Published Date: July 3, 2021
பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்க காரணமாக அமைந்தது எது? குழுவில் இடம்பெற்றிருக்கும் பொருளாதார வல்லுநர்களை நீங்கள் எப்படி தேர்வு செய்தீர்கள் ?
முதலமைச்சர் திரு மு.க..ஸ்டாலின் அவர்கள், 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த குழு அமைப்பது பற்றி பேசினார். 2021ல் நாங்கள் வெல்லப் போகிறோம் என்பதில் எனக்கு அப்போது சந்தேகமில்லை . ஆனால் அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று நான் கவலைப்பட்டேன். ஏனென்றால் நாங்கள் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. எங்களுக்கு அந்த சூழ்நிலையை சமாளிக்கும் அனுபவமோ அல்லது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் தொடர்போ இல்லை. இது ஒரு கடினமான பணியாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன். எனவே, அப்போதே, நான் முதலமைச்சரிடம் [திரு மு.க..ஸ்டாலின்] முடிந்தவரை பல நிபுணர்களிடமிருந்து யோசனைகளை பெறவேண்டும் என்று குறிப்பிட்டேன்.
நாங்கள் வென்றவுடன், அவர் என்னை அழைத்து இந்த குழுவை அமைக்கும் பணியில் ஈடுபட சொன்னார். அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நிபுணரும் குழுவில் இடம்பெற ஒப்புதல் அளித்தார். [முன்னாள் நிதி செயலாளர்] திரு எஸ்.நாராயணனை அவர்களை நான் இதற்கு முன்பு அறிந்திருக்கவில்லை. ஏதோ ஒரு வழியில், அவர்களுடைய உழைப்பை மதிக்கும் ஒருவராய் மற்ற நான்கு பேருடன் நான் தொடர்பில் இருந்தேன். இதனால் நானே அவர்களை நேரடியாக அணுகினேன். திரு ரகுராம் ராஜன் மற்றும் திரு அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோர் உடனடியாக இதற்கு ஒப்புக்கொண்டார்கள். இந்த குழுவில் திரு ஜீன் ட்ரெஸ் அவர்களை கொண்டு வர நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம், ஏனென்றால் நுணுக்கமான தரவு அடிப்படையிலான உண்மை நிலையை பற்றிய புரிதல் கொண்டவர் அவர் என்பதோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் சார்ந்த திட்டத்தை கட்டமைத்திருக்கிறார் . திரு.ராஜன் அவர்கள் சந்தை நம்பகத்தன்மையையும் சந்தை நிலவரங்களையும் புரிந்துகொள்கிறார். அரவிந்த் சுப்பிரமணியன் அவர்களும் குழுவிற்கு வேறு வகையில் வலு சேர்க்கிறார். எஸ்டர் டஃப்லோ அவ்வப்போது தமிழ்நாடு அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
நீங்கள் தமிழ்நாடு பெரும் கடன்களில் இருப்பதாகவும், மறைக்கப்பட்ட கடன்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறீர்களே.
கணக்குகளின் அடிப்படையில் பேசுவோம். மாநில அரசு தனது திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் கடன் ரூ .4.85 லட்சம் கோடி உள்ளது என்று அறிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டில், திமுக ஆட்சிக்கு வந்தபோது, கடன் சுமார் ரூ .58,000 கோடி. 2011 ல் நாங்கள் அரசாங்கத்தை விட்டு செல்லும்போது அது ரூ 1.01 லட்சம் கோடி மட்டுமே. உள்ளதை உள்ளபடியே பேசுவோம். இது [2011 முதல் 2021 வரை] ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது. 5 மடங்கு என்று ஏன் சொல்கிறேன் என்றால் அரசாங்கத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகள் 20 முதல் 30 சதவீதம் வரை வேறுபடுகின்றன.
அவர்கள் கடன்களைப் பற்றி பேசும்போது, அவர்கள் பொது கடன்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்கள் மாநிலத்தின் மொத்த கடன்களைப் பற்றி பேசுவதில்லை. கணக்கியல் தகவல் முறை வடிவமைக்கப்பட்ட விதத்தில் உள்ள சிக்கல்தான் இதற்கு காரணம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் கடன்கள் இருப்புநிலை கடன்கள் என்று அழைக்கப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். இவை இறுதியில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்புகள். இதில் மேலும் பல உண்மைகள் இருக்கின்றன. டெல்லியில் நீங்கள் பார்த்தது போல, மத்திய அரசு இந்திய உணவுக் கழகம் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து வாங்கிய கடன்களை மறைத்தது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், இந்தியன் ஆயில் போன்ற பெரிய நிறுவனங்களில் பண இருப்புக்களைக் கலைத்து, அந்த பணத்தை உபயோகப்படுத்திவிட்டு தவறான கணக்குகளை காண்பித்தார்கள். அது கடன் இல்லையென்றாலும், பணத்தை தவறான முறையில் கையாண்டதை காட்டுகிறது.
இலவசங்கள் மற்றும் சமூக சார்ந்த முதலீடுகளை எவ்வாறு வேறுபடுத்துவது?
இலவசங்கள் என்ற சொல் தவறானது. அதற்கு அர்த்தம் விலை இல்லாமல் நான் ஒரு பொருளை கொடுக்கிறேன் என்பது. அரிசி, எரிவாயு சிலிண்டர்கள், இலவச மதிய உணவு திட்டம் அல்லது தொலைக்காட்சிகள் போன்றவை இவ்வாறு கொடுக்கப்படுகின்றன. இலவசங்கள் என்பது ஒரு தவறான சொல், ஏனெனில் இது ஏதோ மக்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பொருட்டு அல்லது அவர்களின் வாக்குகளை பெறவோ, அல்லது அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றும் நோக்கில் செய்வது போன்ற விஷயங்களை குறிக்கிறது. இலவசங்கள் என்பது ஒரு பொருத்தமற்ற சொல்லாகும். மதிய உணவு திட்டம் ஒரு இலவசம் திட்டம் அல்ல. உண்மையில், பள்ளிகளில் இலவச காலை உணவை வழங்குவதில் நாங்கள் முன்னோடிகளாக இருக்கிறோம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அவர்களை ஊக்குவிக்கும் வழிகள் இவை. பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியின் போது மதிய உணவு திட்டம், என அத்த்திட்டம் விரிவடைந்தது; கலைஞர் (மு.கருணாநிதி) அவர்கள் மதிய உணவுடன் முட்டைகளையும் வழங்கி குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகரிக்க வழி செய்தார். மற்ற மாநிலங்களும் நாடுகளும் கூட இதைப் பின்பற்ற முயற்சிக்கின்றன. எனவே இது இலவசம் அல்ல. கணக்கியல் அடிப்படையில், இது வருவாய் செலவு ஆகும். ஆனால் சமூக தாக்கத்தின் அடிப்படையில் இது மனிதவள மேம்பாடு. இலவச மிதிவண்டிகள், இலவச மடிக்கணினிகள் - இவை அனைத்தும் எதிர்காலத்திற்கான முதலீடு. மாநிலத்தைப் பொறுத்தவரை, அது வருவாய் செலவு, அவர்களுக்கு இது மூலதன முதலீடு. அவர்களுக்கு மாநில அரசிடமிருந்து மூலதன முதலீடு கிடைத்துள்ளது. பின்னர் காப்பீட்டுத் திட்டங்களும் திருமண உதவிகளும் உள்ளன. உண்மையில் அவை ஜெயலலிதா ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டன. இவையெல்லாம் இடர் மேலாண்மை திட்டங்கள். பெரும்பாலான மக்கள் நிதி பற்றாக்குறையால் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறார்கள். கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், பேறு பெற்றவர்களுக்கும் ஒரு பெட்டகம் தரப்படுகிறது; இதை நாங்கள் சமூக முதலீடு என்று அழைக்கிறோம். பின்னர் 100 நாள் வேலை திட்டம் உள்ளது, அதில் இருந்து ஏதோவொரு வகையில் வருமானம் கிடைக்கும். இந்த திட்டங்கள் அனைத்திற்கும் செலவிடுவது சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதலுக்கு நாம் செலவிடுவதை விட மிகக் குறைவு.
சம்பளம் மற்றும் வட்டி செலுத்துதல் ஆகியவை மாநிலத்தின் சொந்த வருவாயில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை எடுத்துக்கொள்கின்றன. எனவே மத்திய மானியங்கள் மற்றும் திட்டங்களில் எங்களது பங்கிற்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், நாங்கள் மூலதன முதலீடுகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம். இந்த செலவுகள் நிதி நெருக்கடியை தருவதில்லை. ஆனால் இது நமது மாநிலத்தை ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இட்டு செல்லும்.
உதாரணமாக, இலவச வண்ண தொலைக்காட்சி திட்டத்தை எடுத்துக்கொள்வோம். இதற்கு பின்னால் இருக்கும் ஆழமான சமூக நீதியை நான் உணர்ந்தேன். இது சமுதாய அடுக்குகளில் உள்ள வேறுபாட்டை உடைத்தது. எல்லோருக்கும் எல்லாமே என்ற கொள்கையை உணர்த்தியது. கலைஞர் உண்மையில் இதைத்தான் விரும்பினார்.
43வது ஜிஎஸ்டி மன்ற கூட்டத்தில், பொருட்கள் மற்றும் சேவை வரியில் பல குறைபாடுகள் இருப்பதாக நீங்கள் கூறினீர்களே.
ஜிஎஸ்டி கொள்கையில் உள்ள குறைபாடுகளை முதன்முதலாய் சுட்டிக்காட்டியது நான் மட்டுமல்ல. 43 வது ஜிஎஸ்டி மன்ற கூட்டத்தில், திமுக முதல்முறையாக தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. எதிர்ப்பை நான் மட்டும் பதிவு செய்யவில்லை. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமித் மித்ரா, பஞ்சாபைச் சேர்ந்த மன்பிரீத் சிங் படேல் மற்றும் சத்தீஸ்கர் நிதியமைச்சர் (முதலமைச்சர் பூபேஷ் பாகேல், இந்த இலாகாவைக் கையாளுகிறார்கள்) ஆகியோரும் இதை எதிர்த்தனர். இதில் அபாயங்கள் அதிகம் என்றும் நன்மைகள் குறைவாக இருப்பதாகவும் கூறினர். இப்போது அது உண்மையாயிற்று. ஜிஎஸ்டி அமைப்பில் உள்ள சிக்கல் என்னவென்றால், அதில் சில விஷயங்கள் நல்லவை, ஆனால் சில விஷயங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, நாங்கள் ‘ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு’ என்பதை எதிர்க்கிறோம். நிறைய செயலற்ற தன்மை உள்ளது. அது மட்டுமல்லாமல் இப்போது தற்செயலாக நடக்கும் விஷயம் பின்னர் ஒரு விதிமுறையாக மாறும். இதை நாங்கள் விரும்பவில்லை. நான் சொன்னது போல், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த அமைப்பின் அடிப்படை குறைபாடுகளை சுட்டிக்காட்ட எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தேன்.
மத்திய அரசு அதை சரிசெய்யும் என்று நினைக்கிறீர்களா?
அது எனக்குத் தெரியாது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்கள் கூட இதை பற்றி இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளன என்று என்னால் கூற முடியும். ஒரு மாநில அரசு தனது அரசியல் லாபத்திற்காக தனது சொந்த மக்களின் நலனை எவ்வாறு கைவிட முடியும் என்பது எனக்கு புரியவில்லை. இந்த முரண்பாட்டைப் நினைத்து நான் இப்போதும் ஆச்சரியப்படுகிறேன். உதாரணமாக, கோவா மற்றும் வடகிழக்கில் பாஜக மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராக இல்லை, ஆனால் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராக இருக்கிறது. இப்போது ஜிஎஸ்டி கவுன்சிலிலும், பாஜக ஆளும் மாநிலங்களின் அணுகுமுறையில் ஒரு சிறிய மாறுபாடு உள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது.
Source: The Week