24 மாத செயல்பாட்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

/

24 மாத செயல்பாட்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Dec 2022 - May 2023

”ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி” என்ற முழக்கத்துடன் சிறப்புடன் நிறைவு பெற்றிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகள் தமிழ்நாட்டு மள்ளிடையே பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் உருவாக்கி வருகிற இந்த சூழலில் எனது 24 மாத செயல்பாட்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

நிதி மேலாண்மை, கல்வி, மருத்துவம், தொழில், உள்ளாட்சி, சமூக நலம், பொதுப்பணி, வேளாண்மை என அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்கள் பலனடைந்து வருகிறார்கள். நிதித்துறை சார்ந்து முற்போக்கான பல நடவடிக்கைகள், புதிய மாற்றங்கள் மற்றும் திட்டங்களுக்கு முழு ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டாண்டுகளில் மதுரை நகருக்கு பல வளர்ச்சி திட்டங்களுக்கான முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கான சட்டபூர்வமான அரசு ஆணைகள்  வெளியிடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு மதுரை மாநகர் புதிய மலர்ச்சி ஏற்படும்.

 

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக எனது பணிகள்

சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்படுத்திய  திட்டப் பணிகள்.

நமது மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பல அடிப்படை வசதி மேம்பாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். மக்களுக்குத் தேவையான சாலை, தண்ணீர், கழிப்பறை, பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாயவிலைக் கடை கட்டிடங்கள் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.

கடந்த டிசம்பர் 2022 – மே 2023 வரையிலான காலக்கட்டத்தில் முடித்து திறந்து வைத்த திட்டப்பணிகள்.

  1. வார்டு 50 பேட்சியம்மன்  படித்துறை பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை  அமைத்து தந்துள்ளேன்.
  2. வார்டு 56 வெள்ளிவீதியார் பள்ளியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கழிப்பறை கட்டிடத்தை அமைத்து தந்துள்ளேன்.
  3. வெள்ளிவீதியார் பள்ளி வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை  அமைத்து தந்துள்ளேன்.
  4. வார்டு 76 - மேலவாசல் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடையை அமைத்து தந்துள்ளேன்.
  5. வார்டு 76 – திடேர்நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடையை அமைத்து தந்துள்ளேன்.
  6. வார்டு 22 திருவிக மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொதுக்கழிப்பறை கழிப்பறை கட்டிடத்தை அமைத்து தந்துள்ளேன்.
  7. வார்டு 58 பூங்காநகரில் ரூ. 28 லட்சம் மதிப்பீடில் புதிய சமுதாயக் கூடத்தை கட்டித் தந்துள்ளேன்.
  8. வார்டு 57 ஆரப்பாளையம் DD சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில்  புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தை அமைத்து தந்துள்ளேன்.

இது தவிர நகர உட்கட்டமைப்பு மேம்படவும், மதுரை மாநகரின் போக்குவரத்தை சீர் செய்யு வகையிலும். தேவையான இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளைத் என் முயற்சியால் தொடங்கி வைத்துள்ளேன். அவற்றுள்...

  1. செல்லூர் இணைப்பு பாலம்.
  2. வெங்கடாசலபுரம்-டிவிஎஸ் நகர் இணைப்பு பாலம்.
  3. வைகை ஆற்றோரச் சாலை விஸ்தரிப்பு..

உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்…

  1. கோரிப்பாளையம் ஆற்றுப் பாலம்.
  2. அண்ணாநகர் மேலமடை சந்திப்பு பாலம்.

உள்ளிட்ட பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

 

நலத்திட்ட உதவிகள்

சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களுக்கு சென்று சேர வேண்டிய அரசு பயன்கள் திட்டமிட்டபடி தகுதியான நபர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதே எனது கொள்கை.  முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மட்டுமன்றி ஏழைப்பெண்களுக்கு, பிறபடுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி உள்ளிட்ட தொழில் உப்கரணங்களை அரசு வழங்கி வருகிறது.  எனது அலுவலகப் பணியாளர்களின் மூலம் தகுதியான நபர்கள் கண்டறியப்பட்டு. அவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வருவாய்த்துறை அலுவலகர்களிடம் சமர்ப்பித்து முறையாக எவ்வித இடையூறுமின்றி பயனாளிகளுக்கு உதவித்தொகை பெற்றுத்தரப்படுகிறது,

 

 

மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே சென்று நலத்திட்டங்கள்:

அரசு அலுவலகங்களை தேடி மக்கள் வருவதைக் காட்டிலும், அரசு இயந்திரம் மக்களைத் தேடி செல்லவேண்டும் என்பதே எனது கருத்தும் கொள்கையுமாகும். எனது அலுவலகத்தை தேடி மக்கள் வருவதை குறைக்கும் வகையில் நான் ஆங்காங்கே மக்களை நான் அணுகுவதற்கும், என்னை மக்கள் அணுகுவதற்கும் ஏற்பாடுகளை செய்துள்ளேன். அதில் ஒன்றுதான் புகார் பெட்டிகள். மேலும் மக்களுக்கு தேவையான அரசு திட்டங்களை அவர்கள் இல்லதுக்கே சென்று வழங்கிட நான் அலுவலகர்களை பணிக்கு அமர்த்தியுள்ளேன்.

அதை வலியுறுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அவர்களுக்கு தேவையான அரசு திட்டங்களை வழங்கினேன். நான் ஆற்றி வரும் பொதுப்பணிகளிலேயே இதை குறிப்பிட்டு சொல்வதில் உள்ளபடியே

தனிப்பட்ட உதவிகள்:

என்னை தேடி உதவி கேட்டு வரும் மக்களுக்கு அவ்வப்போது என்னாளான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை சரியான, தகுதியான நபர்களுக்கு செய்து வருகிறேன். அதுமட்டுமன்றி வறுமையினால் வாழவாதாரம் இழந்த நபர்களை கண்டறிந்து அவர்க்ளுக்கு உதவி வருகிறேன். 

அவற்றில் என் மனதை விட்டு நீங்காத இருவரி மட்டும் இங்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

1. டெய்லர் நாகேஷ்

தனியார் யூடியூப் சேனலில் டெய்லர் நாகேஷ் குறித்து ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளை தைத்து தரும் பணியினை கடந்த 40 வருடங்களாக அவர் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் தனது வாழ்வாதாரத்துக்கு உதவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நாகேஷ் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவர்கள் அவருக்கு வீட்டு மனை வழங்க உத்தரவிட்டார். 

டெய்லர் நாகேஷின் நிலை குறித்து அறிந்து என் வீட்டுக்கு அவரை அழைத்து வந்தேன். தற்காலிமாக அவர்க்கு என்னாளான உதவிகளை செய்தது மறக்க முடியாத நிகழ்வாகும்.

2. இலங்கை தமிழ் மாணவி ரித்யூசா, சரிதா மற்றும் திரிஷா

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 'இலங்கை அகதிகள் முகாம்' என்பதை 'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் மாற்றினார். 'இந்தப் பெயர் மாற்றம் வெறும் பலகை அளவில் மட்டும் நின்றுவிடக்கூடாது' என்றும் கூறினார்.

முதல்வர் சொன்னதை நடைமுறைப்படுத்தும் வகையில் முகாம் தமிழர்களுக்கு பலர் நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரை ஆணையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ரித்யுஷாவின் மேற்படிப்புக்கு நான் உதவியதை நற்செயலாக கருதுகிறேன்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து மாணவி ரித்யுஷா சாதனை புரிந்திருந்தார்.  "படிக்க வசதியில்லை ஆன்லைன் மூலம் கல்வி கற்க உள்ளேன்" என்று கூறிய மாணவிக்கு ஒரு தந்தையாக இருந்து அறிவுரை கூறி அவரது மேற்படிப்புக்கு வழிகாட்டினேன். 

நாம் செய்யும் உதவிகளின் தொடர்ச்சிதான் நம்மை மேலும் மேலும் நற்செயல்கள் செய்ய வழி செய்யும். ரிதுஷாவை தொடர்ந்து படிக்க வசதியில்லாத, பொருளாதார நிலையில் மிகவும் ஏழ்மையான திண்டுக்கல் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மாணவி சரிதா மற்றும் ஆணையூர் முகாமை சேர்ந்த மாணவி திரிஷா இருவரையும் விரும்பிய யாதவர் கல்லூரியிலேயே சேர்த்ததொடு அப்பெண்களின் கல்விச்செல்வையும் ஏற்றுக்கோண்டது மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

 

புதைவட கம்பிகள்

மதுரையில் அருள் மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா ஒவ்வொரு  ஆண்டும் வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது. திருத்தேர் வலம் வரும்  நான்கு மாசி  மற்றும் சித்திரை வீதிகளில் ஏறத்தாழ  9 கிமீ க்கு மேல் உயரழுத்த மின் பாதையும்,  18 கிமீ க்கும் மேல் தாழ் மின் அழுத்த மின்பாதையும் செல்கின்றன. திரளாக கூடுகின்ற பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி ஒவ்வொரு ஆண்டும் இம்மின் கம்பிகளில் மின்துண்டிப்பு செய்து மின்கம்பிகளை இறக்கி திருத்தேர் கடந்த பின் மின் சீரமைப்பு செய்யப்படுகிறது.  மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய இக் கடினமான பணி  நீண்ட  நேர  மின்துண்டிப்புக்கும் காரணமாகிறது. 

இதனை தவிர்ப்பதற்கு இந்த மின்பாதைகளை புதைவடக் கம்பிகளாக கொண்டு செல்ல வேண்டும்  என்று நான் கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறேன்.

கழக அரசு அமைந்து தற்போது இப்பணி செயலாக்கத்திற்கு வந்துள்ளது. நான் தொடங்கி வைத்த இப்பணி ஏறத்தாழ ரூ.11.53கோடி மதிப்பீட்டில் உயரழுத்த மின்பாதை- 9.617கிமீ  தூரமும் தாழ் அழுத்த மின்பாதை- 18.669 கிமீ தூரமும் நடைபெறவுள்ளது. இப்பணி ஒரு வருட காலத்திற்குள் நிறைவு பெற கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மிகுந்த பாதுகாப்பான இம்முறையினால் சித்திரைத் திருவிழாவில் திருத்தேர் வலம் வரும் போது மிக எளிதாக மின்துண்டிப்பு  செய்ய இயலும். இதனால் மின்துண்டிப்பு கால அளவும் வெகுவாக குறையும்‌.தவிர நகரின் அழகை இது  மெருகேற்றும்.

 

மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பள்ளிகள் 4 உள்ளிட்ட மொத்த 5 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை நவீன முறையில் மாற்றியமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தேன். எச்டிஎப்சி வங்கியின் CSR நிதியின் மூலம் இப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை மைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத தொழில்நுட்பத்தை, வாய்ப்புகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிப்பதில் துரிதமாகவும், சிறப்பாகவும் ஹச்,டி,எஃப்.சி வங்கி நிர்வாகத்தினர் செயல்பட்டுள்ளார்கள். அதற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயன்பெற்ற பள்ளிகளின் விவரம்.

  1. ஈவெரா நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
  2. கம்பர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி
  3. திருவிக மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி.
  4. மாசாத்தியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி. 
  5. சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி

 

கட்டணமில்லா இ-சேவை மையம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மக்களைத் தேடி செல்லும் வகையில் பல முற்போக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் அரசு வழங்கும் சான்றிதழ்களை,  அரசு அலுவலகங்களுக்கு சென்று வாங்கும் பொதுமக்களின் அலைச்சலை குறைக்க மக்கள் வாழும் பகுதியிலேயே எளிதாக கிடைக்கும் வண்ணம் ஆங்காங்கே இசேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த 2016-21 காலக்கட்டம் முதல் எனது சட்டமன்ற அலுவலகத்தில் தொகுதிமக்களுக்கு இலவச சேவையை அளித்து வருகிறேன். பொதுமக்கள் பயன்படுத்தும் Portal மூலம் இ-சேவையை தொகுதி மக்களாக உங்களுக்கு வழங்கி வந்தேன். 

கடந்த 2021ஆம் ஆண்டு கழக அரசு பொறுப்பேற்றவுடன் கொரொனா நொய்த்தொற்று காரணமாக கலைவாணர் அரங்கத்தில் முதல் சட்டசபை நிகழ்வுகள் நடந்தது. அப்போது நிதிநிலை அறிக்கையினை காகிதமில்லா நினிலை அறிக்கையாக சமர்ப்பித்தேன். அதற்கான கணிணிகள் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த கணினிகள் 234 சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கும் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தேன். 

அவ்வாறு வழங்கப்பட கணிணிகளை கொண்டு புதிய இ-சேவை உரிமம் பெற்று தற்போது அரசு வழங்கும் இ-சேவைகளை எனது அலுவலகத்தில் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாகவே வழங்கி வருகிறேன்.

முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை பெண்கள் உதவித்தொகை. , மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை. வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் OBC சான்றிதழ், அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை, மற்றும் வருவாய் துறையின் அனைத்து சான்றிதழ்களும் இலவசமாக இங்கு பதியலாம்.

மதுரை மத்திய் தொகுதி மக்கள் எந்த வித கட்டணமும் இல்லாமல் மத்திய தொகுதி பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

 

 

மதுரை மத்திய தொகுதியில் மகளிர் குழு

காலம்காலமாக சமமற்று கிடக்கும் சமூகத்தில் வாய்ப்புகளை அனைவருக்க்கும் சமமாக பெற்றுத்தருவதே சமூக நீதியின் அடித்தளம் என்பதைல் நான் உறுதியாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்விலும், அவர்தம் குடும்ப சூழ்நிலையிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களை பெரு மாற்றங்கள் எற்படுத்தி வருவதை நாம் காண்கிறோம். பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, நிதி த்ற்சார்பு சமூகத்தோடு சேர்ந்து இயங்குவது, சமூக பங்களிப்பு மற்றும் தன்னம்பிக்கையினை பெண்களுக்கு உருவாக்கி தந்ததில் மகளிர் சுய உதவி குழுக்கள் பெரும் பங்கு வகிக்கிறது.

நமது மத்திய தொகுதியில் உள்ள மகளிர் குழுக்களை ஒருங்கிணைத்து, அதன் செயல்பாடுகளை முடுக்கிவிட்டு, அவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறேன்.

வான் - கனவுகள் மெய்ப்படும் – மகளிர் குழுக்களுக்கான சிறப்பு திட்டம்

 

 

உலக மக்கள்தொகையில் சரி பாதியாக பெண்கள் இடம்பிடித்துள்ள நிலையில் அவர்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார உருவாக்கம் குறித்து உலகம் முழுவதும் பரவலாகப் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆயினும்கூட, தொழில் மற்றும் வணிகத்தில் அவர்களின் பங்கு குறைவாகவே உள்ளது. அதிலும் முக்கியமாக தொழில்முனைவோரை விட தொழிலாளர் சக்தியாக கீழ் அடுக்கிலேயே பெண்கள் பெருமளவில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் பண்பாடு, மரபு & சமூக-கலாச்சார சூழல் காரணமாக பெண்கள் வணிக சூழ்நிலையில் ஒப்பீட்டளவில் தாமதமாகவே நுழைந்துள்ளனர்.

இதற்கான தொலைநோக்குத் தீர்வாக, சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்திட அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிட, நமது மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தனது தொகுதியில் முன்னோடியாக ‘வான்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளேன். இத்திட்டமானது சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிரை உள்ளடக்கிய வெகுஜன தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஒரு  சிறந்த முயற்சியாகும். பெண்கள் தாங்களே ஒரு தொழிலைத் தொடங்கவும், தொழிலை வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம்,  சமூகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க உதவவிட முடியும் என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கபட்டுள்ளது.

இந்த திட்டத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள(BPL) சமூகத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தன்னிசையாக இயங்கும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற தொழிலில் அவர்களை ஈடுபட செய்திட ஒரு பாலமாக நாங்கள் செயல்படுகிறோம். இதன் மூலம் அப்பெண்கள், அவர்கள் பகுதியை சேர்ந்த, அதே சமூக-பொருளாதார அடுக்கை சேர்ந்த சக பெண்களுக்கு தங்கள் தொழிலில் வேலை வாய்ப்பினை வழங்கிடுவார்கள். 

இதன் மூலம் மதுரை மத்திய தொகுதியில் மகளிர் சுய உதவிக் குழு ஆக்கபூர்வமாக செயல்படும் வடிவமாக மாற்றம் பெறுவதோடு, இத்தொகுதியில் வாழும் பெண்கள் சமுகம் ஒரு புத்தெழுச்சி பெற்ற சமூகமாக மாற்றம் பெற இத்திட்டம் வழிவகுக்கும்.

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ 2 லட்சம் மற்றும் கனரா வங்கி மூலம் ரூ.2 லட்சம் பெற்றுத் தந்துள்ளோம். இதன்  மூலம் ஒரு பெண் தொழில் முனைவராக ஆன அதே வேளையில் 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பும் குடைத்துள்ளது.

தொடர்ந்து பல முன்னெடுப்புகளுக்கு மகளிர் குழுக்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம். 

 

மகளிர் சுய உதவிக்குழுக்கு மாபெரும் கடனுதவி

தமிழ் பெண்களுக்கு மிகப்பெரும் வெற்றியாக, மதுரையின் நடந்த மாபெரும் நிகழ்வில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 521 கோடி கடன் அளிக்கப்பட்டது. இந்தியன வங்கி சார்பில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் 18 மண்டலங்களுக்கு ரூ.521 கோடி கடனுதவி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் நமது தொகுதியிலுள்ள மகளிர் குழுக்களுக்கு கூடுதல் உதவி பெறும்முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

 

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக செயல்பாடுகள் 

கழக அரசு பொறுப்பேற்றபின் தமிழ்நாட்டின் முதல்வர் மு.கஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலிலும், ஆதரவாலும் நிதித்துறையில் பல முற்போக்கான அணுகுமுறையை கையாண்டு தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். 

திராவிட மாடல் அரசின் கொள்கைகளை எடுத்துக்காட்டும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்ல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையினை சமர்ப்பித்து வருகிறேன். கழக அரசின் 2வது முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் 2023-24-ம் 20 மார்ச் 2023 அன்று தாக்கல் செய்தேன்.. 

திராவிட மாடல் பட்ஜெட் 2023-24இன் குறிப்பிடத்தக்க அம்சங்களை இங்கே உங்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்.

1. குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை:

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கூற்றின்படி  கழ்க தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அவர் அறிவிப்பை ஆணையாக ஏற்று நிதினிலை அறீக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என இனிய செய்தியை அறிவித்தேன். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும். அதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2. மெட்ரோ ரயில்

மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். திருமங்கலம் – மதுரை மாநகர் வழியாக ஒத்தக்கடை வரை வழித்தடம் அமையும். கோவை அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை 2025 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்.

3. புதிய பேருந்துகள்:

1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்.

4. விளையாட்டு மைதானங்கள் & அரங்கங்கள்

சென்னையில் சர்வதேச தரத்திலான புதிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்.  சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு ஒன்று என தமிழகம் முழுவதும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

5. சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

6. சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi வசதி செய்து தரப்படும்.

7. புதிதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.

8. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித் துறைக்கு ரூ.22,562 கோடி நிதி ஒதுக்கீடு.

9. நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.24,476 ஒதுக்கீடு.

10. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.1,509 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11. எழில்மிகு கோவை, மாமதுரை பெயர்களில் இந்த இரு நகரங்களையும் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

12. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

13. மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

14. மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.

15. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.1580 கோடி நிதி ஒதுக்கீடு.

16. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.3513 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

17. குடிமைப்பணி தேர்வுக்காக அரசு போட்டித் தேர்வு மையத்தில் பயில்வோருக்கு நிதி உதவி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு ரூ.7000 வழங்கப்படும். முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

18. உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 

19. தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

20. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ,40 299 கோடி ஒதுக்கீடு. பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பெயரில் பள்ளிகளாஇ மேம்படுத்த திட்டம்.

21. வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும். ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

22. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்.

23. மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

24. சென்னை கிண்டியில் தலைவர் அவர்கள் கலைஞர் பெயரில் இந்த ஆண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும்.

25. தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். 

26. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

27. 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2,783 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு கல்லூரிகளாக மேம்படுத்தப்படும்.

28. தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

29. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க ரூ.38.25 கோடி செலவில் மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.

30. பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

31. பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் ரூ. 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

32. இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.223 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு 3959 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

33. மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.

34. அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

35. 17,902 ரூபாயாக இருந்த சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 18,661 கோடி ரூபாயாக உயர்த்தி, முதல்கட்டமாக 711 தொழிற்சாலைகள் மற்றும் 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்கலை தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

36. ”அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்”  திட்டம்.

 

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக...

அனைவருக்கும் இ-சேவை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு தகவல் தொழில்நுட்பம் & டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சக பொறுப்பை வழங்கியுள்ளார். 

துறை அமைச்சரான வேகத்தில் அனைவருக்கும் இ சேவை திட்டத்தின் கீழ் 11336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு இ சேவை பயனர் குறியீட்டை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கடந்த 200ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை என்ற நிறுவனத்தை தொடங்கினார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் (VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.

இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ- சேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

 

கீழடி

தமிழர்களின் நாகரீக தொட்டிலாக விளங்குகின்ற கீழடி மண்ணில் நடைபெற்று வருகிற மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் போது நான் நேரி சென்று பார்வையிட்டேன். அங்கு கண்டெடுத்த நுட்பமான தொல்பொருட்களை தற்காலிகமாக காட்சிப்படுத்தியிருந்தனர்.

கழக ஆட்சி மலர்ந்ததும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் அருங்காட்சியகம் ஒன்று  இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை அமைத்திட வேண்டும் என ஆணையிட்டார்.

மதுரை மண்ணின் மைந்தன் என்ற வகையில் என் போன்ற பலருக்கும் அது வரலாற்று சிறப்பு மிக்க இனிய செய்தியாக அமைந்தது. அதிலும் நமது முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, நிதி அமைச்சராக அருங்காட்சியகம் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ததை பலரின்பெரு முயற்சியில் உருவான இந்த வரலாற்று நிகழ்வில் எனது சிறு பெருமையாக கருதுகிறேன். 

 

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு

நமது தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன.  தீக்கிரையான  வீரவசந்தராயர் மண்டபம் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் புதிய தூண்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அவ்வப்போது அங்கு நடந்து வரும் பணிகளை நேரி சென்று ஆய்வு செய்து வருகிறேன்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகக் கட்டிடம் – வழக்கறிஞர் சங்கத்தில் எனது தந்தையார் திருவுருவப் படம்

தற்போதுள்ள மாவட்ட நீதிமன்ற அமைந்துள்ள இடம் எனது தந்தையால் தேர்வு செய்யப்பட்டது. இதே நீமன்றத்தில் எனது தந்தையார் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். என் தந்தையாரின் சேவைப்பணியினை பாராட்டி மதுரை வழக்கறிஞர் சங்கத்தில் சமீபத்தில் நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

அதே வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் 7 அடுக்குகளாக கட்டப்படவுள்ள கூடுதல் நீதீமன்ற கட்டடங்களுக்கு நான் நிதி அமைச்சர் பொறுப்பில் உள்ள இந்த சமயத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒப்புதல் அளித்து அதற்கான அடிக்கல் நாட்டியுள்ளார். 

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 

பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காக்கும் மதுரை மண்ணின் அடையாளமாக விளங்குவது ஜல்லிக்கட்டு விளையாட்டு. மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும் கூட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்திப்பெற்றது. அதற்கான அனுமதியை கழ்க அரசு நிரந்தரமாக பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அலங்காநல்லூரில் தற்போது ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியின் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு மாற்று இடத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிகிறது. உலகம் முழுவதும் அறியப்படும் ஜல்லிக்கட்டு இனி உலக தரத்தில் சிறப்புடன் நடக்கும் என்பது மதுரை மக்களுக்கு பெருமைப்படக் கூடிய ஒன்றாகும்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்திட்ட நம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை மக்கள் சார்பில் எனடு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது கலைஞர் நூலகம் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்ததில் நானும் ஒருவன் என்ற வகையிலும், எனது இல்லத்திற்கு மிக அருகில் இந்நூலகம் அமைந்துள்ளது என்பதிலும் பெருமையைடைகிறேன்.

மதுரை இளைஞர்களுக்கான ஒரு மாபெரும் அறிவு பெட்டகமாக அமைந்திட்ட கலைஞர் நூலகத்தை ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

பார்வதி யானைக்கு பிரத்தியேக நீச்சல் குளம்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து அதன் நோய் குணமாக வேண்டி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். திறன் வாய்ந்த கால்நடை மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக, குளித்து மகிழ்ந்து விளையாடும் வகையில், தற்போது யானை பராமரிக்கப்பட்டு வரும் இடத்திற்கு அருகிலேயே 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்னிலையில் குளத்தை திறந்து வைத்து யானை மகிழ்ச்சியில் விளையாடியதை கண்டு மகிழ்ந்தேன்.

மக்கள் குறை தீர்ப்பு

மதுரை மகபூப்பாளையத்தில் எனது மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனது இல்ல வளாகத்தில் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொகுதிக்குட்பட்ட 16 வார்டுகளில் உங்கள் அருகிலேயே 25 புகார் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது. 

மேலும் எனது குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண் 7305519999, வாட்சப், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com,  QR code மூலமாகவும் எந்த நேரமும் புகார்களையும், கோரிக்கைகளையும் நீங்கள் அளிக்கலாம்.

பெறப்படும் புகார்கள் துறை ரீதியாக அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது தொடர் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நன்றி

 

என்னை 2வது முறை தேர்ந்தெடுத்து அனுப்பிய உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். முதலமைச்சர் மு.கஸ்டாலின் எனக்கு உயரிய பொறுப்பான தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் என்ற பொறுப்பை வழங்கினார். அவர் அளித்த பொறுப்புக்கு நேர்மையாகவும் திற்மபடவும் பணியாற்றி நிறைவு செய்துள்ளேன். பல முற்போக்கு வழிமுறைகளை நான் நடைமுறைக்கு கொணடு வருவதற்கு அவர் அளித்த ஆதரவு மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டின் பொருளாதார நிலை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தொடர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து தகவல் தொடர்பு & டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சக பொறுப்பை வழங்கியுள்ளார். பெரும் பொறுப்புகளை நான் ஏற்றுக்கொண்டிருந்தாலும் மதுரை மக்கள் நீங்கள் என்னை நம்பி எனக்களித்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை முதன்மையானதாக கருதி நான் பணியாற்றி வருகிறேன்.

அந்த வகையில் நான் ஏற்றுள்ள பொறுப்புகள், துறைகள் மூலம் பல புதிய திட்டங்கள், நன்மைகள் தொகுதி மக்களுக்குக் கிடைத்திடும் வகையில் செயலாற்றி வருகிறேன்.

தொடர்ந்து உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்குபம் பாத்திரமாகப் பணியாற்றுவேன். நன்றி.

தங்கள் அன்புள்ள 

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.