Published Date: December 30, 2021
CATEGORY: GENERAL
"கோவை போராட்டம் எதிரொலி.. டெல்லியில் பேசிய அமைச்சர் பிடிஆர்.. ஜவுளித் துறைக்காக விடுத்த குரல்
சென்னை: ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5% இருந்து 12 % உயர்த்தப்பட்டதற்கு அனைத்து மாநில நிதியமைச்சர் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சில மாநிலங்கள் சார்பாக நிதி அமைச்சர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்தனர்.
ஜவுளி மூலப்பொருட்கள் உற்பத்தி
சமீபத்தில் ஜவுளி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோயம்புத்தூரில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கோயம்புத்தூரில் நேற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. கடந்த சில மாதங்களில் மூலப்பொருட்களின் விலை 30 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி உயர்வு
இந்த நிலையில்தான் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுக்க பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின. இதையடுத்து ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5% இருந்து 12 % உயர்த்தியது தவறு. இந்த முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் .
பல லட்சம் பாதிப்பு
சிறு குறு தொழில்துறையில் இருக்கும் பல லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள். பல மாநிலங்களில் மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அலுமினியம், எஃகு, தாமிரம் ஆகிய மூலப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் இந்த கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்."
Media: tamil.oneindia.com