Published Date: February 21, 2022
CATEGORY: POLITICS
மதுரை, பிப்.19: தமிழக பட்ஜெட் சிறந்த தலைமையின் வெளிப்பாடாக இருக்கும் என நிதித்துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சனிக்கி ழமை தனது வாக்கை பதிவு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது.ஜி. எஸ்.டி கூட்டத்தில் நான் உரையாற்றியதை அறிக்கையாக சமர்ப்பித்து இருக்கிறேன். கூட்டத்தில் ஒளிவுமறைவாகவும், புள்ளி விவரமின்றியும் பேசியதை சுட்டிக் காட்டினால், பிரச்னையாக்குவதாக கூறுபவர்கள், என்னை ஏன் நிலைக்குழுவில் உறுப்பினராக நியமித்தனர்.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு, முதல்வரின் வழிகாட்டுதல்களின் படி, பால் விலை மற்றும் பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் சிறந்த தலைமைத்துவத்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்.
கடந்த 2014 வரை திமுக மற்றும் அதி முக மாறி மாறி ஆட்சியில் இருந்தபோது, ரு.1,700கோடி வருவாய் பற்றாக்குறை இருந்தது. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து தற்போது ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை திருத்தியமைக்கப்படும். இதற்காக கூட்டங்கள் நடத்தி கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். தமிழக பட்ஜெட் சிறந்த தலைமையின் வெளிப்பாடாகவும், மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் இருக்கும் என்றார்.
Media: Dinamani