கழக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

/

கழக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

Nov 2021 - Apr 2022

 

இந்திய துணைக்கண்டமே போற்றும் வகையில் நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கும் இந்தியாவில் உள்ள முதல்வர்களிலேயே சிறந்தவராக விளங்கும் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள், அரசியல் விமர்சகர்கள், எதிர்கருத்துடையோர் கூட  பாராட்டும் வகையில் மக்கள் நலம் பேணும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது கழக அரசு.

நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை தமிழக மக்களான நீங்கள் உணர்ந்து வரும் இவ்வேளையில் கடந்த 6 மாதத்திற்கான எனது செயல்பாட்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராகவும், மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் நான் ஆற்றிவரும் பணிகளை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த அறிக்கையை உங்கள் கைகளில் கிடைக்கச் செய்துள்ளேன்.

என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை 2 முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய உங்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் எனது மக்கள் பணிகள் நடைபெற்று வருவதை உறுதியுடன் மீண்டும் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக எனது பணிகள்

 

மிகவும் உயரிய பொறுப்பான தமிழக நிதியமைச்சர் என்ற பணியினை நான் மேற்கொண்டு வந்தாலும் என்னை நம்பி, எனக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்த மதுரை மத்திய தொகுதி மக்களான உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியைக் கொண்டும், அதைத் தாண்டி நிதியமைச்சர் என்ற பதவியைக் கொண்டும் எனது தொகுதி மக்களான உங்களுக்கு உரிய வகையில், கூடுதல் நன்மைகள் செய்திட கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதி பணியாற்றி  வருகிறேன்.

 

மதுரை மத்திய தொகுதி சாலைகள் முழு வீச்சில் சீரமைப்பு

மதுரை மாநகராட்சி மூலதன மானிய நிதி (Capital Grant Fund) 2021-22 ஆண்டு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளான ஆரப்பாளையம், தத்தனேரி, பொன்னகரம், ரயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளுக்கும், மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளான சுந்தரராஜபுரம், பெருமாள் தெப்பக்குளம், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், தமிழ்ச்சங்கம் ரோடு, பேச்சியம்மன் படித்துறை ரோடு, சொக்கநாதர் கோவில் வடக்கு கிருஷ்ணண் கோவில், சுப்பிரமணியபுரம், காஜிமார் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்து சேதமடைந்த, இயற்கை இடர்பாடுகளினால் சேதமடைந்த பல்வேறு தார்சாலைகளை மேம்படுத்த ரூ.23.68 கோடி மதிப்பீட்டில் 148 தார் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தேன்.

 

முதியோர் ஒய்வூதியம் / விதவை & மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை

இதுவரை 1258 பயனாளிகளுக்கு முதியோர், கைம்பெண் & கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளைப் பெற்றுத்தந்துள்ளேன். அதில் பெரும்பாலான ஆணைகள் அப்பயனாளிகள்  எந்த அரசு அலுவலகங்களுக்கும்  நேரடியாக அலைந்து திரியாமல் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எந்த வித செலவினங்களும் அவர்கள் செய்யாமல் கிடைக்கப்பெற்ற ஆணைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சராக முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். தகுதியற்ற நபர்கள் ஓய்வூதியம் பெறுவதைக் கண்டறிந்து அவர்களை ஓய்வூதிய திட்டத்தில் இருந்து நீக்கி தகுதியுள்ள பயனாளிகளுக்கு புதிதாக ஓய்வூதிய, ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

தையல் இயந்திரம் / தேய்ப்பு பெட்டி / கொரோனா நிவாரணம் / மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி

என்னிடம் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை நான் முறையாக பரிசீலித்து தகுதியான பயனாளிகளுக்கு எனது பரிந்துரையின் பேரில் அரசு நலத்திட்டங்கள் அவர்களுக்கு கிடைத்திட உதவி வருகிறேன். அந்த வகையில் 12 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 5 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டி, 6 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரணத் தொகை, 1 பயனாளிக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் பெற்றுத்தந்துள்ளேன்.

வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவருக்கு இலவச பேருந்து அட்டை பெற்றுத் தந்துள்ளேன்.

 

 

வைகை ஆற்றுப் பகுதியில் தடுப்பணை (CHECK DAM)

ஆரப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரை செறிவூட்டும் பொருட்டு நீர்வழித் துளைகள் மற்றும் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஆரப்பாளையம், தத்தனேரி, அருள்தாஸ்புரம் பகுதிகளின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

 

அரசு இராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள்

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதை கருத்தில் கொண்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தேன். மேலும் 41.24  கோடி  மதிப்பீட்டில் 6 தளங்களைக் கொண்ட மாணவர்களுக்கான புதிய கல்வியியல் கூடத்தை  திறந்து வைத்துள்ளேன்.

 

பிற பணிகள்

  • மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட  82வது வார்டு கஸ்தூரி பாய் காந்தி பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் மராமத்து செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் பழுதடைந்த மேயர் முத்து மேம்பாலம் முற்றிலும் நவீன முறையில் போக்குவரத்து நடைபெறும் நிலையிலேயே மராமத்து செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான சிறப்பு நிபுணர்கள் குழு அப்பணியினை செவ்வனே செய்து வருகிறார்கள்.  
  • மதுரை சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் எனது முயற்சியில் கட்டித் தரப்பட்டுள்ளது.

 

 

 

உள்ளாட்சி தேர்தல்

நான் அடிக்கடி கூறுவதுபோல் ஜனநாயக அடுக்கில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியமானவையாக இருந்தாலும் கடைசி அடுக்கான உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களுக்கு அருகாமையில் இருந்து அவர்களொடு தொடர்பிலிருந்து, அவர்கள் தேவையறிந்து செயல்படும் அவசியமான அமைப்பாகும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் மதுரை மாநகராட்சியில் பல பணிகள் நடைபெறாமல் இருந்தது. கடந்த ஆட்சியாளர்களின் நிர்வாக சீர்கேட்டுக்கான உதாரணமாகத் திகழ்ந்த மாநகராட்சியில் பல முறைகேடுகள் நடந்தேறியது. 

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கடந்த 5 வருட காலமாக அந்தப் பணிகளையும் முடிந்தளவு நானே பொறுப்பேற்று நமது தொகுதியில் அடிப்படை பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் தனித்தனையாக தீர்வு காணவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

 

 

கழக ஆட்சி ஏற்பட்டவுடன் ஜனநாயகம் தலை நிமிரும் வகையில் முதல்வர் அவர்களின் முயற்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் நமது மத்திய தொகுதிக்குட்பட்ட 16 வார்டுகளிலும் கழகம் முன்னிறுத்திய நான் ஆத்ரவு திரட்டிய அனைத்து வேட்பாளார்களையும் நீங்கள் அமோக வெற்றி பெற செய்தீர்கள். அதன் பலனாக நமது முத்லவர் அவர்கள் நமது தொகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஒருவரையே மதுரை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப் பரிந்துரை செய்தது நமக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக கருதுகிறேன். என்னுடைய ஆலோசனையின் பேரில் உங்களுக்கான அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படுவதுடன் மிக முக்கிய பொறுப்பான நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மத்திய தொகுதி உள்ளிட்ட தமிழகத்தின அனைத்து தரப்பு மக்களுக்கும் பணிகளைமேற்கொண்டு வருகிறேன்.

 

நிதி & மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக!

 

முந்தைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறன் இன்மை மற்றும் கொரோனா பேரிடர் பாதிப்பு ஆகியவற்றின் விளைவாக தமிழக நிதி நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சூழலில், என் மீது நம்பிக்கை வைத்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் மிகவும் பொறுப்பு மிக்க நிதித்துறையின் அமைச்சராக என்னை நியமித்தார்கள். தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது தலைவரின் சீரிய வழிகாட்டுதலின் அடிப்படையில், எனது உலகளாவிய  வங்கியியல் அனுபவங்களையும் பயன்படுத்தி முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி நிதித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் ஓராண்டில் கொண்டு வந்துள்ளோம்.

 

 

வருவாய் & நிதி பற்றாக்குறை குறைந்தது

கடந்த 2014ஆம் ஆண்டுமுதல் வருவாய் பற்றாக்குறை தமிழ்நாட்டில் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வந்த நிலையில் முதல் முறையாக இந்த ஆண்டு அந்த நிலை மாற்றப்பட்டு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ. 7000 கோடிக்கு மேல் குறைந்துள்ளது.

அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளால் தமிழ் நாட்டின் நிதி பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது.

 

 

Asset Management Software

அரசு சொத்துக்களை முறையாகக் கணக்கிட, அவற்றின் பயன்பாட்டை கண்காணிக்க நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்துடன் இணைந்து ஒரு சொத்து மேலாண்மை மென்பொருள் (Asset Management Software)  அறிமுகப்படுத்தப்படும் என இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் Cloud Based Asset Management Software தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

தணிக்கை அமைப்பு சீர்திருத்தம்

அரசுத் தணிக்கை அமைப்பு முறையில் தேவையான அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி அலுவலர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

நிதித்துறை மூலம் உருவான அரசின் திட்டங்கள்

உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களான பேராசிரியர் எஸ்தர் டப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் திரேஸ் மற்றும் டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோரைக் கொண்டு மாண்புமிகு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.  கோவிட் நோய் தொற்றின்போது பல்வேறு துறைகள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பெரும் தொற்று காலத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குழு உறுப்பினர்களுடன் பல்வேறு கூட்டங்களை நிதித்துறை ஏற்பாடு செய்தது. கூட்டங்களில் உறுப்பினர்கள் வழங்கிய ஆலோசனைகள் அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கை முயற்சிகளாக மாற்றம் பெற்றுள்ளன. இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அவ்வாறு உருவான ஒன்றாகும்.

 

நீதிமன்ற வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வை குழு

நீதிமன்ற வழக்குகளால் அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமைகளை குறைப்பதற்கான உத்திகளில் தெரிவிக்கவும், நீதிமன்ற அமைப்பில் பின்பற்றவேண்டிய பல்வேறு அணுகுமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கவும் உயர் அதிகாரம் கொண்ட வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

வரவு செலவு திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு

வரவு செலவுத் திட்ட மதிப்பீடு வெளியீடுகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2022-23 நிதியாண்டிற்கான 'வரவு செலவு திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேட்டினை' நிதித்துறை வெளியிட்டுள்ளது.

 

நிதித்துறையில் சீர்திருத்தம் - மூன்று சிறப்புப் பிரிவுகள்

மாநிலத்தின் பொது நிதி நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர பன்னாட்டு நாணய நிதியத்திடம் நிதித்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது. பொது நிதி நிர்வாக சீர்த்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக 1. நிதிப்பிரிவு, 2. நிதி இடர் மேலாண்மை பிரிவு மற்றும் 3. கடன் & நிதி ஆதார மேலாண்மை பிரிவு என மூன்று சிறப்புப் பிரிவுகள் நிதித்துறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

மாணவர்களுக்கு உள்ளிருப்பு பயிற்சி(Internship) திட்டம்

முதுநிலைப் பட்டதாரிகள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களை ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நிதித்துறையில் ஒரு உள்ளிருப்பு பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஜிஎஸ்டி கவுன்சில் தமிழக பிரதிநிதி

ஜிஎஸ்டி கவுன்சில் தமிழகத்தின் பிரதிநிதியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என்னை நியமித்துள்ளார், அவரது வழிகாட்டுதலின்படி ஜிஎஸ்டி அமைப்பு முறையில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்தும், தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பெறுவதற்கும், மாநில உரிமைகளுக்காகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

 

அண்ணா மேலாண்மை பணியாளர் கல்லூரி புதிய கட்டிடம்

அண்ணா மேலாண்மை பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ 8.74 கோடி மதிப்பீட்டில் புதிய மிடுக்கு வகுப்புகள் மற்றும் கூடுதல் தங்கும் விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

 

ஓய்வூதியர்கள் இனி அலைய தேவையில்லை

அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் IPPB இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் இனி வங்கிக்கு நேரில் சென்று அலையத் தேவையில்லை.

 

 

மனிதவள மேலாண்மை துறையில் E-Office

மனிதவள மேலாண்மைத் துறையில் வெளிப்படைத்தன்மை துரிதமான செயல்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு ஆளுகை மூலம் அரசு நிர்வாகத்தை திறம்பட கண்காணிக்கும் வகையில் மின்னணு அலுவலகம் (e-Office) முறை இவ்வாண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

முன் களப் பணியாளர்களுக்கு நிவாரணம்

கோவிட் நோய் தொற்றால் பணியிடை மரணமடைந்த 327 முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 79.5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

 

தனியார் பங்களிப்புடன் நலத்திட்டங்கள்

காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் இணைந்து தமிழ் நாட்டில் அரசு  தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படக்கூடிய திட்டங்களை வகைப்படுத்தும், நிலைப்படுத்தும் மற்றும் முன்னுரிமைப்படுத்தும் திட்டம் இவ்வாண்டு மார்ச் மாதம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

 

அரசுப்பணிகளுக்கான ஆட்சேர்க்கை

மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள்,  சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையை இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொள்ளும். இதன் மூலம் படித்து முடித்து போட்டித்தேர்வுக்காக தயாராகும் இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகும். 

 

போட்டி தேர்வுக்கு புதிய செயலி

அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்

உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும், ஓய்வூதிய பயன்களை வழங்குவதற்காகவும், 2022-23 வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலாக ஏறத்தாழ 19,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

நிதிநிலை அறிக்கை 2022-23 முக்கிய அம்சங்கள்

 

தமிழக சட்டசபையில் முதல் காகிதமில்லா இடைக்கால நிதிநிலை அறிக்கையை கடந்த வருடம் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இந்த வருடம் மார்ச்ஹ் 18ஆம் தேதி அன்று 2022-23க்கான முழுமையான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தேன். முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலோடும், எண்ணற்ற நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டும், வாக்களித்த மக்கள் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் ”திராவிட மாடல்” பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுக்க பலரது பாராட்டை பெற்ற ஒரு முன்மாதிரி பட்ஜெட்டாக இது அமைந்தது. புதிய வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்தாமல் உருவான இப்பட்ஜெட் பல மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 

 

நிதிநிலை அறிக்கையில் எடுத்து சொல்ல நிறைய இருந்தாலும் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்களை மதுரை மத்திய தொகுதி மக்களான உங்கள் முன் பட்டியலிடுகிறேன்.

 

1. தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு ரூ.1,906 கோடி ஒதுக்கீடு. 

 

2. அவசர ஊர்தி (AMBULANCE) சேவைகளுக்கு ரூ.304 கோடி ஒதுக்கீடு. 

 

3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு. 

 

4. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி ஒதுக்கீடு. 

 

5. மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகளும், டீசலில் இயங்கும் 2213 பேருந்துகளும் வாங்கப்படும். 

 

6. தமிழத்தில் TITCOT , SIPCOT, TANGEDCO போன்ற அரசு பொது நிறுவனங்களுடன் இணைந்து மாநில பல்கலைக்கழங்கள் தங்கள் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும். 

 

7. தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. அரசு கல்லூரி, பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் கட்டமைப்பு மேம்படுத்துவதற்கு அடுத்த 5 ஆண்டில் ரூ.1000 கோடியில் சிறப்பு திட்டடம் உருவாக்கி புதிய வகுப்பறை, விடுதி, ஆய்வகம், திறன்மிகு வகுப்பறை உருவாக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

 

8. தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு. 

 

9. இல்லம் தேடிக் கல்வித் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. 

 

10. சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடியில் புத்தொழில் உருவாக்க மையம் அமைக்கப்படும். 

 

11. சிதிலமடைந்த 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

 

12. மாநகர பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்யும் திட்டத்திற்கு ரூ.1520 கோடி மானியம். 

 

13. துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5770 கோடி ஒதுக்கீடு. 

 

14. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.  

 

15. நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.8737 கோடி ஒதுக்கீடு.  

 

16. ஏழை மக்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ.2030 கோடி ஒதுக்கீடு.

 

17. 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு.

 

18. சென்னையை மேம்படுத்துத்த  சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. 

 

19. 149 சமத்துத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு. 

 

20. அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.

 

21. பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் வழங்கப்படும். 

 

22. அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள்.

 

23. புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு. 

 

24. அரசு கல்லூரிகளின் கட்டடமைப்பை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு. 

 

25. முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு. 

 

26. தந்தை பெரியாரின் எழுத்துகளை எட்டுத் திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். 

 

27. தமிழ் வளர்ச்சித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு

 

28. நீர்நிலை பாதுகாப்பு மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு.

 

29. தமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.1,064 கோடி ஒதுக்கீடு. 

 

30. தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு. 

 

31. வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. 

 

32. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு. 

 

33. வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 

 

34. மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டட் த்திறிகு ரூ.1062 கோடி ஒதுக்கீடு. 

 

35. எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு. 

 

36. சமூக நலத்துறைக்கு ரூ.5922.40 கோடி ஒதுக்கீடு. 

 

37. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1540 கோடி ஒதுக்கீடு. 

 

38. விளையாட்டுத்துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு. மாவட்டங்கள் அனைத்திலும் புதிய விளையாட்டு ஸ்டேடியங்கள் உருவாக்கப்படும்.

 

முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலோடு உலகின் எந்த மூலையில் என்ன சிறந்த திட்டங்கள் இருந்தாலும், அதனை தமிழக மக்களின் நலனுக்காக கொண்டு வந்து சேர்ப்பதில் மற்ற துறை அமைச்சகத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறேன்.

 

மீனாட்சியம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்துக்குப் பிறகு வீர வசந்தராயர் மண்டப சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் அவர்கள் சிறப்பு கவனத்துடன் இப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இப்பணிகளுக்கும், விரைவில் குடமுழுக்கு நடத்திடவும் தேவையான நிதி ஆதாரங்களை முதல்வர் அறிவித்துள்ளார். 

 

மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு கண் சிகிச்சை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்ற 25 வயது நிரம்பிய பெண் யானையின் இடது கண் வெண்புரை சிகிச்சைக்கு நான் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். முன்பு யானையின் கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருந்ததுடன், கண்ணில் வலி இருந்து கொண்டே இருந்தது. கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து நான் யானையின் உடல் நிலை குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வருகிறேன்.

அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியுடன் இணைந்து மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வு செய்தபோது பார்வதியின் நிலை குறித்தும் ஆய்வு செய்தோம். சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிறப்பு மருத்துவக்குழுவினர் சில சிகிச்சைகளை மேற்கொள்ள செய்தோம். தொடர் சிகிச்சையின் பலனாக யானையின் இடது கண்ணில் இருந்து வந்த வெண்புரை பாதிப்பு 30% குணமடைந்தது.

தொடர்ந்து 3 வருடமாக நான் பார்வதி யானையை முழுவதுமாக குணப்படுத்த பல வகையில் முயற்சித்து வருவதைத் தொடர்ந்து தற்போது உலகில் சிறந்த தாய்லாந்து மருத்துவர்கள் உதவியுடன் முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

 

 

மீண்டும் சித்திரை திருவிழா

கொரோனா பெருந்தொற்றால் சில ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த உலகப்புகழ் வாய்ந்த சித்திரை திருவிழா வைபவங்கள் பெரு ஆரவாரத்துடன் இந்த வருடம் நடந்தேறியது. விழா செம்மையாக நடந்தேறிட அதற்கான முன்னேற்பாடுகளை நான் முன்னின்று செய்தது இறைவன் எனக்களித்த மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.

மிகவும் சிறப்புடன் நடந்தேறிய திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் எதிர்பாராமல் உயிரிழந்தார்கள். சிலர் காயமடைந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுத்தேன்.

கண்ணும் கருத்துமாக நடந்த திருவிழாவில் நடந்த இச்சம்பவம் அரசு இயந்திரம் இன்னும் செம்மையாக நடைபெற வேண்டும் என்ற படிப்பினையை உணர்த்தியது.

 

சித்திரை பொருட்காட்சி

சித்திரைத் திருவிழாவை ஒட்டி நடைபெற வேண்டிய சித்திரை பொருட்காட்சி இடப்பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களினால் சித்திரை மாதம் நடைபெறவில்லை. அந்தக் குறையினைப் போக்க, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சித்திரை பொருட்காட்சியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

 

 

கலைஞர் நூலகம்

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த தலைவர் கலைஞர் அவர்களின் பெயரில் மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூலகக் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மதுரை இளைஞர்களின் அறிவு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டு வரும் இந்நூலகம் மதுரை மாநகர மேம்பாட்டு திட்டங்களில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

வீடு தேடி செல்லும் மக்கள் நலத் திட்டங்கள்

மக்களிடம் நேரடியாக சென்று அவர்கள் குறைகளை, கோரிக்கைகளைக் கேட்டறியும் மக்களை அணுகும் கலை அணியினை நான் உருவாக்கி அவ்வணியினர் மக்களை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் அரசு வழங்கும் நலத்திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துக்கூறி விண்ணப்பங்களைப் பெற்று, ஆய்வு செய்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

அதன் நீட்சியாக அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் உங்களுக்கு உடனடியாக சென்று சேரும் வகையில் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகிறார்கள். அதன் மூலம் இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைவது குறைந்து மக்களைத் தேடி அரசு நலத்திட்டங்கள் வந்து சேரும்.

 

தன்னார்வலர்களோடு கைகோர்த்து தொகுதி மேம்பாடு

அரசாங்கம் பொதுமக்களோடு இணைந்து அவர்களின் பங்களிப்போடு பல திட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே அது வெற்றிகரமாக அமையும். அந்த வகையில் மக்களை அணுகி அவர்கள் புகார்களை நேரடியாகக் கண்டறிந்து உதவும் வகையில் மேலவாசல் ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நான் கட்டமைத்த மக்களை அணுகும் கலை அணி (MAK Team)யின் மூலம் நம் தொகுதியைச் சேர்ந்த தற்போது அமெரிக்க நாட்டில் வாழும்  மருத்துவர்.மெஹபூப் அலி அவர்களின் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்.ஓ.ப்ளாண்ட் அமைத்து தந்துள்ளோம். 

 

 

இதுபோல சமூகத்தை மேம்படுத்தும் உணர்வுடன் உள்ள தன்னார்வலர்களையும், கூட்டாண்மை சமூக பொறுப்பு (Corporate Social Responsibility) அடிப்படையில் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்தும் நமது மத்திய தொகுதியில் மேம்பாட்டு பணிகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

 

புதிய வீச்சில் மகளிர் சுய உதவிக்குழுக்கள்

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து, திறன் வளர் பயிற்சிகள் வழங்கி, கூட்டமைப்புகள் மூலம் ஒருங்கிணைத்து, வங்கிகள் மூலம் கடனுதவிகள் பெறச் செய்து, சிறு தொழில்களில் ஈடுபடுத்தி வருவாயை பெருக்குவதன் மூலம் வறுமையைக் குறைத்து சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் ”மகளிர் குழு திட்டம்”. கடந்த காலங்களில் நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் இந்த திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டது. 

தற்போது நமது மத்திய தொகுதியில் மீண்டும் புத்துணர்வுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மறு சீரமைக்கப்பட்டு, புதியகுழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு திறன் வளர் பயிற்சிகளோடு, தனியார் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து சிறு தொழில் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

விரைவில் இதற்கென ஒரு மாநாட்டை நமது தொகுதியில் கூட்டி மகளிர் குழுக்களுக்கு நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

 

மக்கள் குறை தீர்ப்பு

தொகுதி மக்கள் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கைகளைப் பெற்று அதன் மேல் நடவடிக்கை எடுத்திட மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மற்றும் எனது இல்ல வளாகத்தில் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேரில் வர இயலாதவர்களுக்கு ஒவ்வொரு வார்டிலும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே 25 புகார் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் எனது குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண் 7305519999, வாட்சப் எண்கள், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com,  QR code மூலமாகவும் எந்த நேரமும் புகார் அளிக்க வழி செய்துள்ளேன்.

புகார் மற்றும் கோரிக்கை கடிதங்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டு அதன் தகவல்களை சேகரித்து அதன் மீது தொடர் ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. தொகுதி மக்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய தரவுகளை ஆராய்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன்.

 

சமூக நிகழ்வுகள் / கருத்தரங்கங்கள்

மதுரை மஹபூப்பாளையம் பள்ளிவாசலில் நடைபெற்ற ரமலான் சமத்துவ இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அன்பிற்குரிய இஸ்லாமிய மக்களுடன் கலந்துகொண்டேன். மதவாத சக்திகள் எத்தனை முயன்றாலும் தமிழ்நாட்டிலுள்ள நல்லிணக்கத்தை அசைத்துவிட முடியாது என்பதை அங்கு ஆற்றிய உரையில் அழுத்தமாகப் பதிவு செய்தேன்.

 

 

திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் எனது பயணம்

மாறும் காலத்திற்கேற்பவும், சமூக மாற்றத்திற்கேற்பவும் மெருகேற்றிக்கொள்ளும் மக்கள் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அத்தியாயத்தில் ஒரு மைல்கல்லாய் உருவாக்கப்பட்டது தகவல் தொழில்நுட்ப அணி. அதன் மாநில செயலாளராக கழகத்தலைவர்மு.கஸ்டாலின் அவர்களால்    12.06.2017 அன்று நான் நியமிக்கப்பட்டேன்.

நான் பெற்ற குழந்தை போல அதனை படிப்படியாக வளர்த்தெடுத்து கழகத்தின் அடிக்கட்டமைப்பு வரை அதனை விரிவாக்கி கழகத்தின் செயல்பாடுகளை வீர்யத்துடன் கொண்டு சென்றேன்.

கழகம் வெற்றி பெற்றதும்,  தமிழக மக்களுக்கு பணியாற்றிடும் மிக உயரிய பொறுப்பை எனக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.  அனுதினமும் பல்வேறு பணிகளை, துரித நடவடிக்கைகளை செயல்படுத்தும் அப்பொறுப்பை ஈடுபாட்டுடன் செய்திடவும்,  தமிழ் மக்களுக்காக என்னை அர்ப்பணித்து பணியாற்றிட தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பொறுப்பினை இராஜினாமா செய்தேன். 

 

தொய்வின்றி நடைபெறும் பணிகள்.

வீழ்ந்து கிடந்த தமிழக பொருளாதார நிலை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதற்கான பணிகளில் எனது முழு கவனத்தையும், உழைப்பையும் செலுத்தி வருகிறேன். அரசாங்கத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் நிதி துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் எனக்கான பொறுப்புகள் மிகுதியாக  இருக்கிறது. எனது நேரடி மேலாண்மையில் ஒவ்வொரு பணியையும் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறேன்.

இத்தகைய இடையறாத பணிகளின் காரணமாக தொகுதி மக்களான உங்களோடு நான் செலவழிக்கும் நேரம் குறைந்து வருவதை எண்ணி வேதனை அடையும் அதே சமயம் ஒட்டுமொத்த தமிழக நலனுக்காக நான் மேற்கொள்ளும் பணிகள் எனது தொகுதி மக்களான உங்களுக்கும் பயனளிக்கும் என்பதை நீங்களும் அறிவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. 

ஆனால் இப்பணிகளினால் என்னால் நேரடியாக உங்களுடன் நேரம் செலவிட முடியவில்லை என்றாலும் எனது தொகுதியில் மக்களுக்கான நலத்திட்ட பணிகள் தொய்வடைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்பதையும் மீண்டும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நேரடியாக வந்து சந்திக்கும் அணிகளை அமைத்து அவர்கள் மூலம் உங்களுக்கான தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றி வருகிறேன்.

 

நன்றி

 

உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் சென்று கல்வி கற்று, மிக உயரிய பதவிகள், பொறுப்புகள் நான் பெற்றிருந்தாலும், பதவியும் பொறுப்புகளும் எனக்கு ஒரு பொருட்டல்ல. மக்களுக்கு உழைத்திடும் சிந்தனையோடுதான் நான் உலகின் புகழ் பெற்ற வங்கியின் தலைமை பொறுப்பில் இருந்து நான் விடுபட்டு உங்கள் முன் வந்தேன். அதே சிந்தனைக்கு வலுவூட்டும் விதமாகத்தான் நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை உணர்ந்து, கூடுதலாக நான் வகிக்கும் அமைச்சர் பொறுப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில்  மக்கள் பணியாற்றி வருகிறேன்.  

 

தொடர்ந்து உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக பணியாற்றுவேன். நன்றி.

 

தங்கள் அன்புள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.