தொடர்ச்சியான மக்கள் பணியில் 24 மாதங்கள்

/

தொடர்ச்சியான மக்கள் பணியில் 24 மாதங்கள்

Nov 2017 - Apr 2018

மதுரை நகரின் மையத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு மீனாட்சியம்மனின் திருவருளுடன் நீங்கள் எனக்களித்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை ஏற்று இரு வருட காலமாகிறது. தலைவர் கலைஞர் மற்றும் செயல் தலைவர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலில், எனது தந்தையாரின் வழியில் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறேன். சட்டமன்ற உறுப்பினராக நான் பொறுப்பேற்கும் முன் நான் அளித்த வாக்குறுதியின் படி நான் உங்களிடம் சமர்ப்பிக்கும் நான்காவது செயல்பாட்டு அறிக்கை இது.

*ஒரு சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதி குறைபாடு உள்பட பல்வேறு பிரச்னைகளை எம்எல்ஏவால் மட்டுமே தீர்க்க முடியாது என்பதால் தான் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று மக்கள் தொகைக்கு தகுந்தவாறு பிரிக்கப்பட்டது. இந்த அமைப்புகளுக்கு முறையே தேர்தல் நடத்தி ஒவ்வொரு வார்டுக்கும் முறையே உறுப்பினர்கள்(கவுன்சிலர்கள்) தேர்வு செய்யப்பட்டனர். அடிப்படை பிரச்னைகளை, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்குரிய முறையான நிதி பெற்று பணிகள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

*ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் 2016ம் ஆண்டு செப்டம்பருடன் நிறைவடைந்துவிட்டது. அதற்கு பிறகு பல்வேறு காரணங்களை காட்டி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வருவதோடு இந்த அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களது பதவி காலம் நான்காவது முறை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.

*உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் கழிவுநீர் கால்வாய், சாலைகள் மேம்பாடு, குடிநீர் இணைப்பு உள்பட மக்களுக்கு அன்றாட வாழ்வுக்கு தேவையான வசதிகளை பெற முடியாமல் திணறி வருகின்றனர்.

*ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துவிடும் இந்த விசயத்தில் மாநில அரசு சுயநலம் காட்டாமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசோ தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டதொடரிலும் கூட உள்ளாட்சி தேர்தல் தற்போது நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையை உண்டாக்கி இருக்கிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இது மக்களுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகமாகும்.

இதனை கருத்தில் கொண்டு என் அலுவலகத்திற்கு நமது மதுரை மத்திய தொகுதி மக்களிடமிருந்து வரும் புகார்களை அது மாநகராட்சியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே இருப்பினும் முறைப்படி அப்புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டசபையில் எனது செயல்பாடு

*சட்டசபை உறுப்பினராக எனது தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதையே முதல் பணியாக நான் கருதுவதால் தொகுதி சார்ந்த பிரச்சனைகளில் முக்கிய பிரச்சனைகளான போக்குவரத்து நெருக்கடி, சுகாதார பிரச்சனை, மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் இட நெருக்கடி, நகர் மயமாக்கலால் ஏற்படும் இதர பிரச்சனைகள், மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதி ஆகியவை குறித்து விரிவான உரையை ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போதே நிகழ்த்தி இருக்கிறேன்.

*அதில் இளைஞர்கள் தற்போது சந்தித்து வரும் வேலைவாய்ப்பின்மை குறித்தும் கல்லூரிக் கல்வியில் செய்யப்படவேண்டிய மேம்பாடு குறித்தும் உரையாற்றி உள்ளேன்.

*மாநிலத்தின் நிதி நிலை குறித்து நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எடுத்து வைத்த கருத்துக்களை வரவேற்று அவ்வப்போது பொறுப்பில் இருந்த மாநிலத்தின் இரண்டு நிதி அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளதோடு அரசியல் வேறுபாடுகளை கடந்து ஆளும் கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனை எல்லாம் தாண்டி எனது ஆலோசனைகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்தருகிறது என்பதில் மனநிறைவு அடைகிறேன். நிதி மேலாண்மையை நன்கு அறிந்த என்னை மாநிலத்திற்கு ஆலோசனை கூறுகிற இடத்தில் அமர்த்தி வைத்திட்ட உங்களை நினைத்து நன்றி உணர்வோடு மகிழ்ச்சி அடைகிறேன்.

மீனாட்சியம்மன் கோயில்

*நம் தொகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அன்று ஏற்பட்ட தீவிபத்து எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

*மன்னர்கள் ஆட்சிக்கு பின் முதன் முதலாக எனது தாத்தா.பிடி.ராசன் அவர்கள் முன்னின்று திருப்பணி நடத்திய கோயில் இன்று நிர்வாக அலட்சியத்தால் விபத்துக்குள் சிக்கியது என்பது மதுரை மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும்.

*விபத்து குறித்து இந்து அறநிலயத்துறை, மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு 65 கேள்விகள் எழுப்பி விரிவான கடிதம் எழுதினேன். இதுவரை நான் கேட்ட விபத்து மேலாண்மை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விபத்துக்கு பிறகான படிப்பினை குறித்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வந்த பதில்கள் முழுமையானதாக இல்லை .இந்த அரசின் கையாலாகாததனத்தை வெளிப்படுத்திய பல்வேறு சம்பவங்களில் இந்த தீ விபத்து சம்பவமும் ஒன்று .இதற்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இந்த அரசுக்கும்,அதிகாரிகளுக்கும் உண்டு.

வைகை அணைக்கு வரும் நீர் திருட்டு...வறட்சியில் மதுரை!

*பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்கு மதுரைக்கு 60 கன அடி நீர் எடுக்க தான் அரசு அனுமதி தந்துள்ளது. திறக்கும் தண்ணீரில் தேனிக்கு போக, மீதமுள்ள நீர் வைகை அணைக்கு வர வேண்டும். ஆனால் அப்படி வருவதில்லை. வரும் வழி முழுவதும் மின்மோட்டார் வைத்து வைகை நீரை திருடுகிறார்கள். தடுக்க வேண்டிய அதிகாரிகள், உடந்தையாக இருக்கிறார்கள். இதனால் மதுரை பகுதி மக்கள் குடிநீருக்காக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

*இதனை நான் தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்த போதே குடிநீர் பிரச்சனையை உணர்ந்த காரணத்தால் இது பற்றிய ஆய்வு செய்ய ஒரு முழுமையான ஆய்வுக்குழுவை ஏற்படுத்தி தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்திட வலியுறுத்தி இரண்டு வருடத்திற்கு முன்பு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் மூலம் எனது புகாரை அளித்தேன். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருநாள் வைகை அணைக்கு வரும் வழியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அன்று ஒருநாள் முழுவதும் தண்ணீர் திருட்டு நடைபெறாமல் முழுமையாக வைகை அணைக்கு வர வேண்டிய 130 கனஅடி நீர் வந்து சேர்ந்தது. தொடர்ந்து முழுமையாக இதனை பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் கண்காணித்து இருந்தால் மதுரை நகரில் குடிநீர் பிரச்சனையே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமின்மை, மறைவிற்கு பிறகு ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளும் அதிகாரிகளும் கைகோர்த்து கொண்டதால் தொடர்ந்து தண்ணீர் திருட்டு பகிரங்கமாக நடைபெற்று வருகிறது.

*இதனை தகுந்த ஆதாரங்களோடு இணைத்து தமிழக அரசிடம் புகார் அளித்துள்ளேன்.அந்த புகாரின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வேன்.

*மதுரை மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்தை நோக்கி இறங்கி கொண்டே போகிறது . மேலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாத லாரி மற்றும் டிராக்டர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் முறையாக செய்வதில்லை.அதனையும் ஆய்வு செய்து வருகிறேன்.

தமிழகத்தில் முதல் முறையாக இ ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்தில் ஆர்.ஓ பிளான்ட்

*தமிழகத்தில் முதல் முறையாக இ.ஜி.எஸ்.எம் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ பிளான்ட் அமைப்பை செயல்படுத்தி உள்ளேன்.

*தண்ணீரின் அளவு குறித்த தகவல்கள் ,பழுது ஏற்பட்டால் எந்த இடத்தில் பழுது ஏற்படுகிறது மற்றும் பழுது ஏற்படுகிற வாய்ப்புள்ள இடங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறுந்தகவல்கள் மூலம் மொபைலுக்கு வரும் வசதி உள்ளது.

*இரண்டு சி.சி.டி.வி கேமராக்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறமாக பொருத்தப்பட்டு இதன் நடைமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன.

*இதன் உபரி நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கும், செடிகளுக்கு பாய்ச்சிடும் வழியிலும் இந்த ஆர்.ஓ பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

1. குடிநீர் மற்றும் போர்வெல்

2. சாலை மேம்பாடு

3. பள்ளி வகுப்பறை கழிப்பறை மற்றும் அங்கன்வாடிக் கட்டிடம்

4. இதர பணிகள்

5. தொகுதி மக்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

6. தொகுதி மக்களின் இல்ல விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்கிறேன்

மாநகராட்சி பள்ளிகள் மீது தனிக்கவனம்

தங்களின் குடும்பத்தின் வறுமையான சூழ்நிலைகளையும் தாண்டி தொடர்ந்து அரசு பொது தேர்வுகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்து வரும் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறேன்.

புத்தக அறிவை தாண்டி உலக அறிவை அவர்கள் பெறுகிற வகையில் எனது சொந்த செலவில் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள், கல்வி சார்ந்த இதழ்களை பள்ளி நூலகங்களுக்கு ஆண்டு முழுவதும் கிடைத்திட வழிவகை செய்துள்ளேன்.

பொதுக் கணக்கு குழு பணிகள்

*எனது கல்வி, அனுபவம் மக்களுக்காக பயன்படவேண்டும் என்ற கொள்கை கொண்டுள்ள என் எண்ணத்தின் விருப்பப்படி கூடுதல் பொறுப்பாக செயல் தலைவர் தளபதியார் அவர்கள் என்னை சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் உறுப்பினராக இருக்கவேண்டி பணித்தார்.

*மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களுக்கும் சென்று நடைபெறும் வளர்ச்சி பணிகளை அரசின் சார்பாக இந்த குழு ஆய்வு செய்வதோடு, அதில் உறுப்பினராக இருப்பதன் மூலம் எனது தொகுதிக்கு நான் ஆற்றவேண்டிய பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டிய ஒரு வாய்ப்பாக கருதி பணியாற்றி வருகிறேன்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கிடைத்த வெற்றி:மத்திய தொகுதி மக்களுக்கு சமர்ப்பணம்

*கொள்கையளவில் நீட் தேர்வுக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்த பல போராட்டங்களில் கழகத்தின் சார்பாக கலந்து கொண்டேன்.

*அந்த தேர்வின் நடைமுறைகளிலும், மாணவர் சேர்க்கையிலும் நடைபெற்ற முறைகேடு குறித்து அறிந்ததும் உடனே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

*இரட்டை இருப்பிட சான்று குறித்து கடந்த ஆண்டு நான் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி இந்த அரசை கண்டித்து மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்தார். அதை தொடர்ந்து கடந்த ஆண்டு (2017) வெளியிடப்பட்ட மாணவர் சேர்க்கை விவர அறிக்கையை இந்த அரசு மாற்றி புதிதாக விதிகள் சேர்த்து இந்த ஆண்டு (2018)வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழகமாணவர்கள் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதோடு நீதிமன்ற தீர்ப்பில் கடந்த ஆண்டில் தமிழக அரசு முறைகேடாக மாணவர் சேர்க்கையை நடத்தியது என்பதை நிரூபித்து இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இந்த அரசிற்கும், துறை அமைச்சருக்கும், துறை செயலாளருக்கும் நிச்சயம் உண்டு.

*இந்த வெற்றியை தமிழக மாணவ மாணவிகளுக்கு பெற்று தர முழு முதற் காரணமாக அமைந்த, என்னை தேர்ந்தெடுத்த மத்திய தொகுதி மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

புகார்களும் தீர்வுகளும்

கடந்த நவம்பர் 2017 முதல் ,மே 2018 வரையிலான ஆறு மாதங்களில் சட்டமன்ற உறுப்பினராக நம் தொகுதி மக்களுக்கு நான் ஆற்றிய பணியினை இந்த இத்துண்டறிக்கையின் மூலம் எனக்கு வாக்களித்த உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

எனது குடிமக்கள் சேவை மைய தொலைபேசி எண் 7305519999, வாட்ஸ் அப் எண் 7530048892, அனைத்து வார்டுகளிலும் வைக்கப்பட்டுள்ள 28 புகார் பெட்டிகள், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com மூலம் பெறப்படும் புகார்கள், கள ஆய்வின் மூலம் பெறப்படும் மனுக்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுலவலகத்திற்கும், எனது இல்ல அலுவலத்திற்கும் வரும் கோரிக்கைகள் என கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 600 புகார்கள் பெறப்பட்டுள்ளது. உடனுக்குடன் சம்பட்ட துறை அலுவலருக்கு தெரியப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அவற்றுள் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சனைகள் மதுரை மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 32 கடிதங்கள் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தீர்வு காணப்பட்ட குறிப்பிட்டத்தக்க புகார்களில் சில

1. எல்லீஸ் நகர் போடி லைன் பகுதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அவ்வப்போது பொறுப்பில் இருந்த இரண்டு மதுரை மாநகராட்சி ஆணையர்களையும் நானே நேரில் சந்தித்து வலியுறுத்தி கடிதமும் அளித்தேன். (தேதி மற்றும் கடித எண்) எனது முயற்சியால் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

2. கோமஸ்பாளையம் பகுதியில் கிருதுமால் கால்வாய் மீது தற்காலிமாக இருந்த மரப்பாலத்தை அகற்றி சாலை அமைக்கப்பட்டுள்ளதோடு, கால்வாயில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு அதன் சுற்றுச்சுவரை உயர்த்திட மதுரை மாநகராட்சிக்கு கடிதம் அளித்து நடவடிக்கை எடுத்தேன். தற்போது அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் ஃபேவர் ப்ளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கம் பிடாரி கோயில் தெருவில் புதிதாக மின்கம்பம் அமைத்து அப்பகுதிக்கு மின் விளக்கு பொருத்தப்பட்டது.

வார்டு 8ல் அன்னை வீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டது.

பயணம் தொடர்கிறது...

திராவிட பாரம்பரியத்தின் நீட்சியாக, தலைமுறைகளின் தொடர்ச்சியாக இந்த பொது வாழ்க்கைக்கு வந்துள்ள நான் எத்தனை பதவிகள், பொறுப்புகள் என்னை தேடி வந்தாலும் என்னைத் தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த எனது தொகுதி மக்களை சந்திப்பதையும், அவர்களுக்கான நலப்பணிகளை நிறைவேற்றுவதையும், அவர்களின் மேம்பாட்டுக்காக உழைப்பதையும் தலையாய பணியாக கருதுகிறேன். எனது எண்ணமும், செயல்பாடுகளும் அதை நோக்கியே இருக்குமெனெ உறுதியேற்றுகொண்டு எனது மூன்றாம் வருட பயணத்தை தொடர்கிறேன்.

நன்றி.