Published Date: December 5, 2021
CATEGORY: HUMAN RESOURCES POLICY
அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தாள் கட்டாயம் என்ற அறிவிப்பின் மூலம் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்,
இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இனி வரும் காலங்களில் டின்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் அனைத்திற்கும் தமிழில் தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசாங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் பணம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு மனித வளம் முக்கியம். செப்டம்பர் 13ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்த இலக்கை இரண்டு தினத்திற்கு முன்பாக வந்த அரசாணை நிறைவேற்றியுள்ளது.
இனி மேல் நடைபெறும் தேர்வுக்கு இது பொருந்தும். இன்று பணியில் இருப்பவர்கள் 2. ஆண்டுக்கு பிறகு தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ் தெரியாமல் வெளி மாநில நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்ததை திருத்தும் வகையில் இந்த அரசாணை அமையும். சரியான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களை பணியாற்றுவதை கண்காணிப்பது தான் அரசின் கடமை. கொரோனாவிற்கு முன்பாகவே துறைகளில் பல குளறுபடிகள் நடந்ததாக கூறப்பட்டது. அடிப்படையில் இந்த சிஸ்டத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. பயிற்சி பெற்று காத்திருக்கக்கூடிய நபர்களின் வேதனை எனக்கு புரிகிறது. அடிப்படை மாற்றத்திற்கு சிறப்பான நாள் இதைவிட்டால் மீண்டும் கிடைக்காது.
டி.என்.பி.எஸ்.சியில் 70ல் இருந்து 80 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மனித வள மேலாண்மைக்கு திட்டமிடல் தேவை என்று தோன்றுகிறது. இன்றைக்கு உள்ள சூழலில் இது கூடிய விரைவில் திருத்தப்படும். கடந்த 10 வருடத்தை எடுத்துப் பார்த்தால் இன்றைக்கு உள்ள சூழலுக்கு அது ஏற்புடையது இல்லை. .
எனவே, வரக்கூடிய நாட்களில் நிறைய திருத்தங்கள் வரும். தமிழகத்தின் கல்வித்திட்டம் நாட்டின் சிறந்த கல்வித்திட்டம். 52 சதவீதம் மாணவர்கள் கல்லூரியில் சேருகிறார்கள் என்பது தமிழகத்தில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் இது கிடையாது. கொரோனாவிற்கு முன்பாக 90 சதவீதம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியே வந்தார்கள்.
ஆங்கிலத்தில் இருந்த அடிப்படை தாள்களை தமிழுக்கு மாற்றியுள்ள தால், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். முதல் தலைமுறை பட்டதாரிக்கும், கிராமப் புறங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அரசுப்பணிகளில் முன்னுரிமை கொடுக்கப்படும். அரசு பணி என்பது முக்கியமானது. 8 கோடி மக்கள் தொகை உள்ள மாநிலத்தில் 9 லட்சம் பேர் தான் அரசுப்பணியில் உள்ளார்கள். எனவே, அனைத்து சமுதாயம், கிராமப்புறங்களில் இருந்தும் முறையாக தேர்வு செய்து, பயிற்சி அளித்து அரசுப்பணிகளில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்..
Media: Dinakaran