5 ஆண்டு நிறைவு செயல்பாட்டு அறிக்கை

/

5 ஆண்டு நிறைவு செயல்பாட்டு அறிக்கை

Nov 2020 - Apr 2021

நீண்ட கால வரலாறு கொண்ட தமிழக சட்டமன்றம் பல அறிஞர்களை, சான்றோர்களை, புகழ் பெற்ற பல தலைவர்களை நமக்கு வழங்கிய பெருமை வாய்ந்த மன்றமாகும். 1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக 1920 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. 

தற்போதைய தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது.  தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல முன்னோடி சட்டங்களை இயற்றியுள்ளது. 

முன்னர் பழம்பெரும் தலைவர்களான பனகல் அரசர், பி.டி.தியாகராயர், பி.டி.இராசன் தொடங்கி காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வரை பலரும் பங்கேற்று சிறப்பித்த வரலாறு கொண்ட தமிழக சட்டமன்றத்தின் 15வது அவையில் நானும் பங்கேற்று என்னாளான அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளேன் என்ற மன நிறைவுடன் இந்த அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

திராவிட இயக்கத்தின் மூல கொள்கைகளான சமூக நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட தொடர்ந்து உழைத்து வரும் திராவிட இயக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகளாக நான் ஆற்றிய பணிகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக விளக்கியுள்ளேன்.

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் ஆயுதம் வாக்குச்சீட்டு என்றார் அண்ணா. நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கும், நேர்மையான முறையில் என்னை தேர்ந்தெடுத்தமைக்கும், ஒவ்வொரு முறை இந்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்போதும் நான் எனது நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் எனக்களித்த இந்த பொறுப்பினை என் கடமையாக கருதி உங்களுக்கான திட்டங்களை திறம்பட நிறைவேற்றியுள்ளேன் என்ற உறுதியுடன் இந்த அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

உங்கள் பிரதிநிதியாக சட்டசபையில் எனது செயல்பாடுகள் 

சட்டமன்றத்திற்கும் PTR குடும்பத்திற்குமான தொடர்பு மிக நீண்டது. 1921 ஆம் ஆண்டு சமூகநீதியை முன்னிறுத்திய நீதிக்கட்சி சென்னை மாகாண தேர்தலில் போட்டியிட்டு வென்றபோதே எனது தாத்தா PT ராஜன்  சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார், கொறடாவாக, அமைச்சராக  செயல்பட்டு அறநிலையத்துறை சட்டம் போன்ற பல முக்கிய  சட்டங்கள் கொண்டுவரவும் , கூட்டுறவுத்துறையை  மேம்படுத்தவும்  முக்கிய பங்காற்றினார்.

பின் எனது தந்தை PTR பழனிவேல்ராஜன் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு  சபாநாயகராக பதிவி வகித்து மாற்றுக்கட்சியினரும் போற்றும் அளவிற்கு சிறப்பாக செயலாற்றினார், மதுரைக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவர காரணமாக அமைந்தார் என்பது பலரும் அறிந்ததே. 

அவர்களது வழியில் வந்த எனக்கு சிறப்பான மக்கள்பணி ஆற்றவேண்டிய பெரும் பொறுப்பு உள்ளதை உணர்ந்து  செயல்பட்டு வருகிறேன். எனவே  சட்டமன்றதில் ஜனநாயகம் கேலிக்குறியதாக ஆக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில் எனக்கு கிடைக்கிற எந்த வாய்ப்பையும் நான் தவற விடுவதில்லை. 

● நமது தொகுதி சார்ந்த வளர்ச்சி, மேம்பாடு குறித்த தொலைநோக்கு பார்வையோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களும் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளான போக்குவரத்து நெருக்கடி, சுகாதார பிரச்சினை, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ஏற்படும் இட நெருக்கடி, நகர் மயமாக்கலால் ஏற்படும் இதர பிரச்சனைகள், மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதி குறித்து விரிவானதொரு அறிக்கையை நான் சட்டசபையில் சமர்ப்பித்துள்ளேன்.

● ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி உரையாற்றும் வாய்ப்பை எனக்கு கழக தலைவர் ஸ்டாலின் வழங்கியதை பெரு வாய்ப்பாக கருதி தொடர்ந்து 2016, 2017, 2018 2019, 2020 ஆகிய ஆண்டுகளில்  சரிந்து வரும் தமிழக நிதி நிலைமை, பல மடங்கு அதிகரித்துள்ள கடன் சுமை, அதானால் மக்களுக்கு நலன் பயக்கும் புதிய நலத் திட்டங்கள் போன்றவைக்கு  நிதி ஒதுக்க முடியாத நிலையை சட்டமன்றத்தில் புள்ளி விவரங்களுடன் எடுத்து கூறினேன்.

● குற்றம் சாட்டுவதோடு நில்லாமல் அதை சீர் செய்யவும் ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளேன். தொடர்ந்து சரிந்துவரும் தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படவேண்டும் என்பதை  நான் அவையில் தொடந்து வலியுறுத்தி வந்தேன் .அதன் அவசியத்தை தாமதமாக உணர்ந்தாலும்  தற்போது அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

● நீட் தேர்வுக்கு பின் மருத்துவ கல்வி மாணவர்கள் சேர்க்கையின் போது இரட்டை இருப்பிட சான்றிதழ் குளறுபடி காரணமாக தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை விற்று மாநிலத்தவர்கள் தட்டி சென்றனர். இது  குறித்து நான் அவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மருத்துவ கல்லூரி சேர்க்கை விதிகளில் அரசு மாற்றம் கொண்டு வந்தது. தமிழக மாணவர்களுக்கு உரிய நீதி கிடைத்தது.

 

● மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளிலிருந்து, மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் பல  ஆண்டுகளாக நிறைவடையாமல் இருப்பது குறித்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினேன். 

● மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டதா? கையகப்படுத்திய இருந்தால் அதனை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் அரசு எப்போது ஒப்படைத்தது என்ற கேள்வி எழுப்பி,  அமைச்சருடன் இது குறித்த விவாதத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டின் அவசியம் பற்றி எடுத்துக்கூறினேன். 

● 2018 ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று , மத்திய அரசின் கூட்டாட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்த்து  மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தினேன்.

● மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டசபையில் கொண்டு வந்து, இவ்விபத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் COMPREHENSIVE EMERGENCY RESPONSE SYSTEM உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதுமட்டுமன்றி கோயில் பகுதியில் நிரந்தரமாக ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறித்தினேன். தற்போது அங்கு தீயணைப்பு வாகனம் நிரந்தரமாக நிறூத்தப்பட்டுள்ளது.

● 14 துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்களுக்கான பெறப்பட்ட 4600 விண்ணப்பங்களில் பட்டதாரிகள், எம்பிஏ, இன்ஜினியரிங் போன்ற மேற்படிப்பு படித்தவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கும் அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதை  சுட்டிக் காட்டியதோடு இந்த நிலையை மாற்ற அரசு எப்படி பொறுப்புடன் வருவாயைப் பெருக்கி அதனை பொதுமக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறினேன்.

● மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாக தீர்க்க மெட்ரோ சிஸ்டம் (Metro system) மற்றும் அர்பன் மாஸ்டர் பிளான்(Urban master plan) உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

● தனிநபர் அட்டைக்கு நியாய விலைக்கடைகளில் பொருட்களை வழங்காமல் அரசு திடீரென நிறுத்தி வைத்தது. குறித்து சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பினேன். அதன் பலனாக அடுத்த நாளே அரசு உடனடியாக அவர்களுக்கு மறுபடியும் பொருட்கள் வழங்க ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.

● எனது தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் தங்களின் வாகனங்கள் நிறுத்த வசதியாக, காலியாக உள்ள பழைய செண்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ’பன்னடுக்கு வாகன நிறுத்தம்’ அமைக்க வேண்டும் எனக் கூறி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன்.

● மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை ஒட்டி மதுரை காந்தி மியூசியத்திற்கு அரசிடமிருந்து வழக்கமாக வர வேண்டிய நிதி உதவி  பல ஆண்டுகளாக வராமல் நிறுத்தப்பட்டு இருந்தது.இது குறித்து சட்டசபையில் பேசினேன். அதன் பலனாக பல ஆண்டு நிதி பாக்கியை அரசு உடனடியாக வழங்கிட உறுதி அளித்தது.

● மத்திய அரசின் திட்டத்தில் மதுரை நகருக்கு உட்பட்ட பணிகளில் மீனாட்சியம்மன் கோவில் பகுதியை சுற்றி உள்ள தெருக்களில் செயல்படுத்தவிருக்கும் புதுமையான பாதாள சாக்கடை திட்டம் பற்றியும் சட்டசபையில் கேள்வி எழுப்பி உள்ளேன்.

● பொறுப்புடைமை திருத்தம், மெட்ராஸ் பொருளியல் பள்ளி சட்ட முன்வடிவு மீதான விவாதத்தில் பங்கேற்று ‘‘மத்திய அரசு வழங்கவேண்டிய ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படியான நிதியை பெற வேண்டும். என்று வலியுறுத்தி பேசினேன். 

● அதோடு சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக மெட்ராஸ் பொருளியல் பள்ளியில் 35 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதை குறிப்பிட்டு பேசினேன்.

இவ்வாறு கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி பிரச்சனைகளை சட்டமன்றத்தில் முன்வைத்து பலவற்றிற்கு தீர்வு கண்டதோடு,  மாநில உரிமைகள், சமூக நீதி, தமிழ்நாட்டின் சரியும் நிதிநிலை போன்ற மாநில அளவிலான முதன்மையான பிரச்சனைகளை சட்டமன்றத்தில் முன்வைத்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளேன். 

அவ்வகையில் சட்டமன்ற உறுப்பினராக எனக்கு  வாய்ப்பளித்த மதுரை மத்திய தொகுதி மக்களின் நம்பிக்கைக்கு பத்திரமாகவும் , பல தலைமுறைகளாக மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் கறைபடாத கரங்களுக்கு சொந்தமான PTR குடும்பத்தின் நன்மதிப்பை காப்பாற்றும் வகையிலும் பணியாற்றி வருகிறேன் என்பதற்கு எனது செயல்பாடுகளே சாட்சியாகும். 

மதுரை மத்திய தொகுதியில் திட்டப்பணிகள்

மதுரை மத்திய தொகுதி முழுவதும் மாநகராட்சி எல்லைக்குள்ளும், முற்றிலும் நகரமயமான ஒரு தொகுதியாகும். மக்கள் தொகையின் வளர்ச்சிக்கேற்ப அதன் உட்கட்டமைப்பு, மக்களுக்கு தேவையான சுகாதாரம், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் நன்றாக இருந்த நகரத்தை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் முழுவதும் சீரழித்துவிட்டனர் ஆளும் அதிமுக அரசு.   நிறைவேற்ற வேண்டிய பணிகள் பல இருப்பினும், எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியினை கொண்டு யாரும் நிறைவேற்றாத அளவுக்கு 150 திட்டங்களை செயல்பாட்டுக்கு கொணடு வந்துள்ளேன். ஒவ்வொரு பகுதிக்கும் நான் நிறைவேற்றிய திட்டப்பணிகளை தனித்தனியே தொகுத்து கீழே பட்டியலிட்டுள்ளேன். துறை வாரியாக நான் நிறைவேற்றிய திட்டப்பணிகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு.

(ஆண்டுக்கு 30 திட்டங்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்ப்ட்டு 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 150 திட்டங்கள்)

மாநில நலனில் எனது பங்கு

பொதுக்கணக்கு குழு

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை தொடர்ந்து 5வது வருடமும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் இடம் பெற செய்ததை கிடைத்ததற்கரிய ஒரு நல்வாய்ப்பாக கருதி அதன் மூலம் அரசு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேல் ஆய்வு செய்திடவும், தமிழகம் முழுக்க நடைபெறும் அரசின் பணிகளை கண்காணிக்கவும் நம் தொகுதிக்கு தேவையான திட்டங்களை உடனடியாக கொண்டு வரவும் முடிகிறது.

எனது கல்வி, அனுபவம் மக்களுக்காக பயன்படவேண்டும் என்ற கொள்கை கொண்டுள்ள என் எண்ணத்தின் விருப்பப்படி கூடுதல் பொறுப்பாக மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களுக்கும் சென்று நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். அக்குழுவின் தலைவர் துரைமுருகன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க குழுவின் தலைவராகவும் இருந்து ஆய்வு செய்துள்ளேன்.

 

அதில் உறுப்பினராக இருப்பதன் மூலம், அதில் கிடைத்த அனுபவங்களில் அடிப்படையில் எனது தொகுதிக்கு நான் ஆற்றவேண்டிய பணிகளை இன்னும் சிறப்பாகவும், மக்களின் தேவையறிந்தும் நிறைவேற்றிட முடிகிறது. 

கண்குறைபாடு நீக்கும் சிறப்பு முகாம்கள்

தொகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை தாண்டி அவர்களின் நலனில் தனித்த அக்கறை கொண்ட நான், கண்ணொளி திட்டம் தந்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் கண் குறைபாடு இல்லாத தலைமுறையை உருவாக்கும் ஒரு முயற்சியாக கண் சிகிச்சை முகாம்களை நடத்தியுள்ளேன். மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஆரப்பாளையம், எல்லீஸ்நகர் மற்றூ  சிம்மக்கல், பகுதிகளில் மாவட்ட கண்பார்வை நல வாரியத்தோடு இணைந்து தொடர் கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமினை வெற்றி கரமாக நடத்தி முடித்துள்ளேன். ஏழை எளிய நடுத்தர மக்கள் முற்றிலும் பயன்பெறுகிற வகையில் முற்றிலும் இலவசமாக  நடத்தப்பட்ட இந்த முகாம்களில் 674 பேர் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர். 23 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்ணொளி பெற்றுள்ளனர்.  பொது மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க  22 பேருக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலவச இ-சேவை மையம்

மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக என்னை தேடி வருகிறார்கள். அவற்றுள் பெரும்பாலும் அரசு தரப்பில் இருந்து பெறப்படும் சேவைகளில் உள்ள குறைபாடு குறித்தவை. சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஆதார் அட்டை, பெண்களுக்கான அரசு வழங்கும் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களுக்கு அவர்களுக்கு சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ள பலரும் பணம் கொடுத்து பெற முடியாத நிலையில் இருப்பவர்கள்

இதுகுறித்து ஆராய்ந்து எனது தொகுதி அலுவலகத்தில் அரசு வழங்கும் இணைய வழி சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கிட முடிவு செய்து இலவச இ-சேவை மையம் ஒன்றை கடந்த மார்ச் 2020 அன்று திறந்துவைத்தேன். தொடர்ந்து மக்களுக்கு எந்த செலவுமின்றி அரசுக்கு நானே கட்டணம் செலுத்தி தேவைப்படும் சான்றிதழ்களை பெற்றுத்தந்துள்ளேன்.

மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரங்கள்

எனது பணியினை தமிழகம், மற்றும் தேசிய ஊடகங்கள், பல்வேறு அமைப்புகள் பலவும் பாராட்டியுள்ளதை மக்கள் உங்களுக்கு கிடைத்த பாராட்டாக நினைக்கிறேன்.

நன்றியுடன் திரும்பி பார்க்கிறேன்

தமிழகத்தின் 15வது சட்டமன்றத்தில் இந்தியாவின் தனிப்பெரும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உங்களின் பேராதரவுடன் நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் கடந்து வந்த ஐந்து வருடங்களை திரும்பி பார்க்கிறேன்.

எனது தந்தையின் விருப்பத்தின் பேரில் நான் வெளிநாடுகளுக்கு சென்று உயர்ந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றேன். என் குடும்ப அடையாளத்தை விடுத்து  என் சொந்த உழைப்பாலும் அனுபவத்தாலும்  அமெரிக்கா உள்ளிட்ட உலக அளவில் சிறந்த வங்கிகளின் தலைமை பொறுப்பை வகித்துள்ளேன். பொருளாதாரத்திலும், வாழ்க்கைத்தரத்திலும் உயர்ந்த நிலையில் இருந்த நான் பொது வாழ்க்கையை ஏன் தேர்ந்தெடுத்தேன் என எண்ணிப்பார்க்கிறேன். எனது முன்னோர்கள் பொது வாழ்க்கையில் செய்த நற்பணிகள், ஆற்றிய சாதனைகள் குறித்தெல்லாம் எனது தந்தையார் எடுத்து சொல்லி தமிழகம் திரும்பிடுமாறு பலமுறை வலியுறுத்தியும் நான் மறுத்து வந்தேன்.

என் தந்தையின் இறுதி காலங்களில் உடன் இல்லாத சூழ்நிலையை இன்றும் எண்ணி பார்க்கிறேன். அவர் மறைவுக்கு பிறகு கலைஞர் அழைத்தும் நான் வரவில்லை. எனது குடும்பத்தை தேவைக்கேற்ப எனது பொருளாதார நிலையை உயர்த்திய பின், நான் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றிய பின்னர் வருகிறேன் என சொன்னேன்.

எனது தந்தையார் இறந்து 10 வருடங்களுக்கு பின்னரே பொதுவாழ்க்கைக்கு வந்துள்ளேன். எனது முன்னோர்கள் விட்டுச்சென்ற பொதுப்பணியை தொடரவும், என் வருங்கால சந்ததியினருக்கு புகழை சேர்க்கவும் மட்டுமே நான் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தேன்.

காந்த 5 வருடங்களில் ஒரு மாணவனை போல நான் நிறைய கற்றுக்கொண்டதோடு ஒரு முனைவர் பட்டம் பெறும் அளவில் அனுபவங்களை பெற்றுள்ளேன்.

மதுரை மத்திய தொகுதிக்கு 150 திட்டங்களை நான் நிறைவேற்றியிருந்தாலும் கூட என் தந்தை மதுரை மாநகருக்கு ஆற்றிய பணிகளை, மக்களாகிய நீங்கள் சொல்லி நான் கேட்கும்பொழுது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் என் தந்தையார் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிகளை போல நானும் ஒரு ஆளுங்கட்சி உறுப்பினராக உங்களுக்கு உழைத்திட வேண்டும் எனறு விரும்புகிறேன்.

ஒரு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக நான் ஆற்றிய பணிகளை நான் ஆற்றிய பணிகளை காட்டிலும், ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக நான் இன்னும் பல மடங்கு மேம்பாட்டு பணிகளை முழு உத்வேகத்துடன் செய்தி முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மக்களின் எண்ணம்போல் தான் வாழ்க்கை அமையும். எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைத்தரம், உங்கள் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அனைத்தும் மேம்படைய நீங்கள் இப்போது எடுக்கும் முடிவுதான் நல்ல விடியலை தரும். 

விரைவில் தமிழ்கத்தில் ஒரு மாற்றம் வரும். தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நல்லாட்சி மலரும்.

உங்கள் எண்ணமும், என் விருப்பமும், அன்னை மீனாட்சியின் அருளும்  இணைந்தால் இன்னும் பன்மடங்கு உங்களுக்கு உழைத்திடுவேன் என்ற உறுதியுடன் உங்களை விரைவில் நேரில் சந்திக்க வருகிறேன்.

நன்றி.