Published Date: November 21, 2021
CATEGORY: POLITICS
பாஜகவை எதிர்க்கும் பாஜக: அண்ணாமலையை ஆஃப் செய்த பிடிஆர்!
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர் ஏற்றம் கண்டதால் மக்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளான நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அண்மையில் குறைத்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5ம் டீசல் மீதான கலால் வரி ரூ.10ம் குறைக்கப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு மாநிலங்கள் தங்கள் பங்கிற்கு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன. மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பின்னர் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை இன்னும் குறைக்கவில்லை.
இதனிடையே, பெட்ரோல் டீசல் உயர்வைக் கண்டித்து வருகிற 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பல மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தேர்தலில் கூறிய விலையை கூட குறைக்கவில்லை. இதனை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்றார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயையும் தாண்டி உயர்ந்து கொண்டே சென்ற போது, வாய்மூடி மவுனம் காத்த அண்ணாமலை, மத்திய அரசு கலால் வரியை குறைத்ததும், தமிழக அரசை கண்டித்து அவர் போராட்டம் அறிவித்திருப்பது ஏன் என்ற கேள்வியை திமுகவினர் எழுப்பி வருகின்றனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை மலை போல் உயர்ந்து கொண்டு சென்ற போது மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் மாநிலங்களுக்கான வரியை குறைத்தன. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக வரியை குறைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டும் அவர்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் விலை மீதான வரி குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலாய்த்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன. அப்போது, ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ?” என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
Media: TAMIL.SAMAYAM.COM