நிதி & மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் - முதல் 6 மாதங்கள்

/

நிதி & மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் - முதல் 6 மாதங்கள்

May 2021 - Nov 2021

இருண்டு கிடந்த தமிழகத்தில், விடியலுக்கான முழக்கத்தோடு தேர்தல் களம் கண்ட இந்தியாவின் தனிப்பெரும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்த நீங்கள், கழகத்தின் சார்பில் மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் ஒருமுறை நேர்மையான முறையில் கடந்த 2016 தேர்தலைக் காட்டிலும் 6 மடங்கு வித்தியாசத்தில் வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.  தமிழகத்தின் 16வது சட்டமன்றத்தில் நமது மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்ததோடு தமிழகத்தின் நிதி & மனித வள மேலாண்மை அமைச்சராக என்னைத் தேர்ந்தெடுத்து நியமித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது வெற்றிக்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து தொகுதிக்கு பிரச்சாரம் ஆற்ற வந்த திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தேர்தல் களப்பணியாற்றிய கழகத் தொண்டர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், தோழமைக் கட்சியினர், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நூற்றாண்டு கால அரசியல் பாரம்பரியம் மிகுந்த குடும்பத்தில் எனது முப்பாட்டனார் சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தொடங்கி, தாத்தா பி.டி.ராஜன், எனது தந்தையார் பிடிஆர் பழனிவேல்ராஜன் வழியில் 4வது தலைமுறையாக எனது பொதுவாழ்வு தொடர்கிறது.

அதில் தமிழக சட்டமன்றத்தில் 1920ல் எனது தாத்தா பிடி இராஜன் அவர்கள் தொடங்கி, என் தந்தையார் பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களுக்கு பின்னர் நீங்கள் எனக்களித்த பெரு வெற்றியால் இரண்டாவது முறையும் சட்டமன்ற உறுப்பினராக எனது பணி தொடர்வதை எண்ணி உள்ளபடியே மகிழ்கிறேன். நூற்றாண்டு காலம் மக்கள் பணி தொடர்வதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இனமான பேராசிரியர் அவர்கள் அலங்கரித்த நிதி அமைச்சக பொறுப்பை நான் ஏற்றிருப்பது, இப்பொறுப்பின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்துகிறது. அதனால்தான் பொறுப்பை ஏற்றுக்கொண்டபின் எனது பணியினை துரிதப்படுத்தி தமிழகத்தின் வளர்ச்சிக்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி ஒவ்வொரு 6 மாத காலத்திற்கு ஒருமுறை எனது செயல்பாட்டு அறிக்கையை தொடர்ந்து சமர்ப்பித்து வருகிறேன். தற்போது 2வது முறை நான் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாத காலம் நிறைவுற்ற நிலையில், மே 2021 முதல் நவம்பர் 2021 வரையிலான எனது செயல்பாட்டு அறிக்கையினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.



கொரோனா பேரிடர் துயர் துடைப்பில்


கழக அரசு பொறுப்பேற்ற 2021 மே மாதம் கொரோனா 2ம் அலையின் பாதிப்பு முதல் அலையைக் காட்டிலும் 6 மடங்கு உச்சத்தில் இருந்தது.
முதல்வர் அவர்களின் அறிவுரையின் பேரில் மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி உங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை நானும், அமைச்சர் மூர்த்தி அவர்களும் முடுக்கிவிட்டோம்.


மதுரை மாவட்டம் முழுவதற்கும் மூன்று கட்டங்களாக கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


1.    மிகத் தீவிரமாக பரவி வரும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது.
2.    நோயாளிகளுக்குத் தேவையான கொரோனா மையங்கள், ஆக்சிஜன், படுக்கை வசதிகளை அதிகரிப்பது.
3.    கொரோனா மேலும் பரவாமல் தடுத்திட தடுப்பூசி மையங்களை அதிகரித்து மக்களிடையே விழிப்புணர்வை பரவலாக்குவது.
 
அறிவியல் பூர்வமான சிறந்த திட்டமிடுதலோடு, சிறந்த நிபுணர்களைக் கொண்டு, சிறந்த வியூகங்களை வகுத்து செயல்பட்டதால் தமிழகத்திலேயே தொற்று குறைந்த மாவட்டமாக நம் மதுரை மாவட்டம் வெகு சில நாட்களிலேயே மாறியது. நாளுக்கு 1500 கொரோனா நோய்தொற்றாளர்கள் என்ற எண்ணிக்கை மூன்றே வாரங்களில் 200 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.


தேசம் தாண்டி சர்வதேச அளவில் சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மருந்து, ஆக்சிஜன், தடுப்பூசி, நிதி உதவி பெறப்பட்டு தேவைகள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக ஆக்சிஜன் தட்டுப்பாடு உச்சத்தில் இருந்த சமயத்தில் 80 மெட்ரிக் டன் அளவில் ஆக்சிஜன் பெறப்பட்டு மதுரை மட்டுமன்றி தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.


தற்காலிக ஏற்பாடாக பெறப்பட்ட ஆக்சிஜன் அப்போதைய  நிலைமையை சீர்  செய்ய உதவினாலும், எதிர்கால நலன் கருதி நிரந்தர ஆக்சிஜன் கலன்களை அரசு இராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டு எப்போதும் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன் கலன்கள் நிறுவ தொழிற்சாலை அதிபர்கள் துணையுடன் குழு அமைக்கப்பட்டு ஆங்காங்கே ஆக்சிஜன் கலன்கள் நிறுவப்பட்டுள்ளது.


தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் பல்வேறு தரப்பினரோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு எண்ணற்ற உயிர்ழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.
பலரது அயராத உழைப்பால் தொடர்ந்து ஆக்சிஜன் கலன்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு ஆக்சிஜன் தற்போது தன்னிறைவையும் தாண்டி அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


அரசு இராஜாஜி மருத்துவமனையில் புதிய கோவிட் வார்டுகள் உருவாக்கப்பட்டதோடு, மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது.  தோப்பூரில் ஆக்சிஜன் கருவிகளோடு 500 படுக்கைகளும், புதிதாக மருத்துவமனை உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டது. நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள் இலவசமாக வழங்கப்பட்டது.


கொரோனா நோயாளிகளுக்கு உதவிட WAR ROOM அமைத்து மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிகிச்சையினை விரிவுபடுத்தினோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 4000 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து நோயாளிகளை நேரடியாகக் கண்டறியும் பணி நடைபெற்றது.


மதுரை மத்திய தொகுதியில் கொரோனா நோயின் பாதிப்பால், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்கினோம்.


மதுரை மத்திய தொகுதியில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய தொகுதிக்குட்பட்ட 22 வார்டுகளிலும் தனித்தனியே சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


கொரோனா 3வது அலைக்கான வாய்ப்பைக் குறைக்கும் அளவுக்கு முதல்வர் தலைமையில் இன்றும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தை, குறிப்பாக மதுரையை தயார் நிலையில் வைத்துள்ளோம் என்பதை தொகுதி மக்களுக்கான உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.


ஆனாலும் இன்னும் நம் தொகுதியில் மக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். அவ்வாறு செலுத்தாதவர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம் உங்களையும், உங்களை நம்பியுள்ள அனைவரையும் காக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.



நிதி & மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக!


பொருளாதார ஆலோசனைக் குழு

தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே மாநில அளவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை தொலைநோக்குடன், நீண்டகால அடிப்படையில் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, எனது பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை   தொடர்பினாலும், முதல்வரின் ஆலோசனையுடனும் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஐந்து பொருளாதார நிபுணர்களை கண்டறிந்தேன்.

பல்வேறு சிந்தனை, கருத்துகள் கொண்ட நிபுணத்துவம் வாய்ந்த சிறந்த அறிஞர்களோடு பொருளாதாரா ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பன்மைத்துவமான சிந்தனைகள், கருத்துக்கள் நிறைந்து இருப்பதால் இக்குழுவின் மூலம் முழு பலன்களும் கிடைத்து வருகிறது. பல ஆலோசனைகள் இந்தக் குழுவின் மூலமாக பெற்று அதை செயல்படுத்தியும் வருகிறோம் (எடு: இல்லம் தேடி கல்விக் இயக்கம்)



வெள்ளை அறிக்கை

முதற்கட்டமாக நிதியமைச்சராக பொறுப்பேற்றபோது தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தேன். அதன்படி, தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டேன். முன்னெப்போதும் இல்லாத அளவில் விரிவான தகவல்கள் நிறைந்த அறிக்கையாக அதனை சமர்ப்பித்தேன்.

முதல் காகிதமில்லா பட்ஜெட்

வரலாற்றில் முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா   இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக நிதிநிலையை சீரமைக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டு, கடந்த 10 வருட அதிமுக அரசின் நிதி நிர்வாகச் சீர்கேட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கின்ற வகையில் அடுத்த ஆண்டு திமுக அரசின் முழுமையான பட்ஜெட்டிற்கு தற்போதைய பட்ஜெட் அடித்தளமாக இருக்கும். முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம் என நிதிநிலை அறிக்கையில் உறுதி அளித்ததோடு, பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றிட நிதி ஆதாரங்கள் வகுக்கப்பட்டது.


அதில் சொன்னபடி பொருளாதர ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக அளித்த நிவாரண நிதி ரூ.4000-த்தை மக்களின் கைகளில் கொண்டுசேர்த்தது முக்கியமானது.



குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற கூற்றின்படி முதல்வர் அவர்களின் ஆலோசனையின் பேரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2.63 கோடி இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், நமது நாட்டிற்கே முன்னோடியாக பெட்ரோல் மீதான வரியை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்து ஆகஸ்ட் 2021 முதல் அமல்படுத்தப்பட்டது. ஒன்றிய அரசு கடந்த 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரியை அதிகரித்துள்ளது. இதை மீண்டும் 2014ல் இருந்த அளவுக்கு குறைத்துக்கொண்டால் மாநில அரசின் வரி விதிப்பு இன்னும் குறைந்துவிடும். இந்த வழிமுறையைப் பின்பற்ற ஒன்றிய அரசை நான் வலியுறுத்தியுள்ளேன்.


110 விதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

முந்தைய் ஆட்சியில் 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. வெற்று அறிக்கைகளாக அறிவிக்கப்பட்ட அவையனைத்தும் நிறைவேற்றப்படவில்லை. அதிலுள்ள முறைகேடுகள், தவறுகள் குறித்த விரிவான அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தேன்.


அடிப்படை சீர்திருத்தம்

5- கட்டமைப்பு சார்ந்த சீர்த்திருத்தங்களான..  

•    தரவுகளை மையமாக கொண்டுள்ள ஆளுகை

•    ஒன்றிய - மாநில நிதி உறவுகள்

•    அரசு சொத்துக்கள் மற்றும் இடர் மேலாண்மை

•    அதிக நம்பகத்தன்மை மற்றும் அதிகரிக்கப்பட்ட உற்பத்தித் திறன்

•    சட்டமன்றத்தின் பங்கினை வலுவூட்டுதல்

ஆகியவற்றை மையமாக கொண்டு அரசாங்கத்தின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் மேம்பட்ட வகையில் அமைந்திட மையப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் செயல்பாட்டு வழிமுறைகளை உருவாக்கியுள்ளேன்.

1. தரவுகளை சேகரித்தல்
2. தரவுகள் குறித்த விவாதம் மற்றும் கலந்துரையாடல் நடத்துதல்
3. தரவுகள் குறித்த பின்னூட்டம் கேட்டறிதல்
4. தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை செயல்படுத்துதல்
5. செயல்படுத்தியபின் பின்னூட்டம் அறிந்து கொள்ளுதல்.

என ஒவ்வொரு துறையும் இனி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்.

கரூவூலத்திற்கு வெளியே இருப்பில் வைக்கப்பட்டிருந்த நிதியைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் கண்டறியவும், பிறகு சரிபார்த்து அவற்றை அரசு பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் உருவாக்கப்பட்ட இந்த வழிமுறைகளைக் கொண்டு முதற்கட்டமாக பல்வேறு துறைகளில் தேங்கியுள்ள மறைந்திருந்த ரூ.2000 கோடி நிதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொது நிதி மேலாண்மையில் அரசுத்துறைகள், அரசால் நடத்தப்பெறும் சங்கங்கள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசித்துள்ளேன்.


சமூக நலத்திட்டங்களுக்கான நிதி

நிதிநிலைமையைக் காரணம் காட்டி சமூகநீதித் திட்டங்களுக்கு எந்த வகையிலும் தடை ஏற்பட்டு விடாதவாறு பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுத்து வருவதோடு, முறையான பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக நீதிக் கொள்கை மூலம் எவ்வாறு தேவைப்படும் நபர்களுக்கு பயன் சென்றடைகிறதோ அதுபோல பொருளாதார நீதியின் மூலம் சரியான நபர்களுக்கு தேவைக்கேற்ப பலன்கள் சென்றடையும் வழிகளை ஆய்வு செய்து வருகிறோம்.


பணியாளர் தேர்வு  

பணியாளர் தேர்வு தொடர்பாக அதிக கவனம் செலுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார், எனவே கடந்த ஆட்சியில் TNPSCயில் நடந்த பல முறைகேடுகள் குறித்து விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


பணி நியமனத்தில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு

தலைவர் கலைஞர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார். அதில் அரசுப் பணி நியமனத்தில் 30% பெண்களுக்கு முன்னுரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது. அவர் வழியில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு படி மேலே சென்று அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40% முன்னுரிமை அளித்துள்ளார். இதன் மூலம் தமிழக பெண்களின் நிலை இன்னும் ஒரு படி மேல் உயரும். இந்த கோப்பில் கையெழுத்திட்டதை மன நிறைவாகக் கருதுகிறேன்.


தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை

கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் அரப்சு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.   இதன் பின்னர் நடந்த மானியக்கோரிக்கை மீதான கூட்டத்தொடரில் பேசிய நான், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தேன். அதுவும் இப்போது சட்டவடிவமாக்கப்பட்டுள்ளது.


மதுரை நகர் கட்டமைப்புக்கான மாஸ்டர் பிளான்

உலகின் பல்வேறு முன்னேறிய நகரங்களில் அடுத்த 50 ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறையும் அந்த மாஸ்டர் பிளான், அப்டேட் செய்யப்படுகிறது. அதனால், ஒவ்வொரு ஆண்டும், அந்த நகரங்கள் புது நகரமாகவே தெரிகின்றன. அதுபோல், மதுரையையும் மேம்படுத்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். மதுரை மாஸ்டர் பிளான் மதுரை மக்களின் தேவைகளின், எண்ணங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளதோடு மதுரையில் 25 கி.மீ சுற்றளவில் மாஸ்டர் பிளான் உருவாக்கப்படுகிறது.

சென்னையில் உள்ளது போல இங்கும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கை (Detailed Project Report) வெளியிடப்பட்டுள்ளது.



மதுரை விமான நிலையப் பணிகள்

'மதுரை விமான நிலைய விரிவாக்கம் நீண்ட காலமாகவே தாமதமாக இருந்து வந்தது இதற்காக 615 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். அரசு புறம்போக்கு நிலம் 150 ஏக்கருக்கு மேல் உள்ளது. மீதி 450 ஏக்கரை, மாநில அரசு கையகப்படுத்தி விமான நிலைய நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்ததை உடனடி நடவடிக்கை எடுத்து பல்வேறு முயற்சிகளுக்குப் பின் விமான நிலைய நிர்வாகத்திடம் நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

மேலும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் மத்திய நிதி அமைச்சரோடு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முன் வைத்துள்ளோம் சுங்க விமான நிலையமாக (customs airport) மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்படுகிறது. அதை முழு அளவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றினால் இன்னும் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வரும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் விரிவாக்கப் பணிகளை முடித்து, சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றால் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய பலன் அடையும். மத்திய நிதி அமைச்சர்


GST கவுன்சில் நிலைக்குழு உறுப்பினர்

அறிஞர் அண்ணா முழங்கிய மாநில சுயாட்சி முழக்கத்தை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதன் மூலம் தான் தமிழர்களின் நலனைப் பேணிப் பாதுகாத்திட முடியும்.

அந்த முழகத்தின் வழியே உருவான” ஒன்றிய அரசு” என்ற சொல்லாடலை நான் அரசியல் சமூக பொதுவெளியில் ஒரு விவாதமாக உலவ விட்டதன் மூலம் நாட்டின் மற்ற மாநிலங்கள் தங்கள் உரிமை குறித்து பேச முனைந்துள்ளன. அதன் வழியே ஒன்றிய அரசின் மூலம் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி, பொருளாதார, கல்வி உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

அமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்திட GST கவுன்சிலின் நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன். மற்ற மாநிலத்தைச் சேர்ந்த சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றி இந்திய அளவிலான GST செயல்முறையை மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறேன்.


விவசாயத்துக்கான மின் இணைப்பு

மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டு 2560 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டமாக 28 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்பு ஆணையை வழங்கி உள்ளோம்.


கொரோனா பேரிடர் நிவாரண நிதி

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தாய், தந்தை இருவரையும் இழந்த 1 குழந்தைக்கு ரூ.5,00,000/-(ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) வைப்புத்தொகைக்கான பத்திரமும் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த 18 குழந்தைகளுக்குத் தனித்தனியாக ரூ.3,00,000/-(ரூபாய் மூன்று இலட்சம் மட்டும்)-மும் ஆக மொத்தம் 19 குழந்தைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 59 இலட்சத்திற்கான நிவாரண் காசோலையினை வழங்கியுள்ளோம்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பலரையும் கண்டறிந்து நிவாரண நிதிக்குப் பரிந்துரைத்துள்ளோம்.


குவிந்த கோப்புகள்

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு பணிகள் முழு வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டது. பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் கோப்புகள் என்னிடம் வந்தன. அனைத்து கோப்புகளும் விரைந்து ஆய்வு செய்து எந்த கோப்புகளும் தேங்காத வண்ணம் செயல்பட்டு வருகிறேன்.



இதுவரை 2000த்திற்கும் மேலான கோப்புகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டுள்ளேன் என்பதை தொகுதி மக்களான உங்களிடம் இவ்வறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.


சட்டமன்ற உறுப்பினராக…


கொரோனா பேரிடர் பணி, நிதி & மனிதவள அமைச்சக பணிகளால் தொடக்கத்தில் நம் தொகுதிக்குச் செலவிடும் நேரம் கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் தொகுதியில் இடைவிடாமல் பணிகள் தொடரவும், கூடுதல் கவனத்தோடு திட்டங்களை செயல்படுத்தவும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டேன். மேலும் அதை ஈடுகட்டும் விதமாக கூடுதல் நலத்திட்டங்களை தொகுதி மக்களுக்குக் கிடைக்கச் செய்துள்ளேன்.


நலத்திட்டங்கள்

கடந்த 2016-2021 காலக்கட்டத்தில் நான் பரிந்துரை செய்து அளித்த நலத்திட்ட விண்ணப்பங்களுக்கு அதிமுக அரசு நிதியின்மை என காரணம் காட்டி நிறுத்தி வைத்திருந்த நிலையில் பழைய விண்ணப்பதாரர்கள் அனைவரையும் மீண்டும் தொடர்பு கொண்டு புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்து

கடந்த 6 மாதங்களில் மட்டும் மத்திய தொகுதியில் 142 பயனாளிகள் மேற்படி நலத்திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

1.    முதியோர் ஓய்வூதியம்.
2.    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்.
3.    விதவைப்பெண்கள் உதவித்தொகை.
4.    மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை.
5.    பெண்களுக்கு தையல் மிசின்.
6.    மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் வாகனம்.

..உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை முன்னுரிமை அளித்து நம் தொகுதி மக்களுக்குக் கிடைத்திட செய்துள்ளேன். தொடர்ந்து தொகுதியில் உள்ள, தேவைப்படும் பெரும்பாலான மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறேன்.



தொகுதி மேம்பாடு

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மத்திய தொகுதியின் பெரும்பாலான பகுதிகளின் சாலைகள் பெயர்ந்தும், குண்டும் குழியாகவும் உள்ளது. முடிக்கப்படாத பெரியார் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்கப்பட்டு நகரின் சாலைகள் அனைத்தையும் சீர் செய்து மேம்படுத்திட முடிவெடுத்துள்ளேன். அதற்கான முன் கட்ட பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் அலங்கோலமான மதுரை நகரை அழகாக்கி காட்டுவதே எனது தலையாய பணியாகக் கருதுகிறேன்.

முற்றிலும் நகர்மயமான மதுரை மத்திய தொகுதி மேம்பாட்டிற்காக பல்வேறு தொகுதி மேம்பாட்டுப் பணிகளை நான் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன். எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியினை 100% முழுவதும் செலவழித்து மக்களுக்கத் தேவையான அடிப்படை வசதிகளை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மேம்படுத்தித் தந்துள்ளேன்.

மதுரையின் மக்கள் தொகையின் வளர்ச்சிக்கேற்ப நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மிகவும் அவசியம். போக்குவரத்து நெரிசல், பாதாள சாக்கடை, சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அனைத்தும் அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையோடு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது எனது எண்ணம். அமைச்சர் என்ற முறையில் அதற்கான முதற்கட்ட நகர்வை நான் தொடங்கியுள்ளதை உங்களுக்குத் தெரிவித்துக்கொண்டு கடந்த 6 மாத காலத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நான் மேற்கொண்ட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை பணிகளை உங்களுக்கு பட்டியலிடுகிறேன்.

 

வ. எண்

மாநகராட்சிவார்டு

பணியின்விவரம்

மதிப்பீடு

1

10

ஆரப்பாளையம் டிடி சாலை குறுக்கு சாலை 1ல்
புதிய தார் சாலை

10.00

2

10

ஆரப்பாளையம் டிடி சாலை குறுக்கு சாலை 2ல் புதிய தார் சாலை

10.00

3

77

சுந்தரராஜபுரம் அண்ணாநகரில் பேவர் ப்ளாக் சாலை

10.00

4

79

அமெரிக்கன்மிசன்சந்தில் பேவர் ப்ளாக் சாலை

9.50

5

17

எல்லீஸ் நகர் இரட்டை குடியிருப்பு வடக்கு பகுதி தார் சாலை

10.00

6

17

எல்லீஸ் நகர் இரட்டை குடியிருப்பு தெற்கு பகுதி தார் சாலை

10.00

7

17

எல்லீஸ் நகர் இரட்டை குடியிருப்பு குறுக்குத் தெருவில் தார் சாலை

10.00

8

82

சிம்மக்கல் தைக்கால் 3வது தெருவில் தார் சாலை

10.00

9

11

புட்டுத் தோப்பு காட்டுநாயக்கன் தெருவில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல்

9.00

10

85

 நன்மை தருவார் கோவில் அருகில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல்

10.00

 

மீனாட்சியம்மன் கோயில் தீயணைப்பு நிலைய அலுவலகம்

கடந்த 2018ஆம் ஆண்டு அன்னை மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடந்த தீ விபத்துக்குக் பின், நான் அப்பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டி குரலெழுப்பினேன். ஆனால் அங்கு சித்திரை வீதியில் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் மட்டுமே நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு நிரந்தரமாக புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு அதை பயன்பாட்டுக்குத் திறந்து வைத்துள்ளேன்.


மீனாட்சியம்மன் கோவில் யானை பார்வதி

எனது மதுரை மத்திய தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்ற 25 வயது நிரம்பிய பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை, கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்கேற்பதும் அன்றாடம் அம்மனுக்கும் , சுவாமிக்கும் அபிஷேகம் செய்வதற்காக மதுரை வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் பணிகளையும் செய்து வருகிறது. நான் கோவிலுக்குச் செல்கிற போதெல்லாம் இந்த யானையை சந்திக்க தவறுவதில்லை.

இந்நிலையில் பார்வதி யானையின் இடது கண்ணில் வெண்புரை கோளாறு ஏற்பட்டது. அதனால், யானையின் கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருந்ததுடன், கண்ணில் வலி இருந்து கொண்டே இருந்தது. கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து நான் யானையின் உடல் நிலை குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வருகிறேன்.

கழக ஆட்சி அமைந்தவுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மூர்த்தியுடன் இணைந்து மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வு செய்தபோது பார்வதியின் நிலை குறித்தும் ஆய்வு செய்தோம். சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தை சேர்ந்த சிறப்பு மருத்துவக்குழுவினர், யானையின் இரண்டு கண்களிலும் சிறப்பு கண் சிகிச்சை உபகரணங்களைப் பொறுத்த சில சிகிச்சைகளை மேற்கொள்ள செய்தோம்.



தொடர் சிகிச்சையின் பலனாக யானையின் இடது கண்ணில் இருந்து வந்த வெண்புரை பாதிப்பு 30% குணமடைந்து, யானையின் கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் ஏறப்ட்டுள்ளது.




கலைஞர் நூலகம்

தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர், மக்களின் நெஞ்சங்களின் நீங்கா இடம்பெற்ற தலைவர், நமக்கெல்லாம் அறிவூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் மதுரையில் முற்றிலும் நவீன முறையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. நம் மதுரை மாணவ கண்மணிகளுக்கு, இளைஞர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அமைதியான சூழலில் நூலகம் அமைந்திட இடத்தை தேர்வு செய்துள்ளோம். மதுரை நத்தம் சாலை ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள பொதுப்பணித்துறை வளாக பகுதியில் விரைவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது.


வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்துக்கு உள்ளான வீர வசந்தராயர் மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளதோடு தீ விபத்தால் சேதமடைந்த மதுரை வீர வசந்தராயர் மண்டபம் சீரமைக்கும் பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.


20 ஆண்டுகால பிரச்சனைக்குத் தீர்வு

எனது தொகுதி மக்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு மட்டுமன்றி
தொகுதியைத் தாண்டி பிற பகுதிகளில் இருந்து என்னை நம்பி வரும் மக்களுக்கு நான் உதவிட தயங்குவதில்லை.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஜே.ஜே நகரில் காட்டு நாயக்கர் குடியிருப்பு பகுதியில் 20 ஆண்டு காலமாக மின்சாரமின்றி தவித்த காட்டுநாயக்கர் சமூக மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

ஊடகங்கள் மூலம் கிடைத்த செய்தியினை அவர்கள் வாழுமிடம் சென்று ஆய்வு செய்து விரைந்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அங்கு வாழும் மக்களின் குழந்தைகள்படிப்பதற்கு எந்தவொரு தடையும் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து உடனடியாக அப்பகுதியில் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையினை ஏற்று அப்பழங்குடியின மக்களுக்கு ஒரு வார காலத்தில் பட்டாக்களும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


காந்தி அருங்காட்சியகம்

புகழ்பெற்ற மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு அளிக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டுமென கடந்த ஆட்சியில் சட்டப்பேரவையில் வலியுறுத்தியிருந்தேன். தற்போது ரூ.6 கோடியில் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படுமென சுதந்திர தின உரையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.


மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி

அரசு மூலம் வழங்கப்படும் உதவிகளை நம் தொகுதிமக்களுக்கு விரைந்து கிடைத்திட நான் முயற்சித்து வரும் அதே வேளையில் எனது சொந்த முயற்சியிலும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வருகிறேன். நம் மதுரை மத்திய தொகுதியில் உள்ள 22 வார்டுகளில் நடக்க இயலாத 60 மாற்றுத்திறன் படைத்தவர்களை கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் சக்கரநாற்காலிகளை வழங்கியுள்ளேன்.


மக்கள் குறை தீர்ப்பு

தொகுதி மக்கள் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கைகளை பெறுவதற்கு மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மற்றும் எனது இல்ல வளாகத்தில் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேரில் வர இயலாதவர்களுக்கு ஒவ்வொரு வார்டிலும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே 25 புகார் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது.

எனது குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண் 7305519999, வாட்சப் எண்கள், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.comQR code மூலமாகவும் எந்த நேரமும் புகார் அளிக்க வழி செய்துள்ளேன்.


மக்களை அணுகும் அணி (MAK Team)

“மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து” - என்றார் பேரறிஞர் அண்ணா.


மக்கள் பணி என்பது மக்கள் நம்மை தேடி வர செய்வது அல்ல. நாம் அவர்களை தேடிச்சென்று அவர்களிடம் உள்ள குறைகளை கேட்டு அதற்கேற்ப நம் பணிகளை அமைத்துக்கொள்வதாகும்.  என்னைத் தேடி வரும் பொதுமக்கள் இருபுறம் இருந்தாலும். தொகுதியில் உள்ள குறைகள் உடனுக்குடன் களையப்பட மக்களை அணுகும் அணி ஒன்றினை உருவாக்கியுள்ளேன்.

இந்த அணியினர் மக்களை சந்திப்பது குறித்த முறையான பயிற்சி அளிக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மத்திய தொகுதியினை 25 ஆக பிரித்து ஒவ்வொரு வார்டுக்கும் 1 குழு தலைவர் உள்ளிட்ட 5 நபர்கள் என மொத்தம் 120 இளைஞர்களை நியமித்துள்ளேன். மொத்த அணியினையும் வழிநடத்த ஒருவரும், அதனை நிர்வகிக்க ஒருவரையும் நியமித்துள்ளேன்.

இந்த அணியினர் தினமும் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகங்களில் மக்களை வீடு தேடி சென்று சந்திப்பார்கள். மக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள், கோரிக்கைகளை பெறப்படும் குறைகளின் தன்மைக்கு ஏற்றவாறு தீர்வு காண்பர்.

இதனால் மக்கள் தாங்கள் சந்திக்கும் அன்றாட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும்.

புகார் மற்றும் கோரிக்கை கடிதங்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டு அதன் தகவல்களை சேகரித்து அதன் மீது தொடர் ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. தொகுதி மக்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய தரவுகளை ஆராய்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன்.

நன்றி

எனது பணியினை தமிழகம், மற்றும் தேசிய ஊடகங்கள், பல்வேறு அமைப்புகள் பலவும் பாராட்டியுள்ளதை மக்கள் உங்களுக்குக் கிடைத்த பாராட்டாக நினைக்கிறேன். முதல் 6 மாதங்கள் நல்ல அடித்தளத்தை உருவாக்கி, பின் நல் அமைப்பை உருவாக்கி அதை மக்களுக்கான நலம் பேணும் வகையில் மேம்படுத்திட துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் உதவியுடன் அடுத்து வரும் காலங்களில் மதுரை மத்திய தொகுதியில் பல திட்டங்களை உருவாக்கிடுவேன்.

தொடர்ந்து உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக பணியாற்றுவேன்.

நன்றி.
தங்கள் அன்புள்ள
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.