இந்தியாவுக்கு முன்பே தமிழ்நாடு அதனை செய்துகாட்டும்: புள்ளிவிபரத்துடன் எடுத்துக்காட்டிய அமைச்சர்

Published Date: December 13, 2021

CATEGORY: EVENTS & CONFERENCES

இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடையுமென்றால், தமிழ்நாடு 2050ஆம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடையும்” என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் மோடி, வரும் 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை இந்தியா அடையும். 2030க்குள் இந்தியாவின் 50% மின் தேவையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து பூர்த்தி செய்து கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

 

 

நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்பது பசுமையில்ல வாயு உமிழ்வை முடிந்தவரை குறைத்து பின்னர், மரம் நடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம், வளிமண்டலத்தில் இருந்து மீதமுள்ள கார்பன் வெளியீட்டளவை உறிஞ்சுவதன் மூலம், உமிழ்வுகளைகச் சமநிலைப்படுத்துவதாகும்.

உலகின் மிகப்பெரிய கார்பன் உமிழும் நாடான சீனா, ஏற்கனவே 2060க்குள் கார்பன் சமநிலையை எட்டும் என்றும், அதன் உமிழ்வு 2030க்கு முன்பு உச்சத்தை எட்டும் என்றும் அறிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார்பன் உமிழும் நாடான அமெரிக்கா, கார்பன் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய 2050ஆம் ஆண்டை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய உமிழ்வைக் கொண்ட இந்தியா, நிகர பூஜ்ஜிய இலக்கை எட்ட எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தாத நிலையில் பிரதமர் மோடி 2070ம் ஆண்டை பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்காக அறிவித்தார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு சுற்றுச்சூழலைக் காக்கும் விதமாக பல்வேறு சீர்மிகு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பருவமழை மாற்ற பிரச்சனை குறித்துப் பேசியுள்ள தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடையுமென்றால், தமிழ்நாடு 2050ஆம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

Media: KALAIGNAR NEWS