Published Date: November 25, 2021
CATEGORY: EVENTS
பெரியார் பேருந்து நிலையப் பணிகள்: விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
மதுரை, நவ. 24: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என். நேரு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மதுரையில் சீர்மிகு நகர்த்திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏறத்தாழ 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பேருந்து நிலையத்தை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலைய திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வகையில் முதல்வர் அலுவலகத்தில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரியார் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளை நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், பயணிகள் காத் திருக்குமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்ட அமைச்சர், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து பணிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளதால் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, அமைச்சர்கள் பி.மூர்த்தி , பிடிஆர்.பழனி வேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
Media: Dinamani