மக்கள் பணியில் 30 மாதங்கள்

/

மக்கள் பணியில் 30 மாதங்கள்

May 2018 - Oct 2018

"உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு..."

என்ற தலைவர் கலைஞரின் அடிக்கோடிட்ட வார்த்தைகளை நெஞ்சில் நிறுத்தி, அவர் இருக்கின்ற திசை நோக்கி வணங்கி, மக்கள் பணியாற்றுவதற்கு வேட்பாளராக நிற்க வாய்ப்பை தந்தமைக்காக கழகத்தின் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கும், வெற்றி பெறுகிற அளவு வாக்களித்த மதுரை மத்திய தொகுதி மக்களாகிய உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு எனது ஐந்தாம் அரையாண்டு செயல்பாட்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் நம் அரசியலமைப்பின் படி மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்ட கடமைகள் உண்டு.

அதன் அடிப்படையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை, மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை, உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாமன்ற உறுப்பினர்களின் கடமை ஒவ்வொன்றும் தனித்தனியாக வகுக்கப்பட்டது.

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய திட்டங்களான ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டம் , ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்ற மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக குரல் எழுப்புவதும், அவற்றை மாநில மக்களுக்காக கேட்டுப் பெறுவதும் கடமை ஆகும்

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் கடமை மாநிலத்தில் தனது தொகுதியில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், செயல்படுத்தப்படும் நிதி மேலாண்மை, உள்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, நீர் மேலாண்மை போன்ற அரசின் திட்டங்களை கண்காணிப்பதுவும், உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியினை கொண்டு தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் மேம்பாட்டுக்காக அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதும், மாநிலத்தின் பிரதான பிரச்னைகளை தீர்க்க அரசு என்ன மாதிரியான திட்டங்களை உருவாக்கியுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டியதும் சட்டமன்ற உறுப்பினரின் கடமையாகும்.

அதன்படி மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய நான் சட்டசபையில் கீழ்காணும் பிரச்சனைகள் குறித்த கேள்விகளை எழுப்பி அதற்கு தீர்வும் கண்டுள்ளேன்.

1. தனி நபர் அட்டைக்கு நியாய விலைக்கடைகளில் பொருட்களை வழங்காமல் அரசு திடீரென நிறுத்தி வைத்தது. இது குறித்து சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பினேன். அதன் பலனாக அடுத்த நாளே அரசு உடனடியாக அவர்களுக்கு மறுபடியும் பொருட்கள் வழங்க ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.

2. எனது தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் தங்களின் வாகனங்கள் நிறுத்த வசதியாக, காலியாக உள்ள பழைய செண்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ’பன்னடுக்கு வாகன நிறுத்தம்’ அமைக்க வேண்டும் எனக் கூறி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன்.

3. மதுரை காந்தி மியூசியத்திற்கு அரசிடமிருந்து வழக்கமாக வர வேண்டிய நிதி உதவி பல ஆண்டுகளாக வராமல் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து சட்டசபையில் பேசினேன். அதன் பலனாக பல ஆண்டு நிதி பாக்கியை அரசு உடனடியாக வழங்கிட உறுதி அளித்தது.

4. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை நகருக்கு உட்பட்ட பணிகளில் மீனாட்சியம்மன் கோவில் பகுதியை சுற்றி உள்ள தெருக்களில் செயல்படுத்தவிருக்கும் புதுமையான பாதாள சாக்கடை திட்டம் பற்றியும் சட்டசபையில் கேள்வி எழுப்பி உள்ளேன்.

திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையே மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிற, மக்களுக்கு மிக அருகில், கேள்வி எழுப்பிடும் தூரத்தில் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான். அதனால் மாநில அரசின் பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு இந்தி திணிப்பு, நீட் போன்ற எந்த வகையிலும் இருந்திடக் கூடாது எனக் கருதுகிறோமோ?, அதே அடிப்படையில்தான் மாநில அரசின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் மாநகராட்சி அதிகாரங்களில் தலையிடக் கூடாது.

மாநகராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரே குடிநீர், கழிவு நீர், பாதாள சாக்கடை போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்துச் செல்வதும், மாமன்றத்தில் அது குறித்து குரல் எழுப்பவும் வேண்டும்.

இதை நான் முதலில் சொல்வதற்கு காரணம் உள்ளாட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்றத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக இல்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணமும் இந்த அரசுக்கு இல்லை. இந்த சூழ்நிலையில்தான் யாராவது இந்த தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை கண்காணித்து உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எனக்கு வரும் அனைத்து புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கிறேன்.

மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளான பாதாள சாக்கடை அடைப்பு, குடிநீரில் கழிவு நீர் கலந்து வருதல் உள்ளிட்ட ஒவ்வொரு அடிப்படை பிரச்சனைகளுக்கும் கூட தற்காலிகமாகவே தீர்வு காணப்பட்டு வருகிறது. முன்னால் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு கூவத்தூரில் கும்மாளமடித்துவிட்டு பின்வாசல் வழியாக ஆட்சியை அபகரித்த எந்த தகுதியும் திறமையுமில்லாத இவர்களால் நிரந்தர தீர்வுக்கான முதல் படியை கூட எடுத்து வைக்க இயலாது. இவர்களின் திறமையெல்லாம் ஆட்சியிலிருக்கும் காலத்தில் தமிழ்நாட்டை நிரந்தரமாக திவால் ஆக்குவதை தவிர வேறு எந்த காரியத்திற்கும் உபயோகப்படாது. தமிழகத்தை தலைநிமிரச் செய்ய மக்கள் நம்புகிற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். மக்களின் நம்பிக்கை நனவாக திமுக ஆட்சிக்கு வரவேண்டும். தலைவர் தளபதியார் அவர்கள் முதல்வராக வேண்டும். அப்போதுதான் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு ஏற்படும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

வாக்களித்து என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எத்தகைய நன்றி உணர்வோடு செயல்படுகிறேனோ அதே அளவிற்கு என் மீது நம்பிக்கை வைத்து கழகத் தலைமை அளித்துள்ள மாநில தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வருகிறேன்.

அதற்கான முயற்சியில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், மக்கள் பணி செய்யும் இளைஞர்களை கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும், ஒவ்வொரு வார்டிலும் பூத் வாரியாக மக்களை எளிதில் அணுகக்கூடிய வகையில் தகவல் தொழிநுட்ப அணியை கழகத்திற்காக கட்டமைத்து வருகிறேன். இதனால் இனி வரும் காலங்களில் மக்களின் பிரச்சனைகள் நேரடியாக கவனத்திற்கு வரும்.

அதற்காக தமிழகத்தில் 80000 நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் நியமிக்கும் பணிகளில் நான் ஈடுபட்டுள்ளதாலும், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இதற்காகவே தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாலும் தொகுதி மக்களுக்கான பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அலுவலகப் பணியாளர்களை நியமித்து பெறப்படும் புகார்களின்மேல் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

மாநில அளவிலோ, கழகத்தின் சார்பிலோ நான் மேற்கொள்கிற எந்த செயலாக இருந்தாலும் அது தொகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனளிக்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் கவனத்தோடு செயல்படுகிறேன். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழுவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இடம்பெற்றுள்ள நான் மாநில அளவில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என அறிந்து கொள்வதோடு, துறை அதிகாரிகளோடு ஏற்படுகிற அறிமுகத்தால் ஆங்காங்கே நடைபெறுகிற தொகுதிக்கான மக்கள் திட்டங்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது? அதன் நன்மை தீமை என்ன? என்பது குறித்தெல்லாம் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல் அத்திட்டங்களில் சிறந்தவற்றை நமது தொகுதிக்கு ஏற்றவாறு அமல்படுத்திடவும் ஏதுவாக அமையும்.

மக்களிடமிருந்து எனக்கு வரும் பொதுவான புகார்கள்

மக்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகள் குறித்த புகார்கள் எனது தொகுதியில் வைக்கப்பட்டுள்ள 25 புகார் பெட்டிகள் மூலமும், எனது மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com வழியாகவும், பொதுமக்கள் குறைதீர்ப்பு மைய தொலைபேசி எண்: 7305519999 மற்றும் வாட்சப் எண்: 7530048892 மூலமும் சட்டமன்ற உறுப்பினரான என் கவனத்திற்கு வருகிறது. முற்றிலும் கணிணிமயமாக்கப்பட்ட எனது இல்ல அலுவலகம் மற்றும் மஹபூப்பாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மூலம் மக்கள் நேரடியாக தங்கள் புகார்களை என்னிடம் சேர்க்கின்றனர். எனது சமூக ஊடக பக்கங்களில் வரும் புகார்கள் முறையாக தொகுக்கப்படுகிறது.

அது தவிர தொகுதிக்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள நான் செல்லும்பொழுதும், தொகுதியில் நடக்கும் பொது நிகழ்வுகளின்போதும் பெறப்படும் மனுக்கள் என அனைத்தும் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 1872 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவற்றின் விவரங்கள் கீழே...

/

 

நடைபெறும் தொகுதி மேம்பாட்டு பணிகள்

எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தண்ணீர் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தும், சுகாதாரம், துப்புரவு, சாலை, போக்குவரத்து போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பணிகளை நிறைவேற்றி வருகிறேன்.

என் தொகுதிக்குட்பட்ட மதுரை மாநகரின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முதல் முறையாக அறிவியல் பூர்வமான சேட்டிலைட் தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் இருப்பு கண்டறியப்பட்டு பல இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு நம் தொகுதி மக்கள் அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொண்டும் வருகின்றனர்.

இந்த ஆறு மாதத்தில் மொத்தம் 21 இடங்களில் போர்வெல்கள் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான, இந்த அரசால் கவனிப்பின்றி எவ்வித பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்த மேலவாசல், கோமஸ்பாளையம், MC காலனி, டோபி காலனி மற்றும் மஞ்சள் மேடு பகுதிகளின் மேல் நான் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறேன். கோமஸ்பாளையம் பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்படுகிறது.

மேலவாசல் பகுதி முழுக்கவும் தார்சாலை அமைக்கப்படுகிறது. என் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.1.60 கோடியை மேற்கூறிய பணிகளுக்காக தனியாக ஒதுக்கியுள்ளேன். அரசால் மேற்கொள்ளப்படாத பணிகள், என் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அரசுப்பள்ளிகள் மீது தனிப்பட்ட கவனம்

எனது சொந்த செலவில் மத்திய தொகுதிக்குட்பட்ட 9 மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள், சிறப்பு கல்வி இதழ்களை ஆண்டு முழுவதும் அவர்களுக்கு கிடைத்திட சந்தாக்களை செலுத்தியுள்ளேன். அவர்களின் உலக அறிவை மேம்படுத்திட தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறேன்.

ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு அரசுப்பள்ளிகள் தான் கல்வி கற்பதற்கான ஒரே வாய்ப்பாக உள்ளது.

எனது தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஈ.வெ.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் குடிநீர் ஆர்.ஓ.ப்ளாண்ட் அமைக்கப்பட உள்ளது. ஆதிமூலம் ஆரம்ப பள்ளியில் புதிய சமையல் கூடம் கட்டப்பட உள்ளது.

கண்குறைபாடு நீக்கும் சிறப்பு முகாம்கள்

தொகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை தாண்டி அவர்களின் நலனில் தனித்த அக்கறை கொண்ட நான், கண்ணொளி திட்டம் தந்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் கண் குறைபாடு இல்லாத தலைமுறையை உருவாக்கும் ஒரு முயற்சியாக தொடர் கண் சிகிச்சை முகாம்களை நடத்தினேன். மதுரை மத்திய தொகுதியில் உள்ள மூன்று பகுதிகளுக்கும் தனித்தனியாக மாவட்ட கண்பார்வை நல வாரியத்தோடு இணைந்து கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமினை வெற்றி கரமாக நடத்தி முடித்துள்ளேன். ஏழை எளிய நடுத்தர மக்கள் முழு பயன்பெறுகிற வகையில் இலவசமாக நடத்தப்பட்ட இந்த முகாம்களில் 674 பேர் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர். 23 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்ணொளி பெற்றுள்ளனர். பொது மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 22 பேருக்குஇலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

இனி அடுத்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக உங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். தாங்கள் குடியிருக்கும் ஒவ்வொரு தெருவையும் விட்டுவிடாமல் பூத் வாரியாக வர முடிவு செய்துள்ளேன். கடந்த இரண்டரை ஆண்டுகளிலுமே நான் பலமுறை தொகுதிக்கு வருகை தந்த போதிலும் என்னுடைய வருகை விளம்பரம் ஏதும் இல்லாமல் இருப்பதால் சிலருக்கு தெரியாமல் போய்விடுகிறது. இம்முறை நான் வரும்பொழுது முன்கூட்டியே சுவரொட்டிகள் மூலமாகவும், ஆட்டோ மூலம் உங்களுக்கு நான் வரும் தகவலை தெரிவிக்க உள்ளேன்.

தொகுதி மக்களான நீங்களும், நான் வரும் நாட்களில் என்னை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வங்கிகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய காலம் முதலே எந்த பொறுப்பை வகித்தாலும் அதன் இலக்கை அடையும்வரை விடாமுயற்சியுடன் செயல்படுவது எனது வழக்கம். அதன் காரணமாகவே வங்கியில் நிர்வாக இயக்குநர் உயரத்திற்கு நான் விரைவாக வர முடிந்தது. அந்த வரலாற்றின் அடிப்படையில் தலைவர் தளபதியார் பொதுக்கணக்கு குழு உறுப்பினர், மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாலர் என்ற இரண்டு பொறுப்புகளை எனக்கு வழங்கினார். இருக்கிறேன். இருப்பினும் என் தொகுதி மக்களால் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை தலையாய பணியாக கருதி எனது பயணத்தை தொடர்கிறேன்.

நன்றி.