/

வருவாய் சிக்கலை தீர்க்காவிட்டால் தமிழ்நாடு கடன் வளையத்திற்குள் சிக்கிக் கொள்ளும்

Published Date: October 3, 2021

தமிழ்நாடு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பிரத்யேக பேட்டியில் தமிழ்நாட்டின் பில்லியன் டாலர் கனவு அதற்கான சவால்கள் மாநில உரிமைகள் இழப்பை குறித்து கருத்து தெரிவித்தார்.

2030 க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட தமிழ்நாடு நினைக்கிறது. இது ஒரு சாத்தியமாகக்கூடிய இலக்கா? கணிதத்தின் அடிப்படையில் அது எவ்வாறு சாத்தியம்?

அது ஒன்றும் அசாத்தியமான காரியம் அல்ல. 2006-11 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தை எடுத்துக்கொண்டால் நாங்கள் 10.15% அளவிற்கு பணவீக்கம் தவிர்த்த உண்மையான வளர்ச்சியை (CAGR) அடைதிருந்தோம். ஏறத்தாழ 300 பில்லியன் டாலர் என்கிற தற்போதைய நிலையில் இருந்து ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, நாம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12% முதல் 13% என்ற விகிதத்தில் பணவீக்கம் உள்ளடக்க்கிய உத்தேச வளர்ச்சியை பெற வேண்டும்.இது அடையக்கூடிய இலக்கு. இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாட்டிற்கு , பணவீக்கம் 5-6% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்பதை மறந்துவிடக் கூடாது.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் தாமதம், செஸ் & மேல்வரி போன்ற ஒருதலைப்பட்ச முடிவுகள் போன்றவற்றை குறிப்பிட்டு இவற்றால் மத்திய-மாநில உறவில் அவநம்பிக்கை ஏற்படத் துவங்கியுள்ளது என்று சமீபத்தில் கூறி இருந்தீர்கள். ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்று உங்கள் நிலைப்பாடு என்ன? பல மாநிலங்கள் அவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் , அவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவதாகவும் நினைக்கிறார்கள்...

முதலில் இங்கே மாநிலங்களின் அதிகாரங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ஒன்றிய அரசின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கல்வி வரி விதிப்பு, “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு”, போன்ற மற்ற கொள்கைகள் என அனைத்திலும் மாநிலங்களின் நிர்வாக வரம்பு மிகப்பெரிய அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் போக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி முன்னர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது எதற்காக குரல் கொடுத்தாரோ அதற்கு முற்றிலும் எதிரானதாகும். அவர் அப்போது எவற்றையெல்லாம் எதிர்த்து வாதிட்டாரோ அவை எல்லாம் தற்போது அவரது தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தினால் மிக மும்மரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள இழப்பீடு வழங்கும் பிரிவை பின்பற்றுவது குறித்த தலைப்பு விவாதத்துக்கு உள்ளானபோது ஒன்றிய அரசு நியாயத்திற்கு மாறாக செயல்படுவதாகவே மாநிலங்களால் உணரப்பட்டது.

நிச்சயமாக தொற்று நோய் வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. யாரும் அந்த அளவிற்கு முன்னறிந்து செயல்படும் தன்மை உடையவரிலர். ஆனால் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் முறை தனித்துவமான இடர்களை சமாளிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு ரீதியான இடர்களை சமாளிப்பதற்கு ஏற்றது அல்ல. ஒரு மாநிலத்திலோ அல்லது சில மாநிலங்களிலோ சரிவு அல்லது பேரழிவு ஏற்பட்டால், மீதமுள்ள பொருளாதாரம் செஸ் வரி வசூலிப்பதன் மூலம் அந்த இடைவெளியை ஈடுசெய்கிறது. உண்மையில், முதல் இரண்டு ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட செஸ், கூட்டு செலவினங்களை விட அதிகமாக இருந்தது. மிகத் தெளிவாக, தனித்துவமான இடர்களுக்கு ஏற்றவாறே இந்த அமைப்பு வேலை செய்கிறது.

இப்போது வந்த பெருந்தொற்று கட்டமைப்பு ரீதியான இடர். இதனை சமாளிக்கும் வகையில் இழப்பீடு வழங்கும் செயல்முறை வடிவமைக்கப்படவில்லை. இருப்பினும், மத்திய அரசு 100% நேரடி வரிவிதிப்பு சக்தியையும், ஜிஎஸ்டிக்குப் பிறகு மறைமுக வரியின் பெரும்பகுதியையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அது நிச்சயமாக ஒரு பெருந்தன்மைமிக்க அணுகுமுறையை எடுத்திருக்கலாம். இழப்பில் பாதியை நேரடியாகவும் மறு பாதியை கடன் மூலமாகவும் மத்திய அரசு திருப்பிச் செலுத்தும் என இறுதியில் அவர்கள் எடுத்த முடிவை இன்னும் விரைவில் எடுத்திருக்கலாம். இந்த தீர்வு மிகப் பொருத்தமானது அல்ல என்றாலும், ஒரு மோசமான விளைவு அல்ல. சில சிக்கல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன உதாரணமாக 14% கணக்கீட்டில் உள்ள வேறுபாடுகள். ஆனால் இந்த தீர்வுக்கு மிகவும் சுமூகமாக வந்திருக்க முடியும். அச்செயல்பாட்டின் போது வெளிப்படும் எதிர்ப்புகளை பெரும்பாலும் தவிர்த்திருக்கலாம்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டுறவு கூட்டாட்சியின் சாரத்தை இழக்கிறது என்ற குற்றச்சாட்டை புதுடெல்லி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன?

நான் அதை விவாதிக்க தேவையில்லை. குஜராத் முதல்வராக இருந்த மோடியின் வார்த்தைகளை ஒரு பிரதமராக அவரது செயல்களுடன் ஒப்பிட வேண்டும். அவை அப்படியே நேர் எதிராக உள்ளன. அந்த நேரத்தில் அவர் மாநிலத்தின் முதல்வராக கூட்டாட்சிக்கு ஆதரவாக இருந்தார் என்று நீங்கள் நம்பினால், இப்போது அவர் செய்வது கூட்டாட்சிக்கு முற்றிலும் எதிரானது.

நாங்கள் அனைத்து வகையிலும் ஒன்றியத்துடன் நெருக்கமாக பணியாற்ற தயாராக உள்ளோம். ஏனெனில் நாங்கள் அதனை பாஜக அரசாகவோ அல்லது காங்கிரஸ் அரசாகவோ பார்க்கவில்லை. அது இந்திய ஒன்றியத்தின் அரசாங்கம். ‘இருவரும் மக்களுக்காக உழைப்பதனால் ஒன்றுபட்டு கைகோர்க்க கரம் நீட்டுகிறோம், ஆனால் எங்கள் உரிமைகளுக்காக எபோதும் குரல் எழுப்புவோம்’ என கலைஞர் சொன்ன வார்த்தைகளை நாங்கள் நிச்சயம் பின்பற்றுகிறோம்.

புதுடெல்லிக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான எரிபொருள் அரசியல் சமீபத்தில் கவனத்தை ஈர்த்தது. எரிபொருள் விலை லிட்டருக்கு 20-30 ரூபாய் குறையலாம் என்று தகவல்கள் வந்தன, ஆனால் எந்த அரசும் தங்களிடமுள்ள கடைசி பொன்முட்டையிடும் வாத்தை கொன்றுவிட தயாராக இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறதே...

பெட்ரோல்/டீசல் மீதான வரிவிதிப்பின் முதல் பிரச்சனை என்னவென்றால், எண்ணெய் விலைகளில் உள்ள மாறுபாட்டால் அது பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. மற்றொரு பிரச்சனை, மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்துக்கு இடையிலான வரி விகிதம் 2014 & இந்த ஆண்டிற்கு இடையே வியத்தகு முறையில் மாறிவிட்டது. மூன்றாவது பிரச்சனை பம்ப் விற்பனை விலை மற்றும் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தும் விளைவு. இது பணவீக்கம் மற்றும் மக்களின் வருவாய் போன்றவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

2018ஆம் ஆண்டு அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை கொண்டுவரவேண்டும் என்றார். அவரது நோக்கம், குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலையின் பலன்களை அதை பயன்படுத்தும் கடைநிலை மக்களுக்கும் கடத்த வேண்டும் என்பதுதான். கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு - ஐந்து வருடங்களில் 100 டாலருக்கு மேல் இருந்து 30-35 டாலர் வரை குறைந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் விலை குறையும் போதும் ஒன்றிய அரசு வரியை உயர்த்திக் கொண்டே இருந்தது. இருப்பினும், முந்தைய மாநில அரசு, 2018 வரை வரியை மாற்றவில்லை. ஆனால் 2018 மற்றும் 2019 இல், அவர்கள் அதை இரண்டு முறை மாற்றினார்கள். எனவே, எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் எந்த ஒரு பயனும் இறுதி நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை என்பதில் முதலமைச்சர் கடும் அதிருப்தியில் இருந்தார். ஒன்றிய அரசின் செயல்பாடு மென்மேலும் நியாயமற்றதாக மாறியது, அவர்கள் தொடர்ந்து வரியை ஏற்றிக் கொண்டே இருந்தனர்.

2014 ஆம் ஆண்டில், மொத்த ஒன்றிய அரசின் வரி லிட்டருக்கு ரூ .10 க்கும் குறைவாக இருந்தது. மேலும் அதன் பெரும்பகுதி கலால் வரியாகும், இது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தக்கது. கடந்த இரண்டு ஒன்றிய பட்ஜெட்களில் ஏற்பட்ட அப்பட்டமான சில மாற்றங்கள் வரி விதிப்பு முறையை கலால் வரியில் இருந்து முற்றிலுமாக செஸ் வரி சார்ந்ததாக மாற்றியது. அவர்கள் 2014 முதல் தற்போது வரை பல முறை முழுமையான அளவை உயர்த்தியுள்ளனர். இன்று, பெட்ரோல் மீதான வரி ரூ .32.90 ஆக இருக்கும் நிலையில், அதில் ரூ .1.40 (சுமார் 4%) மட்டுமே கலால் மீதமுள்ள 96% செஸ் மற்றும் மேல் வரி. டீசலுக்கும் இதே நிலைதான்.

ஒன்றியம் வரியை அதிகரித்தது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 100% தனக்கானதாக மாற்றியுள்ளது. எனவே, உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களை எடுத்துக்கொண்டால் கூட, ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலிருந்தும் அவர்களுக்கான பங்கு வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு லிட்டரிலிருந்து சுமார் 14-15 பைசாக்களைப் பெறுகிறது, இப்போது ஒன்றியத்தின் ரூ .32.90 பகிர்விலிருந்து 2-3 பைசாக்கள் மட்டுமே கிடைக்கும். உத்திரப்பிரதேசம் சுமார் 13-15 பைசா பெறலாம். எனவே இது குறிப்பிடத்தக்க வித்தியாசம்.

மூன்றாவது புள்ளி என்னவென்றால், கச்சா எண்ணெய் விலை இப்போது $ 60-70 மற்றும் அதற்கு மேல் உயர்ந்துள்ளதால், பம்ப்(சில்லறை) விற்பனை விலை நாம் இதுவரை பார்த்திராத (100 ரூபாய்க்கு மேல்) அளவை எட்டியுள்ளது.

45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க எந்த மாநிலமும் ஆதரவாக இல்லை என்பது உண்மைதான். கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கவுன்சில் இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டது. எனவே, பல மணி நேரம் நீடித்த ஒரு கூட்டத்தில், இந்த தலைப்பு ஐந்து நிமிடங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டது. இது சட்ட இணக்கத்திற்காக மட்டுமே. மாநிலங்கள் தான் அதை 'மறுப்பவர்களாக' காண்பிக்க ஒன்றிய அரசு விரும்பியிருக்கலாம். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள்தான் இந்த நடவடிக்கையை முதலில் எதிர்த்தன. சரியாகச் சொல்வதானால், ஒன்றிய நிதியமைச்சர் கவுன்சில் பெரும்பான்மையான மாநிலங்களுடன் அதற்கு எதிராக இருப்பதால் பெட்ரோல் டீசல் வரிகளை குறைப்பது அல்லது ஜிஎஸ்டி வரிக்கு நகர்த்துவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று கவுன்சில் முடிவு செய்வதாக கூறினார்.

பெட்ரோல் டீசல் மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை நீக்கி, மீண்டும் கலால் வரிக்கு திரும்ப மத்திய அரசு தயாராக இருந்தால் வாட் வரியிலிருந்து ஜிஎஸ்டிக்கு மாறுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியில் சேர்த்தால், தமிழ்நாடு வரி வருவாயில் சுமார் 6% சரிவை சந்திக்கும்.

தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு மாநிலத்திற்குள்ளே உருவாக்கப்படுவது, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே யூனியனில் இருந்து வருகிறது, 60-70% டெல்லியில் இருந்து வருகிற மற்ற மாநிலங்களைப் போலல்லாமல். வருவாய் இழப்பைத் தாங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

மாநில தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் மற்றும் டீசல் வரி இரண்டையும் குறைப்பதாக நீங்கள் உறுதியளித்தீர்கள். உங்கள் முதல் பட்ஜெட்டில், பெட்ரோலுக்கான வரியை மட்டும் குறைத்தீர்கள். டீசல் விலையை குறைக்க திட்டம் உள்ளதா?

பெட்ரோலைப் பயன்படுத்துபவர்களின் அதிகப்படியானவர்கள் இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் . பொருளாதார பெருக்க விளைவு உடனடியாக ஏற்படும் இடத்தில்தான் விலை குறைப்பு வழங்க விரும்பினோம். டீசலைப் பொறுத்தவரை, ஒரு சிக்கல் உள்ளது. சிலர் வரி குறைப்புக்கு தகுதியானவர்கள் மற்றும் சிலர் உறுதியாக அதற்கு தகுதியானவர் இல்லை. யார் டீசல் வாங்குகிறார்கள் என்பதை அடையாளம் காண முடிந்தால், யாருக்கு எந்த அளவில் வரி விதிக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யலாம். அடையாளம் காணும் தொழில்நுட்பம் கிடைக்கும்போது, நாம் விற்பனை இடத்தில் செலுத்தும் வரியையும் முற்போக்கான மற்றும் நியாயமானதாக மாற்றலாம். சிங்கப்பூர் போன்று ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான RFID உள்ள ஒரு அமைப்பு எங்களிடம் இருந்தால், பயனாளர்களிடையே தள்ளுபடி அளவை வேறுபடுத்தும் மாதிரியை கொண்டு வர முடியும்.

அரசு பேருந்துகள் மற்றும் மீனவர்கள் போன்ற பயனாளர்களுக்கு, நாங்கள் ஏற்கனவே டீசல் மானியத்தை உயர்த்தியுள்ளோம். தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளுக்கு, வரி செலுத்துவதை ஒத்திவைத்துள்ளோம். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளின் டீசல் விலையை குறைக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, தரவைச் சரிபார்த்து ஒரு சிறு விவசாயி யார் என்பதைக் கண்டறிய எங்களுக்கு ஒரு வழிமுறை தேவை.பெரிய SUV கார்களைப் பயன்படுத்துபவர்களுக்கு டீசல் விலையை குறைப்பதில் சமூக நீதியோ பொருளாதார நீதியோ இல்லை.

டீசல் விலையை குறைத்தால், தளவாட நிறுவனங்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தில் நேரடியான தாக்கம் இருக்கும், எனவே சில்லறை விலையில் விரும்பத்தக்க கீழ்நோக்கிய தாக்கம் இருக்கும் என்பதையும் நாங்கள் விவாதித்தோம். ஆனால் தமிழ்நாட்டில் டீசல் கட்டணம் குறைப்பதால், அமேசான் அல்லது ரிலையன்ஸ் ஃப்ரெஷ் போன்ற நிறுவனங்கள் தங்கள் விநியோக கட்டணங்களையோ அல்லது பொருட்களின் விலையையோ குறைக்குமா? இந்திய அளவில் தொழில் செய்பவர்கள் விலை குறைக்க வாய்பில்லை, எனவே இந்த நிறுவனங்கள்தான் டீசல் விலை குறைப்பின் பயனை அடையும் சிறு வணிகர்கள் அவர்கள். அதிகபட்சம் , அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் ஒட்டுமொத்த எரிபொருளையும் நிரப்பலாம். அவ்வளவு தான். எனவே, டீசல் விலையில் குறைப்பினால் சில்லறை விலை குறைப்புக்கு ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே கிடைக்கும்.

தொற்றுநோய் மற்றும் உருகுலைந்துள்ள பொருளாதாரம் கிட்டத்தட்ட நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, தமிழகத்திற்கு, மக்கள் நலதிட்ட உதவிகளுக்காகவும் தொழில்துறை நடவடிக்கைகளை அதிகரிக்கவும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக பணம் தேவை. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, நீங்கள் எந்த புதிய வரிகளையும் அறிவிக்கவில்லை. பற்றாக்குறையை நீங்கள் எவ்வாறு ஈடுசெய்யப் போகிறீர்கள்?

2003 ஆம் ஆண்டின் நிதிப் பொறுப்புடமை சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்புகளை நாம் கடந்து செல்லும் இந்த சூழ்நிலையை யாரும் விரும்பவில்லை. ஆனால் 2019 முதல், ஒன்றிய அரசாங்கம் அதன் அரசியலமைப்பின் பிரிவு 293 (3) வழங்கியுள்ள அதிகாரத்தை நுட்பமாக அமல்படுத்தியுள்ளது, இவ்விதி ஒன்றிய அரசுக்கு நாம் திருப்பி செலுத்தவேண்டி இருக்கும் வரை, அவர்களின் அனுமதியின்றி கடன் வாங்க முடியாது என்று கூறுகிறது. கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்ட 15 வது நிதி கமிஷனின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பான 3.5% ஐ தாண்டியவுடன், கூடுதல் கடன் வாங்க எங்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவை. மாநிலத்தில் GSDP 21.36 லட்சம் கோடி ரூபாய் இதில் 3.5% ரூபாய் 75,000 கோடி ரூபாய். தற்போதைய யதார்த்தம் என்னவென்றால் நாங்கள் ரூபாய் 50000 கோடி வருவாய் பற்றாக்குறையை சந்தித்து வருகிறோம். 2006-11 ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு சராசரியாக, GSDPயில் 12.3% வட்டி செலுத்துதல்களைத் தவிர்த்த வருவாய் செலவினங்களுக்காக செலவழித்தது. அதன்பிறகு, GSDPயில் தோராயமாக 0.32% அளவிற்குவருவாய் உபரியைத் தக்க வைத்துக் கொண்டு GSDP யில் 2.18% முற்றிலும் மூலதனச் செலவிற்காக கடன் வாங்கி, மொத்தம் GSDPயில் 2.50% மூலதன முதலீடு செய்தது.

இந்த நிலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து, முந்தைய அரசாங்கம் GSDPயில் சுமார் 10% வட்டி அல்லாத வருவாய் செலவாக செலவழித்தது,வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட GSDPயில் 1.85% கடன் பெறப்பட்டது. மூலதன செலவுகளுக்கு GSDPயில் 1.85% அளவிற்கு மட்டுமே கடன் பெறப்பட்டது.

எனவே, மூலதனச் செலவு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்தது மட்டுமல்ல, வருவாய் செலவு கூட ஐந்தில் ஒரு பங்கு அல்லது ஆறில் ஒரு பங்காக குறைந்துள்ளது. மேலும், இந்த வீழ்ச்சியடைந்த வருவாய் செலவினத்தில் சுமார் 20% கடன் மூலம் நிதியளிக்கப்பட்டது. இது ஒரு நிலையான தன்மைகொண்ட மாதிரி அல்ல. GSDP யில் போதுமான சதவீதம் அளவிற்கு வருவாய் இல்லாததில் இருந்தே எங்கள் அனைத்து பிரச்சனைகளும் தொடங்குகிறது.

உண்மையில் எங்கள் செலவினங்களில் பெரும் பகுதியான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை அகவிலைப்படி அதிகரிப்பு போன்று பணவீக்கத்தின் அளவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. மேலும், மூலதனச் செலவுகள் கட்டுமானப் பொருட்களின் விலைகள் மற்றும் தொழிலாளர் செலவுகள் போன்றவற்றுடன் தொடர்புடையது, இது பணவீக்கத்தின் காரணமாக அதிகரிக்கிறது. நமது வரிகள் மற்றும் வருவாய் அமைப்பு பணவீக்க அதிகரிப்புடன் தொடர்புடையதில்லை என்றால், சொத்துகள் - பொறுப்புகளிடையே பொருந்தாத தன்மை ஏற்படுகிறது. சொத்து நிலையானதாகவும் பணவீக்கத்தின் அடிப்படையில் பொறுப்பு மட்டும் அதிகரிக்கிறது எனில் எப்படி சமாளிக்க முடியும்?

மற்றொரு பிரச்சனை நியாயமானது, அரசு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அகவிலைப்படி அதிகரிப்பதன் மூலம் உயர்த்தப்படுகிறது. ஆனால் கைம்பெண்களுக்கும் , மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம்/ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்படவில்லை. இது எப்படி நியாயம் ஆகும்? வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்பது அரசின் தோல்வி.

சட்டசபை நடைமுறையின் 110 வது விதியின் கீழ், முந்தைய அதிமுக முதல்வர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ரூ .3 லட்சம் கோடி மதிப்புள்ள 1,700 க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவித்தனர். இது இந்த ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டுக்கு சமம். அவற்றில் பெரும்பாலானவை அரசானை வெளியிடும் நிலைக்கு கூட வரவில்லை, அல்லது அற்பமான முன்னேற்றம் கூட அடையவில்லை என்பது கொடூரமான நிலை. வருடாந்திர தரவுகளுடன் நாங்கள் அதை நன்றாக ஆவணப்படுத்தியுள்ளோம். எனவே தீர்க்கப்பட வேண்டிய கடுமையான வருவாய் பிரச்சனை உள்ளது. அது சரி செய்யப்படாவிட்டால், நாம் ஒரு தீய சுழற்சியில் சிக்கிக்கொள்வோம். வட்டி கொடுக்கவும் சம்பளம் கொடுக்கவும் கடன் வாங்குகிறோம் கட்டாய செலவுகளுக்குக்கூட நாம் கடன் வாங்கமுடியாத நிலையில் உள்ளோம்.

எதிர்காலப் பாதை என்ன?

அடிப்படைச் சமநிலைப்படுத்தல் குறித்து நாம் ஒன்றிணைந்து செயல்படுவோமேயானால், நாம் நமது சொத்துக்களை நிர்வகிக்கும் மற்றும் முதலீடு செய்யும் முறையை மறுபரிசீலனை செய்வதன் மூலம் அடிப்படையில் வளர்ச்சி விகிதத்தையும் வேகத்தையும் மாற்ற முடியும். உதாரணமாக, அரசு நிலத்தில் பெரும்பகுதி பயன்பாடின்றி கிடக்கிறது. அதை விற்காமல் நாம் அதை திறன்மிக்கதாக பயன்படுத்த பல வழிகள் உள்ளன. நாங்கள் எதையாவது உருவாக்க வேண்டிய அவசியமில்லை, பின்னர் பணமாக்குதல் திட்டம் பற்றி கவலைப்படவும் வேண்டாம்.

தமிழ்நாடு போன்ற அரசாங்கம் மூலதன சொத்துக்களுக்கு 100% வர்த்தகப் பங்குமூலம் நிதியளிப்பது பொருத்தமற்றது. உதாரணமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. நிச்சயமாக, ஒரு பேருந்து நிலையம் பயன்பாட்டு கட்டணம், கடைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றின் மூலம் வருவாயை ஈட்ட முடியும். ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட திட்டம். (SPV) 20-30 வருடங்களுக்கு சொத்தை கவனித்து, கடனை செலுத்தி, சொத்தை அரசுக்கு திருப்பித் தரலாம். இது வருவாயை உருவாக்கும் சொத்து. வங்கிகள் இவற்றுக்கு மகிழ்ச்சியாக கடன் வழங்கும், ஏனெனில் பணப்புழக்கம் SPV இன் எதிர்கால வருவாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், நாங்கள் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளைக் கட்டினால், முழுப் பணமும் அரசாங்கத்தின் பங்காக முதலீடு செய்யப்பட வேண்டும். வேறு வழியில்லை. எனவே, எந்த திட்டத்திற்கு முழுவதுமாக நிதியளிப்பது மற்றும் எவை SPVகளாக உருவாக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதன் மூலம் எங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரிக்கலாம், எனவே, எங்கள் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம்.

தமிழ்நாடு மிகப்பெரிய வளமான மாநிலம். 100 ஆண்டுகால சமூக நீதி கோட்பாட்டின் சாதகமான விளைவு என்னவென்றால், எந்தவொரு பணக்கார மாநிலத்தையும் விட எங்கள் மாநிலத்தின் ஜினி- கோஎஃபீஷியன்ட் மிகக் குறைவு(ஜினி கோஎஃபீஷியன்ட் அதிகரிப்பு வருமானம் மிகவும் சீரற்ற முறையில் விநியோகிக்கப்படுவதைக் குறிக்கிறது). குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மட்டுமே பணக்கார மாநிலங்கள். மாநிலத்தின் ஜினி கோஎஃபீஷியன்ட் குறைவாகவும் அதன் விளைவாக தனிநபர் செலவீனம் அதிகம், சிறப்பான சுகாதார வசதி இருக்கிறது, குறைவான தாய் சேய் இறப்பு விகிதம், மிக உயர்ந்த கல்லூரியில் சேரும் மாணவர்களின் விகிதம் உள்ளது.. நீங்கள் எந்த புள்ளிவிவரங்களை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள், நாங்கள் உச்சத்தில் இருக்கிறோம். இந்த அளவிற்கான வளர்ச்சிகளை மாநிலத்தின் பாதி திறனை பயன்படுத்தி எங்களால் பெற முடியும் என்றால் 30 ஆண்டுகளில் இங்கு ஒரு சிங்கப்பூரை உருவாக்க முடியும் என்பது சாத்தியமே. தற்போதுள்ள $4000 தனிநபர் வருவாயை 2050ஆம் ஆண்டுக்குள் $50000 என சிங்கப்பூருக்கு இணையாக உயர்த்த முடியும்.

Source: New Indian Express.

 Articles Year Wise: