Published Date: November 8, 2018
நவம்பர் 8 - இந்திய ஜனநயாக நிறுவனங்களின் கருப்பு நாள். ஏன்?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் அதன் நீட்சியும் மிகுந்த சிரமங்களுக்கு இடையே உருவாக்கப்பட்ட ரிசிர்வ் வங்கி, நீதித்துறை மற்றும் முன்னணி ஊடகங்களின் நன்மதிப்பை பெரிதும் குலைத்துள்ளது.
வணக்கம்!
அரசியலில் மிக அரிதான நிகழ்வாக பிஜேபி தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பணமதிப்பு நீக்கம் நடைபெற்ற நாளான நவம்பர் 8ஐ இந்தியா முழுக்க கருப்பு தினமாக அனுசரிக்க ஒருமித்த அரசியல் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். கடந்தாண்டு நடந்த சம்பவங்கள் மூலம் இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடியுமா?.
இந்தக் கேள்வியை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள இந்த முக்கியமான அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குப் பின்னர் நவம்பர் 15, 2016 அன்று நான் எழுதிய கட்டுரையை(https://www.facebook.com/meendumptr/posts/563866847139860) பார்க்கவும். இத் திட்டத்தின் ஆலோசனை கட்டத்தின் போதும் கட்டமைப்பின் போதும் கடைபிடிக்கப்பட்ட "ரகசியத்தன்மை" பல்வேறு ஆபத்துகளை உருவாக்கும் என்று நான் அப்போதே சுட்டிக் காட்டினேன். கருப்புப் பணத்தை ஒழிப்பது என்ற இத் திட்டத்தின் இலக்கை அடையாமல் போவது,பொருளாதார சீரழிவு போன்ற எதிர்பாராத விளைவுகளை சந்திப்பது போன்ற ஆபத்தின் இரு பக்கங்களையும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.
ஓராண்டுக்குப் பிறகு எனது அச்சங்கள் சரிதான் என்று ஊர்ஜிதமாக தொடங்கியுள்ளன. டாக்டர் மன்மோகன் சிங் போன்ற பொருளாதார அறிஞர்கள், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற கொள்கை ஆய்வாளர்கள், சமூக வலைதள பிரபலங்களான ஜேம்ஸ் வில்சன் மற்றும் பலர் பெருநிலை பொருளியல், நுண் பொருளியல் சரிவுகள், மக்கள் சந்தித்த இன்னல்கள் என இந்த மோசமான திட்டத்தின் பின் விளைவுகளை முழுமையாக விவரித்தனர்.
பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இலக்குகளை வசதிக்கு ஏற்றாற்போல் மாற்றிகொண்டே இருந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பணப் புழக்கம் போன்ற அதிகாரப் பூர்வமான தகவல்கள் இந்த நடவடிக்கையை 'முழுமையான பொருளாதாரக் கொள்கை பேரழிவு' என்றே சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.
இக்கட்டுரையில் நவம்பர் 8ஐ இந்தியா ஏன் ஜனநாயகத்திற்கு எதிரான, சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான கருப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்பதற்கான காரணங்களை முற்றிலும் வேறுபட்ட கோணங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
பரவலாக பதிவாக்கப்பட்ட நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் கோர்வையான அறிவிப்புக்கு வழிவகுத்த இந்த முடிவெடுக்கும் செயல்முறை கவலையை ஏற்படுத்துகின்றது. அத்தோடு அவை அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிகார வரம்புக்கு உட்பட்டதா, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதா என்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
உதாரணமாக இது போன்ற தொலைநோக்கு காண நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற பிரதமரின் எண்ணத்தை வெகு சிலர் (ஐவர் என்று சொல்லப்படுகிறது) மட்டுமே அறிந்திருந்ததாகவும், அவர்கள் மட்டுமே இத்திட்டத்தை உருவாக்குவதில் இருந்து செயல்படுத்துவது வரை அனைத்திலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
உண்மையில் வெளியான தகவல்கள் நவம்பர் 8இன் மாலைப்பொழுது எவ்வாறு இருந்தது என்று விவரிக்கிறது- அன்று கேபினட் அமைச்சர்களின்செல்பேசி இணைப்புகள் இந்தத் திட்டத்தைப் பற்றி அறிவிக்கப்பட்டதற்கும் பிரதமரால் தேசத்திற்கு அறிவிக்கப்பட்டதற்கும் இடையேயான நேரத்தில் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு இருந்தன. காட்பாதர் திரைப்படம் போன்று நடைபெற்ற இந்த சம்பவங்கள் சீராக செயல்படும் ஜனநாயகத்திற்கு விரோதமானவை.
1971 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிசா அவசர சட்டத்தை தவிர்த்து இதுபோன்று அமைச்சரவையை சேர்ந்தவர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் தெரியாமல் மிகக் குறைந்த நபர்களால் முக்கியமான கொள்கை முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட மற்றொரு நிகழ்வை யோசித்துப் பார்ப்பதே கடினம். இத்தகைய அதிகாரக் குவிப்பு ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முற்றிலும் முரணானதாகும்.
சுதந்திரமான மற்றும் வலிமையான பொது நிர்வாக அமைப்புகளே ஒரு வலுவான ஜனநாயகத்திற்கான முக்கிய கூறு என்பது வலதுசாரி மற்றும் இடதுசாரி ஆகிய இரு தரப்பை சேர்ந்த கொள்கை ஆய்வாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். சில அறிஞர்கள் மேலும் ஒரு படி சென்று அத்தகைய நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரம் என்பது ஒரு ஜனநாயக நாடு வளர்ச்சியையும் மேம்பாட்டையும் அனுமதிக்கும் வகையில் செயல்படுகிறது என்பதற்கான சிறந்த குறியீடு என்றும் கருதுகின்றனர்.
பணமதிப்பிழப்பு நேரத்திற்கு முன்பு வரை இந்திய ரிசர்வ் வங்கி நாட்டிலேயே மிகவும் மதிக்கப்பட்ட ஒரு பொது நிறுவனமாக இருந்தது. அத்தகைய மதிப்பை பெறுவதற்கு பல ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் தொடர் முயற்சியும், பல தலைமுறைகளாக அரசியல்வாதிகளின் முடிவுகளில் தலையிடாமல் ஒழுக்கம் காத்ததும் காரணமாக அமைந்தது.
ஆனால் சென்ற ஆண்டு ரிசர்வ் வங்கி மீதான மதிப்பு முற்றிலும் துடைத்தெறியபட்டது "ரிசிர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் எண்ணிக் கொண்டிருக்கும்?" என மக்கள் கேலி பேசும் அளவிற்கு சென்று விட்டது.
ரிசர்வ் வங்கியின் வீழ்ச்சி சில திரைமறைவு நிகழ்வுகளுக்குப் பின்னர் தொடங்கியது அவையே பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை வரை இட்டுச் சென்றது. பல அனுமானங்கள் இருந்தபோதிலும் எப்படி, ஏன் பணமதிப்பு நீக்க முடிவு எடுக்கப்பட்டது என்பது பற்றியும் மேலும் ரிசர்வ் வங்கி குழுவின் "சுயாதீன" உறுப்பினர்களின் முழுமையான பங்கேற்பு பற்றியும், எத்தனை பேரின் ஒப்புதலுடன் அம்முடிவு எடுக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இத்தகைய சந்தேகங்களை தெளிவு படுத்துவதற்காக எளிமையான வழி ரிசர்வ் வங்கி இது தொடர்பான ஆவணங்களை பொதுத்தளத்தில் வெளியிடுவது தான். ஆனால் ரிசர்வ் வங்கியோ இது வரை தானாக முன்வந்து அவற்றை வெளியிடவில்லை, அத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கோரிக்கை வைத்தாலும் தட்டையான காரணங்களைக் கூறி தகவல்களை வெளியிட மறுக்கிறது.
இதுபோன்ற வெளிப்படை தன்மையிலிருந்தே துவங்கி அதன் மீதான நம்பகத்தன்மையை சரிய தொடங்கியது, அத்துடன் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த ஐம்பது நாட்களில் நிதி அமைச்சகத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் வேறுபாடுகள் அனைத்தும் அமைப்பு ரீதியாக அகற்றப்பட்டது அதனை மேலும் துரிதப்படுத்தியது. இந்த காலகட்டத்தில் வங்கியின் ஆளுநர் எந்தக் கேள்விகளையும் காதில் வாங்காமல் மௌனம் காத்தது ரிசர்வ் வங்கி கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான தனது பொறுப்பை முற்றிலும் கைவிட்டதற்கான அடையாளமாக கருதப்பட்டது.
இந்தக் கள்ள நாணயத்தின் மறுபக்கம் வருவாய் செயலாளர் போன்ற மூத்த அரசு ஊழியர்களிடமிருந்து கிட்டத்தட்ட தினசரி வெளியான கொள்கை மாற்றங்கள், அவை உண்மையில் சட்டப்பூர்வமாக ரிசர்வ் வங்கியின் முன் மொழியுடன் வெளியிடப்பட வேண்டும். இத்துடன் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத் தன்மை கொன்று புதைக்கப்பட்டது.
இதைவிட நிலைமை மோசமாகாது என்று ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அது வரை தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வந்த ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியது. ஓராண்டு கழித்து இன்று வரை ரிசர்வ் வங்கி அதுகுறித்து ஒரு விரிவான மதிப்பீட்டை வெளியிடவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருந்த அளவான ரூபாய் 15.28 லட்சம் கோடி (அதாவது நவம்பர் 8 க்கு முன்பு புழக்கத்தில் இருந்த ரூபாய் மதிப்பில் 99%) திரும்பப் பெறப்பட்டது என்பது விரிவான தகவல் அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளை கணக்கில் எடுக்கவில்லை என்றும் அவை எதிர்காலத்தில் திருத்தப்பட கூடும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கிளைகளில் மார்ச் 31 2017 வரை குடிமக்களிடம் இருந்து நேரடியாக ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கியால் தொடர்ந்து வழங்கப்பட்ட வாக்குறுதியை ஜனவரி 2017 மறுத்தபோது ரிசர்வ் வங்கி மீது இருந்த கடைசித்துளி மதிப்பும் புதைக்கப்பட்டது. கதைகளில் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் என்று கூறப்படும் பீனிக்ஸ் பறவை போல ரிசர்வ் வங்கியும் தனது கடந்த கால நன்மதிப்பை மீண்டும் பெறலாம்.ஆனால் எதிர்வரும் காலங்களில் அது தன் மதிப்பை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகளே இல்லை என்றே தோன்றுகிறது. பேரழிவு என்னவென்றால் கடந்த 80 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி முயன்று பெற்ற நம்பகத்தன்மையையும் மதிப்பையும் ஒரே ஆண்டில் இழந்து விட்டது என்பதே. இந்திய ஜனநாயகத்திற்கு இது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
இது ஒருபுறமிருக்க ஜனநாயகத்தின் மற்ற தூண்களின் பங்களிப்பு என்ன? எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட ஜனநாயகம் தகர்க்கப்படும் போது அதனை காப்பாற்றக்கூடிய கடைசி மார்க்கமாக இருப்பது நீதித்துறையே. அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவதில் நீதிமன்றத்தின் பங்களிப்பிற்கான ஒரு தலை சிறந்த உதாரணம் 1974 ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு குறித்த தீர்ப்பு. ஜனநாயகத்தையே காப்பாற்றிய தீர்ப்பு என்று இதனைக் கூறுவார்கள்.
பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையில் பல அடிப்படை சட்டபூர்வ மற்றும் அரசியல் சாசனம் குறித்த கேள்விகள் இன்றளவும் உள்ளன. உதாரணமாக ஒரு தனி நபர் தனது வங்கிக் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை தான் எடுக்க முடியும் என்ற வரம்பை நிர்ணயிக்கும் உரிமையை ரிசர்வ் வங்கிக்கு எந்த சட்டம் வழங்கியது? , எந்த சட்டத்தின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்குகள் போன்ற சில இடங்களில் செல்லக் கூடியதாகவும் அதே சமயத்தில் அங்காடிகளில் செல்லாது எனவும் அறிவிக்க முடிந்தது?
இன்றளவும் தீர்வு காணமுடியாத பல பிரச்சனைகளில் இருந்தும், நீதிமன்றங்கள் இடைக்கால நிவாரணம் வழங்கக் கூட மறுத்துவிட்டது. அத்துடன் அந்நடவடிக்கை தடையில்லாமல் செயல்படவும் அனுமதித்தது.
வழக்குகளை பரிசீலித்த பின் நீதிமன்றம் பணமதிபிழப்பு நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கக் கூடும். ஆனால் இந்த நடவடிக்கையின்போது பறிக்கப்பட்ட பல்வேறு உயிர்கள் மற்றும் பலரது வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் வழங்கப்படும் தீர்ப்பு தாமதிக்கப்பட்ட நீதியாகவே கருதப்படும் "தாமதப்படுத்தக் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானதாகும்".
அதிகாரத்தில் இருப்பவர்களை தங்களது செயலுக்கு பொறுப்பேற்க வைத்து ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய ஊடகத் துறையின் பங்களிப்பு இங்கு என்ன? சில இணைய ஊடகங்களை தவிர்த்து மற்ற பெருவாரியான ஊடகங்கள் எவரையும் எதற்கும் பொறுப்பேற்கச் செய்ய தவறிவிட்டது. வருங்காலங்களில் இந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளும் ஒரு சமகால ஜனநாயகத்தில் எப்படி அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க தவறி விட்டனர் என்பதை பற்றிய ஆய்வை மேற்கொள்ள பயன்படும்.
அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை எந்த வகையிலும் குற்றச்சாட்டுகளை தவிர்க்க முடியாத இந்த நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்க தங்களது அனைத்து வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு இந்நடவடிக்கையின் நோக்கங்களை மாற்றிக் கொண்டே இருந்தனர். நிறுவனமயப்பட்ட ஊடகங்களை விட சராசரி சாமானிய குடிமக்களே இந்த பாதக நடவடிக்கையின் பயனற்ற தன்மையை சிறப்பாக அம்பலப்படுத்தினர்.
போதாமைகளின் மீதான குற்றச்சாட்டை மேலும் வலுவிழக்கச் செய்வது என்னவென்றால் பகுப்பாய்வு செய்த ஜேம்ஸ் வில்சன் போன்றவர்கள் பொருளாதார நிபுணர்களும் அல்ல அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை அறிந்தவர்களும் அல்ல என்பதே. இத்தகைய பகுப்பாய்விற்கு போதுமான தகவல்கள் அரசால் வெளியிடப்பட்ட தரவுகளில் மட்டுமே இருக்கும் பட்சத்தில் தொழில்முறை பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊடக நிறுவனங்கள் ஏன் இதைப் போன்று அரசாங்கத்தின் கூற்றுக்களை அம்பலப்படுத்தும் பகுப்பாய்வுகளை செய்யவில்லை?
துல்லியமாக கூற வேண்டுமெனில், பணமதிப்பு நீக்கம் மற்றும் அதன் பின்விளைவுகள் ஜனநாயகத்தின் அனைத்து தூண்களின் மீதான மதிப்பு மற்றும் பிரபலமான இந்திய ஊடகங்கள் மீதுள்ள நன்மதிப்பின் மீதும் எதிர்மறை தாக்கங்களை உருவாக்கியுள்ளது. அத்துடன் முன்னர் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பொது நிறுவனமாக விளங்கிய ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை குலைந்துள்ளது. பொருளாதார பேரழிவை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க திட்டம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் நாளை சுதந்திர இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினமாக கருதாமல், வேறு எதைக் கருதுவது?
நன்றி, வணக்கம்!