திமுகவில் ஒரே நபர் அனைத்து பொறுப்புகளையும் வகிக்க முடியாது இனிவரும் காலங்களில்

Published Date: January 31, 2022

CATEGORY: CONSTITUENCY

திமுகவில் ஒரே நபர் அனைத்து பொறுப்புகளையும் வகிக்க முடியாது

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

திருப்பரங்குன்றம், ஜன. 31_

இனிவரும் காலங்களில் தி.மு.க.வில் ஒரே நபர் அனைத்து பொறுப்புகளையும் வகிக்க முடியாது என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். 

செயற்குழு கூட்டம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை தியாகராஜர் காலனியில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க.வை பொறுத்தவரை கொள்கை ரீதியாக ஒவ்வொரு பொறுப்புக்கும் 8 முதல் 10 பேர் தங்களது விருப்ப மனுவை கொடுத்து உள்ளீர்கள். அனைவருக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஒருவருக்குத்தான் வாய்ப்பு அளிக்க முடியும். 

ஒரே நபர் ஒரே குடும்பம்

தி. மு க.வில் இனிவரும் காலங்களில் ஒரே நபரோ அல்லது ஒரு குடும்பமோ என அனைத்து பொறுப்புகளையும் வைத்து இருக்கக் கூடாது. நான் பெற்ற பிள்ளையாக, நினைத்த தகவல் தொழில்நுட்பத் துறையை விட்டு கொடுத்துள்ளேன், அதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்றவர்களும் பின்பற்றவேண்டும். குறிப்பாக அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். 

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். எனது தந்தை போலவே மதுரை வளர்ச்சிக்கு எனது அமைச்சர் பதவியை பயன்படுத்துவேன். எம்.எல்.ஏ தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் மூலம் மக்களுக்கு அடிப்படை வசதியை நிர்ணயிக்க முடியும். கட்சி மற்றும் கூட்டணி கட்சி வெற்றிபெற தேர்தலில் பாடுபட வேண்டும். நாம் வெற்றி பெற்றால் தான் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யாவும் நாம் செயல்படுத்துவதற்கான பெயர் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் நமது திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் வேறு ஒருவர் வாங்கிச் செல்லக் கூடும்.. ஆகவே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் என்று பாகுபாடில்லாமல் தேர்தலில் முழு வீச்சில் செயலாற்ற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Media: DAILYTHANTHI