/

திரு ஜெ அன்பழகன், MLA (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி) திமுக மாவட்ட செயலாளர் (சென்னை மேற்கு மாவட்டம்) அவர்களுக்கு என் அஞ்சலி

Published Date: June 10, 2020

திரு ஜெ அன்பழகன், MLA (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி) திமுக மாவட்ட செயலாளர் (சென்னை மேற்கு மாவட்டம்) அவர்களுக்கு என் அஞ்சலி

தோற்றம்: ஜூன் 10, 1958  மறைவு:  ஜூன் 10, 2020

திரு ஜெ அன்பழகன் அவர்கள் மறைந்த சோகமும், தன்னலமற்ற சேவை காரணமாக தான் அவர்  உயிரிழக்க நேர்ந்தது என்ற திகைப்பும் ஒருசேர என்னை வதைக்கிறது. அவர் இழப்பு ஏற்படுத்தியுள்ள வலியில் வாடும் அவரின் குடும்பத்தாரையும், நண்பர்களையும், அவர் தொகுதி மக்களையும், எங்கள் கழகத்தையும், நம் மாநிலம் மற்றும் சமுதாயத்தையும் எண்ணி துயருற்று இருக்கிறேன். நாம் அனைவருமே இன்று மாபெரும் இழப்பை சந்தித்துள்ளோம்.

திரு ஜெ அன்பழகன் "மிகவும் அசாதாரணமான மனிதர்" என்ற பிம்பம் பொது வெளியில் இருந்தது. அவருடைய தந்தையார் திமுகவின் மிக முக்கிய அங்கமாக விளங்கியவர் என்ற பாரம்பரியமும், திரைப்படங்கள் முதல் கிரிக்கெட் வரை அவரின் பல தரப்பட்ட ஆர்வங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மனதில்பட்டதை தைரியமாக பேசியதும் அவருக்கு பரந்து விரிந்த நற்பெயரை உறுதிசெய்தது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிற்கு வெளியே வாழ்ந்தவன் என்ற வகையில், அவரின் பெருமைகள் குறித்து, முதன்முதலாக 2016ம் ஆண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு அவருடன் நெருங்கிய பரிச்சியம் ஏற்படுவதற்கு முன்பாக எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதையும் மீறி, அவரை நான் தெரிந்துகொண்ட கடந்த நான்கு ஆண்டுகள் எனும் குறைந்த கால அவகாசத்தில், என் உள்ளத்தில் ஆழமாக அவர் பதிந்து விட்டார்.

விதிவசமாக, (சட்டபேரவையில் உறுப்பினர்களின் இருக்கைகளை தீர்மானிக்கும் முழு உரிமையை கொண்ட சபாநாயகர் நடைமுறைக்கு மாறாக செய்த விதிமீறல் காரணமாக), மிகவும் அபூர்வமாக எங்கள் இருவருக்கும் சட்டப்பேரவையில் அருகருகே இருக்கைகள் அமைந்தது. உள்ளபடியே –  அனுபவம், பின்னணி, தன்மை, விவாதங்களில் பங்கேற்கும் விதம்  போன்றவற்றின் அடிப்படையில் நாங்கள் இருவரும் மிகவும் வேறுபட்டவர்கள்.  உண்மையில், இரு கட்சிகளிலும் இதுபோன்ற வேறுபாடுகளை கொண்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை காண்பது மிகவும் கடினம்.  அனாலும், எங்களிடையே இருந்த வேறுபாடுகளையும் தாண்டி, தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து  சட்டபேரவை கூடிய  ~120 நாட்களில் நாங்கள் பரஸ்பரம் நட்பு பாராட்டி வந்தோம். அவருடைய அடங்க மறுக்கும் இயல்பு, சட்டப்பேரவையில் விதிகளையும் மரபுகளையும் மீறி  சபாநாயகர் முன்னெடுக்கும் நியாயமற்ற செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்காக போராடும் அவருடைய தன்மை ஆகியவை இப்போதும் எனக்கு மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சட்டப்பேரவை ஒழுங்காக செயல்படுவதில்லை, சட்டம் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் காரணமாக ஒரு அலங்கார பொருளாகவே அது நடத்தபடுகிறது  என்று பெருவாரியாக, பல நிலைகளில் நாங்கள் முடிவெடுத்து இருந்தபோதும் திரு அன்பழகன் பாரபட்சமாக செயல்படும் சபாநாயகருக்கு எதிராக, அவர் மீது தைத்த முள்ளாக சீராக, பயனுள்ள வகையில் தொடர்ந்து குரல் எழுப்பி திறம்பட செயல்பட்டு வந்தார். அரிதாக அவருக்கு பேச வழங்கப்படும் வாய்ப்புகளிலும் மிக தெளிவாக தன் கருத்துக்களை முன்வைத்து, எவ்வித அநாகரிகமான வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் தீர்க்கமாக விமர்சித்தார். அவரின் விமர்சனம் அமைச்சர்களை கோபப்படுத்தி, அவர்கள் வகிக்கும் பொறுப்புகளின் மாண்பை மறக்கசெய்து, அவர்களை அவசரகதியில் ஆக்ரோஷமாக செயல்பட வைத்தது. இந்தத் திறமை எல்லோருக்கும் வாய்க்காது.

ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள ஆரம்பித்த பின்னர் தன்னுடைய நேரத்தை செலவிட்டு எனக்கு ஆலோசனை, விமர்சனம், ஆதரவு ஆகிவற்றை அளித்து வந்தார்.  சட்டப்பேரவை விவாதங்களில் நான் பங்காற்ற இது மிகவும் உறுதுணையாக இருந்தது. இந்த ஒரு காரணம் தொடங்கி பல காரணங்களுக்காக நான் அவருக்கு கடன்பட்டவனாக இருப்பேன்.

சட்டபேரவை தாண்டி,  கழக பணிகள் நிமித்தமாக நான் அவரை தொடர்பு கொள்வது வழக்கமாக இருந்தது.  2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நாள் முதல் தகவல் தொழில்நுட்ப அணிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அளித்து வந்தவர். தொடக்கத்தில் இருந்தே நாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளின் பலன்களை நன்கு உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்தவர். மக்களுடன் பயணிக்கும் மிகச்சிறந்த கள அரசியல்வாதியாக இருந்தாலும், தகவல் தொழில்நுட்பத்தை குறித்தும்,  இன்றைய அரசியலுக்கு சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு குறித்தும் அவருக்கு அசாத்தியமான புரிதல் இருந்தது. அவருடைய மாவட்டத்தின் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு கோபால் ராம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, முன்னோடிகளாக திகழவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி அவருடன் இணைந்து பணியாற்றி வந்தார். தகவல் தொழில்நுட்ப அணி  முன்னெடுக்கும் எந்த ஒரு புது திட்டத்தையும், முயற்சியையும் செயல்படுத்துவதில் முதல் மாவட்டமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வமே அவருடைய பங்களிப்பிற்கும், அவர் அளித்து வந்த ஆதரவிற்கும் சிறந்த எடுத்துக்காட்டு. அதற்கு உதாரணமாக, தமிழகத்திலேயே முதல் முறையாக மாவட்ட அளவில் உயர்நிலை பொறுப்பாளர்களுக்கு நடந்த அறிமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே.  அவருக்கு நான் கடன்பட்டு இருப்பதற்கு இது இரண்டாவது காரணம்.



ஆனால், மூன்றாவதாக, மிகப்பெரிய அளவிலான காரணம் ஒன்று உண்டு. அரசியலைப் பொறுத்தவரை - பல நாடுகளில், கட்சிகளில் – பாகுபாடான விஷயமாகவே பலராலும் பார்க்கபடுகிறது, அடிபணிந்து போவது, முன்னுக்குப் பின் முரணாக இருப்பது, தன்னலத்தை முன்வைத்து பொது நலத்தை மறந்து ஏமாற்றும் போலிகள் நிறைந்தது என்பதுதான் பொதுப் பார்வை. வாழ்க்கையில் உள்ள பல விஷயங்களை போல, இந்த குற்றச்சாட்டுகளையும் உண்மையா/பொய்யா என்பதை தாண்டி சற்று உள்நோக்கி உண்மை நிலையின் பல்வேறு படிநிலைகளை நாம் அலசி ஆராய வேண்டும். ஆனால், போலித்தனமும்,  சர்வாதிகாரமும், அனைத்து அதிகாரங்களையும் ஒருமைப்படுத்தும் முயற்சிகளும் (உதாரணமாக கட்சித்தாவல் சட்டம்), ஆணவமான அதிகாரமிக்க தலைவர்களுக்கு  (உதாரணமாக - மோடி, புடின், Xi, ட்ரம்ப், போல்சனரோ என தொடங்கி சிறு அளவிலான உதாரணங்கள் வரை நீளும்  ஒரு முடிவில்லா பட்டியல்) அடிமைகளாக இருப்பது போன்றவை அதிகரித்துள்ளது என பலரும் ஒப்புக்கொள்வார்கள். இது போன்ற ஒரு உலகத்தில், திரு ஜெ.அன்பழகன் அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதிலும், அதன் விளைவுகளைப் பற்றி பொருட்படுத்தாமல், வழக்கமாக பல கட்சிகளில் தென்படும் உட்கட்சி பூசல்களை தவிர்த்து செயல்பட்டார்.

சில நேரங்களில், உதாரணமாக வாக்காளர்களின் மனநிலை, கழகத்தின் உட்புற செயல்பாடுகளை மெருகேற்ற தரவுகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் எப்படி சிறப்பாக செயல்படுவது என்பதற்க்கான வியுகம் போன்ற விஷயங்களில் எங்களிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளது.  ஆனால் ஒவ்வொரு விவாதத்தின் போதும் என்மீது மிகுந்த நம்பிக்கையை வைத்து, நான் கூறும் கருத்துக்கள் அனைத்தும் தீர்க்கமாக ஆராய்ந்து அதன் பின்னர் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் என்பதையும், கழகத்தின் வளர்ச்சியின் மீது எனக்குள்ள அக்கறையின் வெளிப்பாடாக வரும் கருத்துக்கள் தான் என்பதையும் அவர் நன்கு உணர்ந்து விவாதிப்பார். நாங்கள் இருவருமே கட்சிக்குள் விவாதம் தீவிரமாக (அதாவது எல்லா கருத்துக்கும்  அனைவரும் அமாம் சாமி போடாமல்) இருந்தால் மட்டுமே நல்ல விளைவுகளையும், வளர்ச்சியையும் அடைய முடியும் என்பதை புரிந்து இருந்தோம். எந்த  விவாதத்தின் முடிவிலும் நாங்கள் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும், அவர் மிகுந்த பரந்த மனதுடன் என் கருத்துக்கு, என் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார். மற்றவர்களும் பங்குபெற்ற ஒரு குறிப்பிட்ட விவாதத்தின் முடிவில், அவர் என்னிடம் “நீங்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை சரியானது அல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால் இது குறித்து நான் மேலும் கருத்து விவாதிக்க விரும்பவில்லை.  நீங்கள் செய்வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, அதை தொடர்ந்து செய்யுங்கள். தங்களால் செய்ய முடியாத சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும். அதை மற்றவர்களை கொண்டு செய்வோம். உங்கள் நம்பிக்கைக்கும் மனசாட்சிக்கும் ஏற்ப செயல்பட உங்களுக்கு முழு உரிமை உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த அரசியல் தத்துவம் மூலமாக, தற்போது அரசியலில் ஈடுபட்டு வருபவர்களுக்கும், வரும் தலைமுறைகளுக்கும் ஒரு வழிகாட்டியாக அவர் எப்போதுமே விளங்குவார். ஒருவரால் தன் மனசாட்சியையும், அறிவாற்றலையும் மட்டப்படுத்தாமல், மனிதநேயத்தையும் பெருந்தன்மையையும் மறந்துவிடாமல் அரசியலில் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்வார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் உறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றது குறித்த தகவலை ஆறு மாதங்களுக்கு முன்னால் தான் திரு அன்பழகன் அவர்கள் வாயிலாக நான் கேட்க நேர்ந்தது. சமுதாயப் பணி செய்வதில் பலவித தடைகளை தாண்டி வந்த ஒருவர் இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம்மை பிரிய நேர்ந்தது - அதிலும் இந்த மனிதப் பேரிடரில் இருந்து  பலரையும் மீட்ட அவருடைய செயல்பாடுகள் தான் அதற்கு காரணமாக அமைந்தது என்பது மிகவும் துயரமான  விஷயம்.

இன்றைய (ஒருவேளை என்றைக்குமே) அரசியலின் இயல்பு அல்லது சாபமாக கூட இருக்கலாம் – புனிதர்களுக்கு இடமே இல்லை. திரு ஜெ.அன்பழகன் அவர்கள் அதற்கு  அடுத்த தகுதிநிலையான வெகு சிலரே அடைந்த, பொது வாழ்க்கையில் தன்னலமற்ற சேவைக்காக - துணிவுடன் செயல்பட்ட அதிசிறந்த ஈகையாளர்  – என்ற நிலையை அடைந்து  உள்ளார்.

 Articles Year Wise: