ஜி.எஸ்.டி கவுன்சில்தான் இழப்பீடு வழங்குவதை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் ஒன்றிய அரசு அல்ல : தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்

Published Date: June 30, 2022

CATEGORY: GST

சரக்கு மற்றும் சேவை வரி விதி முறையின்கீழ் உள்ள மாநிலங்களுக்கான ஐந்தாண்டு இழப்பீட்டு காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் கருத்துப்படி, ஜிஎஸ்டி கவுன்சில் உண்மையிலேயே ஒரு கூட்டாட்சி அமைப்பாக இருக்குமேயானால்  மாநிலங்களுக்கு இந்த மாத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய வாருவாய் பற்றாக்குறைக்காக இழப்பீடு வழங்க வேண்டுமா என்பதை கவுன்சிலே தீர்மானிக்க வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு அமைப்பின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் ஜூன் 28-29 ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்திற்கு முன்னதாக தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியது. தமிழகத்தின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் கருத்துப்படி, இழப்பீடு வழங்கும் காலத்தை நீடிக்கவேண்டும் என்கிற மாநிலங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டுமா என்பதை கவுன்சில் தான் வாக்களித்து முடிவு செய்ய வேண்டும்.

"இது உண்மையிலேயே ஒரு கூட்டாட்சி அமைப்பு என்றால், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உண்மையிலேயே  தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றால்,ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வெளியே எந்த அடிப்படையில்  முடிவெடுக்க முடியும்?"  என சண்டிகரில் நடந்த கவுன்சிலின் 47 வது கூட்டம் முடிவுற்ற பிறகு திரு தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்ட ஓர் உரையாடலில் தெரிவித்தார்.

ஜூன் 28-29  ஆகிய நாட்களில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டாலும், ஜூன் 30-க்கு பிறகும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்பது குறித்து போதுமான தெளிவு ஏற்படவில்லை.

ஜிஎஸ்டி சட்டத்தின்படி, இந்த மறைமுக வரி விதிப்பு முறையின் அமாலக்கப்பட்ட பிறகான முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்கள் ஜிஎஸ்டி வருவாயில் 14 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்றும்,  ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் அது  இழப்பீடு செஸ் நிதியின் மூலமாக ஈடுகட்டப்படும் என்கிற உத்தரவாதம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. ஐந்தாண்டு காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநிலங்களிடம் வருவாய் வளர்ச்சி குறித்த அச்சம் நிலவுவதால், இழப்பீட்டு காலத்தை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டன.

“ஒன்றிய அரசு  பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறது.  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இழப்பீடு நீட்டிப்பு தொடர்பான மாநிலங்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்படும் என்றார். முன்பு 2021 செப்டம்பரில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சட்டத்தின்படி ஜூன் 2022 க்கு மேல் இழப்பீடு தொடராது என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் கூறியுள்ள கருத்து ஓர் முன்னேற்றமே” என தியாக ராஜன் கூறினார்,

தியாக ராஜன் அவர்களின் கூற்றுப்படி, ஒன்றிய  நிதியமைச்சர் கூறியவை ஜிஎஸ்டி கவுன்சிலின் கருத்து அல்ல.

“ஜிஎஸ்டி அமைப்பு ஒன்றிய அரசுக்கு முடிவெடுப்பதற்கான தனி அதிகாரத்தை வழங்கியுள்ளதா ? அல்லது இழப்பீடு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டியது ஜிஎஸ்டி கவுன்சிலா?”

ஜூன் 30க்கு மேல் மாநிலங்கள் எந்த இழப்பீடும் பெறாது என்றாலும், மார்ச் 2026 வரை 28 சதவீத ஜிஎஸ்டி அடுக்கின் கீழ் குறிப்பிட்ட சில  பொருட்களுக்கு செஸ் விதிக்கப்படும். வசூலிக்கப்படும் செஸ்,  ஒன்றிய  அரசு நிதியாண்டு 21 மற்றும் 22இல்  மாநிலங்களுக்கு ஏற்பட்ட  வருவாய் குறைவை ஈடுசெய்வதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படும். தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இழப்பீடு செஸ் வசூலிப்பதில் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததால் இழப்பீடு வழங்குவதற்கு கடன் வாங்க வேண்டியிருந்தது

இழப்பீடு விவகாரத்திற்கு  தீர்வு:

பல மாநிலங்களுக்கு, இழப்பீடு வழங்குவதை தொடர்வது என்பது இன்றியமையாததாகும். ஜிஎஸ்டி கவுன்சிலில் சத்தீஸ்கரின் பிரதிநிதியான டி.எஸ்.சிங் தியோ ஜூன் 27 அன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், ஜிஎஸ்டியின் கீழ் 2019ஆம் நிதியாண்டிலிருந்து 22ஆம் நிதியாண்டு வரை மாநிலத்திற்கு ரூ.13,709 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த நஷ்டம் ஈடுசெய்யப்பட்டாலும், மாநிலத்தின் நிதி நிலைமை ஆபத்தான நிலையில் இருக்கக்கூடும் என்றும்,அதனால்  மூலதனம், சமூகத் துறை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் செலவழிக்க முடியாமல் போகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தியாக ராஜனைப் பொறுத்தவரை, இழப்பீடு நீட்டிப்பு என்பது கொள்கை மற்றும் சட்ட முறைமை சார்ந்த விவகாரமாகும்.

"நாம்  ஒரு விசித்திரமான உலகில் வாழ்கிறோம், இங்கு நம்மிடம் ஜிஎஸ்டி கவுன்சில் என்கிற அமைப்பு உள்ளது, அது முடிவெடுக்கும் போது கூட்டாட்சி மற்றும் ஒத்திசைவு அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றிலிருந்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கவுள்ள நாளுக்கும்] இடையிலான கால இடைவெளிக்குள் இழப்பீடு குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்படுமானால் , அதனை கூட்டுறவு கூட்டாட்சி நடைமுறையாக எப்படி கருத முடியும்?” என்று கேட்கிறார் திரு. தியாக ராஜன்.

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில்  மதுரையில் நடைபெற உள்ளது.

“இன்னும் இரண்டு வாரங்களில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு,  இல்லை இழப்பீடு நீட்டிக்கப்படாது என்று சொல்லலாம் அல்லது ஆம் இழப்பீடு நீட்டிக்கப்படும் என்றும் சொல்லலாம், இப்படி தன்னிச்சையாக முடிவெடுப்பது ஜிஎஸ்டி உருவாக்கப்பட்ட நோக்கத்தின் வரம்பிற்குள் உள்ளதா? இது குறித்து ஒன்றிய அரசு மீண்டும் விவாதிக்குமா என்பதாவது நமக்குத் உறுதியாக தெரியுமா?  இழப்பீடு விவகாரத்திற்கான தீர்வு ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவாகவே இருக்க வேண்டும். மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியபடி, ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு விவகாரத்திற்கு மட்டுமே வாக்கெடுப்பு நடந்துள்ளது, மற்ற விவகாரங்களில் ஒருமித்த கருத்தே உருவானது.இழப்பீடு நீட்டிப்பு குறித்து  கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் விரும்புகிறது என்பதை என்னால் கூற முடியும் , எனவே இந்த  விவகாரத்தில்  ஒருமித்த கருத்து இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, ”என்று திரு  தியாக ராஜன் தெரிவித்தார்.

"நிரந்தர  விமர்சகர்" என்று தனது முத்திரை குத்தப்படுவதை விரும்பாத தியாக ராஜன் அவர்கள் , தற்போது நடைபெற்ற  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட விவாதங்களில் தரம் மேம்பட்டுள்ளதும், பாரபட்சம் பார்ப்பது  குறைந்துள்ளதும் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். ஆனால் இழப்பீடு பிரச்சினைக்கு தீர்வு காண ‘நல் நம்பிக்கை’ தேவை.

"எனது சொந்த கருத்து என்னவென்றால், ஒரு பெரிய சுமையாக மாறிவிடாத வகையில் இழப்பீடுகளை வழங்குவதற்கு பல அதிநவீன வழிமுறைகள் உள்ளன. ஆனால் அது நல் நம்பிக்கையின் அடிப்படையிலான முடிவாக இருக்க வேண்டும்  - நல்ல கணக்கியல் மற்றும் பகுப்பாய்வுடன் கூடிய நல் நம்பிக்கை அடிப்படையிலான முடிவு ஒப்பீட்டளவில் குறைவான அளவில் செலவை ஏற்படுத்தக்கூடிய தீர்வை உங்களுக்கு வழங்கும். ஒரே இரவில் 370வது சட்டப்பிரிவை நீக்கிவிட்ட அரசாங்கத்திற்கு மாநிலங்களின் நலன் கருதி, ஜிஎஸ்டி அரசமைப்பில் திருத்தங்களைச் செய்வது ஒரு பெரிய காரியமல்ல.

ஜிஎஸ்டி-க்கு மறு ஆய்வு தேவை:

இழப்பீடு பிரச்சனை ஒருபுறம் இருக்க, ஜிஎஸ்டி முறையையே ஒட்டுமொத்தமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தைக் சுட்டிக் காட்டுகிறார் தியாகராஜன் அவர்கள்.

"அரசியல் காரணங்களுக்காக இது அவசரமாக நிறைவேற்றப்பட்டது, தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள்  சாகச மனப்பான்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் , சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. முதல் நூறு நாட்களில் இதில் எத்தனை மாற்றங்கள் செய்யப்பட்டன?”

“இப்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ஜிஎஸ்டியை நியாயமான முறையில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஜூன் 28-29 ஆகிய தினங்களில் நடைபெற்ற கூட்டத்தில் பலரும் அதைப் பரிந்துரைத்தனர் நானும் அதே கருத்தை வலுவாக முன்வைத்தேன். உண்மையில், மாண்புமிகு மேற்கு வங்க நிதியமைச்சர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு  - இந்தத் தீர்ப்பின் வெளிச்சத்தில், அதன் தாக்கங்கள் என்ன, அது நமது செயல்திறனை அல்லது செயல்படும் திறனை மாற்றுகிறதா என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டாமா? என்ற வாதத்தை முன்வைத்தார்.”

மே 19 அன்று, உச்ச நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய அல்லது மாநில அரசுகளை  கட்டுப்படுவதில்லை என்றும், அவை வலியுறுத்தும் தன்மையை  மட்டுமே கொண்டவை என்றும் கூறியது.

ஜிஎஸ்டி மறுஆய்வுக்கு, தொழில்நுட்ப மற்றும் பரந்தபட்ட அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது, என்றார்.

“இந்த கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரி விகித  மாற்றங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஜூலை 18 முதல் அவை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நமது மாநிலங்களில் இந்த வரிவிகித மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், நாம் அனைவரும் சட்டமன்றத்தில் அதற்கான  மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் அல்லது அவசரச் சட்டங்களை வெளியிட வேண்டும்” என்று தியாக ராஜன் கூறினார்.

"ஜூலை 18 ஆம் தேதிக்குள் 31 உறுப்பினர்களும் அதைச் செய்வதற்கான சாத்தியங்கள் பூஜ்ஜியம்தான் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். ஆனால் சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரமுள்ள ஜிஎஸ்டி நெட்வொர்க், ஜூலை 18 அன்று கட்டண அமைப்புகளை மாற்றங்களை கொண்டுவரும்  ஏனெனில் அவை மாற்றப்படும் என்று அவர்கள் அறிவித்துவிட்டார்கள். இப்போது, அவர்கள் வரி X சதவிகிதம் என்று சொல்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் சட்டம் மற்றும் விதிமுறைகளில் இன்னும் Y சதவிகிதம் என்று இருக்குமானால் , எங்களுக்குள் முரண்பாடு ஏற்படும் ” என்றார்.

மற்றொரு முக்கியமான விஷயம், ஜிஎஸ்டி கவுன்சில் கூடும் கால இடைவெளி சார்ந்தது. இந்த வாரம் நடைபெற்ற கூட்டம் கடந்த ஆறு மாதங்களில் இது முதல் முறையாகும், ஏனெனில் கடைசியாக நடந்த கூட்டம் 2021 டிசம்பரில் நடந்த அவசர கூட்டமாகும்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர் பொறுப்பு தியாகராஜனை சில சமயங்களில் "சற்று முரண்பட வைத்தது". ஜிஎஸ்டி வசூல் மேம்பட வேண்டும் மற்றும் அதில் உள்ள கசிவுகள் அடைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினாலும், மறைமுக வரிவிதிப்பு என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்.

“இந்த ஒன்றிய அரசாங்கம் நேரடி வரிகளைக் குறைத்துக்கொண்டே இருக்கிறது, அது வருமான வரியாக  இருந்தாலும் சரி, கார்ப்பரேட் வரியாக இருந்தாலும் சரி, அதை ஜிஎஸ்டி மூலம் ஈடுகட்ட முயல்கிறது. மேலும் சில நிலைகளில், நாம் இயல்பாகவே எதிர்மறை தன்மைகொண்ட மறைமுக வரி வருவாய்களை சார்ந்துள்ளது கவலையளிக்கிறது. நேரடி வரிகளை யார் நிர்ணயிப்பது? ஒன்றிய அரசு . எனவே வரிவிதிப்பு பற்றிய ஒட்டுமொத்த தத்துவத்தையும், நேரடி மற்றும் மறைமுக வரிகளின் விகிதத்தையும், எங்களது கருத்துகளை பெறாமலே அவர்கள் தீர்மானிக்கிறார்கள்”

Media: Money Control