/

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தவறான கொள்கை முடிவுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள தவறினால், அதே தவறுகள் மீண்டும் ஏற்படும்!

Published Date: November 8, 2018

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இலக்கு மெச்சத்தக்கதாக இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் சிந்தனையற்றவை என்பது இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்ட (நவம்பர் 8, 2016) ஒருவார காலத்திற்குள்ளாகவே தெரிந்துவிட்டது.

ஓர் ஆண்டு கடந்த நிலையில், அது குறித்த அச்சங்கள் மேலும் வலுப்பெற்றது மட்டுமல்லாமல் அது ஏற்படுத்தி உள்ள தாக்கம் மற்றும் அதன் அபாயகரமான விளைவுகள் ஆகியவை குறித்து  குறைத்தே மதிப்பிடபட்டதாகவும் தோன்றுகிறது.

இது போன்ற சிக்கல் நிறைந்த ஒரு திட்டம் அடிப்படை ஏற்பாடுகள், அதாவது தேவையான அளவு புதிய பணத்தாள்கள் இல்லாமலும் பழைய பணத்தாள்களை உரிய நேரத்திற்குள்ளாக மாற்று பணத்தாள்கள் கொண்டு பரிமாற்றும் அளவுக்கு அச்சடிக்கும் திறன் இல்லாமலும் செயல்படுத்தப்படும் என்றல்ல ஆலோசிக்கப்படும் என்று கூட என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள எதிர்மறை பொருளாதார விளைவுகளையும், மனிதாபிமானமற்ற அளவில் மக்களை சோதனைக்கு உள்ளாக்கியதையும் குறித்து ஏற்கனவே பல முன்னணி அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். எனவே, பணமதிப்பிழப்பு கொள்கையின் செயல்நோக்கங்கள் மற்றும் இலக்குகளை விடுத்து, அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டு அம்சங்களின் மீது மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். பொறியியல், முறைமை, உளவியல், ஆலோசனை, வங்கித்துறை மற்றும் நிதி சந்தை ஆகியவற்றில் கல்வியறிவும் அனுபவமும் பெற்றவன் என்ற முறையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கொள்கை வரம்புகள் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகள் கண்டு வியக்கிறேன்.

அடிப்படை குறைபாடுகள்

சில அடிப்படை குறைபாடுகளை கவனிக்கும் போது இந்த கொள்கை முழுமையான  சிந்தனையுடன் செயல்படுத்தப்படவில்லை என்பதும், கொள்கை முழுமை பெறுவதற்கு முன்பாகவே அமல்படுத்தப்பட்டது என்பதும் தெளிவாகிறது. எனவே, இத்திட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட நேரடி மற்றும் உருவாக்கப்பட்ட சிக்கல்களுக்கு காரணமான அடிப்படை வடிவமைப்பு உள்ளிட்ட முதல் நிலை குறைபாடுகளுடன் தொடர்வோம். “முதலில் பணத்தை அச்சடித்துவிட்டுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே எந்தவொரு பணம் சார்ந்த பொருளாதார நிபுணரின் பார்வையாக இருக்கும்”, என்று இந்த முதல் நிலை குறைபாடுகள் குறித்த மிக நேர்த்தியான விமர்சனத்தை திரு. ரகுராம் ராஜன் அவர்கள் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

சொல்லப்போனால், இது ஒரு அடிப்படையான ஆலோசனை  தான். இதற்கு  அவரைப்போன்ற புகழ்பெற்ற பொருளாதார நிபுணரின் அனுபவமும், அறிவும் தேவையில்லைதான். ஆனால், அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை (கடந்த ஆண்டு நிகழ்வுகளை காணும்போது, அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகிய இரு அமைப்புகளுக்கிடையில் இருந்த வேறுபாடுகள் முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டிருக்கிறது) முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத நிலையை கருத்தில் கொண்டால், அவருடைய கருத்துகள் ஒரு ஞானியின் கருத்தைபோல் தோற்றமளிக்கிறது. புதிய பணத்தாள்கள் அச்சிடப்படவில்லை என்பது மட்டுமல்ல, நம்மிடம் உள்ள அச்சகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் குறிப்பிட்ட 50 அல்லது 100 நாட்களுக்குள்ளாக அவற்றை அச்சடிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.

நிலைமை மேலும் மோசமாகும் விதத்தில், அச்சடிப்பதற்கு தேவையான பொருட்கள் (பேப்பர் மற்றும் மை) கையிருப்பு இல்லை, ஆர்டர் செய்யப்படவும் இல்லை என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணமான முதல் நிலை குறைபாடுகளை இந்நேரம் அனைவரும் அறிந்திருப்பார்கள். நாட்டில் 1.4 இலட்சத்துக்கும் குறைந்த ஏ.டி.எம் கிளைகள் மற்றும் இரண்டு இலட்சம் ஏ.டி.எம்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் ஏ.டி.எம்.,களில் புதிய பணத்தாள்களை வைப்பதற்கு ஏற்றாற்போல் அதனை மாற்றியமைக்காமல், புதிய பணத்தாள்களின் அளவுகளை மாற்றியமைத்தது ஒட்டுமொத்த வங்கி அமைப்புகளின் பண விநியோகத்திறனை பாதித்தது.

மேலும், பணப் பரிமாற்றத் தன்மைக்கு ஏதுவாக 2000 ரூபாய் உயர் மதிப்பு பணத்தாள்களை குறைந்த கால அளவுக்குள் அச்சடித்துவிடலாம் (நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்படும் வரை புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கப்படவில்லை) என்ற எதிர்பார்ப்பும் தோல்வியடைந்தது. குறைந்த மதிப்பு பணம் போதிய அளவு இல்லாததாலும், விநியோகிகம் செய்யப்படாததாலும் (புழக்கத்தில் உள்ள மொத்தப் பணத்தில் 86% பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது), காய்கறி வாங்குதல், மளிகைப் பொருட்கள் வாங்குதல், அத்தியாவசிய மருந்துகள் வாங்குதல், சிறிய மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு கட்டணம் அளித்தல் போன்ற சிறிய பறிமாற்றங்களுக்கு இந்த உயர் மதிப்பு பணத்தை உபயோகிக்க மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் பல குறைபாடுகள் கவனம்பெறாமல் போயின. உதாரணமாக இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளில் செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி முடிக்கையில், ஏறக்குறைய புழக்கத்தில் இருந்த பணத்தில் 100% பணமும் திரும்பி வந்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத அறிக்கையில் கிட்டத்தட்ட 16,000 கோடி ரூபாய் தவிர மற்ற பணம் அனைத்தும் (அதாவது புழக்கத்தில் இருந்த 15.44 லட்சம் கோடி ரூபாயில் 15.28 லட்சம் கோடி ரூபாய்) திரும்ப வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில், மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணம் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எது எப்படியிருந்தாலும், இதுபோன்று விளக்கம் அளிக்கமுடியாத நிலை  ஏற்படக்கூடும் என்றே, டிசம்பர் 8ம் தேதிக்கு பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட பணம் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதை ரிசர்வ் வங்கி எந்தவித அறிவிப்பும் இன்றி, திடீரென்று நிறுத்திக் கொண்டது என்று நீண்ட காலமாக ஒரு வதந்தி உலவுகிறது. 100%க்கும் மேலாக பணம் திரும்பி வந்துள்ளது என்பது உண்மையெனில் (அதில் பெரும்பாலும் கள்ளப்பணம் என்பது ஏற்றுகொள்ள முடியாத விளக்கம்), வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய பணத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு ‘ஒருமுறைக்கு மேல்’ செலுத்தப்பட்டது என்றே எண்ண வேண்டியிருக்கிறது. அது உண்மையெனில், ரிசர்வ் வங்கியில் எண்ணுவதற்காகவும், அழிப்பதற்காகவும் “ரிவர்ஸ் சப்ளை சங்கிலி”க்காக செலுத்தப்பட்ட பணம் “கசிந்திருக்கிறது” என்பதே விளக்கமாக இருக்கும். இந்தியாவில் சிறந்த வடிவமைப்பு மற்றும் நிர்வாகத்துடன் கூடிய சப்ளை திட்டங்களிலேயே “கசிவு-அபாயம் (Leak-risk)” உள்ளது. எனவே, இந்த “ரிவர்ஸ் சப்ளை”யின் முடிவில் கசிவு ஏற்பட்டுள்ளது நம்பத்தகுந்தது மட்டுமல்ல, எதிர்பாராத இவ்வளவு பெரிய பண மேலாண்மை முறையில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதே உண்மை.

இதுபோன்ற தவறுகளை குறைப்பதற்கான வழி, திரும்பப் பெறப்பட்ட பணத்தாள்களின் மீது “ரத்து செய்யப்பட்டது” என்ற அழியாத மையினால் முத்திரை குத்துவது போல், ஏதாவது ஒரு ஏற்பாட்டினை செய்திருக்க வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், (முத்திரைகள் மற்றும் மையினை பெற சிரமமாக இருந்தால்), வங்கிகளில் பணத்தை பெறுபவர்கள், கவுண்ட்டர்களில் பெறப்படும் பணத்தில் குறிப்பிட்ட இடத்திலோ அல்லது குறிப்பிட்ட முறையிலோ காகிதத்தை துளையிடும் கருவியை கொண்டு துளையிட ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கலாம். 50 நாட்களில் பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்கு பதிலாக, இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதை, முதல் வரிசை குறைபாட்டு பட்டியலில்தான் சேர்க்க வேண்டும்.

இந்த அமைப்பில் உள்ள குறைபாடுகளையெல்லாம் கடந்து, இந்த திட்டம் எதார்த்தத்துக்கு தொடர்பில்லாதது என்ற வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டு வந்த மூத்த அதிகாரிகளையும் எப்படி பாதித்தது என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது – அப்போதைய வருவாய்த் துறை செயலாளர் ஒரு நாள் காலை, பணத்தை வங்கிகளில் செலுத்துவோரின் விரல்களில் அழியாத மையினால் அடையாளமிடப்படும் என்றும், அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர், எவ்வளவு பணத்தை வங்கிகளில் செலுத்தலாம், எவ்வளவு பணத்தை பரிமாற்றம் செய்யலாம் உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் பலமுறை மாற்றப்பட்டது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதேசமயம், புதிய ரூபாய் நோட்டுகளை விரைவாக அச்சடிக்கவோ அல்லது அவற்றை வங்கி கிளைகளுக்கு வழங்கவோ முடியாத நிலை, வங்கிகளில் செலுத்தப்பட்ட பணம் எந்தவித கசிவும் இல்லாமல் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய முடியாத நிலை ஆகியவற்றால் இந்த நிர்வாகச் சுமை அதிகரித்ததையும் நினைவில் கொள்க.

நிலைமை இவ்வாறாக இருக்க, அறிவிப்பு வெளியான குறுகிய நாட்களுக்குள் தேவையான மையை கொள்முதல் செய்தல், அவற்றை விநியோகித்தல், 1.4 லட்சம் வங்கி கிளைகளில் உள்ள ஊழியர்களுக்கு அதற்கான பயிற்சியளித்தல் (இதற்கு முன் அவர்கள் இந்த பணியை செய்ததில்லை), அந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணித்தல் ஆகியவற்றை செய்து முடிப்பதில் உள்ள சிக்கல்களை  நன்கு கற்றுணர்ந்த மூத்த அதிகாரி, எந்த எண்ணத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்? மேலும், இந்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்பதை காட்டிலும், சென்னையில் அந்த வாரம் முதல் பனிப்பொழிவு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிர்பார்த்தபடியே, அந்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட்டு, ‘கவுண்ட்டர்-எக்ஸ்சேஞ்சுக்கு’ முழு தடை விதிக்கப்பட்டது.

மற்ற எதிர்மறை பாதிப்புகள்

இப்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை எதிர்மறை பாதிப்புகளை காண்போம். ஏற்கனவே வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன்களின் காரணமாக கடுமையான வருமான மற்றும் முதலீட்டு அழுத்தத்தில் இருக்கும் இந்திய வங்கிகளுக்கு, பழைய பணத்தாள்கள் வங்கிகளுக்கு வந்த வேகத்தில், புதிய பணத்தாள்களை விநியோகம் செய்யாததால், வட்டி கொடுக்க வேண்டிய வைப்புத் தொகைகளை நிறுத்தி வைத்ததால் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு 1 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தொகைக்கும், வங்கிகளின் அப்போதைய வருடாந்திர வட்டி விகிதமான 4%-த்தின்படி, நாளொன்றுக்கு சுமார் 11 கோடி ரூபாயை கூடுதல் வட்டியாக வழங்க வேண்டிய நிலை இருந்தது. டிசம்பர் மாத முற்பகுதியில், அப்போது நாளொன்றுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய சுமார் 50 கோடி ரூபாய் கூடுதல் வட்டிக்கு ஈடுசெய்ய வங்கிகள் அரசிடம் ரூபாய் 6 லட்சம் கோடி வரைக்குமான கூடுதல் பத்திரங்களை (சந்தை உறுதிப்படுத்துதல் திட்டத்தின்கீழ்) கேட்டதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இறுதியாக, அழுகக்கூடிய பண்டங்களின் (உதாரணத்துக்கு தக்காளி) தேவை-வழங்கல் சமநிலையில் ஏற்பட்ட, இன்றும் தொடர்கிற இடர்பாடுகள் குறித்து காண்போம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஏற்பட்ட, தக்காளி உற்பத்தியில் ஏற்படும் சுழற்சி தேக்கமானது எதிர்பாராத விதமாக, உயர்-ஊட்டச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் நிரம்பிய உணவு பொருட்களான காய்கறி மற்றும் பழங்களின் தேவையில் வீழ்ச்சி ஏற்பட்ட காரணத்தால் மக்களுடைய வாங்கும் திறன் பாதிக்கப்பட்டு தங்களுடைய உணவில் கலோரி தேவைக்காக சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் நிகழ்ந்தது. இப்படி அதிகரித்த தேவை-வழங்கல் (demand & supply) சமச்சீரின்மையால், சந்தையில் ஒரு கிலோ 30 ரூபாய் என்றளவிற்கு இருந்த தக்காளியின் விலை, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக ஒரு கிலோ 5 ரூபாய் என்ற அளவிற்கு சரிந்தது.

எப்படி இரவுக்கு பின்னர் பகல் வந்தே தீருமோ அதுபோல, இந்த நிலைமை ஒரு அறுவடைப்பருவ சுழற்சியில் (2017 மார்ச் வாக்கில்), பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 அல்லது அதற்கும் அதிகம் என்ற அளவுக்கு தலைகீழாக மாறியது. ஏனெனெறால், இம்முறை, வழக்கத்துக்கு மாறாக குறைந்தளவுக்கே தக்காளி பயிரிடப்பட்டது (கடந்த முறை பயிரிட்டதில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையில் இருந்து பல ஏழை விவசாயிகளால் மீள முடியவில்லை), இந்நிலையில் அதிகரித்த பணப்புழக்கத்துக்கு (மூன்று மாத காலத்தில் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட பணம்) நேர் விகிதத்தில் தேவையும் அதிகரித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திட்டமிட்டவர்கள் இத்தகைய விளைவுகளை எண்ணியிருக்க மாட்டார்கள் என்றே யூகிக்கிறேன்.

சேகர் ரெட்டி வழக்கு

இதையெல்லாம்விட, இருக்கும் இக்கட்டான சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் விதமாக, உயர் நிலை விளைவுகள் என்று கூறப்படும் இறுதி பாதிப்புகள் உள்ளன. டிசம்பர் 2016ம் ஆண்டு, மணல் கொள்ளையில் தொடர்புடைய சேகர் ரெட்டி என்ற தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்த சிபிஐ, ரூ.170 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக கைது செய்தது. இதில் சுமார் 34 கோடி ரூபாய் பணம், புதிதாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள். நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம் கிடைக்காமல் தவித்துவந்த நிலையில், ஒரே இடத்தில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டதில் இயல்பாகவே பல கேள்விகள் எழுகின்றன. இதனைத் தொடர்ந்து, சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

’தி இந்து’ நாளிதழில் சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில், இந்த வழக்கில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2016ம் ஆண்டின் நவம்பர் 8ம் தேதி மற்றும் டிசம்பர் இரண்டாம் வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரிசர்வ் வங்கி எக்கச்சகமான பணத்தை கையாள வேண்டியிருந்ததால், எந்தெந்த வங்கிக்கு எந்தெந்த வரிசை எண் கொண்ட பணத்தாள்களை அனுப்பினோம் என்ற தகவலை அவர்கள் சேமிக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், இந்த கணக்கில் வராத பணத்தை சேகர் ரெட்டி எந்த வங்கியில் இருந்து பெற்றார் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிய ரிசர்வ் வங்கியால் உதவ முடியவில்லை. அதாவது, கறுப்புப் பணம் என்ற துயரத்தில் மக்கள் சிக்கியிருக்கும்போது, கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறிவிட்டு, எளிதில் புதிய கறுப்புப் பணமாக பதுக்கக்கூடிய 2000 ரூபாய் தாள்களை, கண்பிடிக்க முடியாத நபர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக ரிசர்வ் வங்கி விநியோகித்துள்ளது.

“கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதவர்கள், அதே தவறை மீண்டும் செய்வார்கள்”, என்பது கவிஞரும், தத்துவ அறிஞருமான ஜார்ஜ் சண்ட்டயானா (George Santanyana) அவர்களுடைய புகழ்பெற்ற வாசகமாகும். பேரழிவுக்கு காரணமான பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்த மோசமான வரலாற்றை (அண்டை நாடான பர்மாவில் நடைபெற்றது) நமது மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அறியாமலோ அல்லது முற்றிலும் மறந்தோ, இதுபோன்ற திட்டத்தை உருவாக்கியதற்கு, இந்த வாசகம் கச்சிதமாக பொருந்தும்.

மேலும் மோசமான விஷயம் என்னவென்றால், சரக்கு மற்றும் சேவை வரியை (GST) நடைமுறைப்படுத்தும் இந்த முக்கிய தருணத்திலும், முழுமையடையாத/பழுதான இந்த நடவடிக்கையை, அதேபோன்று ரகசியமான/வேகமான முறையில் அரசு மீண்டும் செயல்படுத்துகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகளை நினவுப்படுத்தும் விதமாக, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட ஜூலை 1, 2017-லிருந்து 90 நாட்களுக்குள் அதன் வரிவிகிதமும், அதற்கான நடைமுறைகளும் பலமுறை மாற்றம் செய்யப்பட்டது.

இப்படி வரலாற்றை (அதனால் ஏற்படும் பாதிப்புகளை) எளிதில் மறந்துவிடும் பழக்கத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும் எனில், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட இந்த பேரழிவு திட்டத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் பங்கெடுத்த ஒவ்வொருவரின் பங்களிப்பும் என்ன என்பது உள்ளிட்ட இந்த மோசமான அனுபவத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால், இது முதல்நிலை பிரேத-பரிசோதனைக்கான முயற்சிதான். இதுகுறித்து, அரசு வெள்ளை அறிக்கையோ விசாரணை அறிக்கையோ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, அந்த படிப்பினைகள் மூலம் இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது.

ஆனால், இதுபோன்ற ஆய்வுகள் இந்த மத்திய அரசு ஆட்சியில் இருக்கும்வரை சாத்தியமில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சுயபரிசோதனை என்பதையும் கடந்து, இந்த அரசு தான் செய்யும் தவறுகள் எதையுமே ஒற்றுக்கொள்வதுமில்லை பொறுப்பேற்பதுமில்லை அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே ஆட்சி மாற்றம் என்பது நிச்சயம் ஏற்படும். அப்போது, இதுபோன்ற ஆய்வு (பிரேத பரிசோதனை) செய்ய வேண்டும் என்பது அந்த அரசின் தார்மீக கடமையாகும்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட இந்த பொருளாதார கொள்கை பேரழிவிற்கு உள்ளானவர்கள் – மரணித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் – என அனைவருக்காகவும் இதனை மேற்கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

 Articles Year Wise: