/

எல்லா பிரச்சனைகளுக்கும் தனியார்மயமாக்கல் தீர்வாகாது

Published Date: October 10, 2021

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுடன் மதுரையில் உள்ள அவரது மூதாதையர் இல்லத்தில் நேர்காணலுக்காக வழங்கப்பட்ட 40 நிமிட ஸ்லாட் 140 நிமிடங்களுக்கு மேலான உரையாடலாக அமைந்தது. Wall Street வங்கியாளராக இருந்து 55 வயது அரசியல்வாதியாக மாறிய அவர் அனைவரும் அறிந்திருப்பது போலவே இயல்பாகவும், தெளிவுடையவராகவும் விளங்குகிறார்.இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினரான அவருடைய நெத்தியடி கருத்துக்கள் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிறன, அவர் "பாசாங்கு செய்வதில் விருப்பமில்லை" என்கிறார்.

அவர் தனது மன உறுதிக்கான காரணங்களாக இரண்டு முக்கியமான நிகழ்வுகளை குறிப்பிடுகிறார். ஒன்று 9/11 இரட்டை கோபுர தாக்குதல் (அவர் அன்றைக்கு உலக வர்த்தக மையக் கட்டிடத்தை அடுத்து உள்ள உலக நிதி மைய கட்டிடத்தில் இருந்த தனது அலுவலகத்திற்கு செல்வதற்காக WTC அடித்தளத்தின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்), மற்றொரு நிகழ்வு 2008ஆம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சிக்கு உள்ளான போது அங்கு அவர் பணியாற்றிக் கொண்டிருந்தது. இத்தகைய அனுபவங்களினால் 'எதுவும் நிரந்தரமில்லை' என்று கூறுகிறார்.

மகிழ்ச்சியான செல்வம் நிறைந்த குழந்தை பருவத்திலிருந்து இருந்து ஜெட் வேக பெருநிறுவன வாழ்க்கை, தற்பொழுது மீண்டெழுந்துள்ள தி.மு.க அரசாங்கத்தில் ஒரு முக்கியமான துறையை நிர்வகிக்கும் அமைச்சர் என அவரது வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்த பயணம் என்று அவர் நம்புகிறார். நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

பெருநிறுவனதில் பணிபுரிந்தபோது இருந்த உங்களது கடந்தகால வாழ்க்கைக்கும் தற்போதைய அரசியல் வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாடு?

பெருநிறுவன கட்டமைப்புக்குள் அனைவருமே வெற்றியடைய விரும்புவதால், பெரிய நிறுவனங்களில் ஊக்கமளித்தலின் அமைப்புமுறை ஒன்றுபோலவே இருக்கும். அங்கு நீங்கள் பங்குதாரர்களுக்கு நிறுவனத்திற்கு முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் உங்களாலான மதிப்பை கூட்ட வேண்டும். ஆனால் தற்போது பொதுவாழ்வில் சமூகத்திற்கு நல்ல வகையில் பங்களிக்க அனைத்து வகையான மனிதர்களுடனும் பணியாற்ற வேண்டியுள்ளது. மக்களின் குறைகளைத் தீர்ப்பது பெரும் திருப்தி அளிக்கிறது.

ஒரு அரசியல்வாதியாக நீங்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் என்ன?

தவறு செய்பவர்கள் இங்கே தப்பிக்க முடியும் என்கிற நிலை என்னை மிகவும் பாதிக்கிறது. இது ஒரு மிகப்பெரிய குறைபாடாகும், ஏனெனில் இது அப்பாவிகளைத் துன்புறுத்துகிறது, அதே சமயம் வக்கிரம்பிடித்த அதிகாரமிக்கவர்களைத் தண்டிக்கத் தவறிவிடுகிறது. ஆயிரக்கணக்கான முறைகேடு வழக்குகள் உள்ளன மற்றும் எந்த அரசாங்கமும் அந்த சிக்கலை சரி செய்ய விரும்பவில்லை. இந்த கட்டமைப்பை மேம்படுத்த முடியாத அளவிற்கு அழுத்தம் உள்ளது, மேலும் சிறந்த தலைமை அமைத்தாலும் அதனை செய்ய முடியவில்லை.

சட்டவிரோதமாக எல்லாம் பிடுங்கப்ப்படும் போதும் அரசு அமைதிகாத்த கடந்த காலங்கள் போல் இல்லாமல், சமூக மற்றும் பொருளாதார நியாயத்தின் எல்லைக்கு உட்பட்டு எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வண்ணம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாங்கள் உழைத்து வருகிறோம். இங்கு உள்ள பிரச்சனைகளை எல்லாம் முழுவதுமாக களைந்து விடுவதற்கு அதிகாரத்தில் வந்து நான்கு மாதங்கள் என்பது குறைவான காலமாகும். ஆனால் இந்தப் பிரச்சினைகளை தடுப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். உதாரணமாக தேனி பெரியாறு தண்ணீர்க் கொள்ளை தொடர்பாக நான் தொடர்ந்து குரல் கொடுத்த பின்னர் தற்போது முதல் முறையாக பல ஆண்டுகளுக்குப் பிறகு வைகை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால்தான் நீங்கள் சமூக ஊடகங்களில் அரசியல் கோபத்தை வெளிப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு தெரிந்த எதிர்தரப்பினர் மற்றும் முகம்தெரியாத நபர்களுடன்கூட சமூக வலைதளங்களில் வாதிடுவது ஈடுபடுவது சரிதானா?

தனிப்பட்ட காரணங்களுக்காக நான் அரிதாகவே கோபப்படுகிறேன். வார்த்தைகளைத் திரிப்பவர்கள், தவறாக சித்தரிபவர்களை நான் புறக்கணிக்கிறேன். அனால் சில சமயங்களில் மேதாவிகள் போல நடிக்கும் போலிகள், அரைகுறை படிப்பாளிகள், காலிப் பாத்திரங்களை அம்பலப்படுத்தில் சமூக நன்மை இருப்பதாகவே கருதுகிறேன்.

ஆனால் நீங்கள் திமிர்பிடிதவர் என அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறீர்கள்; சமூக ஊடகங்களில் பலர் உங்களை இவற்றிலிருந்து ஒதுங்கி வேலையில் கவனம் செலுத்தச் சொல்கிறார்கள்...

நான் அதை சுய கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கை என்று அழைக்கிறேன், ஆணவம் அல்ல. பிறரோடு இணங்காத அணுகுமுறை கொண்டிருந்தால் என்னை நீங்கள் ஆணவம் பிடித்தவன் என்று அழைக்கலாம். ஆனால் மக்களுடன் கனிவோடு பழகும்போதும், உண்மையிலேயே போதிய நேரம் இல்லாத போதும் அல்ல.

எனது பரம்பரையைப் பற்றி தற்பெருமை கொள்வதாக பல அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். முன்னோர்களின் பெயரைச் சொல்வதைத் தவிர வேறு எதுவும் நான் செய்யவில்லை என்றால், நான் தவறு செய்கிறேன் என்று பொருள். ஆனால் கடின உழைப்பின் மூலம் நான் செய்த சாதனைகள் பொது தளத்தில் உள்ளபோது, நான் வெறும் பெயர்மூலம் பெருமையடைய தேவையில்லை. நான் நானாக தான் இருக்கின்றேன். ஆமாம், எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நான் என் முன்னோர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் ஏனென்றால் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது தமிழ் பண்பாடு.

ஒரு அரசியல்வாதியாக உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?

நான் பல சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளுக்குள் இழுக்கப்படுகிறேன். நான் பலவற்றிற்கு இல்லை என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். எனது பலம்: நான் விளைவுகளின் மீது நம்பிக்கை வைப்பவன், வெறும் குறியீடுகளால் திசைதிரும்பக்கூடியவன் அல்ல.

தேசிய அரசியலில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறீர்களா?

முற்றிலும் உண்மை. மக்களின் வலியுணர்ந்த கணிவுள்ள, திறமையான, சமூக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நல்ல நிர்வாகம் என்றால் என்ன என்பதைக் காட்ட இது ஒரு பொன்னான வாய்ப்பு. 2014 தேர்தலில் குஜராத் மாடலில் என்கிற பொய்க்குதிரையில் சவாரி செய்த பிஜேபி வெற்றி பெற முடியுமானால், தமிழ்நாடு மாடல் என்ன, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் நிச்சயமாக காட்ட முடியும்.

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்கள் ஏன் மீண்டும் பொய்யர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? நாங்கள் வெறுப்பை பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை. மக்களின் நல்லாசியுடன் மூலம் 2024 ஆம் ஆண்டிலும் நாங்கள் வெல்ல முடியும்.

இந்து சமய அறநிலையத் துறை மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. தனியார்மயமாக்கல் கோவில்களை மீட்டெடுக்கவும் மிகவும் திறமையாக பராமரிக்கவும் உதவக்கூடும், எனவே கோவில்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள்?

பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் சேரர்கள் போன்ற அரசர்களுக்குச் சொந்தமான கோவில்களை மட்டுமே அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது, ஏனென்றால் அவை மதத்தைப் போலவே மக்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் கட்டிடக்கலை பற்றியவையாகும். தனியார்மயமாக்கல் கோவில்களை எப்படிச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. நானும் முறைகேடுகளைப் பற்றி அறிந்திருக்கிறேன் மற்றும் நூற்றுக்கணக்கான புகார்களைப் பெறுகிறேன். மற்ற கோவிலுக்கு செல்வோரைப் போல் இது எனக்கும் வருத்தமளிக்கிறது. மதுரை மீனாட்சி கோவில் எனது தொகுதியில் உள்ளது, என்னால் இன்னும் நல்ல மாற்றங்களைச் செய்ய முடியவில்லை. நான் ஒரு வாரியத்தை அமைத்தால், கோவிலை யார் நிர்வகிப்பார்கள் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள்? எளிதான அரசியலற்ற தீர்வு என்பது இங்கு இல்லை. பிரச்சினைகள் இல்லாத துறை ஏதேனும் இருந்தால் பெயரைக் குறிப்பிடுங்கள். அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி பள்ளிகள், நீர் வழங்கல், குப்பை சேகரிப்பு போன்றவை குறைபாடற்றதா? நான் வேறு எவற்றையெல்லாம் தனியார்மயமாக்க வேண்டும்? எல்லா பிரச்சனைகளுக்கும் தனியார்மயமாக்கல் என்பது தீர்வாகாது; பின்னர் அரசாங்கம் எல்லாவற்றையும் மூட வேண்டுமா?

இது தவறாக இருந்தால், சமீப ஆண்டுகளில் கூட உத்தரகாண்ட் கோவில்களை தேசியமயமாகக்கியது ஏன், எப்படி சரியாக இருந்தது? மோடியின் குஜராத் கோவில்களை ஏன் தேசியமயமாக்கினார்? மாநிலங்களுக்கு ஏற்ப எவ்வாறு வெவ்வேறு விதிகளை வைத்திருக்க முடியும்?

உங்கள் மகன்களை அரசியலுக்கு கொண்டு வர நீங்கள் விரும்புவீர்களா?

அவர்கள் வெறும் 16 மற்றும் 14 வயதேயான இளையவர்கள். நான் அவர்களுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கப் போவதில்லை. எனது தந்தை இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் அரசியலுக்கு வந்தேன். ஆனால் நான் வெளிநாடுகளில் வாழ்ந்த ஒவ்வொரு வருடமும், என் மரபு அளித்துள்ள பொறுப்பின் சுமையை உணர்ந்தேன். மாற்றங்கள் நிறைந்த சூழலில் இருப்பதை உணர்ந்தேன், ஏனென்றால் என் அப்பாவும் தாத்தாவும் எப்போதும் நான் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றே விரும்பினர்.

எனவே தற்போது என் மகன்கள் நன்றாகப் படிக்க வேண்டும், உலகைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய வேண்டும். அதன்பிறகு, அவர்கள் அரசியலில் நுழைய நினைத்தால், அது முற்றிலும் அவர்களின் விருப்பம்.

உங்கள் வாழ்விணையருக்கு இங்குள்ள வாழ்க்கை சூழலுக்கு பொருந்திக்கொள்வது எவ்வளவு சிரமமானதாக இருக்கிறது?

நான் ஒரு வலுவான வாழ்க்கைத் துணையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். மார்கரெட்டும் நானும் பல்கலைக்கழகத்தில் சந்தித்தோம். அவர் எப்படி அனுசரித்து போனார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இன்று என் குடும்பம், வாக்காளர்கள், எல்லோரும் அவரை மிகவும் விரும்புகிறார்கள். அவர் எங்கள் மகன்களை தன்னடக்கத்துடனும், நல்ல நிலையிலும் வைத்திருக்கிறார். கஷ்டமாக என்றாலும், நாங்கள் அவர்களுக்கு சில ஆடம்பரங்களை மறுக்கிறோம், ஏனென்றால் சில நன்மதிப்புகள் முக்கியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கடுமையான பணிகளுக்கு பிறகு நீங்கள் எப்படி ஓய்வெடுக்கிறீர்கள்?

நான் என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அவர்களே என் உயிர்நாடி, புன்னகையே எங்கள் மருந்து. எங்கள் செல்லப்பிராணிகள் எங்களை இணைக்கின்றன. வீட்டில் உள்ள ஐந்து நாய்களும் ஒரு பூனைக்குட்டியும்தான் எனது மன அழுத்தத்தை போக்குபவன.

 

Source: The Hindu

 Articles Year Wise: