/

நேதாஜி ரோடு வணிகர்கள் சங்கம் – பொதுக்குழு கூட்டம்

Published Date: March 11, 2019

என் தொகுதியில் உள்ள, இங்கு உள்ளவர்கள் அனைவரும் உறுப்பினர்களாக உள்ள நேதாஜி ரோடு வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மிகவும் முக்கிய நிகழ்வாக கருதுகிறேன்.

இந்த சங்கத்தில் உள்ள நீங்களெல்லாம் எங்கு வசிக்கிறீர்கள் என எனக்கு தெரியாவிட்டாலும், உங்களைபோன்ற குறு, சிறு வர்த்தகம் செய்பவர்கள் தங்களது வியாபாரம் நிமித்தம் எனது தொகுதியில் இருப்பதால், நீங்கள் என் தொகுதி வாக்காளர்களாக இல்லாவிட்டாலும் கூட, இங்குள்ள மக்களுக்கு உங்களால் வேலைவாய்ப்பு, அதனால் பொருளாதார வளர்ச்சியும் அளிப்பவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். அதனை கருத்தில் கொண்டு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதும் எனது முக்கிய பொறுப்பாக உணர்கிறேன்.

அதுமட்டுமல்ல, இங்கு தலைவர் அவர்கள் இரண்டு முக்கியமான கருத்துகளை குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக, கூட்டாக ஒரு சங்கமாக இருந்ததால் கடந்த 35 வருட காலமாக உங்களுக்கு கிடைத்த நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். இரண்டாவதாக, இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் மிக முக்கியமானது பணமல்ல, பெருந்தன்மையே என்று தெளிவாகவும், அழகாகவும் கூறினார். அதன் அடிப்படையில் சில கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும், உங்களுக்கு  நிறைய கோரிக்கைகள் இருப்பதாலும் நான் இங்கு தத்துவம் பேசுவது சரியாக  இருக்காது என்பதால் செயல்பாடு குறித்தும், அச்செயல்பாட்டுக்கு தேவையான அடிப்படை கொள்கைகள் குறித்தும் பேசுகிறேன்.

தற்போது இங்கு ஜனநாயகம் முடங்கி போய் உள்ளது என நான் பலமுறை சுட்டிக்காட்டி வருகிறேன். இங்கு இருக்கும் மாநில அரசு தகுதியில்லாத அரசு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தை காண்பித்து வாக்குகளை பெற்று, பின்னர் அவர் மர்மமாக மறைந்த பிறகு ஊழலுக்காக நடந்து வருகிற அரசு. அதிலும்  திறமையற்ற அரசு என்பதுதான் நம் பெரிய கவலை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், மக்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்காமல், அவர்களுடைய தேவைகளை கேட்டறியாமல் திட்டங்களை தீட்டுகிற அரசு. ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரிய திட்டங்கள் மூலம் ஊழல் செய்வதற்கு மட்டுமே நடைபெறும் அரசு.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேசியிருக்கிறேன், சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன்.

உங்களுக்கெல்லாம் எது தேவை என்று கேட்காமல், எங்கு சாலை அமைக்கப்படவேண்டும், எங்கு கட்டடம் எழுப்ப வேண்டும், எங்கு குடிநீர் தொட்டி அமையவேண்டும் என்று எதுவுமே கேட்காமல் அவர்களாகவே தான்தோன்றித்தனமாக செயல்படுவது தவறாகும்.

இந்த செயல்பாடுகளை திருத்த வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அது என் கடமையும் கூட. ஆனால் இருக்கிற சூழ்நிலையில் எனது தரப்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அதனால் விளையும் வெளிப்பாடு எனக்கு திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை.

ஆனாலும் இந்த சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மக்கள் சரியாக, தெளிவாக அடுத்து வருகிற தேர்தலில் வாக்களிப்பார்கள் என நினைக்கிறேன். யார் வருவார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. மக்களுக்கு மதிப்பளித்து பதில் சொல்லக்கூடிய, நாளைக்கு மக்களிடம் சென்று வாக்குகளை பெற வேண்டும் என்று பயம் கொண்ட அரசியல்வாதிகள் வரவேண்டும். அது போதும்.

என்னிடம் நீங்கள் சாலைவசதி, குப்பைத்தொட்டி, நடைமேடை வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். இதையெல்லாம் சரி செய்து தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று யாரும் மறுக்க முடியாது. நான் கடந்த மூன்று வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். ஆகவே இது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நான் அறிவேன்.

அரசு சரியான முறையில் நிதிகளை திரட்டி, திட்டங்களை சரியாக தீட்டி, பின்பு செயல்படுத்த வேண்டும். எனக்கு இப்போது இருக்கும் கவலையெல்லாம், எப்படி நாம் அரசாங்கத்தை சுத்தப்படுத்துவது? ஒரு நல்ல முயற்சியோ அதற்கு மேல் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்பதுதான். சமுதாய ஒழுங்கு, கட்டுப்பாடு இப்பொது சரிந்துவிட்டதாக எண்ணுகிறேன். 

இன்று நான் பல நிகழ்ச்சிகளுக்கு சென்ற இடங்களில் கூட குப்பைகள் குறித்த புகார்களை ஓரிருவர் சொல்லிக்கொண்டு தான் உள்ளனர். நடைபாதை அமைத்து தருமாறும், சாலை வசதி கோரியும் கோரிக்கைகளை எனக்கே பலர் அளிக்கின்றனர். நானும் அவர்களது கோரிக்கைகளை  விரைவாக நிறைவேற்றி வைப்பது உண்டு.

அவ்வாறு ஃபேவர் ப்ளாக் சாலை அமைத்து தந்த  ஒரு வாரத்திற்குள்ளாகவே அங்கு வசிப்பவர்கள் மாடுகளை சாலையின் நடுவே கட்டி அசுத்தம் ஏற்படுத்திவிடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் சமூக நலக்கூடமோ, அங்கன்வாடி மையமோ கட்டித் தந்தால் அது இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடும் இடம் ஆகிவிடுகிறது. இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாற்றி விடுகின்றனர்.

மக்களிடையே சமுதாய மனநிலையும், ஒழுங்கும் பொதுவாக இருக்கவேண்டிய நிலையில் இல்லாததால் நிறைய பிரச்சனைகள் உருவாகிறது. திறமையானவர்கள், நேர்மையானவர்கள் சேர்ந்து ஓரளவு அரசாங்கத்தை திருத்திவிடுவோம். ஆனால் சமுதாயத்தை எப்படி திருத்துவது.

உடனடியாக ஒரே நாளில் நீங்கள் கேட்கும் ஒரு நடைமேடையை எங்களால் போட முடியும். ஆனால் ஒரு ஆறு மாதம் கழித்து நான் திரும்ப வந்து பார்த்தால் யாருக்கெல்லாம் பலம் இருக்கிறதோ? அசாதரண ஆசை இருக்கிறதோ? உடனே அவர்கள் அந்த நடைபாதையை தங்களுக்காக கட்டிடத்தையோ, பொருட்களையோ, சிறு கடையையோ வைத்து ஆக்கிரமித்து விடுவர்.

இப்போதைக்கு இதை நான் பேசுவதற்கும் தகுதியில்லை. அவ்வாறு நான் பேசினால் அரசாங்கம் செய்ய வேண்டியதில் 10 சதவிகிதம் கூட செய்யாமல் மக்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுவதா என நம்மை திருப்பி கேட்பர்.

என்னுடைய எண்ணம் என்னவென்றால், அரசாங்கம் தன் செயல்பாடுகளை முழுமையாக செய்ததற்கு பின்னால் மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறு விழிப்புணர்வு உண்டாகி மக்களே முன்னேறினால்தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் நிரந்தர தீர்வு கிடைக்கும். அதுதான் உண்மை.

அதற்கு ஒரு முன்னோட்டமாக இந்த சங்கத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக, மற்றவர்களுக்கு உறுதுணையாக இருந்து, நீங்கள் சார்ந்த சமுதாயத்தில் அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்கும்படியான ஒரு முன்னுதாரனத்தை வகுத்து உங்கள் செயல்பாடுகளை வகுத்து கொள்ள வேண்டும்.

இந்த வகையில் என் கருத்துகளை முன்வைத்து என்னிடம் நீங்கள் அளித்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து நானே முன்னின்று சம்பந்தப்பட்ட துறையினரோடு பேசி நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறிக்கொண்டு இந்த கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி கூறி விடைபெருகிறேன்.

நன்றி,  வணக்கம்.

 Articles Year Wise: