/

140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்க்கு “அனைவருக்கும் ஒரே தீர்வு” என்ற வகையில் யோசிப்பது மிகக்கடினம்.

Published Date: July 12, 2021

GST இயற்கையாகவே பிற்போக்குத்தனம் நிறைந்தது - அமைப்பு ரீதியாக அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ளது

140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்க்கு “அனைவருக்கும் ஒரே தீர்வு” என்ற வகையில் யோசிப்பது மிகக்கடினம்.

GSTயில் அதீத அளவில் அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிந்துள்ளது என்றும் அமைப்பு ரீதியாகவும், அமல்படுத்தும் முறையிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் கருதுகிறார். ETயின் டியா ரேக்ஹிக்கு அளித்த நேர்காணலில் தற்போது நடைமுறையில் உள்ள மாதிரி எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப செயல்படுமா எனும் தன் சந்தேகங்களையும் வெளிப்படுத்தினார்:

GST குறித்து தாங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். குறிப்பாக அவற்றுள் உள்ள பிரச்சனைகள் என்ன?

அடிப்படையாகவே GST வடிவமைக்கப்பட்ட விதத்தில் பல குளறுபடிகள் உள்ளன. மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மிகச்சிறிய அளவிலான வரிவிதிப்பு உரிமைகளையும் பறித்து அதை ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ஒரு அமைப்புக்கு மாற்றியது நல்ல யோசனை அல்ல. இதன் வடிவமைப்பு உறுதியாகவும் இல்லை, தெளிவாகவும் இல்லை. இதன் விளைவாக நிர்வாக ரீதியில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டியுள்ளது... அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத்தில் குவிந்துள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்க்கு “அனைவருக்கும் ஒரே தீர்வு” என்ற வகையில் யோசிப்பது மிகக்கடினம். இதற்கு தேவையான முன்யோசனையும், சிந்தனையும் போதிய அளவில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது...

GST மன்றத்துடன் தங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது?

நான் கலந்துகொண்ட முதல் கூட்டத்தில், வரிவிதிப்பு தொடர்பாகவும் எந்தெந்த முடிவுகளின் மீது ஒப்புதல் பெறப்பட்டது என்பது குறித்தும், என்னென்ன விஷயங்களின் மீது ஒப்புதல் பெற வேண்டும் என்ற விவாதங்களின் மீது ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் செலவழித்தோம். ஒரே நாடு, ஒரே வரி, ஒரே அமைப்பு என்பது கூட அல்ல... அதை விடவும் பெரிய கவலைகள் எனக்கு உள்ளன. தற்போதுள்ள மாதிரி கூட்டாட்சி தத்துவதிற்கு ஏற்றதா, நேரடி வரிவிதிப்புக்கும் மறைமுக வரிவிதிப்புக்குமான விகிதம் நியாயமான அளவில் உள்ளதா, மாநில உரிமைகள் சரியாக வழங்கப்படுகின்றனவா போன்ற கேள்விகளுக்கு இல்லை என்பது தான் பதில்.

GST வரிவிகிதம் சீராக்கப்பட வேண்டும் என தொழில்முனைவோர் கூறுவது குறித்து...

இருக்கலாம். நான்கு அல்லது ஐந்து வரிவிகிதங்களை அமல்படுத்துவது மிகவும் சிக்கலான ஒன்று என்பதை ஏற்கிறேன். அதன் விளைவாக உள்ளீடு விகிதம் & வெளியீடு விகிதம் குறித்தும் சிந்திக்க வேண்டிவரும். ஆனால், ஒரு மந்திரக்கோலை கொண்டு அனைத்து பொருட்களுக்கும் 11.5% என்று இருக்கும் நிலையை சீரான வருவாய்க்கு ஏற்ற வரிவிதிப்பாக அனைத்து பொருட்களுக்கும் 14% என அடுத்த ஆண்டு மாறலாம் என்று GST மன்றம் கருதுகிறது. ஆனால் இதுகுறித்தும் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. ஏனெனில், GST இயற்கையாகவே பிற்போக்குத்தனம் நிறைந்தது – அனைத்து விற்பனை புள்ளிகளும், எல்லா மறைமுக வரிகளும் பிற்போக்குத்தனமானவை. ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் வருமானம் அல்லது உடைமைகளில் பெரும் பங்கினை வரிவிதிப்புக்கு உட்பட்ட சரக்குகள் & சேவைகளின் மீது செலவிடுகின்றனர். பணம் படைத்தவர்கள் மிகவும் குறைவாகவே செலவிடுகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்காலம் நிறைவுற்ற போது பெருமுதலாளிகள் & செல்வந்தர்களிடம் இருந்து பெறப்பட்ட நேரடி வரிவிதிப்பு 55%  என்றும் மறைமுக வரிகள் 43-45% என்ற அளவில் தான் இருந்தது. நியாயமான வரிவிதிப்பு அல்லவா? OECD நிர்ணயித்துள்ள அளவுகோல் 60% நேரடியாகவும் 40% மறைமுகமாகவும் உள்ளது. ஏனெனில், நேரடி வரிவிதிப்பு முற்போக்கான ஒன்று... ஆனால் தற்போது நிலை தலைகீழாகிவிட்டது.

பெட்ரோல்-டீசல் ஆகியவற்றை GSTயின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை குறித்து...

அது நடக்ககூடிய ஒன்றாக எனக்கு தோன்றவில்லை. ஒன்றிய அரசு பெட்ரோல்-டீசல் மீது மேலதிக வரியை வசூலித்து வருகிறது. ஒன்று - அவர்களின் மொத்த ஆண்டு வருவாயில் அது 18% முதல் 14% என்ற அளவில் உள்ளது. அதை விட்டுகொடுத்து GSTயின் கீழ் நிச்சயம் கொண்டு வரமாட்டார்கள். இரண்டு – எங்களை போன்றோருக்கு சீர்குலைந்த இந்த GST அமைப்பின் கீழ் இந்த முடிவை எடுப்பதில் விருப்பமும் இல்லை. 

ஒன்றிய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் அவர்களின் செயல்பாடுகள் குறித்து...

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது. அவர் வகிக்கும் பொறுப்பின் அளவுக்கு பெரிய அளவிலான பொறுப்பை நான் கையாண்டதில்லை. அரசியல் தலைமையை மீறி எந்த ஒரு அமைச்சரும் சுதந்திரமாக செயல்பட முடியாது. நான் சிறப்பாக செயல்பட்டால், முதல்வர் நான் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதும் அல்லது நான் எதை செய்ய வேண்டும் என்று அவர் கருதுகிறாரோ அதை செய்ய அனுமதிப்பதும் தான் அதற்கு காரணம். 

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி காலத்தில் இருந்து GST மன்றம் கடந்து வந்துள்ள பார்வை குறித்து...

இது குறித்து எனக்கு முழுமையாக தெரியாது. ஆனால் மற்றவர்களிடம் இருந்து பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் மறைந்த ஜெயிட்லி அவர்கள் மிகச்சிறந்த சமரசவாதி, ஒருவரை சம்மதிக்க வைக்கும் அபார திறன் அவர் வசம் இருந்தது. ஆனால், இந்த திறன்கள் அவரிடம் உண்மையாகவே இருந்தாலும், இந்த திறன்வாய்ந்த நபர் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த அமைப்பு சிறப்பாக செயல்படும் என்ற வகையில் வடிவமைத்தது நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல. 

SOURCE: Economic Times

 

 Articles Year Wise: