/

"நெருக்கடி முடிந்தது என்ற உறுதியில்லை!"

Published Date: September 15, 2018

"நெருக்கடி முடிந்தது என்ற உறுதியில்லை!"

கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் லெஹ்மன் சகோதரர்களின் நிறுவனம் நலிவுற்று இன்றைக்கு 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. அந்நிறுவனம் திவால் ஆனதாக, செப்டம்பர் 15, 2008 அன்று அறிவிக்கப்பட்டது, உலக பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, லெஹ்மன் சகோதரர்கள் நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டுச் சந்தையின் தலைவராக இருந்த முதலீட்டு வங்கியாளரும், தற்போது அரசியல் பிரமுகராகவும் உள்ள திரு. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள், அன்றைக்கு ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து பெற்ற பாடங்களை பேட்டியாக அளித்துள்ளார்.

/

கேள்வி: லெஹ்மன் சகோதரர்கள் நிறுவன சரிவில் இருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன?

பி.டி.ஆர்: லெஹ்மன் நிறுவனத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டு, என்னுடைய வாழ்வில் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தக் கூடிய படிப்பினை குறித்து என்னுடைய சக பணியாளர்களுக்கு தொடர்ந்து சொல்லிவருவது – எது ஒன்றுமே நிரந்தமானது என்று நினைக்க வேண்டாம் என்றும் “நமக்கு 50 ஆண்டுகால வரலாறு இருந்தாலும், அது என்றுமே நிலைக்கும் என்று கருதாதீர்கள்” என்பது தான்.

130 ஆண்டுகள் பாரம்பரியமும், பல பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பும், பல நூறு மில்லியன்கள் செல்வம் உடையவர்கள் உருவாக்கிய ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்தேன். ஒரு நாள் இருந்தோம், மறுநாள் இல்லை!

மிகப்பெரிய சிமெண்ட் கட்டிடம், பல உடைமைகள் , ஒரு பெயர் பலகை மற்றும் ஒரு பெரிய முகப்பு போன்றவை இருப்பதால் மட்டுமே, எதுவும் நிரந்தரம் ஆகிவிடாது.

மிகப்பெரிய சிமெண்ட் கட்டிடம், பல உடைமைகள் , ஒரு பெயர் பலகை மற்றும் ஒரு பெரிய முகப்பு போன்றவை இருப்பதால் மட்டுமே, எதுவும் நிரந்தரம் ஆகிவிடாது.

இறுதி பகுப்பாய்வில், மனித இயல்பும், உழைப்புத் திறனுமே நிரந்தரமானவை, என்பது நான் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம். நல்ல மனிதனாக, நல்ல ஒரு தொழிலை திறனோடு செய்து வந்தால் , குழப்பங்கள் தானாக மறைந்துவிடும்.

வீடு இடிந்துவிட்டது என்பதால் அதில் இருந்தவர்கள் எல்லோரின் வாழ்க்கை முடிந்து விட்டதாக அர்த்தமில்லை.

கேள்வி: பொருளாதார நெருக்கடிகள் பெரும்பாலும் நம்மை கடந்து விட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பி.டி.ஆர்: அப்படி கருதிவிட முடியாது. ஏறத்தாழ 3 முதல் 4 டிரில்லியன் டாலர்களை தொடர்ந்து மத்திய வங்கிகள் புழக்கத்தில் செயற்கையாக உந்துவதால் பொருளாதார மற்றும் இதர உடைமைகளின் விலைவாசி சரியானதொரு வரையறைக்குள் இருந்து வருகிறது. ஒரு நெருக்கடி நேரும் பொழுது, இன்று என்னால் எவ்வளவு இழப்பை சமாளிக்க முடியும் என்பதையம் எதிர்காலத்தில் சமாளிக்க எவற்றை தள்ளி போட வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.

/

 

சொத்துகளின் விலையை செயற்கையாக உயர்த்துவதும், அதிக பணத்தை சந்தை புழக்கத்திற்கு கொண்டு வருவதும், இழப்புகளை தள்ளிப்போட உகந்த வழிமுறைகள்.
மீண்டும் பழைய நிலை திரும்பினாலோ அல்லது பழைய நிலை திரும்புவதற்கான காரணிகள் மீண்டாலோ, என்ன ஆகும் என்பதுதான், இதில் கேட்க வேண்டிய கேள்வி, சந்தையின் நிலை அப்போதும் நல்லபடியாக இருக்குமா? என்பது தான். அப்படி இருந்தால், நாம் மீண்டும் சரியான தடத்திற்கு திரும்பி விட்டோம் என்று எடுத்துக்கொள்ளலாம். இதில் கவனம் கொள்ள வேண்டிய மற்றொரு பிரச்சினை என்னவென்றால், இந்த இக்கட்டான நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க தகுந்த வழிமுறைகள் கையாளப்பட்டனவா என்பது தான். அதற்கான பதில் இல்லை என்பதே.

உடைமைகளை நிர்வகிக்கும் வங்கி அதிகாரிகள் தற்போதைய கால கட்டத்தில் வங்கிகளின் சொத்துமதிப்பை பன்மடங்கு தாண்டிய சொத்துக்களையே நிர்வகித்து வருகின்றனர். ஒரு வேளை இவர்கள் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அதிலிருந்து அவர்களை மீட்டு அந்த சிக்கலை சீர் செய்யும் திறன் நம்மிடம் உள்ளதா?

பத்து ஆண்டுகள் கடந்தும், இன்றும் கூட, நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம் என்று என்னால் உறுதியாக நம்ப முடியவில்லை. பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நாம் இன்னும் கண்டறியவில்லை. லெஹ்மன் திவால் கூட இன்னும் நிறைவடையவில்லை.

கேள்வி: செயற்படா சொத்துகளால் இந்திய வங்கிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நிதி நெருக்கடிக்கு இணையான நெருக்கடி என வேறு எதை சொல்வீர்கள்?

பி.டி.ஆர்: செயற்படா சொத்துகள் 2008 நிதி நெருக்கடியால் ஏற்பட்டவை அல்ல. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகு, வங்கிக் கட்டமைப்புகளின் சில பலவீனங்களே இதனை உருவாக்கியுள்ளது. ஆனால், நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு கடன் வகைகளை வகைப்படுத்தாமல், ஒருமுறை சிறப்பு சலுகையாக, அவற்றை மறுகட்டமைப்பு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கும் அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்தது. எனது பார்வையில், இது அதிகப்படியான எதிர்வினை. இதனால், செயற்படா சொத்துக்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கவே செய்தது.

கேள்வி: அப்போது உங்களுடன் இருந்த பணியாளர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோடு இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா? அவர்களது வாழ்க்கை எப்படி மாறியுள்ளது – அது தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியுள்ளதா?

பி.டி.ஆர்: லெஹ்மன் நிறுவனம் சரிந்ததால் என் வாழ்க்கை தோல்வியடைந்தது என்று இதுவரையில், அந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் யாரும் சொன்னதில்லை.ஷ்ம்பிட்டரின் ஆக்கபூர்வமான அழிவிற்கு இதுவொரு மிகச்சிறந்த உதாரணம். ஆம். லெஹ்மன் அழிந்தது. ஆனால், என்னைப் போன்றவர்களை உலகின் பல முலைகளுக்கு, வெவ்வேறு துறைகளுக்கு தூக்கியடித்தது..அதன் மூலம் , முன்னெப்போதும் இல்லாத தொடர்புகளை எங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

/

 

லெஹ்மன் அழிந்தாலும் ஒரு மொத்த பொருளாதார மதிப்பீடை உருவாக்கி தந்தது – பல்வேறு இடங்களுக்கு பணியாற்றச் சென்று, பலரும் ஒரு நன்மதிப்பை உருவாக்கினர். திவால் என்பது எல்லோருக்குமே ஒரு மோசமான நிகழ்வு. அது நிகழ்ந்தபோது மிகப்பெரிய பேரழிவாகவே அதை கருதினோம். ஆனால், இப்போது இந்த உலகை நான் பார்க்கும்போது, பலபேர் வெளியே சென்று சிறந்த முறையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்று சொல்ல முடியும். உண்மையில் எனக்கு நேரடியாக பரிச்சயமான பலரும் இப்போது நல்ல நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். நியூயார்க், ஜெனிவா, ஜப்பான் போன்ற இடங்களுக்கு அவர்கள் இடம்பெயர்ந்து வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு நானே பரிந்துரை கடிதங்களை வழங்கியிருக்கிறேன்.

அவர்களில் பலர் லெஹ்மன் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியவர்கள்,. மற்றும் சிலர் இரு மாதங்கள் மட்டுமே பணியாற்றியவர்கள். அப்பொழுது தான் அந்நிறுவனத்தில் இணைந்திருந்தார்கள், திடீரென வேலை இல்லாமல் நிர்கதியாக நின்றார்கள். ரயில் விபத்தில் சிக்கியதை போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டு இருந்தது.

என் வாழ்நாளில் வேறெந்த தருணத்திலும் என் சிந்தனைகள் ஓய்வின்றி இருந்ததில்லை – கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக, அதாவது திவால் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நான் எல்லோரையும் வேறு வங்கியில் பணியமர்த்திவிட்டு வெளியேறும் வரை என்னால் உறங்க முடியவில்லை. அதற்கு காரணம் மன அழுத்தமோ அல்லது பணக் கவலையோ இல்லை. அந்த சூழ்நிலையை எந்தெந்த வகையில் சமாளிக்கலாம் என்று யூகிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை.

என் உயர் அதிகாரிகள் அனைவரும் வெளியேறி இருந்தார்கள். யாரிடம் ஆலோசனைகளை பெறுவது எனும் குழப்பத்தில் இருந்தேன். அந்த காலகட்டம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது – பல நூறு நபர்களின் எதிர்காலம் நான் எடுக்கும் முடிவுகளை நம்பி இருந்தது. அரிதான நிகழ்வுகளின் போது மனித இயல்புகளை பற்றியும் அசாதாரணமான நடவடிக்கைகளை பற்றியும் கற்றுக்கொள்ளலாம்.

 Articles Year Wise: