மதுரையில் வீடுகளுக்கு தினமும் குடிநீர் விநியோகம்

Published Date: February 17, 2022

CATEGORY: POLITICS

மதுரையில் வீடுகளுக்கு தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் விஜயலட்சுமி, விஜயா ஆகியோரை ஆதரித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இதுவரை 5 வருடம் கவுன்சிலர்களே இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர்.

 

ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் மூலம் டெண்டர் இல்லாமல் கமிஷன் பார்த்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் மணலையும் அள்ளி வந்தனர். ஒன்றிய அரசு மற்றும் மாநில அர சுகளை கலந்து பேசாமல் விதிமுறைகளை மீறி ஊழலுக்காகவே அதிமுக அமைச்சர்கள் திட்டங்களை செயல்படுத்தி வந்தனர்.

 

ஊழல் ஆட்சியை அகற்றிவிட்டு தற்போது நல்ல ஆட்சியை மக்களாகிய நீங்கள் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளீர்கள். நான் 2வது முறையாக வெற்றி பெற்றேன். அறநிலையத்துறையை முதல்வரிடம் கேட்டேன். ஆனால் அவர் 4 துறைகளை என்னிடம் ஒப்படைத்தார். அவர் ஞானத்துடன், மதுரையின் வளர்ச்சி தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார். அவரது சிறப்பான ஆட்சியால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். எனது தொகுதியில் பெரிய குழுவை உருவாக்கி, அவர்களை வீடு, வீடாக அனுப்பி, என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்தோம்.

ஓய்வூதியம் நிறைய பேருக்கு கிடைக்கவில்லை எனத்தெரிந்தது. இதுவரை 900 பேருக்கு மேல் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் குடிநீர். சாக்கடை பிரச்னைகள் வந்தன. இனி மாமன்ற உறுப்பினர்கள்தான் இந்த பிரச்னைகளை தீர்க்க முடியும். ஆதலால் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்தால், மதுரை மாநகராட்சிக்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

 

மதுரையின் வளர்ச்சி திட்டங்களில் எனது தந்தைக்கு பங்கு உள்ளது. கோட்ஸ் மேம்பாலம், ரிங் ரோடு, மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட், ஐகோர்ட் மதுரைகிளை உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் மதுரைக்கு கிடைத்தன. தற்போது மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தினந்தோறும் குடிநீர் சப்ளை செய்யப்படும். தவிர மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.25 கோடி செலவில் குடமுழுக்கு விழா விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Media: Tamil Murasu