தமிழகத்தை அனைத்துத்துறையிலும் நம்பர் 1 ஆகமாற்ற வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.

Published Date: January 1, 2022

CATEGORY: CONSTITUENCY

தமிழகத்தை அனைத்துத்துறையிலும் நம்பர் 1 ஆகமாற்ற வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.

மதுரை மடீட்சியாவின் 5ம் ஆண்டு மேட் இன் மதுரை கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். உணவுப் பொருள்கள், கட்டுமான பொருள்கள், பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் என கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 125 அரங்குகளை பார்வையிட்டனர்.

பின்பு நடந்த விழாவில் நிதியமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் 

பேசுகையில், இது போன்ற நிகழ்ச்சிகள் சிறு, குறு தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப்பெரிய லட்சியங்களுடன் தொழில்களைத் 

தொடங்கும் போது நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். தமிழக முதல்வர் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக குழு அமைக்கப்பட்டு வளர்ச்சி திட்டங்களைத் துரிதமாக செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகினறன.

 

மதுரை நகரம் வளர்ச்சியில் 10 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. இதை சரி செய்ய சிறப்புத் திட்டம் தயாராகி வருகிறது என்றார்.

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில், டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜவுளி உள்ளிட்ட சிறு, குறு தொழில்களுக்கு  விதிக்கப்பட்டிருந்த  12 சதவீத வரியை தமிழக நிதியமைச்சர், ஒன்றிய அரசிடம் வாதாடி, 5 சதவீதமாக குறைத்துள்ளார். தமிழக முதல்வர் உண்மை

நிலையை அறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிறு-குறு தொழிலுக்கு 14 சதவீதம் இருந்த வாட் வரியை 5 சதவீதமாக குறைத்தார். அதேபோல் தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி அடைய முதல்வர் மு.க ஸ்டாலின் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை அனைத்து துறையிலும் நம்பர்-1 ஆக மாற்ற வேண்டும் என்பதே முதல்வர் மு.க ஸ்டாலின் இலக்கு. என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் அனிஷ்சேகர், மடீட்சியா தலைவர் சம்பத் மேட் இன் மதுரை தலைவர் குணமலை,  துணை தலைவர் இளங்கோ கவுரவ செயலாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Media: Dinakaran