Published Date: June 22, 2020
Covid19 நோய் தொற்று குறித்து தினசரி செய்தி அறிக்கைகளை வெளியிடும் தமிழக சுகாதாரத்துறையிடம் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை விவரங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுமாறு பல வாரங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இரு காரணங்களுக்காக அது ஏன் முக்கியம் என்பதை அதிகாரபூர்வ தகவல்களின் உதவியுடன் தெளிவான உதாரணங்கள் மூலமாக விவரிக்கிறேன்.
தற்பொழுது அரசு வெளியிடும் அறிக்கைகளில் மாநிலம் முழுவதும் மொத்தமாக செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை, அவற்றுள் மாவட்ட வாரியாக எத்தனை நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன என்ற தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலமாக நோய்த்தொற்று பரவல் (மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த அளவிற்கு அபாயம் உள்ளது) குறித்தும் மாநிலம் முழுவதும் சராசரி பரவல் குறித்தும் ஓரளவு புரிந்து கொள்ள முடியுமே தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய்த்தொற்று எந்த அளவு பரவி உள்ளது என்பதை புரிந்துகொள்ள இந்த தகவல்கள் போதுமானதாக இல்லை.
உதாரணமாக மதுரையில் நோய்த்தொற்றுகள் எண்ணிக்கை ஜூன் 1ம் தேதி 268 (100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்) தொற்றுகள் கண்டறியபட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் முதல் நோய்த்தொற்று ஏற்பட்ட 3 மாதங்கள் கடந்த நிலையில். இது ஜூன் 17ஆம் தேதியன்று 493 என்ற அளவிற்கு கணிசமாக உயர்ந்தது. 84% அதிகரித்துள்ளது(சிகிச்சை பெறுவோர் 64% அதிகரித்துள்ளனர்). இது மதுரை மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய விஷயமா?
மதுரை மாவட்டத்தில் இந்த 17 நாட்களில் எத்தனை நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர் என்ற தகவல் தெரியாமல் அதைத் தெளிவாக முடிவு செய்ய முடியாது என்பதுதான் அதற்கான எளிய பதில். உதாரணமாக தமிழகத்தில் இந்த 17 நாட்களில் செய்யப்பட்ட 2,81,000 பரிசோதனைகளில் 10,000 பரிசோதனைகள் மதுரையில் செய்யப்பட்டதாக எடுத்துக்கொண்டால் நோய் தொற்றின் விகிதம் 2.25 சதவீதம்தான். அதாவது நோய் பரவும் அபாயம் மிகவும் குறைவு. அதனால் மதுரையில் வசிக்கும் மக்கள் யாரும் நோய்ப்பரவல் குறித்து அதிகமாக பயப்பட தேவையில்லை. அதேவேளையில், 1000 பரிசோதனைகள் செய்யப்பட்டது என்று எடுத்துக்கொண்டால், நோய் தொற்றின் விகிதம் 22.5% என மாறுகிறது. இது நோய் பரவல் மிகவும் அதிகமாக உள்ளதை குறிக்கும். எனவே மதுரையில் வசிக்கும் மக்கள் அனைவரும், அரசு தளர்வுகளைஅறிவித்திருந்தாலும், மிகுந்த கவனத்துடன் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இந்த காரணத்திற்காக,தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் எத்தனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்ற தகவல் வெளியிடப்படுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக அரசு இதுபோன்ற விவரங்களை ஒரே ஒரு நாள் (பல தரப்புகளில் இருந்தும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து ஜூன் 7ஆம் தேதி) வெளியிட்டது. வெளியிடப்பட்ட தகவல்கள் பல கேள்விகளையும் கவலைகளையும் ஏற்படுத்தியது (மேலே உள்ள வரைபடம்).
பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் விதத்தில் மக்கள்தொகை சரிசெய்யபட்ட(10 லட்சம் நபர்களுக்கு எத்தனை பரிசோதனை) பிறகு மாவட்டத்திற்கு மாவட்டம் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது புலப்படுகிறது. இந்த நிலை ஏன்? மாதிரிகளை உருவாக்கும் தளத்திலிருந்து பார்க்கும்போது, எங்கு நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ளதோ அங்கு பரிசோதனைகள் அதிகரிக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் நோய்த்தொற்று விகிதத்தின்அளவுகளை(அரசு வெளியிட்ட) ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அந்த அடிப்படையிலும் பொருந்துவதாக இல்லை.
வேறு விதத்தில் கூற வேண்டுமெனில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள்தொகை அடிப்படையிலோ நோய் தொற்று பரவல் அடிப்படையிலோஅரசு பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. எனவே எந்த அடிப்படையில் பரிசோதனைகள் மாவட்டங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளன என்று சுகாதாரத்துறை தெளிவுபடுத்த வேண்டும்.
மாவட்ட வாரியாக செய்யப்படும் பரிசோதனைகளின் விவரங்களை தினசரி வெளியிடாததன் காரணமாக மற்றறொரு பிரச்சனையும் எழுகிறது. ஜூன் 10ஆம் தேதி தொடங்கி ஜூன் 16-ஆம் தேதி வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த காலகட்டத்தின் நோய்த்தொற்று முடிவுகள் மேலே உள்ள வரைபடத்தில் அரசு வெளியிட்ட தகவல்களின்படி உள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கை நிலையாக இருப்பதன் காரணமாக நோய் தொற்று எண்ணிக்கையும் தொற்று விகிதமும் வெளிப்பார்வைக்கு குறைந்து வருவதாக தெரியலாம்.
எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு பல விதங்களில் பல விளக்கங்களைக் கொடுக்க முடியும். இருப்பதிலேயே எளிய விளக்கமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட பரிசோதனை எண்ணிக்கைகள் உட்பட அனைத்து விஷயங்களும் நிலை மாறாமல் இருந்திருந்தால் நோய்த்தொற்றின் பரவல் குறைந்து வருகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், மாநிலம் முழுவதும் நோய்த்தொற்றின் பரவல் குறையாமல் இந்த எண்ணிக்கை மட்டும் குறைவதற்கு குறைந்தபட்சம் ஒரு காரணத்தையாவது கூற முடியும்.
மேலே இருக்கும் வரைபடத்தில் உள்ள தகவல்கள் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிக அளவில் நோய்த்தொற்று விகிதம் உள்ளது என்பதை காட்டுகிறது (மற்ற 36 மாவட்டங்களில் பலவற்றில் மிகவும் குறைவான நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன) புதிய நோய் தொற்று எண்ணிக்கையில் சில நூறு குறைவதற்கு சென்னையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்து நோய்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதும்(உதாரணமாக வேலூர் அல்லது கோயம்புத்தூர்) காரணமாக இருக்கலாம்.
எளிய முறையில் கூறினால், சென்னையில் அதிக நோய்த்தொற்று உள்ள இடங்களில் பரிசோதனை அளவை குறைத்து நோய்தொற்று குறைவாக இருக்கும் இடங்களில் பரிசோதனைகளை அதிகரித்தால், மொத்த பரிசோதனை அளவுகளை குறைக்காமல், தோற்று விகிதத்தை குறைத்துக் காட்ட முடியும். அதன்படி, சென்னையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்து மாவட்டங்களில் அதிகரித்து இருந்தால், தமிழக மொத்த நோய் தொற்று எண்ணிக்கையில் சென்னையின் % குறைந்து இருக்கும்.விசித்திரமாக, வெளியிடப்பட்ட தகவல்களும் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை குறைக்க ஜூன் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரையுள்ள காலகட்டத்தில் பரிசோதனைகளை சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சமமற்ற அளவில் அரசு திருப்பி உள்ளது என்று நான் கூறவில்லை. அது போன்ற ஒரு வழிமுறை கையாளப்பட்டிருக்கும் பட்சத்தில், புதிய நோய்த்தொற்றுகள் எண்ணிக்கையிலும் தொற்று விகிதத்திலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்க்கான விளைவாக அது இருக்கும் என்று நிரூபிக்க மட்டுமே இதைக் கூறுகிறேன்.
மாவட்ட வாரியாக எத்தனை நோய்த்தொற்றுகள் உள்ளன என்று வெளியிடுவதைப் போலவே, மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை மட்டும் வெளியிடாமல் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கை அடங்கிய விவரங்களை அரசாங்கம் தினசரி வெளியிட வேண்டும் என்பதற்கு இது இரண்டாவது காரணம். குடிமக்கள் என்ற அடிப்படையில் நமக்கு மேல் இலக்கம் (ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நோய்த்தொற்றுகள் குறித்த தகவல்களும்) கீழ் இலக்கம் (ஒரு மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை) இரண்டுமே தெரிய வேண்டும். அதன் மூலமாக மட்டுமே அபாயங்களை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல மாநிலம் முழுவதும் நோய் பரவல் எந்தஅளவிற்கு உள்ளது, அதன் தன்மை என்ன என்பது குறித்தும்,அரசு மேற்கொள்ளும் வழிமுறைகளின் மீது எவ்வித சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும்.
இறுதியாக ஒரு வரைபடத்தின் மூலமாக கடந்த இரண்டு வாரங்களாக எப்படிப்பட்ட மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். மேலே உள்ள வரைபடங்களில் உள்ள வேறுபாடுகள் எந்த அளவிற்கு “வழக்கத்திற்கு மாறானவை” அல்லது “சாத்தியமற்றவை” என்பதும், நோய் தொற்று அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்து குறைவாக இருக்கும் இடங்களுக்கு பரிசோதனைகளை மாற்றி அமைப்பது ஏன் கவலை அளிக்க வேண்டும் என்பதும் புரியாதவர்களுக்கு, இது உதவிகரமாக இருக்கும்.
பரிசோதனைகளைஅதிகரித்த காரணத்தால் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையும் விகிதமும் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. ஜூன் 16ஆம் தேதியன்று 1515 (7.87%) என்று இருந்தது ஜூன் 17 அன்று 2174 (8.54%) மற்றும் ஜூன் 18 அன்று 2141 (8.01%) என்ற அளவில் உள்ளது.
மாவட்ட வாரியாக தினசரி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை விவரங்களை,(மார்ச் மாதம் தொடங்கி இன்று வரையில் )தமிழக சுகாதாரத்துறை வெளியிட வேண்டும். அது வெளியிடப்படாத பட்சத்தில் மாநிலம் முழுவதிலும், மாவட்ட வாரியாகவும் எந்த அளவிற்கு அபாயம் உள்ளது என்பதையும், நிலவரம் சீராகி வருகிறதா அல்லது மோசமாகி வருகிறது என்பதையும், நிச்சயமாக கணிக்கமுடியாது.
வெளிப்படைத்தன்மையற்ற, பொறுப்பற்ற மூடிமறைக்கும் செயல்பாடுகளையும் இவர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்பட்சத்தில், உண்மை நிலவரத்தை/தரவுகளை மாற்றியமைக்க முற்பட்ட தவறுகளுக்கும் அது ஏற்படுத்தப்போகும் விளைவகளுக்கும் உரிய பலனை, உடனடியாகவோ அல்லது பிற்காலத்திலோ நிச்சயமாக அவர்கள் சந்திக்க நேரிடும்.