/

தமிழ் பிராமணர்களின் குடியேற்றம் பொதுவுடைமை மற்றும் அடையாள அரசியலால் அல்ல, வாய்ப்புகளால் இயக்கப்பட்டது.

சமூக நீதி இயக்கத்தின் மூலமாக இணையற்ற, அனைவரையும் உள்ளடக்கிய பயன்களை தமிழ்நாடு அடைந்துள்ளது. இது அனுபவங்களால் மட்டுமல்ல அசைக்கமுடியாத தரவுகளின் அடிப்படையிலும் ஊர்ஜிதமாகிறது.

Published Date: August 26, 2020

திரு. துமேவின் "கமலா ஹாரிஸ் தனது தாயின் பின்னணியைப் பற்றி என்ன சொல்லவில்லை" (WSJ, 20 ஆகஸ்ட் 2020) என்ற கட்டுரை மேலோட்டமானதாகவும், சிக்கலான பிரச்சனைகள் குறித்த தவறான புரிதலோடு இருப்பதாலும் ஏமாற்றமளிக்கிறது.

திருமதி ஹாரிஸின் இந்திய வம்சாவளியை பற்றி உரையாற்ற முனைவர் துமே தேர்வு செய்தபோது, அவரது பார்வை பரந்ததாக இருக்க வாய்ப்பிருந்தது. பல முக்கியமான பிரச்சனைகள் குறித்து அவர் பேசியிருக்கலாம். சாதி மற்றும் பொருளாதார வர்க்கத்தின் பரிணாமம், சமூக நீதி பற்றிய மாறுபட்ட கருத்துக்கள், சமத்துவமான வாய்ப்பின் செயல்திறன், நடைபாதை சாலைகளின் நீள அளவு அல்லது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற எளிய பொருளாதார புள்ளிவிவரங்கள் மூலம் சமூக மேம்பாட்டு குறிகாட்டிகளைக் கொண்டு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள சமூக விளைவுகளை ஒப்பிட்டிருக்கலாம்.

திரு துமேவின் பரிந்துரை படி அதிக அமெரிக்கர்கள் சியாமலா கோபாலன் பிறந்த சமூகத்தை பற்றி கற்றுக்கொள்ள தேவையுள்ளது. இந்த கருத்தின் உள் கூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் ‘Cautionary Tale of Excess’ என்பார்கள், அதாவது அதைப் படிப்பவர்களுக்கு ஓர் அதிகப்படியான அபாய எச்சரிக்கையை உண்டாக்கும். அதற்கு மாறாக, விரிவான தமிழ் அரசியல் வரலாற்றைப் படித்தால், அது பயனுள்ள மற்றும் பின்பற்றுவதற்கான படிப்பினைகளை வழங்கும்.

ஒரு பொதுவான தொடக்க புள்ளியை உறுதிப்படுத்த, திரு. துமேவின் வாதம் மற்றும் முடிவுகளை பற்றிய எனது புரிதல் இங்கே:

  • தமிழ் பிராமண சமூகம் தங்கள் சொந்த மாநிலத்தில் நியாயமற்ற ஓரங்கட்டலை சந்தித்துள்ளது. (தமிழ்நாடு - சுதந்திரத்திற்கும் 1967 க்கும் இடையில் மெட்ராஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்டது, மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதி)
  • இந்த ஓரங்கட்டப்படுதல் சியாமலா கோபாலன் போன்ற தமிழ் பிராமணர்களின் 1958ஆம் ஆண்டில் குடியேற்றத்திற்கு சான்றாகும், முன்னாள் பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி (1978 இல் குடியேற்றம்) & ஆல்பாபெட் நடப்பு தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (1993 இல், குடியேற்றம்) மற்றும் பெயரிடப்படாத பலர், இரண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் உட்பட பலரின் எடுத்துக்காட்டுகள் பெயரிடப்பட்டுள்ளன.
  • குறிப்பிடத்தக்க சாதனை படைத்த பெயரிடப்பட்ட மற்றும் பெயரிடப்படாத தமிழ் பிராமணர்களின் குடியேற்றம்... அவர்களின் பூர்விகமான தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு.
  • இந்த ஓரங்கட்டப்படுதலால் இயக்கப்படும் குடியேற்றத்தின் காரணங்கள்: அ) பொதுஉடைமை கோட்பாடு (இந்தியா முழுவதும் -1947 இல் சுதந்திரத்திற்கு பின்), மற்றும் ஆ) 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் அரசியலின் ஒரு அடையாளமாக விளங்கிய அடையாள அரசியல்.
  • இது அவர் குறிக்கும் கொள்கை பாடங்களுக்கு வழிவகுக்கிறது: பொதுஉடைமை கோட்பாடு மற்றும் அடையாள அரசியல் மக்கள் / மாநிலம் / நாட்டிற்கு கேடு - திரு துமே எந்த புள்ளிவிவரத்தையும் மேற்கோள் காட்டவில்லை என்ற போதும், இது தமிழ்நாட்டின் மோசமான வளர்ச்சி விளைவுகளால் மறைமுகமாக சாட்சியமளிக்கப்படுகிறது என கருதலாம்.

திரு துமேவின் கட்டுரையில் சில ஆதாரமற்ற பிழைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இட ஒதுக்கீடுகள் முதலில் 1920 களில் மெட்ராஸ் பிரசிடென்சியின் நீதிக்கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரட்டையாட்சி முறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற சபை உறுப்பினர்களால் (இந்தியர்களால்) மாண்டேக்-செல்ம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால் வாதம் மற்றும் அனுமானத்தில் உள்ள ஆழமான குறைபாடுகள் மற்றும் திரு. துமேவின் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் உள் முரண்பாடுகளில் நான் கவனம் செலுத்த நினைக்கிறன்.

அடிப்படை & முழு வெளிப்பாடு ஆகிய இரண்டிற்காக, நான் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறேன் - நான் திராவிட இயக்கத்தின் 4 வது தலைமுறை உறுப்பினர், மற்றும் 3 வது தலைமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. 1916 இல் அரசியல் அணியாக நிறுவப்பட்ட இந்த இயக்கத்தின் கொள்கைகளை தற்போது பின்பற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் நான்.

பல நூற்றாண்டுகளாக நில உரிமையாளர்களாக இருந்த ஒரு உயர் சாதி (பிராமணர் அல்லாத) குடும்பத்தில் நான் பிறந்தேன். தமிழ் பிராமணர்களுக்கு இருக்கும் சாதி அடிப்படையிலான அதே இட ஒதுக்கீடு தான் எனக்கும். நான் அமெரிக்காவில் 20 ஆண்டுகள் (1987 முதல் 2007 வரை) வாழ்ந்தேன், பட்டபடிப்பிற்காக முதன்முதலில் சென்று, பின்னர் ஆலோசகராகவும் முதலீட்டு வங்கியிலும் தொழில்வாய்ப்பைப் பெற்றேன். சட்டசபை தேர்தலின்போது நான் தாக்கல் செய்தவை உட்பட கூடுதல் விவரங்கள் மக்கள் பார்வைக்கு பொதுவெளியில் உள்ளன.

இந்த அடிப்படையில், திரு. துமேவின் உண்மையற்ற வாதங்களை ஒவ்வொன்றாக கருத்தில் கொள்கிறேன் - முதலாவதாக திருமதி கோபாலன், திருமதி நூயி மற்றும் திரு. பிச்சை ஆகியோர் தமிழ்நாட்டிற்கு (இந்தியாவிற்கும்) பெரும் இழப்புகளாகக் கருதப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் நியாயமற்ற ஓரங்கட்டலால் உந்தப்பட்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

வாய்ப்புகளே தமிழ் பிராமணர்களை மேற்கத்திய நாடுகளை நோக்கி நகர்த்தியது

அவர்கள் குடியேறியதாகக் கூறப்படும் காரணம் அற்பமானதாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு குடிவரவு உலகெங்கிலும் இருந்து நிகழ்கிறது, மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து நாடுகளிலும் பொதுவான கண்ணோட்டம் என்னவென்றால், இது பெரும்பான்மையாக அடக்குமுறையால் அல்ல, வாய்ப்புகளின் அடிப்படையில் இயக்கப்படுகிறது. அமெரிக்காவின் குடிவரவு சேர்க்கை முன்னுரிமைகளை பெருமளவில் அதிக திறன்-பங்களிப்பு-மதிப்பு கொண்ட குடியேறியவர்களை நோக்கி திசை திருப்புவதன் மூலம் இதை உறுதிப்படுத்த கொள்கைகள் வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பொது கட்டமைப்பிற்கு அப்பால், 3 பெயரிடப்பட்ட எடுத்துக்காட்டுகளும் பொதுவான ஒன்றைக் கொண்டுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் பட்டதாரி மாணவர்களாக அமெரிக்காவில் நுழைந்தனர் - திரு. துமே & நானும் மாணவர்களாக தான் அமெரிக்கா சென்றோம். பல வருடங்களாக நீடிக்கும் உண்மை என்னவென்றால், இன்று அமெரிக்காவில் உலகிலேயே பட்டதாரி சிறந்த கல்வி முறை உள்ளது (அளவு மற்றும் தரத்தில்). எனவே இது உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்து வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக உள்ளது.

குறைந்தது 19 ஆம் நூற்றாண்டில் இருந்து சிறந்த சர்வதேச கல்வியை அணுக தமிழ்நாட்டின் உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு இருந்துள்ளது. நீதிக் கட்சியின் தலைவர்கள் பலர், பெரும்பாலும் பிராமணரல்லாத உயரடுக்கு தரப்பினர், அப்போதைய சிறந்த உயர் கல்வியிடமாக கருதப்பட்ட ஆக்ஸ்பிரிட்ஜில் கல்வி கற்றனர். நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான என் தாத்தா 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லண்டனில் உள்ள தி லேஸ் பள்ளி, இயேசு கல்லூரி (ஆக்ஸ்போர்டு) மற்றும் இன்னர் டெம்பிள் ஆகியவற்றில் கல்வி கற்கும் வசதியைப் பெற்றிருந்தார்.

தமிழ் பிராமணர்கள் பெற்ற சலுகைகள்

சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 70 வருடங்களாக பெரும் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்திய கல்வி சுற்றுச்சூழல் அமைப்பு என்பது அமெரிக்க அமைப்பின் அதே ஒப்பீட்டளவில் இல்லை, மற்றும் நிறைய மாணவர்களிடையே தேவை இருப்பினும் மிகச் சிலருக்கே இடமளிக்கும். எனவே, திருமதி கோபாலன், திருமதி நூயி, திரு பிச்சை மற்றும் பல தமிழ் பிராமணர்களின் இத்தகைய பரவலான லட்சியம், பெரும்பான்மையினரால் யோசிக்க முடியாமல் இருக்கும் நிலையில், தமிழ் பிராமணர்கள் நியாயமற்ற முறையில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்ற தவறான கோட்பாட்டை இது பொய்யாக்குகிறது.

மேலும் இந்த கண்ணோட்டம் தவறானது என்பது இந்த தமிழ் பிராமணர்கள் 3 பேரும் அமெரிக்காவிற்கு 35 வருட காலத்தில் - 3 தலைமுறைகளாக குடிபெயர்ந்ததன் மூலம் தெரிகிறது. திரு. துமே கூறுவது போல், இட ஒதுக்கீடு (இது தொடங்கியது 1920 களில்), மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய (1947) சோசலிசத்தினால் ஓரங்கட்டப்பட்டதன் விளைவாக இருந்திருந்தால், நிச்சயமாக அது தமிழ் பிராமணர்களுக்கு பட்டதாரி படிப்புகளுக்காக ஒரு சிறந்த இளங்கலை கல்விக்கு வழிவகுத்து அமெரிக்காவிற்கு குடியேறுவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியை மறுத்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேலும், அவரது (ஆதாரமற்ற, ஆனால் எனது தனிப்பட்ட அனுபவத்தில் உண்மை) கூற்றை நாம் எடுத்துக் கொண்டால், முக மதிப்பில் அமெரிக்காவில் உள்ள தமிழ் பிராமணர்கள், அவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற அணுகல் இருந்தது என்பதே உண்மை- இதுவே ஓரங்கட்டப்படுதலுக்கான அவரது கூற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

தமிழகத்திற்கு லாபமே, இழப்பு அல்ல

மற்றொரு கருத்தைப் பொறுத்தவரை, இந்த மூன்று பெயரிடப்பட்டுள்ளவர்கள் (பெயரிடப்படாத மற்றவர்கள்) உண்மையில் தமிழ்நாட்டுக்கு இழப்புகளா? அப்படியானால், அவர்கள் சமமான உயர் நிலையை இங்கே அடைந்திருப்பார்கள் என்பது உண்மையாக இருக்க வேண்டும். அவர்கள் தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தால் அவர்களால் இதே மதிப்புடைய இத்தகைய சாதனை புரிந்திருக்க முடியாது / முடியும் என்பது உண்மையாக இருக்க வேண்டும்.

ஆனால்… அவர்கள் எந்தவொரு ஓரங்கட்டப்படுதலையும் பொருட்படுத்தாமல் இங்கேயே தங்கியிருந்தால் அவர்களின் தற்போதைய நிலைகளுக்கு அருகில் எதையும் சாதித்திருக்க முடியாது. ஏனெனில் இங்கே கிடைத்த வாய்ப்பு அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு சிறிய பகுதிதான். பெப்சிகோ, ஆல்பாபெட் அளவிலான உலகளாவிய தொழில்கள் இங்கே இல்லை.

இருப்பிடத்தினால் ஏற்படும் தடைகளை தெளிவாக நிரூபிக்கும் தனிப்பட்ட உதாரணம் என்னிடம் உள்ளது. என் தந்தையின் அகால மறைவால், நான் இந்தியா திரும்பினேன், 42 வயதில் வங்கியில் இருந்து "பணி ஓய்வு பெற்றேன்." சில வேறுபட்ட பொறுப்புகளுக்காக சென்னையில் இருந்தேன். இருப்பினும், எனக்கு ஒரு நிர்வாக இயக்குநராகவும், 70 நாடுகளில் உலகளாவிய வங்கியில் சில நிதிச் சந்தை தயாரிப்புகளின் பிரிவின் உலகளாவிய தலைவராகவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்க அளவு சர்வதேச பயணம் மேற்கொள்ள தேவைப்படும் என்பதால், சென்னையில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க கோரினேன். ஒரே மகனாக இருப்பதால் கணவரை இழந்த என் தாயை விட்டு வாழத் தயங்கினனேன். எனது தாயாரும் வெளிநாட்டில் தங்குவதை விரும்பவில்லை. ஆனால் வங்கியின் தலைமை எனது சூழ்நிலைகளுக்கு அனுதாபமாக இருந்தபோதிலும், உலக பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் வந்த வங்கி விதிமுறைகள் படி நான் நேரடி ஒழுங்குமுறை மேற்பார்வையில் இருக்க வேண்டும், நான் ஒரு OECD நாட்டிற்கு இடம் பெயர்ந்தால் மட்டுமே அந்த பணியை ஏற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே திரு. துமே எடுத்துரைக்கும் கருத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். மேலும் திருமதி ஹாரிஸ், திருமதி நூயி, திரு பிச்சை, மற்ற பெயரிடப்படாத உயர் சாதியினர் அனைத்து குடியேறியவர்களும் - அத்தகைய பெரிய உயரங்களை அடைந்துள்ளது ஏனென்றால் அவர்கள் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பக்கச்சார்பற்ற திறமையை மட்டுமே மதிப்பிடும் சந்தைக்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு செய்ததால், அவர்கள் தங்கள் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெரும் சேவையாற்றுவதற்கான நல்ல நிலையில் உள்ளனர். ஆகையால், அத்தகைய திறமைகளை நாம் இழக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், நம்மால் கற்பனை செய்ய முடியாத திறன் கொண்டவர்களையும் பெற்றுள்ளோம்.

திரு. துமேவின் 2 கருத்துகளை மட்டுமே இங்கே புள்ளிவிவரங்கள் கொண்டு, பொய்யென நிரூபிக்க விரும்புகிறேன்- தமிழ் பிராமணர்கள் தற்போது ஒடுக்கப்பட்டுள்ளனர் மற்றும் பொதுஉடைமை கோட்பாடு மற்றும் அடையாள அரசியல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்கியுள்ளது.

தமிழ் பிராமணர்கள் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டவர்களா?

திரு. துமெவின் முதல் கூற்று உண்மையல்ல என்பதற்கு சான்று: 3% க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழ் பிராமணர்கள் பெருமளவில் இந்திய குடிமைப் பணி, சட்டத் தொழில் (நீதித்துறை உட்பட), பட்டய கணக்கியல் மற்றும் பல பிற உயர்நிலை தொழில்முறை துறைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (எடுத்துகாட்டு - https://www.businessinsider.in/india/news/social-justice-data-shows-indiangovernment-doesnt-walk-the-talk-on-reservations/articleshow/74223976.cms) மற்றொரு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் பெரும்பான்மையானோர் பிராமணர்கள் (~ 40% தனியாக) மற்றும் பிற உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும், இன்று இந்தியாவில் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்பிற்குரிய தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான (நமது மாநிலத்தின் முதல் 2 அல்லது 3 இடங்களில் ஒன்று), டிவிஎஸ் நிறுவனம் திரு. டி. வி. சுந்தரம் ஐயங்கார் 4 தலைமுறைகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, இன்னும் தனியாருக்கு சொந்தமான குழுவாக அவர்களது பிராமண சந்ததியினரால் இயக்கப்படுகிறது. சரியாகச் சொல்வதானால், இதுபோன்ற சமமற்ற விளைவுகளும் பெரும்பாலான உயர் சாதியினருக்கு பொருந்தும். ஒரு நூற்றாண்டு முழுவதும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இருந்தபோதிலும், அவை போதுமானதாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக சாதி அடிப்படையில் அனுபவித்த பலன்களை ஈடு கொடுக்க இந்த இட ஒதுக்கீடு போதவில்லை என்பது தெரிகிறது. (இதில் பிராமணர்கள் மட்டுமே கல்விக் கற்கும் உரிமையும் அடங்கும்).

தமிழகத்தின் மேன்மையான சமூகப் பொருளாதார குறியீடுகள்

திரு. துமேவின் மிகக்கொடுமையான முற்றிலும் தவறான கருத்து என்னவென்றால் அடையாள அரசியல் காரணமாக தமிழகத்தில் மோசமான சமூக-பொருளாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது என்பதுதான். இதை விட உண்மைக்கு புறம்பானது எதுவும் இருக்க முடியாது.

திரு துமே அடையாள அரசியல் என சொல்வது நமது நூற்றாண்டு பழமையான சமூக நீதியின் குறிக்கோள் கொண்ட திராவிட இயக்க அரசியல் ஆகும். 1916 இல் நிறுவப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1920 ல் மெட்ராஸ் பிரசிடென்சி சட்டப்பேரவைக்கான தேர்தலின் போது அதன் பத்திரிகையின் பெயர் “நீதி” என்பதிலிருந்து நீதிக்கட்சி என அரசியல் கட்சியாக பெயரிடப்பட்டது. அடுத்தடுத்த நீதிக் கட்சி அரசாங்கங்கள் சட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் சமூக வழக்கங்களை ஆழமாக மாற்றியது- 1920 - 1926இல் பெண்கள் சம உரிமைகளை பெற்று மெட்ராஸ் பிரசிடென்சியில் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமையளித்தது, அனைவருக்கும் கல்வி (கட்டாயமாக சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் தொடக்கக் கல்வி), ஏழைகளுக்கு ஊட்டச்சத்து ( மெட்ராஸ் கார்ப்பரேஷனில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவு), மற்றும் உயர்தர வேலைகளுக்கான சமத்துவம் (ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகையின் விகிதத்தின் அடிப்படையில் அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு).

1920 முதல் இந்த நூற்றாண்டில், சுமார் 30 ஆண்டுகளைத் தவிர திராவிட தத்துவத்தை ஆதரிக்கும் கட்சிகளே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் என்னவென்றால், ஆட்சியை கைப்பற்றிய ஸ்வதந்திரா & காங்கிரஸின் கொள்கைகள் இந்த 30 ஆண்டுகளின் சமநிலையின் பெரும்பகுதிக்கு, பிற ப்ரெசிடென்ஸிகள் மற்றும் மாநிலங்களின் காங்கிரஸ் கட்சிகளை விட திராவிட தத்துவத்திற்கு நெருக்கமாக இருந்தது (எ.கா. கோயில் நுழைவுக்கான உரிமைகளை உறுதி செய்வது, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கை, மாநிலம் முழுவதும் இலவச பள்ளி உணவு திட்டத்தை விரிவுபடுத்துதல்).

Source – RBI, Niti Aayog SDG 2019-20, National Health Report 2019

 

திராவிட கொள்கைகளை தொடர்ச்சியாக பின்பற்றியதன் காரணமாக ஒரு தனித்துவமான நிலைக்கு தமிழ்நாடு (இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில்) வந்துள்ளது- இது திராவிட (தமிழ்நாடு) மாதிரி என்று அழைக்கப்படுகிறது. மேலே உள்ள அட்டவணையில் உள்ள புள்ளிவிவரங்கள் - தனிப்பட்ட கோணத்திலும், மற்ற மாநிலங்களுடனும் இந்தியாவுடனும் ஒப்பிடும்போது - தமிழகத்தின் தனித்துவமான மற்றும் சமமான முன்னேற்றத்திற்கான சான்றுகளாக உள்ளன.

ஒப்பீட்டு அளவிலான இந்த முன்னேற்றத்தின் ஆகச்சிறந்த ஆதாரமாக, சென்னையில் 2018ல் திமுக சார்பாக இந்தியாவின் 15 வது நிதி ஆணையத்தின் விசாரணையின் போது நான் அளித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள். (https://ptrmadurai.in/15-terms-of-reference). (இந்தியாவில் ஒரு தனித்துவமான மையப்படுத்தப்பட்ட மற்றும் கூட்டாட்சி அல்லாத முறை உள்ளது, இதன்மூலம் டெல்லியில் உள்ள மத்திய அரசு நேரடி வரிகளில் பெரும்பாலானவற்றை வசூலிக்கிறது, பின்னர் 5 ஆண்டு நிதி ஆணையங்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி அவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்குகிறது.)

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு விகிதாச்சாரத்தில் அதிகமாக உள்ளது (அதன் மக்கள் தொகையில் 6% மட்டுமே இருந்தபோதும் ) மற்றும் கடந்த பல வருடங்களாக பெரும்பாலும் அதிகரித்து வந்தும், மத்திய வரி வருவாய் பங்கிலிருந்து இருந்து நமது ஒதுக்கீடு 7% க்கும் குறைந்து ~ 4% ஆக உள்ளது. எளிமையான சொல்லப் போனால், நாம் தொடர்ந்து ஒப்பீட்டளவில் பணக்காரர்களாக வளர்ந்து வருகிறோம், மேலும் பெரிய மொத்த வரி நன்கொடையாளர்களாகி வருகிறோம்.

மேலும் ஒரு படி மேலே சென்று, சில குறிகாட்டிகளில், தமிழகம் OECD நாடுகள் அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் கூறுவேன்.

 

உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஸ்காண்டிநேவியாவில் சிறந்த மற்றும் சமமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்த அதே முற்போக்கு ஜனநாயகக் கோட்பாடுகள், கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க்கை பல “சிவப்பு மாநிலங்களுடன்” ஒப்பிடப்படுவது போல, மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்திற்கும் சிறப்பான பயன்கள் கிடைத்துள்ளன.

உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான தத்துவம் அல்லது ஆளுகை முறை இல்லாத நிலையில், தற்போதுள்ள அனைத்து மாதிரிகளும் ஏதோ ஒரு வகையான குறைபாடுகளை உள்ளடக்குகின்றன. மிகவும் தீர்க்கமாக அதை பின்பற்றுபவன் என்றாலும், எங்கள் திராவிட மாதிரியில் பல பரிமாணங்களில் இன்னும்முன்னேற்றங்கள் தேவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் திரு துமே அதன் குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை தரவுகளால் எதிர்க்கவில்லை. அவரது அனுமானங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், ஆயிரம் ஆண்டுகளாக சாதி கட்டமைப்புகளில் பொதிந்துள்ள முறையான பாகுபாட்டைக் கொண்ட ஒரு மாநிலத்தில் ஒரு நூற்றாண்டுக்குள் அதீவேகமான திராவிட மாதிரியின் சமூக நீதி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தன்னிகரற்ற விளைவுகளை அடைந்துள்ளது என்பதை தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த சாதனையை சாதரணமாக அடையவில்லை. எனவே, இது குறித்து திரு. துமே முழுமையாக கற்றுணர்ந்து, முறையான கொள்கை பாடங்களை புரிந்து கொள்வதே சிறந்தது.

Source: THE NEWS MINUTE

 Articles Year Wise: