப்பினராக இருப்பதன் மூலம் எனது தொகுதிக்கு நான் ஆற்றவேண்டிய பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டிய ஒரு வாய்ப்பாக கருதி பணியாற்றி வருகிறேன்.
தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை தொடர்ந்து 3வது வருடமும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் இடம் பெற செய்ததை கிடைத்ததற்கறிய ஒரு நல்வாய்ப்பாக கருதி அதன்மூலம் அரசு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேல் ஆய்வு செய்திடவும், தமிழகம் முழுக்க நடைபெறும் அரசின் பணிகளை கண்காணிக்கவும்நம் தொகுதிக்கு தேவையான திட்டங்களை உடனடியாக கொண்டு வரவும் முடிகிறது.
15வது நிதிக்குழு & NIPFP
பல்வேறு தேசிய, மாநில அரசியல் கட்சிகள் பங்கேற்ற 15வது நிதிக்குழு கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்டு எனது அறிக்கையை சமர்ப்பித்தேன்.
தேசிய அளவில் National Institute of Public Finance and Policy நடத்திய கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த என் கருத்துகளை முன் வைத்தேன்.
கருத்தரங்கங்கள் & தொலைக்காட்சி விவாதங்கள்
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான கொள்கைகள் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். கருத்தரங்கங்கள், காணொலி கூட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என தமிழக நலன் மேம்படும் வகையில் செயலாற்றி வருகிறேன்.
நாட்டின் ஒற்றுமையை குழைக்கும் NRC-NPR-CAA சட்டங்கள்:
சகோதரத்துவம் நல்லிணக்கம் போன்ற உயரிய பண்புகளை வளர்தெடுத்த திராவிட இயக்க மரபில் வந்த நான் நாட்டின் ஒற்றுமையை குழைக்கும் மத்திய அரசின் முயற்சிகளை தொடர்ந்து கண்டித்து வருகிறேன்.
எனது தொகுதிக்குட்பட்ட மஹபூப்பாளையத்தில் மத்திய அரசு கொண்டு வந்த CAA, NRC, NPR சட்டங்களை திரும்பப் பெறக்கூறி நடைபெற்ற தொடர் போராட்டத்தை ஆதரித்து அப்பகுதி மக்களிடையே உரையாற்றினேன்.
மத்திய அரசு கொண்டு வந்த CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து எனது பூர்வீக ஊரான உத்தமபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து உரையாற்றினேன்.
மாநகராட்சி வார்டு வரையறைல் முறைகேடு
உள்ளாட்சி தேர்தலை நடத்தாது ஊழல் செய்து வரும் அதிமுக அரசு, மதுரை மாநகராட்சியில் விதிகளை பின்பற்றாது அதிமுகவினருக்கு ஆதரவாக வார்டு வரையறை செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளை ஆரமபத்திலேயே முறியடிக்கும் வண்ணம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தேன். மாநகராட்சி கவுன்சிலர் இல்லாத நிலையில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நான் மாநகராட்சி தேர்தலை நடத்தி மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்தவன் என்ற வகையில் முறையாக வார்டு வரையறை செய்தபின் தேர்தலை நடத்திட வேண்டுமென வழக்கு தொடர்ந்தேன்.
தனிநபர் சார்ந்த உதவிகள் & நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்
எனது தாத்தா எனது தந்தைக்கும், என் தந்தை எனக்கும் கற்றுத்தந்த மனித மாண்பையும், ஆதரவற்ற மனிதர்களுக்கு நாம் காட்டவேண்டிய அன்பையும், மனிதாபிபானத்தையும் என்னைத் தேடி வரும் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் நான் நிறைவேற்றுகிறேன்.
கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, மருத்துவ உதவி, கோயில் பராமரிப்பு நன்கொடை, திருமண உதவி என கேட்டு வரும் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்.
அவ்வாறு கல்வி உதவித்தொகை, திருமண உதவி, வாழ்வாதார உதவி, மருத்துவ உதவிகள் என இதுவரை 322 ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர் என் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
தொகுதி மக்களிடம் செல், அவர்களை மேம்படுத்து
தொகுதி மக்களை நான் நேரில் சென்று சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும், அவர்களின் இன்ப துன்பங்களின் போது உடனிருந்து அவர்களொடு இணைந்திருப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைமுறையை அறிந்து அவர்களுக்கு தேவையானதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படும். மக்களின் கொண்டாட்டங்களில் குடும்பத்தினருடன் சென்று பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
மத நல்லிணக்கம் வளர்க்கும் பொருட்டு பொங்கல் விழா, புது வருடப்பிறப்பு, ரம்ஜான் போன்ற விழாக்கள் அனைத்திலும் நான் எனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, கொண்டாடி மகிழ்வதைதொடர்ந்து செய்து வருகிறேன்.
என் மனைவி, இரு மகன்கள்உடன் பொதுமக்களோடு இரண்டற கலந்து அக்கொண்டாட்டங்களில் பங்கேற்று எளிய மக்களுக்கு பரிசுகளையும், வாழ்த்துக்களையும்றி கொள்வதை மகிழ்ச்சியான தருணங்களாக கருதுகிறேன்.
புத்தாண்டு கொண்டாட்டம்
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் எனது குடும்பத்தோடு மக்களை சென்று மக்களை சந்தித்து தொகுதியில் 2020 புத்தாண்டை வார்டு 9 அருள்தாஸ்புரம் பகுதி கிறித்த்வ, வார்டு 16 சிங்கராபுரம் மற்றும் வார்டு 81 சிம்மக்கல் M.C காலனி பொதுமக்களை நேரில் சந்தித்து கேக் வெட்டி கொண்டாடினேன்.பல இடங்களில் குழந்தைகள்மற்றும் இளைஞர்கள் சூழ கேக் வெட்டி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
சமத்துவ பொங்கல் விழா
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று எளிய மக்கள் வாழும் வார்டு 8 மருதுபாண்டியர் தெரு, பர்மா காலனி பகுதியில் சமத்துவ பொங்கள் கொண்டாடினேன். கோலப்போட்டி, உரியடித்தல், சிறுவர் விளையாட்டு என பொதுமக்களில் ஒருவனாக என் குடும்பத்தினரோடு கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தது மறக்க முடியாத நிகழ்வாகும்.
இலவச இ-சேவை மையம்
என தொகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக என்னை தீடி வருகிறார்கள். அவற்றுள் பெரும்பாலும் அரசு தர்ப்பில் இருந்து பேறப்பௌம் சேவைகளில் உள்ள குறைபாடு குறித்தவை. சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஆதார் அட்டை, பெண்களுக்கான அரசு வழங்கும் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களுக்கு அவகர்களுக்கு சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ள பலரும் பணம் கொடுத்து பெற முடியாத நிலையில் இருப்பவர்கள்.
இதுகுறித்து ஆராய்ந்து எனது தொகுதி அலுவலகத்தில் அரசு வழங்கும் இணைய வழி சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கிட முடிவு செய்து இலவச இ-சேவை மையம் ஒன்றை கடந்த மார்ச் 2020 அன்று திறந்துவைத்தேன். தொடர்ந்து மக்களுக்கு எந்த செலவுமின்றி அரசுக்கு நானே கட்டணம் செலுத்தி தேவைப்படும் சான்றிதழ்களை பெற்றுத் தருகிறேன்.
தொடர்கிறேன்...
எந்த நம்பிக்கையில் என்னை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களோ அந்த நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இன்னும் ஓராண்டு காலமே மீதமிருக்கும் நிலையில் தொகுதி மேம்பாட்டு திட்டங்களை விரைந்து நிறைவேற்றி வருகிறேன். எனக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியினை 100 விழுக்காடு செலவழித்து இந்த வருட இறுதிக்குள் திட்டமிட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்றிட முடிவு செய்துள்ளேன். பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து 4 வருடங்கள் நிறைவுற்ற நிலையில் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட எனக்களித்த வாய்ப்பை சிறப்புடன் நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.
இந்த இக்கட்டான பேரிடர் காலம் பலரது வாழ்க்கையையும் புரட்டிபோட்டுவிட்டது. இந்த கையாலாகாத அரசு நமது உரிமைகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டது. விரைவில் இந்த நிலைமையிலிருந்து அனைவரும் மீண்டெழுந்து செழிப்புடன் வாழ்ந்திடுவோம் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.
நன்றி.