/

பகுத்தறிவுவாதிகளுக்கு மத்தியில்: இறைநம்பிக்கையுள்ள குடும்பத்தின் திராவிட பயணம்

Published Date: December 28, 2016

நூறாண்டு கால எங்கள் குடும்ப அனுபவம்

முனைவர். பழனிவேல் தியாகராஜன்

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், எனது தகப்பனார் பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாரம் ஒருமுறையாவது நேரில் சென்று தரிசிக்கும் வழக்கத்தை வைத்திருந்தார் என்பதை அறிந்திருந்தேன். கடவுள் மீதான அவர் நம்பிக்கை, எப்பொழுதுமே, 11வது சட்டப்பேரவை அமைக்கப்பெற்று அதன் தலைவராக அவர் வீற்றிருந்த பொழுதும் கூட, அவர் நெற்றியில் அடையாளமாக இருந்து வந்தது.

அவருடனான என் கடைசி சில உரையாடல்களில் (தொலைபேசி வாயிலான) ஒருமுறை, “13வது சட்டப்பேரவை அமைச்சரவையில் தலைவர் கலைஞர், தனக்கு பிடித்தமான இந்து அறநிலையத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்கும்படி சொன்னார்” என்று கூறினார். அவருடைய முன்னோர்கள் உருவாக்கிய துறையெனவும், பொறுப்பேற்றதும் செயல்படுத்த திட்டங்களை கைவசம் தயாராக வைத்திருந்ததாகவும் கூறினார்... ஆனால், விதி வேறுவிதமாய் அமைந்தது.

அதுவரையில், கோவிலுக்கு செல்வதில் நான் முறையேதும் வைத்திருக்கவில்லை. 5ம் வகுப்பு முதல் விடுதியிலும், பின்னர் 21 வயது முதல் அயல்நாட்டிலும் என் படிப்பை தொடர வேண்டியிருந்ததுதான் அதற்கு காரணம். பிறகு, நான் நியூயார்க்கில் வங்கி அதிகாரியாக இருந்தபோது, வாரம் ஒரு முறை இல்லையேனும், மாதம் ஒருமுறை அம்மன் கோவிலுக்கு தவறாமல் சென்று, எங்கள் குடும்ப பாரம்பரியத்தை என் தந்தையின் நினைவாக, கடைபிடிக்க தீர்மானித்தேன்.

என் தந்தையின் எதிர்பாரா மறைவிற்கு பின்னர், கடந்த பத்தரை ஆண்டுகளில், அதாவது 126 மாதங்களில் 120 மாதங்கள் என, என் குடும்பத்தினருடன் கோவிலுக்கு செல்வதை தவறாமல் கடைபிடித்து வந்துள்ளேன்.

இவை அனைத்தும் மதுரை மத்திய தொகுதிக்கான (மீனாட்சியம்மன் கோவில் உள்ள) வேட்பாளராக என்னை தேர்வு செய்த பொழுது தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் தெரிந்தே இருந்தது., அத்தொகுதியில் பணபலத்தின் ஆதிக்கத்தை மீறி வெற்றி என்னை வந்தடைந்ததற்கு எனது முன்னோர்கள் செய்த புண்ணியமும், அன்னை மீனாட்சியின் அருளும்தான் காரணம் என நான் முழுவதுமாக நம்புகிறேன்.

மதம் மீதான நம்பிக்கையோ, மத மறுப்போ தனி மனிதவிருப்ப சார்ந்தது. கடவுள் நம்பிக்கை என்பது திராவிட பண்பாட்டின் மூன்றாம் தலைமுறை முன்னோடி இயக்கமான திமுகவில் உறுப்பினராவதற்கு ஒரு நுழைவுத்தகுதி இல்லை என நான் உறுதியாக நம்புகிறேன்.

என்னை பொருத்தவரை, மதத்தின் மீதான திராவிட இயக்கத்தின் அடிப்படை பார்வை – மதம் என்பது சமூக அங்கீகாரத்தையோ, மதம் சார்ந்த பழக்க வழக்கங்கள் மூலமாக சமூக படிநிலைகளை தீர்மானிக்கப்படுவதோ, மத கோட்பாடுகளின் அடிப்படையில் மக்களை சாதிரீதியாகவும், பாலினரீதியாகவும் (ஆண், பெண் சமம்) ஒடுக்குதல் போன்றவையோ அறவே இருக்கக்கூடாது – எவ்வித சலனமும் இன்றி காலங்களை வென்று நிலைத்து நிற்கிறது. திராவிட பண்பாட்டில் ஒன்றிணைய மதம் சார்ந்த சோதனை ஏதும் தேவையில்லை என நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

இந்த அடிப்படை கொள்கை நூறாண்டு காலம் தாண்டி நிலைபெற்றிருந்தாலும், நிகழ்கால அரசியல் களத்தில், மூன்று குறிப்பிடத்தக்க காலகட்டங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் உருவெடுத்துள்ளது.

திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலகட்டத்தில் (1916 முதல்  1937 வரை) நீதிக்கட்சி, அதன் சட்டம் இயற்றும் செயல்பாடுகள் மூலமாக இரட்டை ஆட்சி முறையில் ஆதிக்கம் செலுத்தியது. அதன் நிறுவனர்களும், தலைவர்களும் இந்து சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தனர், அவர்களின் கல்வியறிவு, பாரம்பரியம் போன்றவை மூலமாக வளமான வாழ்வை வாழ்ந்து வந்தனர். வளமான வாழ்கை இருந்தும், நீதிக்கட்சியின் தலைவர்கள், அணைத்து தரப்பு மக்களுக்கும், சமமான, ஜனநாயகம் நிறைந்த மதம் மற்றும் சமய வழிபாடுகள் இருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தனர் என்பது வியப்பை அளிக்கிறது.

1922ல் சென்னை மாகாண இந்து மதச்சட்டத்தை அமல்படுத்தியதில், எனது ஒன்று விட்ட தாத்தா M.T.சுப்பரமணியம் மற்றும் என் தாத்தா பி.டி.ராஜன் அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அதன் காரணமாகவே இங்குள்ள இந்து கோயில்கள் அரசுடைமையாக்கப்பட்டது. உண்மையான இறை நம்பிக்கையாளர்களால் மட்டுமே இது சாத்தியமானது - நடைமுறைகளை திருத்தி அமைத்து சமத்துவத்தை சட்டமாக நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே அவர்கள் அமல்படுத்தினர். சுதந்திரத்துக்கு பின் என் தாத்தா பி.டி.ராஜன் அவர்களின் முயற்சியால் வடபழனி முருகன் கோயில், மீனாட்சியம்மன் கோயில், சபரிமலை போன்ற எண்ணற்ற கோவில்களுக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. அவை முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, அவரின் ஆழமான இறை நம்பிக்கைக்கு சாட்சியாக இன்றளவிலும் விளங்குகிறது.

திராவிட இயக்கத்தின் இரண்டாவது காலகட்டம் தந்தை பெரியாரின் தலைமையில் இயங்கிய திராவிட கழகத்தின் செயல்பாடுகளால் மேலும் வலுவடைந்து வீறுநடை போட்டது. நீதி கட்சியின் தலைமை பெரும்பாலும் மேன்மக்களை கொண்டிருந்ததால், அவர்கள் மேற்கொண்ட முறையான செயல்பாடுகளின் மூலம் குறிப்பிடத்தக்க, காலத்தின் தேவையாக இருந்த சமூக மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று பெரியார் கருதினார். எனவே, புரட்சிகரமான பேச்சுக்கள் மற்றும் புதுமையான செயல்களின் மூலம் மக்களின் இடையே மாற்றத்திற்கான விதைகளை ஆழமாக விதைத்தார். “மனிதனுக்கு பின்தான் கடவுள்” மற்றும் “தேங்காய்களுக்கு பதில் சிலைகளை உடை” போன்றவை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

எனினும், பெரியார் கூட வெளிப்படையாக நாத்திகத்தை வலியுறுத்தவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவர் மக்களை, முக்கியமாக ஒடுக்கப்பட்டவர்களை, கண்மூடித்தனமான நம்பிக்கைகளை விடுத்து சிந்தித்து செயல்படவே வலியுறுத்தினார். பெரியாரின் WIKIPEDIA பக்கத்தில் உள்ள ஒரு வாக்கியம் இது – “……..நாத்திகர்கள் பேசுவதை சித்தாந்தமில்லாதது, பிழையானது என்று எண்ணவேண்டும். நான் கடவுளாக கருதுவது,  அனைத்து மக்களையும் சமமாகவும், சுதந்திரமாகவும் நடத்துகின்ற ஒன்றாகவும், சிந்தனையையும், ஆராய்ச்சி உணர்வையும் தடுக்காத ஒன்றாகவும்மக்களிடம் பணத்தையும் பொருளையும், புகழ்ச்சியையும் எதிர்பார்க்காத ஒன்றாகவும் இருக்குமேயானால் அதனை கோயில் சென்று வழிபடவும் செய்யலாம். இதனை சொல்வதால் நான் நாத்திகன் என்று அழைக்கபடுவேனாயின் அச்சொல்லுக்கு எந்தவொரு பொருளுமில்லை

மூன்றாவதாக அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், திமுகவின் மக்கள் நலன் சார்ந்த சமூக செயல்பாடுகளில், பெரியார் அவர்களின் அணுகுமுறையிலிருந்து லேசாக மாறுப்பட்டது. அணுகுமுறையில்தானே தவிர கொள்கையில் அல்ல. மதம் சம்மந்தமான கொள்கை அணுகுமுறையில் தீவிரம் குறைந்தது. ’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற மென்மையான முற்போக்கு சிந்தனையை அண்ணா முன்வைத்தார். கூடுதலாக கவிநயத்துடன் ‘நான் சிலையையும் உடைப்பதில்லை, அச்சிலைக்கு தேங்காயும் உடைப்பதில்லை’ என்றார்.

திமுக ஆட்சிகாலங்களில், ஆரம்பகால திராவிட இயக்க கொள்கையிலிருந்து பிறழாது, அண்ணா வகுத்தளித்த பாதையில் பயணித்து வருகிறோம். 50 ஆண்டுகாலம் தன்னிகரற்ற கடமையுணர்வு மிக்க தலைவராக கலைஞர் அவர்கள் அரசியல் மூலமாகவும், சட்டவடிவிலும் அக்கொள்கைகள் பலவற்றை நடைமுறைப்படுத்தினார். திமுகவில் இணைந்து பணியாற்ற இறைநம்பிக்கை சார்ந்த சோதனைகள் ஏதுமில்லை என்பதற்கு என் தந்தையே ஆகச்சிறந்த உதாரணம். திமுகவில் நீண்டகாலம் பல பதவிகள் வகித்து பணியாற்றிய என் தந்தைக்கு, அவர் இறைநம்பிக்கை மீது கொண்டிருந்த ஈடுபாடு எக்காலத்திலும் இடர்பாடாக இருக்கவில்லை.

கட்டுரையை தொடங்கியதை போலவே என் தனிப்பட்ட வாழ்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு முடிக்க முனைகிறேன் – மீனாட்சியம்மன் கோவிலுக்கு நான் செல்லும் ஒவ்வோவோரு முறையும் என் தாத்தாவுடன் நான் குழந்தையாக நடந்த அதே பாதையில் தான் இன்றும் நடக்கிறேன். என் மகன்களும் எங்கள் மூதாதையர்களின் பாதச்சுவடகளை பின்பற்றி நடக்கின்றனர் என்பதும் அவர்கள் குழந்தைகளும் இதை பின்பற்றுவர் எனும் நம்பிக்கையும் எனக்கு மிகுந்த அகமகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல், எங்கள் மூதாதையர்களை போலவே, நாங்களும் சமஸ்க்ருதத்தை தவிர்த்து தமிழ் மந்திரங்களை கொண்டே வழிபாடு செய்கிறோம், என்ன சொல்கிறார்கள் என்பது புரிவதால், வழிபாடு மேலும் மனநிறைவை தருகிறது.

நம் நம்பிக்கைகள், அதற்குண்டான வழிமுறைகளை மேற்கொள்ள நாம் பெற்றுள்ள உரிமைகள் ஆகியவை திராவிட இயக்கம் நமக்கு போராடி பெற்று தந்தது என்பதை ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்வோம்.

 Articles Year Wise: