Published Date: March 30, 2020
நேற்று நள்ளிரவு மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் தமிழகம் சந்தித்து வரும் இந்த இக்கட்டான COVID-19 பேரிடரை சமாளிக்க அனைத்து கட்சி கூட்டம் தேவை இல்லை என்று கூறியிருக்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான வேண்டுகோள் எனது கட்சித் தலைவர் மற்றும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட அளவில் முதல்வர் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் என்னுடன் பழகி வந்துள்ளார். அதன் அடிப்படையில், நமது அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சில கேள்விகளையும், அதன் மூலமாக இந்த அரசிற்கு நிச்சயமாக உதவி தேவைப்படும் சில முக்கிய இடங்கள் குறித்தும் என் கருத்துக்களை முன்வைக்க முற்படுகிறேன்.
1. தற்போதைய இக்கட்டான இச்சூழல் வெறும் "மருத்துவப் பேரிடர்" மட்டுமா?
சுயசிந்தனை உள்ள எவருக்கும் இது வெறும் மருத்துவ பேரிடம் மட்டுமல்ல என்பது நிச்சயமாக புரியும். உண்மையில் பொருளாதாரப் பேரிடராக மட்டுமல்லாது ஒரு மானுடப் பேரிடர் ஆகும். கோடிக்கணக்கான மக்கள் பொருளாதார சரிவையும் தாண்டி, பசி பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.
இதைப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மாண்புமிகு முதலமைச்சருக்கு தெரிவிக்கப்படும் களநிலவர தகவல்கள் பொருள் அற்றதாக உள்ளதா, அல்லது மற்றவர் படும் துயரத்தை, முக்கியமாக விளிம்பு நிலை மக்களின் நிலையை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மனிதாபிமானம் அற்றவராக முதல்வர் உள்ளாரா?
2. மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை குழுக்கள் எந்த அளவிற்கு செயல்பாட்டுடன் உள்ளன அவர்களுக்கு நிதி எவ்வாறு வழங்கப்படுகிறது?
2015 ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளம் குறித்தான தணிக்கை குழுவின் ஆய்வு முடிவுகள் (இரண்டு ஆண்டுகளாக இந்த அரசாங்கம் மறைத்த) மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை குழு (DMC),டிசம்பர் மாதம் 2015ஆம் ஆண்டிற்கு முன்னராக ஒருமுறைகூட கூடவில்லை என்று தெரிவிக்கிறது. இந்த தவறை திருத்திக் கொண்டார்களா? எனில், எத்தனை பேரிடர் மேலாண்மை குழுக்கள் (மாநில மற்றும் மாவட்ட அளவுகளில்) அமைக்கப்பட்டுள்ளன? எத்தனை முறை அவர்களின் கூட்டம் கூட்டப்பட்டது? பேரிடர் காலத்திற்கான தயார் நிலையை கருத்தில் கொண்டு என்னென்ன செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடந்த தீ விபத்தை அடுத்து "கற்றுக்கொண்ட பாடங்கள்" குறித்த ஆய்வறிக்கையை பேரிடர் மேலாண்மை குழு சிறப்பாக செயல்படும் வண்ணம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டேன். மேலும் பேரிடர் தயார் நிலையை கருத்தில் கொண்டு அதிக நிதி ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டேன். மாநில பட்ஜெட்டில் (~300 Crores)அல்லது மாநில மொத்த உற்பத்தியில் (~200 Crores)ஆயிரத்தில் ஒரு பங்காவது (1/1000) நிதிநிலை அறிக்கையில் பேரிடர் மேலாண்மை துறைக்கென இந்த அரசாங்கம் நிதியை அதிகரித்துள்ளதா?
3. நிலவரத்தின் தீவிர தன்மையை உணர்ந்து இந்த அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வருகிறதா?
இந்தியாவின் முதல் Covid19 நோய் தொற்று அறிவிக்கப்பட்ட நாள் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி. கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் உடனடியாக பேரிடர் மேலாண்மையை கருத்தில் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன. இதன் பொருட்டு உங்கள் அரசாங்கம் முதல் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியது எப்பொழுது? அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றாலும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தங்களுக்கு வழங்கிய அறிவுரைகளை ஏற்று மானிய கோரிக்கைகளுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து உடனடியாக அரசாங்கமும் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த பிரச்சினைக்கான தீர்வுகளை குறித்து ஆலோசித்து இருக்க வேண்டும் அல்லவா.
கடந்த நான்காண்டுகளாக மே 29ம் தேதிக்கு முன்னதாக மானியக் கோரிக்கைகளுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தாத அரசிற்கு ஏன் இந்த ஆண்டு மட்டும் முதலில் மார்ச் 31ஆம் தேதி, அதன் பின்னர் மார்ச் 24-ம் தேதிக்குள் முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது? பெரும்பாலான உயர்நிலை IAS அதிகாரிகள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதன் காரணமாக இந்த பேரிடருக்கான தயார்நிலை செயல்பாடுகளில் கவனம் செலுத்த இயலாமல் போனது. அரசின் மந்திரி சபையும், IAS அதிகாரிகளும் இச்சூழலை கருத்தில் கொண்டு மும்முரமாக செயல்பட்டிருக்க வேண்டுமல்லவா? அதைவிடுத்து, ஆலோசனைக்குழு கூட்டங்களில் (மார்ச்சு மாதம் 21 மற்றும் 22 ஆம் நாட்கள்) சட்டமன்ற கூட்டத்தொடரை துரிதப்படுத்த முனைப்பு காட்டி (மாண்புமிகு எதிர்கட்சி தலைவரின் அறிவுரைகளை கருத்தில் கொள்ளாமல்) பேரவை செயல்பாடுகளை மேலும் தீவிரமாக்கி (2 அமர்வுகள்) - சட்டமன்றத்திற்குள் தொற்று பரவும் அபாயத்தை அதிகப்படுத்தவும் காரணமாக இருந்தீர்கள் அல்லவா?
அதன்பின்னர் 27 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை (அதாவது தமிழகத்தின் மொத்தம் உள்ள 54 துறைகளில் பாதியை) ஒரே நாளில் அதாவது மார்ச் 24 ஆம் தேதி அன்று - அனைத்து எதிர்க்கட்சிகளும் சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணித்த பின்னரும் ஒரே நாளில் செயல்படுத்தியது ஏன்? மானிய கோரிக்கைகளை நிறைவேற்றியது ஏன்? இது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல்பாடு அல்லவா?
ஒட்டுமொத்த உலகமும் மக்கள் நலன் கருதி, பேரிடர் மேலாண்மையை கருத்தில்கொண்டு நிதியை ஒதுக்கி வந்த காலகட்டத்தில் இந்த மானியக் கோரிக்கைகளுக்கான தேவை நாம் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் மானுட பேரிடர்களை கருத்தில் கொண்டால் எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் போகும் என்பதை நீங்கள் உணரவில்லையா? அதன் பொருட்டு உங்கள் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு விரோதமானது மட்டுமல்ல எவ்வித பலனை அளிக்கக் கூடியவை ஆனதாகவும் இல்லை என்பதும் உங்களக்கு புரியாமல் போனதா?
4. ஊரடங்கு ஏன் இத்தனை காலம் தள்ளிவைக்கப்பட்டது, அதை ஏன் 24மணி நேரத்திற்குள்ளாக அவசரமாக செயல்படுத்தப் பட்டது?
பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் முதலானவற்றை மார்ச் 17ம் தேதியே மூடிவைக்க உத்தரவிட்ட நீங்கள், மார்ச் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்காதது ஏன்? ஏன் 24 மணி நேரங்கள் அவகாசம் மட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டது? சட்டப்பேரவையை 24ஆம் தேதி மாலை வரை நடத்துவேன் என்ற நீங்கள் எடுத்த முடிவின் காரணமாக மட்டுமா?
தினக்கூலிகள், வேற்று மாநிலத்தில் இருந்து இங்கு வேலை செய்ய வந்த உழைப்பாளிகள், தற்காலிக பணியாளர்கள், மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிபவர்கள் என எவருக்குமே அவரவர் இல்லங்களுக்கு ஊரடங்கு முன்பாக சென்றடையும் அவகாசத்தை, அவர்களுக்குத் தேவையான பயண ஏற்பாடுகள், உணவு மற்றும் இதர செலவுகளுக்கான பணம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், நீங்கள் செயல்பட்டது ஏன்?
அரசாங்க நிறுவனங்கள், சில பொது தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொள்கை ஆலோசனைக் குழுக்கள் ஆகியவற்றிடம் புலம்பெயர் தொழிலாளிகள் எங்கிருந்து வருகிறார்கள், எந்தெந்த காலங்களில் வருகிறார்கள் என்பன குறித்த முழுமையான தகவல்கள் உள்ளதாக தெரிகிறது. இந்தத் தகவல்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? அப்படியெனில் ஊரடங்கு குறித்தான திட்டமிடுதலில் இந்த தகவல்கள் உணவுத் தேவை மற்றும் அவர்கள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்லுதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தகவல்கள் உபயோகப்படுத்தப்பட்டனவா?
இவை அனைத்தையும் கடந்து, ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடிய கூட்டத்தின் காட்சிகளை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பொங்கல் மற்றும் தீபாவளி காலங்களில் செயல்படுத்தப்படும் கூடுதல் பேருந்துகள் மற்றும் வழித்தடங்கள் செயல்படுத்தப்பட்டனவா? அவ்வாறு இல்லை எனில் ஏன் செயல்படுத்தப்படவில்லை?
5. நம் மருத்துவ பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் PPE என சொல்லப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏன் நம்மிடம் குறைந்த அளவில் உள்ளன, ஏன் நாம் போதுமான அளவிற்கு பரிசோதனைகளை செய்ய வில்லை?
மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் பலமுறை சட்டப்பேரவையில் அனைத்து மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் எல்லா மருத்துவமனைகளிலும் தேவையான அளவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் (கையுறைகள்,முககவசங்கள்) உள்ளதாக மீண்டும் மீண்டும் உறுதி அளித்தார். ஆனால் களத்தில் இருந்து வரும் செய்திகள் அவற்றுக்கு நேர்மாறாக உள்ளன. நீங்கள் வெளியிட்ட தரவுகளில் இருந்து உபகரணங்கள் புதிதாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்பதும் அவை இன்னும் கைக்கு வரவில்லை என்றும் புரிகிறது.. கையிலுள்ள உபகரணங்களைப் போல பத்து மடங்கு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இது உண்மை எனில் தேவைக்கு 10 சதவீதம் குறைவாக உபகரணங்களை வைத்திருப்பது எவ்வாறு தயார் நிலையில் உள்ளோம் என்ற கருத்தை பிரதிபலிக்கிறது?
உபயம் - மார்ச்சு மாதம் 26ம் தேதி நடைபெற்ற மாண்புமிகு முதல்வரின் ஆய்வு கூட்டம்
நோய் தொற்று ஏற்பட்ட பின்னரும் காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் தென்பட பல நாட்கள் ஆகும் என்று நீங்கள் கூறிய (முதல் ஆறிக்கையின் படி 7 நாட்கள் ஊரடங்கின் போது) தகவலின் அடிப்படையில் தெரிகிறது. அப்படியெனில், ஏன் பேரவையில் செய்யப்பட்டதை போல "Temperature Screening" விமான நிலையங்கள் மற்றும் இதர இடங்களில் அரசு செய்யவில்லை. ஒவ்வொரு தனிநபராக அவர்களின் பயண விவரங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்தும், எதிர்கால பயண திட்டங்கள் குறித்தும் (மந்திரிசபை செயலாளரின் அறிக்கையின் படி 15 லட்சம் பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்படவில்லை) ஏன் விவரங்களை கேட்டறியவில்லை.
நம் ஏன் குறைந்த அளவிலான பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். நம் மக்கள்தொகையில்பாத்து லட்சம் நபர்களில் 25 பேரை மட்டுமே பர்சொதனை செய்து வருகிறோம். கேரளா மாநிலத்தில் 140 பேரை பரிசோதிக்கிறார்கள். நம்மிடம் போதிய பாரிசோதனை கருவிகள் இல்லையா? இல்லையெனில், புதிய விற்பனையாளர்களை கண்டறியாதது ஏன்? சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து நாம் வாங்கும் முன் மகாராஷ்டிர மாநிலம் வாங்கியது எப்படி?
6. ஊரடங்கு எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது? அதை மேலும் திறனாக செயல்படுத்த முடியுமா?
ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது மிகவும் காலம் கடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் விளைவாக அனைத்து செயல்பாடுகளும் மிகவும் பொருத்தமற்றதாக (அரசாங்கத்தின் திட்டமிடுதல் இல்லாமைக்கு ஏற்றவாறு) இருந்தது. ஆனால் அரசாங்கம் தொடர்ந்து விளக்கங்கள், மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் மூலமாகவும் ஊரடங்கு செயல்பாடுகளை தினமும் மாற்றிக்கொண்டே (முதலில் சூடு, பின்னால் குறி வைத்துக் கொள்ளலாம் என்ற அளவில் செயல்பட்டு) வருகிறது. தற்போதாவது நிலைமையை சீராக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதை நான் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். ஆனால், எடுக்கப்படும் முடிவுகள் தற்போதும் தற்காலிகமான முடிவுகளாகவும், நிலைத்தன்மை அற்றதாகவும் காட்சியாளிக்கின்றன. அதன் விளைவாக, விநியோக சங்கிலியின் பல தளங்களில் பலவிதமாக நடத்தப்பட்டு எண்ணற்ற பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். விவசாயம் மற்றும் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், அழியக்கூடிய உணவு வகைகள் ஆகியவை சார்ந்த விநியோக சங்கிலி எந்த தடையுமின்றி செயல்படும் வண்ணம் இல்லாதது ஏன்?
தொடர்ந்து மக்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். சட்டங்கள், விதிமுறைகள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாற்றப்படுகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். போதுமான அளவில் தகவல் தொடர்பு இல்லை என்பது தெளிவாக புரிகிறது. அதன் விளைவாக அனைவருக்கும் என்ன விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது என்பது (காலத்திற்கு ஏற்ப நீங்கள் மாற்றிக் கொண்டே இருப்பதால்) சரிவர புரிய போவதில்லை. இது கிராமப்புறங்கள், விவசாய தொழிலை நம்பியிருக்கும் பகுதிகள் ஆகியவற்றில் மேலும் தீவிரமடைகிறது. நகர்ப்புறங்களில் மொத்த மற்றும் சில்லரை வியாபார போக்குவரத்து மற்றும் வழங்குதல் ஆகிய நிலைகளிலும் இதை காண முடிகிறது. தேவையான முன்னேற்பாடுகளை கண்டறிந்து அதைத் தொடர்ந்து கண்காணித்து இந்த குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்ய தங்களால் ஏன் முடியவில்லை? அதை செய்தால், இந்த சட்டத்தை முறையாக செயல்படுத்தும் காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உங்கள் எண்ணம் என்ன என்பது தெளிவாக புரியும் அல்லவா?
இதை சரி செய்யும் வகையில், பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கலாமே,
முறைப்படுத்துதல் - ஒரே நேரம் ஒரு அளவுகோல் என்று ஒவ்வொரு நாளும் வழித்தடங்கள் மற்றும் விதிமுறைகளை ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர்களுக்கு ஏற்றவாறு
அதிகாரிகள் அனைவரும் காணொளி மூலமாக இந்த மாற்றங்களை அறிக்கைகளாக வெளியிட வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு மிகாத வகையில்.
அந்தக் காணொளிகளை வாட்ஸ்அப் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பக்கங்கள் மூலமாக பரப்ப வேண்டும்
அனைத்து தொலைக்காட்சிகளும் உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களும் இதை நாளொன்றுக்கு 4 அல்லது 5 முறை குறிப்பிட்ட நேரங்களில் ஒளிபரப்ப வேண்டும்.
இதன் மூலமாக காவல்துறையினர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் விதிமுறைகள் என்ன என்பது தெளிவாக புரியும். தடுத்து நிறுத்தப்படும் பொதுமக்களும் காவல்துறையினருக்கு எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை அவரவர் மாவட்டத்திற்கு உட்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சொல்லும் காணொளிகளை கொண்டு விளக்க முடியும். இதைவிட சிறப்பாக இல்லை என்றாலும் இவற்றை கூட என் செய்யாமல் இருக்கிறீர்கள்?
7. ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு அளிக்க அரிசி மற்றும் இதர பொருட்கள் தேவையான அளவிற்கு உள்ளதா? உணவுத்தட்டுப்பாடு காரணமாக எவரும் தவிக்காத வண்ணம் செயல்பட்டு வருகிறோமா?
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை நான் பாராட்டுகிறேன். ஆனால் தினக் கூலிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஊரடங்கு விளைவாக பசிக்கொடுமைக்கு ஆளாவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா? மார்ச் மாதம் 17ஆம் தேதி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியதைப் போல அவர்களுக்கு தேவையான சமையல் பொருட்கள் அல்லது சமைத்த உணவினை வழங்கும் பொருட்டு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டனவா?
எத்தனை மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் நம் கைவசம் உள்ளன? இந்த கால கட்டத்தில் உள்ள அதீதமான தேவைகளுக்கு ஏற்ப உள்ளனவா? உள்ளது என்றால் அது குறித்த விவரங்களை ஏன் வெளியிடக்கூடாது? இல்லை எனும் பட்சத்தில் நிலையை மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதை மக்களிடம் ஏன் தெரிவிக்கக் கூடாது?
8. ஊரடங்கு பயன்கள் மற்றும் செலவுகலுக்கு இடையேயான தொடர்பு குறித்து எந்த அளவிற்கு நாம் விவரங்களை, அமைப்பு மாதிரிகளை சேகரித்து வருகிறோம்?
இந்த ஊரடங்கு காரணமாக நாம் சந்திக்கப்போகும் பொருளாதார மற்றும் மானுட எதிர்விளைவுகள் மிகவும் தீவிரமானவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஊரடங்கு உண்மையில் தேவை என்று நாம் அனைவரும் நினைத்து, வேண்டிக் கொள்கிறோம். ஏனெனில், நோய் தொற்று பரவாமல் இருக்க இது தேவை என்று விரும்புகிறோம். ஆனால் இந்த கூற்றை சரிவர புரிந்து கொள்ள தேவையான அளவிற்கு நம்மிடம் உள்ள தகவல் போதுமானதாக இல்லை, அல்லது மிகவும் குறைந்த தரத்தில் உள்ளது. தேவையான தகவல்களைத் திரட்ட அல்லது அவற்றை ஆய்வு செய்ய நீங்கள் மேற்கொண்டுள்ள வழிகள் என்ன? இயல்பான காலகட்டங்களில் நோய்க் கூறுகளைக் கண்டறிய நிபுணர்கள் எத்தனை நிபுணர்கள் அரசாங்கத்தின் வசம் உள்ளனர்? இதுபோன்ற அசாதாரண சூழலில் முழு நேர அல்லது ஆலோசனை வழங்க நிபுணர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனரா?
முப்பது வருடங்களுக்கும் முந்தைய என் அமைப்பு மாதிரி அறிவைப் பொருத்தவரையிலும், சில கூறுகளை கொண்டும் நாம் மேலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்கு தெளிவாக புரிகிறது. அரசாங்கத்திற்கு இதுபோன்ற சூழல்களில் உதவி செய்ய சிறப்பு நிபுணர்கள் உள்ளனர். அவர்களை தயவுசெய்து பணிக்கு அமர்த்தி, அவர்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுங்கள்.
9. ஏற்கனவே உள்ள தீவிரமான பொருளாதார தடைகளையும், அது ஏற்படுத்தப்போகும் உடனடி மற்றும் நீண்ட கால விளைவுகளையும் எவ்வாறு அரசாங்கம் சந்திக்கப் போகிறது? அதற்கான திட்டங்கள் என்ன?
இந்த ஊரடங்கின் காரணமாக நாம் சந்திக்கபோகும் உடனடி மற்றும் நீண்ட கால பொருளாதார விளைவுகள், உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பணமதிப்பிழப்பு காரணமாக சந்தித்த பொருளாதார நெருக்கடியை விடவும் மோசமாக இருக்கும். அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் மிகப்பெரிய அளவிலான உதவித்தொகை திட்டங்களை அறிவித்துள்ளன. அமெரிக்க அரசு $2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளது, இது ஏறக்குறைய அதன் உள்நாட்டு உற்பத்தியில் 10%. அதே போல சிங்கப்பூர் (பள்ளிகளை கூட மூடவில்லை) முழுமையான துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 0.8% மாக உள்ளது. அண்டை மாநிலமான கேரளா இருபதாயிரம் கோடிகளுக்கு மேல் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் ஒட்டுமொத்த உற்பத்தியில் இது 1.9% ஆகும். இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் (சில ஆயிரம் கோடிகளை அறிவித்தது) கேரளாவை விட இருமடங்கு பெரிய மாநிலமான தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளது நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 0.2% ஆகும்.
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின் போது நான் சட்டப்பேரவையில் முன்வைத்ததைப் போல நாம் ஜனவரி மாதமே மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தோம். 2008 ஆம் ஆண்டு, 2016 ஆம் ஆண்டு இருந்ததைவிட நாம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே, இந்த இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே, மோசமான நிலையில் தான் இருந்தோம். அரசுக்கு மிகப்பெரிய சிக்கல்கள், மிகக் குறுகலான அளவிலான வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனாலும் நீங்கள் செயல்பட்டாக வேண்டும்.
இந்த சிக்கல்களைத் தவிர்க்கவும் சமாளிக்கவும் நீங்கள் என்னென்ன முடிவுகள் எடுத்துள்ளீர்கள்? தங்களுக்கு இதிலிருந்து மீண்டு வர உதவி செய்யப்போகும் நிபுணர்கள் யார்?
10. உண்மையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிலவரத்தை கட்டுக்குள் வைத்திருப்பதாக உணர்கிறாரா? அரசாங்கம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படுவதாக எண்ணுகிறாரா? அடுத்தவர்களின் ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப்படாத அளவிற்கு செயல்படுவதாக உறுதியாக நம்புகிறாரா?
திறன் மிக்க தலைவர்கள் எப்பொழுதுமே நிபுணர்கள் மற்றும் பரந்துவிரிந்த வேற்றுமைகளைக் கொண்ட தனி நபர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று அதன் மூலம் செயல்படுவார்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து, உலகின் மிகப்பெரிய ஆலோசனைக் குழுக்கள் மற்றும் சர்வதேச வங்கிகள் போன்றவை வேற்றுமைகளைக் கொண்ட கருத்துக்களை உள்வாங்கி அதன்மூலம் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுக்களை உருவாக்குவார்கள். அரசியலைப் பொருத்தவரை, பல தலைவர்கள் இருந்தாலும், காலத்தால் வெல்ல முடியாத திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு கலைஞர் அவர்கள் அந்த விஷயத்தில் முன்னோடியாக திகழ்ந்தார். கடினமான சவால் நிறைந்த முடிவுகளை எடுக்கும் முன்னர் பல படிநிலைகளில் உள்ள பலரின் கருத்துக்களை கேட்டறிந்து, அவர் எடுக்கும் முடிவுகளுக்கு உண்டான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் எவராலும் கணிக்க முடியாத அளவிற்கான பல தளங்களிலிருந்து கேட்டு அறியப்பட்டது
முடிவாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல மக்களிடமிருந்து கருத்துக்களை திறந்த மனதுடன் கேட்டறிந்து செயல்பட வேண்டும் என்றும், அதற்கு முதற்கட்டமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி செயல்பட வேண்டும் என்று தாழ்மையுடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். நாம் சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் நாம் மிகச்சிறந்த மனிதர்களாக செயல்படும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர அரசியல் காரணங்களுக்காக நம் செயல்பாடுகள் இருக்கக் கூடாது. பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் பெறப்படும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கொண்டு தேவையான திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்தி மேலாண்மை செய்தால் நம் வாழ்நாளில் இதுவரையில் நாம் சந்திக்காத இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட்டு தமிழகமும், தமிழக மக்களும் பயனடைவார்கள்.