/

கூட்டாட்சி தத்துவம் – ஹாமில்டன் முதல் சீதாராமன் வரை

Published Date: September 7, 2020

இந்தாண்டின் தொடக்கத்தில், லண்டனில் ஒரு குளிர்கால மாலையில், அமெரிக்காவை தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அதன் கருவூலத்தின் முதல் செயலாளராக பணியாற்றியவருமான அலெக்சாண்டர் ஹாமில்டனின் அற்புத வாழ்க்கையை தழுவி இயற்றப்பட்ட ஹாமில்டன் என்ற புகழ்மிக்க இசை-நாடக நிகழ்ச்சியை நான் கண்டு களித்தேன்

பெரும்பாலான நாட்களில் 30000 அடி உயரத்தில் பயணம், பரபரப்பான நாடோடி வாழ்க்கை என இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த என் வாழ்க்கை முறை, 2016ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒரே நிலைத்தன்மையை எட்டியது (நான்கு ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், என் சட்டமன்றத்திற்கு உட்பட்ட 22 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் குடிநீர், கழிவு நீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கும் நான் பொறுப்பேற்கும் நிலை உள்ளது). இந்நிலையில், உலகின் மிகக்குறுகிய கூட்டாட்சி முறையை கடைபிடிக்கும், அதீதமாக மையப்படுத்தபட்ட ஒரு பெரிய தேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகிய நான், ஹாமில்டன் என்று ஒரு கூட்டாட்சிவாதியை குறித்து, அவர் எதிர்த்து போராடிய ஏகாதிபத்திய அரசின் தலைநகரில் தெரிந்துகொண்டது இயல்புக்கு மாறாகவும் முரண்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

"இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உட்பிரிவு 1ன் கீழ் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதை வடிவமைத்தோர், புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நாட்டின் அதிகாரங்கள் பலவும் டெல்லியின் மத்திய அரசிடம் குவியும் வண்ணம் வடிவமைத்தனர். இந்த சமமின்மை, அவசரநிலை பிரகடனப்படுத்தபட்ட பின்னர், இந்தியா MISA சட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தின் 42ம் திருத்தத்தின் மூலமாக மேலும் அதிகரித்தது.

மத்திய அரசை மையப்படுத்திய இந்த போக்கு கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது.

மற்ற பெரிய நாடுகளுடனான ஒப்பீடு, இந்த மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டின் ஒட்டுமொத்த விளைவுகளை தெளிவாக எடுத்துரைக்கும், முற்றிலும் முதலாளித்துவ நாடு என வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்காவிலும், தீவிர கம்யூனிச கொள்கையை கடைபிடிக்கும் சீனாவிலும், பள்ளிக்கல்வி மற்றும் காவல்துறை போன்ற துறைகள் நகர /மாவட்ட ஆட்சி அமைப்புகளின் சிறப்புரிமைகளாக உள்ளன. ஆனால் இந்தியாவிலோ, இது போன்ற துறைகள் பெரும்பாலும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது அவற்றை மத்திய அரசு கையாளும் போக்கு அதிகரித்து வருகிறது. மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்கு எதிராக உறுதியான விமர்சனங்களை முன் வைத்து, அதன் பொருட்டு அக்கால இந்தியாவில், கூட்டாட்சி தத்துவத்தின் ஆகச்சிறந்த போராளியாக 2014 வரை இருந்தவர் குஜராத்தின் முன்னால் முதல்வர், பாஜகவின் நரேந்திர மோடி அவர்கள் இன்றி வேறு யாருமில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆனால், 2014ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மோடி அவர்கள் பொறுப்பேற்றது முதல், மத்திய அரசின் கொள்கை சார்ந்த முடிவுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் மையப்படுத்தவதில் அதீதமாக கவனம் செலுத்தி, அதன் "மாபெரும் திட்டங்களை" செயல்படுத்தும் முகவர்களாகவே மாநிலங்களை நடத்தி வருகிறது. "ஒரு நாடு, ஒரு X" போன்ற கவர்ச்சியான முழக்கங்களை பயன்படுத்தி, நாம் எதை பேச வேண்டும் என்பதில் தொடங்கி, நம் குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கவேண்டும் என்பது வரை, அனைத்து வகைகளிலும், நம் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் அதிகாரத்தை பதிக்க முயன்று வருகிறது மத்திய அரசு.

2017ம்ஆண்டில் "ஒருநாடு, ஒரு வரி" என்ற திட்டத்தின் மூலம் இந்தியா முழுமைக்கும் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (GST) இத்தகைய முயற்சிகளுக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. இத்திட்டத்தை முதலில் வடிவமைத்தது (ஆனால் செயல்படுத்தப்படவில்லை) முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் என்றாலும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தோடு ஒப்பிடும்போது பல்வேறு கட்டமைப்பு வேறுபாடுகளை காணமுடிகிறது. GSTயை ஏற்றுக்கொண்டதன் விளைவாக மாநிலங்களிலிருந்து மத்திய அரசிற்கு வரிவிதிப்பு அதிகாரங்கள் பெருமளவில் கைமாறியது. மற்ற நாடுகளில் மாநிலங்கள், மாவட்டங்கள், ஏன், சில நாடுகளில் நகரங்களும் கூட, அவர்கள் தீர்மானிக்கும் விகிதத்தில் வரிவிதிக்க முடியும். அதைபோலல்லாமல், இந்தியாவில் GST அமலுக்கு பிறகு, 90%க்கும் மேற்பட்ட வரி அதிகாரங்கள் மத்திய அரசிடம் மட்டும் தான் உள்ளன. மேலும், பல்வேறு வகைகளில் GST செஸ் வரிவிதிப்பு என சட்ட சிறுதுளையை பயன்படுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு வழங்க கடமைப்பட்டுள்ள பல லட்சம் கோடிகளை வரிவருவாய் தொகுப்பிலிருந்து ஆண்டுதோறும் விலக்கியுள்ளது மத்திய அரசு.

மோடி அவர்களின் இந்த U-Turn அப்பட்டமான கபட நாடகமாக இருந்தாலும், இந்திய வரலாற்றில் அதிகமாக (தனித்து அல்லது கூட்டணியுடன்) ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி, அவர்களின் ஆட்சி காலத்தில் மாநில உரிமைகளுக்கு இல்லாத அக்கறை, தற்போது தீர்க்கமாக குரல் கொடுக்கிறதும் உண்மையாகும்.

ஆனால் இத்தகைய மைய அதிகார குவிப்பின் அடக்குமுறை முயற்சிகள் அடிப்படையில் பகுத்தறிவற்றவை என்பதற்கு இந்தியாவின் மாநிலங்களுக்கிடையே நிலவும் வளர்ச்சி அல்லது முன்னேற்ற அடிப்படையிலான வேறுபாடுகளே சான்றாகும். தில்லியில் அமர்ந்துகொண்டு அனைவருக்கும் ஒரேமாதிரியான திட்டங்களை செயல்படுத்திவந்தால் எதிர்பார்த்த விளைவுகளை நிச்சயம் அடையவே முடியாது.

ஏன்?

கீழே உள்ள அட்டவணை பீகார் (மக்கள் தொகை: > 10 கோடி) மற்றும் தமிழ்நாடு (மக்கள் தொகை: ~8 கோடி) ஆகிய பெரிய மாநிலங்களை (இரண்டும் உலகில் பெரிய நாடுகளின் அளவுக்கு மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள்) ஒப்பிடுகிறது. ஒவ்வொன்றின் சராசரிக்கும், இந்திய சராசரிக்கும் உள்ள வேறுபாட்டை கவனியுங்கள்.

Source - RBI, Niti Aayog SDG 2019-20, National Health Report 2019;

 

எதன் அடிப்படையில் எந்த ஒரு துறையிலும் மத்திய அரசின் பொதுவான “ஒரு நாடு, ஒரு X” கொள்கையை, பீகாருக்கும், தமிழ்நாட்டிற்கும் நடைமுறைப்படுத்தவோ, அல்லது அதிலிருந்து பயன்பெறவோ முடியும்?

அமெரிக்க கருவூலத்தின் முதல் செயலாளரான (இந்தியாவின் மத்திய நிதி அமைச்சருக்கு சம பொறுப்பு) ஹாமில்டனுக்கு திரும்புவோம். அவரது பல புதுமையான நிதி கொள்கைகளில் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கிய, சர்ச்சைக்குள்ளானதுமான 1790 ஆம் ஆண்டின் நிதிச் சட்டம், சுதந்திரப் போரின் போது மாநிலங்களுக்கு பெருமளவில் ஏற்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்தும் பொறுப்பை அமெரிக்க மத்திய அரசு ஏற்றுக்கொண்டதற்கான சட்டம்.

அமெரிக்க நாட்டில் அதன் அரசியலமைப்பு, மாநிலங்களுக்கு வருமான வரிகளை விதிக்க அதிகாரம் அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகூட ஒரு மாநில உரிமைகளுக்கு உட்பட்டது. மத்திய அரசின் கீழ் வெளிப்படையாக ஒதுக்கப்படாத எந்தவொரு துறை சார்ந்த விஷயமும் மாநில உரிமை என்றே கருதப்படும். இந்த உண்மையான கூட்டாட்சி முறையுள்ள நாட்டில், அலெக்சாண்டர் ஹாமில்டன் மற்றும் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஆகியோர் யுத்தத்தின் போது ஏற்பட்ட மாநிலங்களின் கடனை ஏற்று, மாநிலங்களின் நிதி நிலைமையை சரி செய்ய வேண்டியது அனைவருக்குமான நன்மை என்ற வகையில், மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை சட்டமியற்றுபவர்களிடம், எடுத்துக்கூறி, மாநிலங்களை நிதி நெருக்கடிகளில் இருந்து வெற்றிகரமாக மீட்டனர்.

இந்தியாவின் இன்றைய காலகட்டத்திற்கு வருவோம், பணமதிப்பிழப்பு (2016) எனும் MASTERSTROKE-ல் தொடங்கிய பொருளாதார சரிவு, Covid19 தொற்றுநோயால் மேலும் துரிதப்படுத்தப்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

வரலாறு காணாத பொருளாதார உருக்குலைவின் (2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளின் படி -23.9% (real terms) என்ற அளவிற்கு சுருங்கியுள்ளது), காரணமாக GST வருவாய் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், GST உருவாக காரணமாக விளங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 101வது திருத்தத்தின் ஆதார வாக்கியங்களில் எழுதப்பட்டதற்கு மாறாக, சட்டப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க முடியாத இக்கட்டான சூழலில் உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சமீபத்தில் மாநில நிதியமைச்சர்களுடன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கலந்துரையாடினார், அதைத் தொடர்ந்து இரண்டு எழுத்துப்பூர்வ திட்டங்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த ஆவணத்தில், மத்திய அரசு அதன் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்காது என்றும், அதோடு சட்டத்திற்குட்பட்டு மாநிலங்களுக்கு முறையாக வழங்கவேண்டிய நிதியை வழங்க இயலாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

திருமதி சீதாராமன் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த, இது "கடவுளின் செயல்" எனக் கூறியுள்ளார். சட்டத்தில் அதற்கு இடமில்லாத போதிலும், மத்திய அரசு Force Majeure (தடுக்கமுடியா வலுகட்டாய நிலை) விதிமுறையை முன்னெடுக்கும் முயற்சியை கையாள்வதாக சிலர் விளக்கியுள்ளனர். மிகப்பெரிய பேரிடரின் போது மாநிலங்களின் நிதி தேவை நிச்சயம் அதிகரிக்கும், அதனால்தானோ என்னவோ 2017ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் FORCE MAJEURE பிரிவு எதுவும் இல்லை.

அதற்கு பதிலாக, மத்திய அரசின் இந்த இயலாமையை மூடிமறைக்க திருமதி சீதாராமன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் (மென்மேலும் கடன் சுமை அதிகரிக்கும் வகையில்) கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்கினார். அவற்றுள் ஒன்றின் கீழ், கடன் உச்சவரம்பை மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 0.5% ஆக உயர்த்துவதற்கான "கருணைமிக்க" சலுகையையும் அளித்துள்ளார்.

இவற்றையெல்லாம் தான்டி இறுதி அவமதிப்பாக1, 7 நாட்களுக்குள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய மாநிலங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

மேலும், காயங்களை இரணமாக்கும் வகையில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டை வழங்காமல் தனது கடமையில் இருந்து மத்திய அரசு தவறும் இதே வேளையில், திரு.மோடி தனது மத்திய விஸ்டா திட்டத்தை (புது தில்லியில் ரூ.20,000 கோடி செலவில் புது அதிகார மையத் திட்டம்) நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளார். இச்செயல் வரலாற்றில் துக்ளக் செய்ததற்கு ஒப்பிடத்தக்கது என்பதை காலம் நிரூபிக்கும்.

அதிகாரங்கள் மைய்யப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இன்னும் வேகமாக மையப்படுத்தப்பட்டு வரும் சூழலில் (தேசிய கல்விக் கொள்கை ஒரு சமீபத்திய உதாரணம்) GST நிதிப்பங்கீடுகள் குறித்த இந்த முடிவு மாநிலங்களை அடிமைப்படுத்துவதில் ஒரு புதிய உச்சமாக கருத வேண்டியுள்ளது.

வரலாற்றில் இல்லாத வகையில் அதிகாரத்தைக் குவிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளில் (சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்கள் கண்டுகொள்ளாததினால், சட்டங்களை மீறி) உள்ள மிகப்பெரிய சோகம் என்னவென்றால், இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த திறமைவாய்ந்த தொழில்நுட்ப அறிஞர்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான். திறமையற்ற நபர்களிடம் அளவற்ற அதிகாரம் குவிந்து வருவதன் காரணமாக, துயரம் நாடுமுழுவதும் பரவலாகிறது.

"நிழலின் அருமை, வெயிலில் தெரியும்" என்ற தமிழ் பழமொழி தற்போதைய நிலையை எடுத்துரைக்க பொருத்தமானதாக இருக்கும். அதிகரித்து கொண்டே செல்லும் சர்வாதிகார போக்கும், கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளும் ஹாமில்டனின் உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தின் நன்மதிப்பை தெளிவாக்குகிறது.

1வழக்கமான காலங்களில், அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் அவர்களின் வருடாந்திர நிதி பற்றாக்குறையை மொத்த உற்பத்தியில் (GDP/GSDP) 3%க்கும் கீழாக வைத்திருக்க வேண்டும். இது 2003ம் ஆண்டு இயற்றப்பட்ட FRBM சட்டத்தின் படியும் அதை சார்ந்து மாநிலங்களுக்கென இயற்றப்பட்ட, உதாரணமாக தமிழகத்தின் FRA, 2003 சட்டத்திற்கும் பொருந்தும். ஆனால், இந்த சட்டங்களுக்கு உட்பட்டு நடபத்தை விட அவற்றை மீறுவதில் தான் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. பலவிதமான கணக்கு வழக்கு தந்திரங்களை பயன்படுத்தி, இந்த 3% உச்சவரம்பை மீறுவதை வழக்கமாகவே கொண்டு செயல்பட்டு வருகிறது.

 Articles Year Wise: