மதுரை மாநகராட்சி சாலை சீரமைப்புக்கு சிறப்பு நிதி

Published Date: December 3, 2021

CATEGORY: CONSTITUENCY

"மதுரை மாநகராட்சி சாலை சீரமைப்புக்கு சிறப்பு நிதி..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குட் நியூஸ்!

சென்னை:  மதுரை மாநகராட்சியில் சாலைகளை சீரமைப்பதற்காக கடந்த மூன்று மாதங்களில் 60 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பெற்று தரப்பட்டு  உள்ளதாக தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாநகராட்சிக்கு கடந்த 3 மாதங்களில் சிறப்பு நிதியாக 60 கோடி ரூபாயை தமிழக அரசிடமிருந்து அமைச்சர்கள் பெற்று தந்துள்ளனர் என்று மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். 

சாலை மேம்பாடு

இவ்வாறு பெற்றுத்தந்த நிதி மூலம் முதற்கட்டமாக மாநகராட்சி முக்கிய சாலைகளை சீரமைக்க 20 கோடி ரூபாய்க்கு பணி நடைபெற உள்ளது. மாநகராட்சியில் உள்ள சுமார் 300 சாலைகளை சீரமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. மாநகராட்சி சுகாதார பணிகளை மேற்கொள்ள 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் உத்தரவு

சுகாதார பணிகளுக்காக தளவாடங்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி வைகை தென்கரை மற்றும் வடகரை விரிவாக்கப்பட்ட பகுதிகளில் திருப்பரங்குன்றம் திருநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை விரைந்து அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

விரைவாக பணி

மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திடவும், நிரந்தரத் தீர்வு காணும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அமைச்சர் ட்வீட்

இந்த செய்தி துணுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நிதி துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். நிதியைப் பெற்று தந்தது தொடர்பாக அவர் சில தகவல்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதித் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் கூறுகையில், மதுரை மாநகரில் 300 சாலைகளை மறுசீரமைக்க பல்வேறு இடங்களிலிருந்து ரூ.60 கோடி நிதியை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. பல சாலைகள் மோசமான நிலையில் இருப்பது எனக்கு தெரியும்  (‘ஸ்மார்ட் சிட்டி’ வேலைகள் இதற்கு ஓரளவுக்கு காரணம்)  கடந்த காலத்தைப் போலல்லாமல், முறையான, விரிவான ‘மீண்டும் முழுமையாக சாலை போடுவதை’ உறுதிசெய்ய எங்களுக்கு சிறிது கால நேரம்  பிடித்தது.

 

Media: tamil.oneindia.com