தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் ஒட்டுமொத்தமான புத்தெழுச்சி பெற்று பல மாற்றங்களைக் கண்டுள்ளது

/

தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் ஒட்டுமொத்தமான புத்தெழுச்சி பெற்று பல மாற்றங்களைக் கண்டுள்ளது

June 2023 - November 2023

 

தமிழ்நாட்டின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இப்பொன்னான தருணத்தில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை உதாரணம் காட்டும் அளவுக்கு ஒரு படி உயர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் என்று கூறுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.

தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் ஒட்டுமொத்தமான புத்தெழுச்சி பெற்று பல மாற்றங்களைக் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ளன. நமது மதுரையும் அதில் பயனடைந்துள்ளது.

நிதி அமைச்சராக நான் இருந்தபோது எனக்கு முழு முதல் ஆதரவளித்து, புதிய முயற்சிகளுக்கு என்னை ஊக்கப்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது நான் பொறுப்பேற்றுள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையிலும் நான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு என்னை ஊக்கப்படுத்தி வருகிறார்.

எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் எனது அறிவு மற்றும் அனுபவத்தைத் கொண்டு உங்களுக்கு நன்மைகளை செய்வதையே முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அதிலும் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மக்களான உங்களின் நம்பிக்கைக்கு என்றென்றும் உண்மையாக இருந்து செயல்பட்டு வருகிறேன்.

கழக ஆட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மதுரை மாநகர் பல வளர்ச்சித் திட்டங்களை பெற்றுள்ளதோடு இனி வரும் மாதங்களில் புதிய மாற்றங்களைக் காணும் என்று உங்களுக்கு இந்த அறிக்கையின் வாயிலாகத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். 

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக எனது பணிகள்

சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்படுத்திய  திட்டப் பணிகள்.

நமது மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பல அடிப்படை வசதி மேம்பாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். மக்களுக்குத் தேவையான சாலை, தண்ணீர், கழிப்பறை, பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாயவிலைக் கடை கட்டிடங்கள் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். 

கடந்த ஜூன் 2023 முதல் நவம்பர் 2023 வரையிலான காலக்கட்டத்தில் 14 முதல் 23 வரையிலான 10 திட்டப்பணிகள் முழுவதும் நிறைவேற்றப்பட்டு திறந்து வைத்துள்ளேன்.

  1. வார்டு 75, வசந்தநகர் 3வது மேற்கு 1வது குறுக்குத் தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேவர் பிளாக் சாலை.
  2. வார்டு 54, காஜிமார் முதல் தெரு மற்றும் ஹீரா நகரில் ரூ.23.50 லட்சம் மதிப்பீட்டில்  தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள 2 புதிய பேவர் பிளாக் சாலைகள்.
  3. வார்டு 52, ரெங்கசாமி சேர்வை சாலையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய  பேவர்  ப்ளாக் சாலை.
  4. வார்டு 60, எல்லீஸ்நகர் காவல் நிலையம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம்.
  5. வார்டு 77, சுப்பிரமணியபுரம், சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் இதுவே முதன் முதலாக அமைக்கப்பட்ட சாலை. அப்பகுதி உருவாகி 50 வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அவர்களுக்கு சாலை வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
  6. வார்டு 55, பகவான் செட்டி மடம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம்.
  7. வார்டு 55, பகவான் செட்டி மடம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடம்.
  8. வார்டு 59, வைத்தியநாதபுரம் கிழக்குத் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல்.
  9. வார்டு 59, சர்வோதயா காலனி கிழக்குத் தெரு, கங்காணி லைன் பகுதியில் 
  10. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல்.
  11. வார்டு 75, ஏ.ஆர்.தோப்பு ஆண்டாள்புரம் பகுதியில்  ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம்.

 

 

புதிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்:

 

 

நமது மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 75, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி காலனியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் “தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பு” கட்டப்படவுள்ளது. 

11 அடுக்குகள் கொண்ட இக்கட்டிடப்பணிகளைக் கடந்த ஆகஸ்டு(2023) மாதம் தொடங்கி வைத்தேன். இக்குடியிருப்பு 11 அடுக்குகளுடன் லிஃப்ட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

முன்னதாக அந்தக் காலனியில் வசித்து வந்த 80 பேருக்கு மாற்று இடத்தில் வசிக்க ஏதுவாக வாடகை உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினேன்.

நலத்திட்ட உதவிகள்

திராவிட இயக்கம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய திராவிட மாடல் அரசு வரை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட ஆதரவற்ற விளிம்பு நிலை மனிதர்களை, பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை, கொள்கைகளை வகுத்து அவர்களைச் சமூகத்தில் தலைநிமிரச் செய்து வருகிறது.

முதியோர்கள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை மட்டுமன்றி ஏழைப்பெண்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி உள்ளிட்ட தொழில் உபகரணங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.  

மதுரை மத்தியத் தொகுதி மக்களுக்காக எனது அலுவலகத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு எனது சட்டமன்ற அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு, வருவாய்த்துறை அலுவலகர்களிடம் முறையாக சமர்ப்பித்து எவ்வித இடையூறுமின்றிப் பயனாளிகளுக்கு உதவித்தொகை பெற்றுத்தரப்படுகிறது

 

வான் - கனவுகள் மெய்ப்படும் – மகளிர் குழுக்களுக்கான சிறப்புத் திட்டம்

மதுரை மத்தியத் தொகுதியில் நலிவடைந்த, வாய்ப்பற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒவ்வொன்றும், அக்குடும்பத்தில் உள்ள பெண்களின் மூலம் மாதாமாதம் குறைந்தபட்சம் ரூ.10000 வருமானம் ஈட்டிட இத்திட்டம் வழி செய்யும் வகையில் இத்திட்டத்தைத் தொடங்கினேன்.

முதற்கட்டமாக ”வீட்டுக்கு ஒரு ஸ்டார்ட் அப்” என்ற இலக்கோடு வார்டு 75 சுந்தராஜபுரம் பகுதியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அவர்களை ஸ்ரீ பொன் தாரகை எண்டர்ப்ரசஸ் என்ற சிறு தொழில் நிறுவனமாக உருவாக்கி கடனுதவி பெற்றுத் தந்து தற்போது அந்நிறுவனம் பெண்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக…

ஒருங்கிணைந்த தையற் தொழிற்கூடம் 

வான் திட்டத்தின் இரண்டாவது பகுதியாக மகபூப்பாளையத்தில்  மதுரை ராஜ்மஹால் நிறுவனத்தின் CSR நிதியின் மூலம் 25 நவீன மின் தையல் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தையல் தெரிந்த மகளிருக்கு சட்டை, பாவாடை, நைட்டி மற்றும் துண்டுகள்  ஆகியவற்றை மொத்தமாக தைத்துத் தரும் மையத்தைத் தொடங்கி வைத்தேன். எந்த முதலீடும் இன்றி மத்திய தொகுதியைச் சேர்ந்த பெண்கள் இங்குப் பணியாற்றி அதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இதில் மூன்று வெவ்வேறு சுயஉதவிக்குழுவில் இருந்து மகளிர் 25 பேர் இங்கு வந்து பணியாற்றுகின்றனர். இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இன்னும் பல தொழிற்கூடங்கள் தொடங்கப்பட உள்ளன.

 

 

மருத்துவ உதவியாளர் பணி பயிற்சி மையம்

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயனுறும் வகையில் மருத்துவ உதவியாளர் பணிக்கான பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளேன். இந்த மையத்தில் பெண்கள் பயிற்றுவிக்கப்பட்டு பட்டய சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் நகரத்தின் பல்வேறு மருத்துவ்மனைகளில் பெண்கள் பணி அமர்த்தப்படுவர். இதன் மூலம் அவர்களின் வாழ்வு மேம்படையும். தற்போது 30க்கும் மேற்பட்ட பெண்கள் இம்மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். 

 

 

இலவசத் தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்

நம் தொகுதியைச் சேர்ந்த எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் பள்ளிப் படிப்பு மற்றூம் கல்லூரி படிப்பை முடித்திருந்தாலும் அவர்கள் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள கூடுதல் படிப்பு மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது. மாறும் காலத்திற்கேற்ப தங்களை தக்வமைத்துக்கொள்ள கூடுதல் தகுதிக்ளை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்இயது அவசியம். அதை கருத்தில் கொண்டு மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ் எஸ் காலனி நாவலர் மூன்றாவது தெருவில் இலவச தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்துள்ளேன். 

 

 

இம்மையத்தில் மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படித்துப் பயன்பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக எனது செயல்பாடுகள் 

தி.மு.க ஆட்சி செய்யும் காலம் என்பது தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பொற்காலமாகும். முத்தமிழறிஞர் கலைஞர் பெற்றுத் தந்த பெயர் இது. அவரது வழியில்  நடைபோடும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மிகப்பெரிய அளவில் எழுச்சிபெற நான் முயற்சித்து வருகிறேன்.

TNeGA பயிற்சி மையம்

முதற்கட்டமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் TNeGA ரூபாய் 1.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்தைத் திறந்துவைத்தேன். இம்மையம் மின் ஆளுமை முகமையின் அதிகாரிகளுக்கும் மற்ற துறை பங்குதாரர்களுக்கும் பயிற்சி அளிப்பதோடு திறன்-வளர்ப்பில் ஓர் மாற்றத்தை உருவாக்கும். 

 

 

பிளாக்செயின் தொழில்நுட்பம் கொண்ட நம்பிக்கை இணையம் (NI)

அரசுத்துறைகளிடையே தரவு மற்றும் டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பாகப் பரிமாற்றம் செய்ய பிளாக்செயின் தொழில்நுட்பம் கொண்ட நம்பிக்கை இணையம் (NI) சேவையைத் தொடங்கிவைத்தேன். ஆவணங்கள் மற்றும் தரவைப் பாதுகாக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் இந்த உட்கட்டமைப்பு,  தரவுகளைச் சேதப்படுத்துதல், ஹேக் மற்றும் கசிவுகளிலிருந்து பாதுகாக்கிறது. இ-பெட்டகம் செயலி மூலம் NI பிளாக்செயின் சேவையைப் பயன்படுத்தி 24 இ-சேவை சான்றிதழ் வகைகளைப் பொதுமக்கள் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்ளலாம்.  

கேபிள் டிவி விநியோகத்தில் மாற்றம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளூர்க் கேபிள் டிவி ஆபரேட்டர்களுடன் கலந்தாலோசித்து வினியோகம் மற்றும் சேவைகளில் உள்ள இடர்பாடுகள் மற்றும் குறைகளை குறித்து கேட்டறிந்து அதற்கேற்ப மாற்றங்களை முன்னெடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் அதன் பலன்கள் முழுமையாகத் தெரிய வரும்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வளர்ந்துவரும் மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களால் கடந்த மே 15, 2023 அன்று தொடங்கி  வைக்கப்பட்ட புத்தாய்வு மையமான தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT Hub), முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன், ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

ICT Academay - BRIDGE 23

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த ICT ACADEMY அமைப்பு, தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் மத்தியில் உள்ள இடைவெளியைக் குறைத்து புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சிகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

 

BRIDGE 23 எனும் மனித வளம், வளர்ச்சி & அணுகல் குறித்த கருத்தரங்கினை நடத்தி வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் மதுரை மற்றும் கோவை, அக்டோபர் மாதம் டெல்லி, டிசம்பர் மாதம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற BRIDGE23 கருத்தரங்கங்களை தொடங்கி வைத்தேன்.

ELCOT CII - CONNECT

நவம்பர் மாதம் சென்னையிலும், செப்டம்பர் மாதம் மதுரையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையின் ELCOT நிறுவனம் இணைந்து ஒருங்கிணைத்த CONNECT23 கருத்தரங்கில்  கலந்துகொண்டேன். துறை ரீதியாக எதிர்காலத்தின் தேவை, துறை வளர்ச்சிக்கு முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தேன்.

 

 

தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டம்:

தகவல் தொழில்நுட்பவியல் & டிஜிட்டல் சேவைகள் துறையின்  சார்பில் தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின்கீழ், தமிழ்க் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார். அத்தோடு தமிழ்க் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி குறித்த குறிப்பேட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

ELCOT ஒருங்கிணைந்த இணையதளம்:

தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 

 

NASSCOM

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கூட்டமைப்பான NASSCOM-இன் நிருவாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். வளர்ந்துவரும் தொழில்நுட்பக் கட்டமைப்பு, திறமைவாய்ந்த மனிதவளம் ஆகியவை தமிழ்நாட்டுக்குக் கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதால் தொழில்நுட்ப மையமாகத் தமிழ்நாடு வளர்ந்து வருவதன் முக்கியத்துவத்தைக் குறித்து இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது. தொழில்நுட்பத் துறைக்கு எனது ஆதரவு என்றென்றும் உண்டு எனவும், Deep Tech (டீப் டெக்), ER&D (பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) போன்ற வளர்ந்துவரும் துறைகளின் தேவைகளையும் நிறைவு செய்வதில் எனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு, அதன் வளர்ச்சிக்கும் எனது துறை துணை நிற்கும் என தெரிவித்துக்கொண்டேன்.

ஸ்மார்ட் மாவட்ட நிர்வாகம்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையால் IoT தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி “ஸ்மார்ட் மாவட்ட நிர்வாகம்” என்ற திட்டம் உருவாக்க ஐக்கிய குடியரசின் இந்தோ- பசிபிக், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் மாண்புமிகு அனி மேரி டிரவேல்யன் ஆகியோர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (DiTN)

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் ஆவணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு ஆளுமை மற்றும் நிருவாகத்தின் செயல் திறனை மேம்படுத்தவும், டிஜிட்டல் ஆளுமை மற்றும் அரசின் சேவை வழங்களை மேம்படுத்துவதற்காகவும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால கொள்கைகள் நடைமுறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் முதல் முறையாக  டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் உருவாக்கப்பட்டது. அரசின் துறைகள் தங்களுக்கான டிஜிட்டல் உருமாற்ற வியூகம் உருவாக்குவதற்கும் அதனைச் செயல்படுத்துவதற்கும் ஒரு வழிகாட்டியாக இந்த ஆவணம் பயன்படும். 

 

மின் ஆளுமை முகமை புதிய பணியிடக் கட்டிடம்

சென்னை அண்ணா சாலை P.T.Lee.செங்கல்வராயர் அறக்கட்டளை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநரகத்தில் கூடுதல் பணியிட வசதிக்காக மூன்றாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை திறந்து வைத்தேன்.

Stakeholders Consultation Workshop

சென்னையில், ELCOT நிறுவனம் சார்பில் நடைபெற்ற "Tamil Nadu - The Global AVGC-XR Hub" எனும் TN AVGC - XR 2023 கொள்கைக்கான பங்குதாரர்கள் ஆலோசனைப் பயிற்சிபட்டறையைத் (Stakeholders Consultation Workshop) தொடங்கி வைத்தேன். 

 

 

கள ஆய்வு: 

கோவை விளாங்குறிச்சிப் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்பச் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டப்பட்டு வரும் ELCOT Tower கட்டுமான பணிகளை, ELCOT  மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். 

தெலுங்கானா பயணம்:

எனது தலைமையிலான தகவல் தொழில் நுட்பக்குழு, தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய புத்தாக்கமையமான THub மையம் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய Prototyping மையமான  T-WORKS மையத்தையும்  பார்வையிட்டது. இப்பயணத்தின்போது தெலுங்கானா மாநில ஐடி மற்றும் தொழில் துறை அமைச்சர் KTR அவர்களையும் சந்தித்து மாநிலங்களுக்கிடையேயான புரிந்துணர்வு குறித்து கலந்தாலோசித்தோம்.

கேரளா பயணம்: 

கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் (KFON) மற்றும் கேரளா தகவல் தொழில்நுட்ப துறை குறித்த அறிந்திட தமிழக அலுவலர்கள் குழுவுடன்  திருவனந்தபுரம் சென்று கேரளா முதல்வர் திரு பினராய் விஜயன் அவர்களை சந்தித்தேன். அத்தோடு கேரள சட்டமன்ற சபாநாயகர் அவர்களின் அழைப்பை ஏற்று கேரள சட்டமன்ற நிகழ்வுகளை பார்வையிட்டேன். 

சந்திப்பு:

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மாண்புமிகு திரு.மில்டன் டிக் அவர்கள் தலைமையிலான, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு என்னை  கடந்த அக்டோபர் 9ஆம் தேதி சந்தித்தது.

 

 

மதுரை மாநகர் மேம்பாட்டுக்கான உட்கட்டமைப்பு திட்டங்கள்

நகர உட்கட்டமைப்பு

மதுரை மாநகர உட்கட்டமைப்பு மேம்படவும், மதுரை மாநகரின் போக்குவரத்தை சீர் செய்யும் வகையிலும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. அவரது ஆணைக்கிணங்க மதுரை நகரை மேம்படுத்திட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், நிபுணர்களுடன் ஆலோசனை செய்து பல முதற்கட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

மெட்ரோ ரயில்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு மெட்ரோ ரயில் அமைத்துத் தந்தது. அவர் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் அமைத்திட ஆணையிட்டுள்ளார். அவரது வழிகாட்டுதலில் கடந்த மார்ச் (2023) மாதம் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில்  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்திருந்தேன்.

தற்போது மதுரையில் திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை மொத்தம் 31 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. மதுரை திருமங்கலத்திலிருந்து திருநகர், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோவில், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பழங்காநத்தம், வசந்தநகர் பகுதியிலிருந்து கோரிப்பாளையம் வரை பூமிக்குக் கீழே மெட்ரோ ரயில் பாதை செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 18 ரயில் நிலைய நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளது. 

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புதிய பாலங்கள்

மதுரை மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

கோரிப்பாளையம் சந்திப்பில் பாலம்

கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமானப் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி அம்மன் கோவில், இரயில்வே நிலையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் நகரின்  வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. வைகை ஆற்றின் வடபுறம் அரசு இராஜாஜி மருத்துமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாட்டுத் தாவணி பேருந்து  நிலையம், மதுரை மாநகராட்சி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் அமைந்துள்ளன. நகரின் தென் பகுதியிலிருந்து வடபகுதியில் அமைந்துள்ள அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு  இச்சந்திப்பின் வழியாகப் போக்குவரத்து  நடைபெறுவதால்  இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  

 

 

நீண்ட நெடுங்காலமாக கோரிக்கையாகவே இருந்த கோரிப்பாளையம் பாலம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன்  மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு  மேம்பாலம் அமையவுள்ளது.  இப்பாலத்தின் ஏறுதளம்  தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு அருகில் இணையாக புதிதாகக் கட்டப்படும் பாலம்  வழியாக 1.300 கி.மீ நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்துடன் ஒருதிசை வழித்தட   மேம்பாலமாகச் சென்று நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில்  கட்டப்படவுள்ளது. மேலும், கோரிப்பாளையம் சந்திப்பில், பாலத்திலிருந்து செல்லூர் நோக்கி செல்ல கூடுதலாக  700 மீட்டர்  நீளத்திற்கு இறங்குதளம்   8.50 மீட்டர்  அகலத்துடன் அமையவுள்ளது.  

அப்பல்லோ சந்திப்புப் பாலம்

மதுரை - தொண்டி சாலையில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் அப்பல்லோ சந்திப்பில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவச் சந்திப்பு அமைக்கும் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மிகவும் நெரிசல் மிகுந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆவின் மற்றும் அப்பல்லோ சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னலை அப்புறப்படுத்தி அப்பகுதியினை அகலப்படுத்தி வட்ட வடிவச் சந்திப்பு (Roundabout) அமையவுள்ளதோடு இந்த மேம்பாலம் 30 தூண்களுடன் மொத்தம் 1100 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது. 

செல்லூர் இணைப்புப் பாலம்

கோரிப்பாளையத்தில் இருந்து சாலையைப் பயன்படுத்துவோர் வடக்கு கரை நான்கு வழிச் சாலைக்குள் நுழைவதற்கு வசதியாக செல்லூர் மேம்பாலத்தில் தத்தனேரிப் பக்கத்திலிருந்து கூடுதல் இணைப்பாக வைகை வடக்குக் கரை சாலையை இணைப்பதற்காகப் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் இந்தக் கூடுதல் இணைப்பு பாலம் 11 கண்களுடன் மொத்த நீளம் 320.00 மீ மற்றும் 7.50 மீ அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆற்று சந்திப்பில் இருந்து பாலம் கட்டுகையில் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது. எனவே புதுயதாக ஒரு பாலம் அமைத்தால் அது இரயில்வே நிர்வாக அனுமதி பெற தாமதாக வாப்பிருந்தது. கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கும் பொருட்டு ஓர் இணைப்பு பாலம் அமைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டு எனது கருத்து ஏற்கப்பட்டது.

தற்போது நகரின் கிழக்குப் பகுதியில் (கோரிப்பாளையம்) இருந்து மேற்குப் பகுதிக்கு (ஆரப்பாளையம், சமயநல்லூர், அலங்காநல்லூர்) வைகை வடகரை சாலை வழியாக நகரப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வண்டியூர் கண்மாய் மேம்பாட்டு பணிகள்

மதுரை வண்டியூர் கண்மாயை மேம்படுத்தி ரூ.99 கோடியில் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டத்தின் கீழ் வண்டியூர் கண்மாயை மதுரை மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம், ரூ.99 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

 

 

450 ஏக்கரில் அமைந்துள்ள வண்டியூர் கண்மாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு கண்மாயைச் சுற்றிலும் 7 கி.மீ. நடைபாதை உருவாக்கப்படுகிறது. கண்மாயின் மையத்தில் அழகான சிறிய தீவு உருவாக்கப்படுகிறது. அந்த தீவுக்கு பொதுமக்கள் மரப்பாலம் வழியாக கண்மாயின் அழகை ரசித்தபடியே நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பெரியவர்கள் மரப்பாலத்தில் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் கண்மாய் மாசடைவதும் தடுக்கப்படுகிறது.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மாண்புமிகு  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எண்ணத்தில் உருவாகி இன்று மதுரை மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகவும் பிரமாண்டமான நூலகம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் அமைந்துள்ளது.  நூலகம் அமைத்திட்ட நம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது கலைஞர் நூலகம் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்ததில் நானும் ஒருவன் என்ற வகையிலும், எனது இல்லத்திற்கு மிக அருகில் இந்நூலகம் அமைந்துள்ளது என்பதிலும் பெருமையடைகிறேன்.

மதுரையில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், அனைத்துத் துறை சார்ந்த நிபுணர்களுக்கும் ஒரு மாபெரும் அறிவுப் பெட்டகமாக அமைந்துள்ள கலைஞர் நூலகம் மதுரை மாநகரத்தின் மிகச்சிறந்த உட்கட்டமைப்பாகவும், அறிவுசார் மையத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை போற்றிடும் பசுமை மதுரை திட்டம்

இளைஞராக தனது பொதுவாழ்க்கையைத் தொடர்ந்து முதிர்ந்த தனது இறுதிக்காலம் வரை தமிழ் மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த முத்தமிழறிஞர் கலைஞரை நினைவுகூறும் வகையில் 

மதுரை மாநகராட்சி சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் "பசுமை மதுரைத் திட்டத்தின்"  கீழ் வைகை தென்கரையில் யானைக்கல் பாலம் முதல் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பு வரை நடைபெற்ற பிரம்மாண்டமான மரம் நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் மனித சங்கிலி

 

 

தனது வாழ்நாள் முழுவதும் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகராட்சி ஒருங்கிணைப்பில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் இணைந்து  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவத்தை பிரதிபலிக்கும் மிகப் பிரம்மாண்டான மனித சங்கிலியினை தொடங்கி வைத்தேன்.

காலை உணவுத் திட்டம் – 2ஆம் கட்டம்

நூற்றாண்டு வரலாறு கொண்ட பள்ளி மானவர்களுக்கு உணவளிக்கும் உன்னதத் திட்டம் காலை உணவாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால் மேம்படுத்தப்பட்டது. அதன் 2ஆம் கட்டத்தை  வார்டு 93 முத்துப்பட்டியில் அமைந்துள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தேன்.

 

 

நிகழ்வில் அப்பள்ளியில் படிக்கும் விஷ்வா என்ற மாணவன் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே மயக்கம் வருவதாக சொன்னான். அவனது உடல் நிலையை மருத்துவர்களை அழைத்து பரிசோதனை செய்தோம். தொடர்ந்து அவனுக்கு ஊட்டச்சத்து மருந்துகள், உணவுகள், பழங்கள் என அளித்து அம்மாணவனை கவனித்து வருகிறேன்.

ஏழை எளிய மாணவர்கள், ஊட்டச்சத்து, சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வசதி இன்றி கல்வி கற்க பள்ளிக்கு வருவதால் அவர்களால் ஈடுபாட்டுடன்  படிப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவளித்துப் படிப்பைக் கற்று கொடுத்தால் அவர்கள் திறம்பட கற்றுக்கொண்டு சிறந்து விளங்குவர்.  முதல்வர் அவர்களின் இத்திட்டத்திற்கான நல்ல நோக்கத்தை இதிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம்.

மகளிர் உரிமைத்தொகை

”1 கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த்தொகை: என மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் குறிப்பிடப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றில் மட்டுமல்ல வரலாற்றிலும் இது போன்ற மாபெரும் திட்டம் இருப்பதாக தெரியவில்லை. 

பெண்களின் முன்னேற்றத்திற்குத் தலைமுறைகள் தாண்டியும் பயனளிக்கும் திட்டமிது!

மதுரையில் இத்திட்டத்தினை நமது மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் தொடங்கி வைத்தேன்.

பின்னக்கிள் இந்தியா

மதுரையில் Pinnacle Infotech நிறுவனத்தில் உலகளாவிய பொறியியல் மையத்தைக் காணொலிக் காட்சியின் வழியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வில் நான் நேரில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். எண்ணற்ற இளைஞர்களுக்கு குறிப்பாக தென் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் அந்நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு

நமது தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு,க.ஸ்டாலின் அவர்களால் புதிய அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் என் தாயார் திருமதி ருக்மணி பழனிவேல்ராஜனை நியமித்த முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

 

அறங்காவலர் குழு தலைமையில் மீனட்சியம்மன் கோயில் பராமரிப்புப் பணிகள் விரைவு பெற்று விரைவில் கோயில் குடமுழுக்கு நடைபெறும். 

மக்கள் குறை தீர்ப்பு

அரசு அலுவலகங்களை தேடி மக்கள் அலைவதைத் தவிர்க்கும் வகையில், அரசு இயந்திரம் மக்களைத் தேடி செல்லவேண்டும் என்பதுதான் எனது கருத்தும் கொள்கையுமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற மகத்தான திட்டங்கள் மூலம் மக்களைத் தேடிச் சென்று உதவி வருகிறது.

 

 

எனது அலுவலகத்தைத் தேடி மக்கள் வருவதைக் குறைக்கும் வகையில் நான் ஆங்காங்கே சில ஏற்பாடுகளை செய்துள்ளேன். அதில் ஒன்றுதான் புகார் பெட்டிகள். தொகுதிக்கு உட்பட்ட 16 வார்டுகளில் மக்கள் எளிதில் அணுகக்கூடிய 25 இடங்களில் நான் புகார் பெட்டிகளை நிறுவியுள்ளேன். 

மதுரை மகபூப்பாளையத்தில் எனது மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இ-சேவை மையத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனது இல்ல வளாகத்தில் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

மேலும் எனது குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண் 7305519999, வாட்சப், மின்னஞ்சல் ptrmadurai1@gmail.com,  இந்த அறிக்கையில் உள்ள QR code மூலமாகவும் எந்த நேரமும் புகார்களையும், கோரிக்கைகளையும் மக்கள் அளிக்கலாம்.

பெறப்படும் புகார்கள் துறை ரீதியாக அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது தொடர் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நன்றி! 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் எனக்குத் தொடர்ந்து உயர் பொறுப்புகளை வழங்கி என்னைத் திறம்பட பணியாற்ற ஊக்கமளித்து வருகிறார். தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு என்னை அமைச்சராகத் தேர்வு செய்து பணியாற்றிட உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் துறையின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டில் இந்தத் துறையினால் ஏற்படும் மாற்றத்திற்கும் நான் தொடர்ந்து உழைத்திடுவேன் என இவ்வறிக்கையின் வழியாக நம்பிக்கை தெரிவிக்கிறேன்.

இத்தனை பொறுப்புகள் என்னைத் தேடிவரக் காரணாக இருந்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பை முதன்மையானதாகக் கருதி நான் பணியாற்றி வருகிறேன். நான் ஏற்றுள்ள பொறுப்புகள், துறைகள் மூலம் பல புதிய திட்டங்கள், நன்மைகள் நம் தொகுதி மக்களுக்குக் கிடைத்திடும் வகையில் செயலாற்றி வருகிறேன்.

என்றென்றும் என்னை நம்பி வாக்களித்த உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகப் பணியாற்றுவேன். நன்றி. வணக்கம்.

 

தங்கள் அன்புள்ள, 

பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன்