மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரைப்படி தேவையான இடங்களில் அரசு கருவூலங்கள் அமைக்கப்படும்! சட்டப் பேரவையில் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

Published Date: January 10, 2022

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைப்படி தேவையான இடங்களிலெல்லாம் அரசு கருவூலங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது இது குறித்து நடைபெற்ற விவாதம் வருமாறு:-

 

டாக்டர்.சி. சரஸ்வதி: மொடக்குறிச்சி வட்டத்தில் புதிய சார் கருவூலம் அமைக்க அரசு முன்வருமா?

 

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தின் நாளது தேதியன்று சார் கருவூலம் ஏதும் செயல்படவில்லை.சார் கருவூலங்கள்  இல்லாத வட்ட தலைமை இடங்களில் புதிய சார் கருவூலங்கள் அமைப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க அரசாணை (நிலை)எண் 324, நிதித்துறை, நாள் 27-9-2018-ன்படி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன, அதன்படி அமைக்கப்பட்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தில் புதிய சார் கருவூலம்  அமைக்க ஆய்வு செய்து அளித்துள்ள அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. 

 

அக்குழுவின் பரிந்துரையின்படி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தில் புதிய சார் கருவூலம்  அமைப்பதற்கான கருத்துகள் கருவூல கணக்கு ஆணையரிடமிருந்து CTA-யிடம் பெறப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே உரிய நடைமுறைகளை பின்பற்ற பிறகு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தில் ஒரு புதிய சார்கருவூலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

திருமதி டாக்டர் சி சரஸ்வதி: மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி தாலுகாவானது ஈரோடு தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்டு, மொடக்குறிச்சி, கொடுமுடி என இரண்டு தாலுகாகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மொடக்குறிச்சி தாலுகாவில் அரசு கருவூலம் இல்லாத காரணத்தால் அரசு சம்பந்தப்பட்ட பணம் செலுத்துவதற்கு அரசு அலுவலர்கள் ஈரோடு தாலுகா அலுவலகம் சென்று வர மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. எனவே பொது மக்களின் நன்மை கருதி மொடக்குறிச்சியில் தாலுகா அரசு கருவூலம் அமைத்துத் தருவதற்கு அரசு முன்வர வேண்டும். மேலும் எனது மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடி தாலுகாவில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அரசு கருவூலம் புதியதாக கட்டப்பட்ட அரசின் சொந்த கட்டடத்தில் விரைவில் செயல்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

 

அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்: எந்தெந்த தாலுகாக்களில் சார் கருவூல அலுவலர்கள் இல்லையோ அவற்றையெல்லாம் ஆய்வு செய்வதற்காகத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில் அலுவலகம் துவங்குவதற்கு ஏற்கனவே பரிந்துரை உள்ளது. எனவே உறுதியாக அதனை எவ்வளவு விரைவில் செயல்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் செயல்படுத்துவோம். ஆனால் பொதுவாக இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில், IFHRMS கொண்டு வந்த பிறகும் கூடுதல் வங்கிகள் மூலமாக செலுத்துவதற்கும் பெறுவதற்கும் online மூலம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் physical distance, அங்கு சென்று சேர்ந்த கட்டும் வழிமுறைகளை குறைப்பதற்கான ஒரு அடிப்படையான புதிய விதிமுறையை உருவாக்குவதற்கு பல இடங்களில் கூறியிருக்கிறோம். all the way upto Payments நாமே ஒரு Payments  Bank, வாங்குவதற்கும் கட்டுவதற்கும் உருவாக்குகின்ற அளவிற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். எனினும் எங்கெல்லாம் தாலுகாவில் இல்லையோ அங்கெல்லாம் உடனடியாக ஏதாவது ஒரு செயல்பாடு arrangement செய்வதற்கான செயல்முறை தற்போது இருக்கிறது.

 

திருமதி டாக்டர் சி சரஸ்வதி: அமைச்சர் அவர்களின் பதில் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. முதலமைச்சர் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

 

ஆ. அருண்மொழிதேவன்: வட்ட தலைநகரில் இன்னும் கருவூலம் அமைக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைத்து தரப்பினரும் கருவூலம் இல்லாத நிலையில் பக்கத்தில் உள்ள வட்ட தலைநகருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

 

அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்: நான் ஏற்கனவே கூறியது போல அரசாணையின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆங்காங்கே, தாலுகா தலைமைஇடங்களில் எங்கெல்லாம் கருவூலம் இல்லை அதனால் கருவூலம் தேவைப்படுகிறது என்ற பரிந்துரை பெறப்பட்டிருக்கிறது.

 

உறுப்பினர் கூறும் இடத்திற்கு அந்த மாவட்டத்தில் இருந்து என்ன பரிந்துரை வந்திருக்கிறது என்பது தற்போது தெரியவில்லை. அதனை அறிந்து கருவூலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறோம்.இவ்வாறு பேரவையில் விவாதம் நடைபெற்றது.

 

Media: Murasoli