சட்டமன்ற உறுப்பினராகி முதல் ஆண்டு நிறைவு

/

சட்டமன்ற உறுப்பினராகி முதல் ஆண்டு நிறைவு

Nov 2016 - Apr 2017

"மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட 365 நாட்கள்"

என் மரியாதைக்குரிய மதுரை மத்திய தொகுதி மக்களுக்கு வணக்கம்!

திராவிட இயக்கத்தின் மூன்றாம் தலைமுறையாக சொல்வதை செய்கின்ற இயக்கமாம் திரவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த தங்களுக்கும் எனது தாத்தா பி.டி.ராஜன் மற்றும் ,என் தந்தையார் பி.டி..ஆர். பழனிவேல்ராஜன் ஆகியோரால் பாரம்பரிய அடையாளம் இருந்த போதிலும் என்னை பொது வாழ்விற்கு அடையாளம் காட்டிய நம் இனமான தலைவர் கலைஞர், அண்ணன் தளபதியார் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

"தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு"

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும் அறிவுடைமையும்,துணிவும் நாட்டை ஆளுகின்றவர்களுக்கு தேவை என்கிறது வள்ளுவம்.

ஆனால் இதற்க்கு முற்றிலும் எதிரான முடங்கி போய் இருக்கின்ற ஆளும் கட்சியின் செயல்படாத தன்மைக்கு மத்தியிலும்,மதுரை மத்திய தொகுதியின் எதிர்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஒரு ஆண்டில் என்னால் முடிந்த ஆக்கப்பூர்வமான பணிகளை செய்துள்ளேன்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அளித்த வாக்குறுதியின் படி 6 மாதத்திற்கு ஒரு முறை நான் செயலாற்றிய பணிகள் குறித்த அறிக்கையை உங்களிடம் சமர்ப்பிக்கின்ற நோக்கோடு ஓராண்டில் ஆற்றிய பணிகளின் தொகுப்பு உங்களது பார்வைக்கு...

குடிநீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம்

கடுமையான வறட்சி பாதிப்பினாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மதுரை மாநகராட்சியில் இல்லாத சூழலில் காலிக்குடங்களோடு மதுரை மக்கள் அடைந்த துயரத்தை நான் நன்கு அறிவேன். இதனை மனதில் கொண்டு தான் இதுவரை வரலாற்றில் இல்லாத நிகழ்வாக எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் போர்க்கால நடவடிக்கையாக மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பணியாற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர்களை எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கே அழைத்து ஆலோசனை நடத்தியதோடு, குடிநீர் சீராக வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேட்டறிந்ததோடு அதனை கேள்விகளாக தொகுத்து அவர்களிடம் பதில் பெற அனுப்பி வைத்துள்ளேன்.

அதுமட்டுமல்லாது குடிநீர் பிரச்சனை சம்மந்தமாக எனது கவனத்திற்கு பல்வேறு வழிகளால் பொதுமக்கள் மூலம் அளிக்கப்பட்ட 100 புகார்களுக்கு உடனடி தீர்வு கண்டுள்ளேன்.போர்வெல் சம்மந்தமாக தரப்பட்ட 57 புகார்களுக்கு தொலைநோக்கு பார்வையுடன், புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய திட்டத்தை வகுத்து அது குறித்த கடிதத்தை மதுரை மாநகராட்சி ஆணையருக்கு ஒப்புதல் பெற அனுப்பி வைத்துள்ளதோடு அதனை எனது சொந்த செலவில் நிறைவேற்றவும் தயாராக உள்ளேன்.

அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வு:

மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவது மாநில சுயாட்சியை கொள்கையாக கொண்ட என்னை போன்றோருக்கு உடன்பாடு இல்லாத சூழலிலும், மக்கள் அடைகின்ற வேதனைகளையும், மோசமான சூழ்நிலையையும் உடனடியாக சரிசெய்திட 730551999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொது மக்கள் புகார் தெரிவிக்கிற வகையில் முழுமையான திட்டத்தை செயல்படுத்தி வருவதோடு எனது தொகுதி மக்களான தாங்கள் புகார் அளிக்கிற வகையில் செயல்ப்படுத்தப்பட்டு வரும் புகார் பெட்டி, இ-மெயில் மற்றும் சமூக வலை தளங்கள், தொகுதி ஆய்வின் போது என்னிடம் நேரடியாக தரப்பட்ட மனுக்கள், எனது அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றை தொகுத்து இதுவரை பெறப்பட்ட புகார்களில்.

பாதாள சாக்கடை பிரச்சனை தொடர்பாக 20 புகார்களில் 3 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. 17 புகார்கள் நீண்ட கால பிரச்சனைகளாக உள்ளதால் அவை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கழிவுநீர் சம்மந்தமாக 6 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 4 புகார்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளது. 2 புகார்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளது.

குப்பைகள் அகற்றப்படுவது சம்மந்தமாக 2௦ புகார்கள் பெறப்பட்டு 20 புகார்களுமே தீர்வு காணப்பட்டுள்ளது.

பொது பிரச்சனை தொடர்பாக பெறப்பட்ட 77 புகார் மனுக்களில் 25 மனுக்களுக்கு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. 52 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

வருவாய்துறை தொடர்பான புகார் மனுக்களுக்கு தீர்வு

முதியோர் உதவித்தொகை சம்மந்தமாக 151 மனுக்களும், விதவை உதவித்தொகை சம்மந்தமாக 103 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் சம்மந்தமாக 3 மனுக்களும்,பெறப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியர், சமூக நலத்துறை அலுவலரிடம் வலிறுத்தி உதவித்தொகை பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

திருமண உதவித்தொகை சம்மந்தமாக இரண்டு மனுக்கள் பெறப்பட்டு உதவித்தொகையை இரண்டு பயனாளிகளும் பெற்றுள்ளனர்.

சமுதாயக்கூடம், சத்துணவுக்கூடம், அங்கன்வாடி, சாலை வசதி, கழிப்பிட வசதி, சுகாதார நிலையம், பட்டா வழங்குதல் சம்மந்தமாக 130 திட்டப்பணிகள் செயல்வடிவம் பெற உள்ளது

அடிபிறழாத அரசியல் நாகரீகம்

எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் மாற்றுக்கட்சியினரை மதிக்கும் மாண்பை பாரம்பரியத்தில் இருந்தே கற்ற நான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்வில் அதிமுக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சரோடு பங்கேற்றதோடு எனது தொகுதியை சார்ந்த 77 வது வார்டு வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்த கழிவுகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாக மனு அளித்தேன். மனு கொடுத்த மறுதினமே இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இதற்காக அமைச்சருக்கு நான் நன்றி தெரிவித்தேன்.

மாணவர் நலனில்

எதிர்கால சமூகத்தை நிர்ணயிக்கிற இளைய தலைமுறையினரான மாணவச்செல்வங்கள் மீது எப்போதும் எனக்கு பற்று உண்டு. அவர்களின் எதிர்கால வாழ்வினை முன்னேற்றுகிற வகையில் + 2 முடித்த மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை பல்துறை சார்ந்த பேராசிரியர்களோடு இணைந்து நடத்தியதோடு மாணவ,மாணவிகளோடு கலந்துரையாடினேன்.

தமிழக மாணவ மாணவிகளின் கல்வி உரிமையில் தலையிடுவது மட்டுமல்லாது, மாநில சுயாட்சிக்கு சவால் விடுகிற நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்திடக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினேன்.

உயர்மட்ட பாலங்கள்

நமது மதுரை மத்திய தொகுதிகுட்பட்ட அருள்தாஸ்புரம், திருமலைராயர் படித்துறை ஆகிய பகுதிகளில் இரண்டு ஆண்டுகளாக தாமதமாகி கட்டி முடிக்கப்பட்ட பிறகும் திறக்கப்படாமல் இருந்த உயர் மட்ட பாலங்களை திறந்திட பலமுறை வலியுறுத்தினேன். சில அரசியல் காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தை கடந்து மக்களின் பயன்பாட்டிற்கு பாலங்கள் திறந்து வைக்கப்பட்டது மகிழ்ச்சி.

எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வரவே மத்திய அரசு விரும்புகிறது.என்று டெல்லியில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. தோப்பூரில் எரிவாயுக்குழாய் பூமிக்கடியில் செல்கிறது என்று ஒரு பிரச்சனையை சிலர் கிளப்பினார்கள். அதனால் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

ஒரு வேளை அது ஒரு பிரச்னையாக தெரிந்தால் மாவட்ட நிர்வாகம் வேறு இடத்தை தேர்வு செய்யலாம்.தற்போது எய்ம்ஸ்-ஐ விரைவாக மதுரையில் அமைக்க தமிழக அரசுதான் முயற்சி செய்ய வேண்டும். இந்த அரசு இருக்கும் வரை அதற்கு வாய்ப்பு இல்லை. இதற்கு ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.

பயணம் தொடரும்

எனது செயல்பாடுகளை நிலைக்கண்ணாடி பார்த்து திருத்தி கொள்கிற வகையில் ஆலோசனைகள் வழங்கி எனது செயல்பாடுகளை பாராட்டிய ஊடகங்கள்,எனது பணிகளுக்கு ஒத்துழைப்பு தருகிற அரசு அதிகாரிகள், மாநகராட்சி பொறியாளர்கள், எப்போதும் என்னிடம் உரிமையோடு கேள்வி எழுப்புகிற பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதோடு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட இந்த 365 நாட்களில் கற்றுக்கொண்டவற்றை அடுத்த கட்ட பணிகளுக்கான ஆதாரமாக எடுத்துக் கொண்டு தலைவர் கலைஞரின் வழியில் அண்ணன் தளபதியார் வழிகாட்டுதல்களோடு மதுரை மத்திய தொகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் எனது பயணம் தொடரும்.

நன்றி.