/

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பில் "அடிப்படை குறைபாடுகள்" உள்ளன, அதை சீர்திருத்த இதுவே சரியான நேரம்: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன்

Published Date: June 22, 2021

மாநிலத்தின் நிதிநிலை, ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள 'ஒரு மாநிலம், ஒரு வாக்கு' நிலைப்பாட்டை அகற்றவேண்டியதன் அவசியம், அறநிலையத்துறைக்கு தி.மு.க. அரசு ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, ஜக்கி வாசுதேவ் என பல்வேறு தலைப்புகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள்:

 

அ.தி.மு.க அரசு நிதி நிர்வாகத்தை மிகவும் மோசமாக மேலாண்மை செய்ததாக எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க குற்றம் சாட்டியது. நீங்கள் நிதியமைச்சராக பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது, மாநிலத்தின் நிதிநிலை குறித்த உங்கள் தற்போதைய பார்வை என்ன?

தமிழ்நாடு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.5-4 சதவீதம் வருவாய் இழப்பின் காரணமாக இழந்துள்ளது. இது மிகப்பெரிய பிரச்சினை. அதை மீட்பதில் இவர்கள் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் 2014 முதல் 2021 வரை நடந்த சீர்கேடு. ஜெயலலிதா முழுவதுமாக கட்டுப்பாட்டில் இருந்தவரையில் நிலை ஓரளவு சீராக இருந்துது. ஆனால், ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் ஆட்சி அவரின் நேரடி கண்பார்வையில் இருந்து விலகி, நிலை மிகவும் மோசமானது. அவரின் மறைவுக்கு பின்னர் முழுவதுமாக சீர்கெட்டு போனது. 2004 முதல் 2014 வரையில் வருவாய் சமநிலை அல்லது வருவாய் உபரி மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு திடீரென ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறையில் சாதனைகளை புரியத் தொடங்கியது. அதன் விளைவாக கடன் கூடிக்கொண்டே சென்றது. இன்னும் ஒரு மாதத்தில் மாநில நிதி நிர்வாகத்தில் என்ன தவறுகள் நடந்ததுள்ளன என்பதை ஒரு விரிவானவெள்ளை அறிக்கை மூலமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

துறையின் பொறுப்பை எடுத்துக் கொண்ட பிறகு, நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தவறுகளில் பெரும்பகுதி அக்கறையின்மையால் ஏற்பட்ட விளைவுகள் தானே இன்றி தெரிந்தே அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் நிலை மோசமாகி கொண்டே சென்ற போதும், தவறுகளை களைந்து நிலையை சீர்செய்ய அவர்கள் முயற்சிக்கவில்லை. இந்த கவனக்குறைவு மிகப்பெரிய பிரச்சினை, அது ஏன் நடந்தது என்ற கேள்வியை நாம் அடைந்துள்ளோம்.  எவை முன்னுரிமை பெற வேண்டும் என்பது குறித்த புரிதல் இன்மை, திறமையின்மை மற்றும் முழு திட்டமிடலுடன் நடந்தேறிய ஊழல் போன்றவை காரணமாகவே இந்நிலை ஏற்ப்பட்டுள்ளது. நடந்தேறிவிட்ட இந்த கவனக்குறைவை 100% முழுமையாக விளக்குவது கடினம். வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் போது இவை தெளிவாகும்.

மாநிலத்தின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ளது, ஆனால் புதிய தி.மு.க அரசு பல்வேறு மக்கள்நல நடவடிக்கைகளை உறுதியளித்துள்ளது, அவற்றில் சிலவற்றை ஏற்கனவே செயல்படுத்தவும் தொடங்கியுள்ளது. இதற்க்கெல்லாம் பணம் எங்கிருந்து கிடைக்கும்?

மார்ச் 31, 2021 வரையிலான அதிகாரபூர்வ கடன் ரூ.4.85 லட்சம் கோடி என்று தெரிவிக்கபடுகிறது, ஆனால் இது திருத்தப்பட்ட மதிப்பீடு. இறுதி கணக்கு அல்ல. பெரிய அளவுகளில் உள்ள மறைக்கப்பட்ட கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கையில் வெளிவரும். நாங்கள் வந்த பின்னர், நாங்கள் சீர்கேடுகளில் ஈடுபடவில்லை, மாறாக மக்கள்நல நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக பெருந்தொற்று நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடுகிறோம். வருவாய் இழப்பையும், வரி வசூலில் உள்ள கசிவுகளையும் சீர்செய்வதே என் தற்போதைய பணி.

இதற்கான செலவினம் ரூ.20,000 கோடியைத் தாண்டியிருக்காது, அதில் பெரும்பங்கு ஒரு முறை கோவிட்-19 நிவாரணமாக ரூ.4,000த்தை 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியதில் செலவிடப்பட்டது, அதுதவிர மருத்துவ உட்கட்டமைப்பை அதிகரிப்பதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.

நிதி மற்றும் கையிருப்புநிலைக் குறிப்பு சரியாக நிர்வக்கிக்கபடும் பட்சத்தில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொற்றுநோயினால் ஏற்பட்ட இந்த ரூ.20,000 கோடி செலவினம் காரணமாக நீண்டகால எதிர்மறை விளைவுகளை நாம் எதிர்கொள்வோம் என்று நான் நினைக்கவில்லை. சுமார் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது சுமார் 1% ஆகும். பல நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் மேலாக தொற்றுநோயின் விளைவுகளை சமாளிக்க செலவழித்துள்ளன.

மற்ற பல மாநிலங்கள் திட்டமிடுவது போல், வருவாயை ஈட்டசொத்துக்களை விற்க முற்படுவீர்களா? ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக செய்து வரும் விஷயம் தான். 

சொத்து விற்பனையை நான் நிராகரிக்க மாட்டேன், ஆனால் அது நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தான் நடக்கும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய வசதி என்னவென்றால், நாம் எளிதில் பணமாக்ககூடிய, சந்தை மதிப்புடைய, அத்தியாவசிய முக்கியத்துவம் பெறாத சொத்துக்கள் நம் வசம் உள்ளது. ஆனால், ஒவ்வொரு மாநில அரசாங்கமும் மிகபெரிய மதிப்பு உள்ள பிரதான நிலங்களை கொண்டுள்ளது. அவை மக்களின் அரசாங்கத்திற்கு நிதி திரட்ட மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் நல்ல விளைவுகளை பெருக்ககூடிய காரணம் உள்ளதாலும் சிறப்பாக பயன்படுத்தப்பட வேண்டும். தற்போதைய சூழலில், ஏற்கனவே அமைப்பு பழுதாகி உள்ள காரணத்தால் சொத்துக்களை விற்கவும் அதை கொண்டு ஈட்டிய பொருளை பழுதான இந்த அமைப்பில் இணைக்கவும் ஒரு தயக்கம் உள்ளது. நாம் முதலில் இந்த அமைப்பை சீர்செய்ய வேண்டும். பின்னர் சரியான கடன் விகிதம் என்ன, இன்றுள்ள சூழலில் இருந்து அதை அடைவது எப்படி என்பன குறித்து சிந்திப்போம்.

கோவிட்-19 பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன் தி.மு.க அரசின் அடுத்த கவனம் என்னவாக இருக்கும்?

அரசாங்கம் நிறைய வாக்குறுதிகளை அளித்துள்ளது, அவை அனைத்தையும் ஒரு நாளில் நிறைவேற்றிவிட முடியாது என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். எங்கள் தலைவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இரண்டு வகைப்படும். ஒன்று, மாநிலத்திற்கான 10 ஆண்டு கால தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வாக்குறுதிகள், அவை செய்யகூடியவையே என்று நான் கருதுகிறேன். இரண்டாவது, தேர்தல் அறிக்கையில் உள்ள குறுகிய கால வாக்குறுதிகள். தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை உருவாக்கும் போது, ஒரு அரசாங்கத்தின் பதவிக்காலத்திற்க்கான வாக்குறுதிகள் அதில் இடம்பெறுகின்றன. வெறும் 24 மணி நேரத்தில் நிறைவேற்றிவிடும் வாக்குறுதிகள் அல்ல. மீதமுள்ள காலம் எதுவும் செய்யாமல் இருக்கவும் முடியாது. அரசாங்கத்தின் காலத்திற்குள் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்  அனைத்தையும் யதார்த்தமான கால வரையறைக்குள் நிறைவேற்றுவதை நோக்கி நாங்கள் பயணப்படுவோம்.

மே 7ம் தேதி தி.மு.க. அரசு பதவியேற்றதில் இருந்தே கூட்டாட்சியில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என பெயரிட்டு அரசு ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. கூட்டாட்சி முறையை தி.மு.க. ஏன் தொடர்ந்து முன்னெடுக்கிறது?

இந்த சொல்லாக்கம் ஒரு மிகைப்படுத்தப்பட்ட விஷயம். குஜராத் மாநிலத்தால் வழங்கப்பட்ட உரிமங்கள் யூனியன் ஆஃப் இந்தியா என்று தான் குறிப்பிடுகின்றன, நீதிமன்ற வழக்குகள் இந்திய ஒன்றியத்தை தான் தரப்பாக கருதுகின்றன. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தலைவர் ஒன்றிய நிதியமைச்சர் எனவே பட்டியலிடப்பட்டுள்ளார். நாம் ஏன் இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் கூட்டாட்சி முறையைப் பொறுத்தவரை, இது சமீபத்திய அல்லது தற்காலிகக் கொள்கை அல்ல. இது திராவிட இயக்கத்தின் உயிர்நாடியாகும். சுய நிர்ணயம் & சுய நம்பிக்கை சுயமரியாதையின் நீட்சியே. 

தமிழில், நாங்கள் அதை சூயநிர்ணயம் என்று அழைக்கிறோம், அதாவது எனது முடிவைத் தீர்மானிப்பதில் நான் ஒரு கருத்தைக் கொண்டிருக்க வேண்டும், அதுதான் உள்ளூர் சுயாட்சிக்கு அடிப்படையாகும். கிராம பஞ்சாயத்துக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. கூட்டாட்சி நமது இரத்தத்தில் உள்ளது. நாம் பெருமை கொள்ளும் கொள்கைகளை செயல்படுத்துவது தான் நம் அரசியல் நோக்கம் என்பதை உணர வேண்டும்.

பஞ்சாயத்து அளவில் அதிகாரப் பகிர்வு பற்றி நாம் பேசும்போது, மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது குறித்த தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன. கிராம மட்டத்தைத் தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்துவது குறித்து திமுக உறுதியாக உள்ளதா?

இந்தத் தேர்தல்கள் முடிந்தவரை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம். எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும், அதிகாரத்திற்கு வந்தபிறகு மற்றொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்க முடியாது. இந்த தேர்தல்களை முடிந்தவரை விரைவில் நடத்த விரும்புகிறோம், வார்டுகளை மறுவரையறை செய்தல் மற்றும் பெண்கள், ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து அதிகாரங்களும் அப்போதைய நகராட்சி நிர்வாக அமைச்சரின் (எஸ்.பி. வேலுமணி) கைகளில் குவிய வேண்டும் என்று அவர்கள் விரும்பியதால் அ.தி.மு.க அரசு தேர்தலை நடத்தவில்லை. முந்தைய அ.தி.மு.க. அரசு வார்டுகளை தவறாக மறுவரை செய்ததில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்தவுடன் தேர்தலை நடத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் முந்தைய நிலைப்பாடு தவறானது என்று இது குறிக்கும் என்பதால் தவறை சரிசெய்யாமல் நாங்கள் தேர்தலை நடத்த முடியாது. ஏனெனில் எங்கள் நிலைபாட்டில் தவறில்லை. 

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நீங்கள் ஆற்றிய உரையில், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதை முன்னிறுத்தி கூட்டாட்சி முறையை வலியுறுத்தினீர்கள். இத்தகைய பேச்சுக்கள் தற்போது பா.ஜ.க.வால் நடத்தப்படும் ஒன்றிய அரசுடன் தி.மு.க.வை மோதல் முறைக்கு தள்ளிவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

ஒருவர் உரையை அது நிகழ்த்தப்பட்ட சூழலுக்கு ஏற்ப பார்க்க வேண்டும். 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தி.மு.க. ஆட்சி அமைந்தது இதுவே முதல் முறை என்பதால், முதல் உரையில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்பினோம். கூட்டாட்சி முறையை வலியுறுத்தவே நான் அங்கு இதை முன்வைத்தேன் என்றோ, மாநிலத்தின் உரிமைகள் குறித்து உரையாற்ற நான் அங்கு சென்றேன் என்றோ நான் சொல்லவில்லை. ஜி.எஸ்.டி பயணத்தின் தொடக்கத்தில் இருந்து ஆதாயங்கள் மற்றும் இழப்புகளை மறு மதிப்பீடு செய்யுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொண்டேன். எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில். ஆதாய இலக்குகள் அடையப்படவில்லை, இழப்புகள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக இருந்தன. எனவே கட்டமைப்பில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இது என சுட்டிக்காட்டினேன். நான் இப்போது இல்லை என்றால் பின் எப்போது? எனக் கேட்டேன். நெருக்கடிகள் ஏதும் இல்லாத காலத்தை விட, ஒரு மாற்றம் அல்லது மறுசீரமைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இப்போது மிகவும் அதிகமாக இருப்பதாக நான் இப்போதும் உணர்கிறேன். 

நான் மோதல் போக்குடன் செயல்பட்டு இருந்தால்,  எனது கருத்துக்களை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகித்து நான் கேட்டுக்கொண்டபடி அதை கூட்டத்தின் நிகழ்வறிக்கையில் நிதியமைச்சர் ஏன் சேர்த்தார்? கூட்டாட்சி முறை பற்றி ஒரு விரிவுரை வழங்கி பாடம் எடுக்கும் நோக்கத்துடன் நான் அங்கு செல்லவில்லை. ஒரு நல்ல குடிமகனாகவும், ஜி.எஸ்.டி கவுன்சிலின் மனசாட்சியுள்ள உறுப்பினராகவும் என் பணியை மேற்கொண்டேன். மற்ற மாநில அமைச்சர்கள் என்னை அலைபேசியில் அழைத்தும் எழுத்துபூர்வமகவும் பாராட்டினர். எனக்கு இந்த நிகழ்வு குறித்து எந்த வருத்தமும் இல்லை. 

ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்களை தி.மு.க முன்வைத்து வருகிறது. நீங்கள் மேற்கொள்ள விரும்பும் சீர்திருத்தங்கள் என்ன?

இந்த அமைப்பில் அடிப்படை குறைபாடுகள் இருப்பதாக நாங்கள் கருதுவதால் ஆழமான சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வரிகள் வசூலிக்கப்படும் விதம், அவை விநியோகிக்கப்படும் விதம் ஆகிய இரண்டும் சிக்கலானவை. சில அதிகாரிகள் விகிதங்களை நிர்ணயித்த பிறகு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வெறுமனே தெரிவிப்பது எங்களுக்கு சரியான வழிமுறையாக தோன்றவில்லை. அவர்கள் இந்த அதிகாரம் எப்படி வந்துது எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டனர் என்று நாங்கள் கேட்கிறோம். அவர்கள் (ஒன்றியம்) அத்தகைய அதிகாரங்களை அதிகாரிகளுக்கு  வழங்கினால், எடுக்கப்படும் முடிவுகளுக்கு குறைந்தபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலை இந்த அதிகாரிகள் பெற வேண்டும். கவுன்சில் தான் இந்த முன்மொழிவை அங்கீகரிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படாத தனிநபர்கள் தீர்மானித்துள்ள விகிதங்கள் பற்றி எங்களுக்கு வெறுமென தெரிவித்துவிட்டு கடந்து செல்ல முடியாது. அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தொடர்புடைய இந்த தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளின் பங்கு என்ன? அமைப்பில் ஒரு அடிப்படை பலவீனம் உள்ளது, மற்றும் மாநிலங்கள் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக பல பிரச்சினைகளில் களமாட வேண்டியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும், இழப்பீடு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கூட நிறைய தொகைகள் நிலுவையில் உள்ளன.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் 'ஒரே மாநிலம், ஒரு வாக்கு' கொள்கை அடிப்படையில் குறைபாடுடையது என்று நீங்கள் எதிர்த்தீர்கள். வாக்களிப்பு மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

மாநிலங்கள் உருவாக்கிய அல்லது பங்களித்த அளவிற்கு, ஜிஎஸ்டி பங்கு விகிதாச்சார அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது தான் நியாயம் என்று நான் நினைக்கிறேன். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் போது விற்பனை மீது மாநில அளவிலான வரி விதிப்பை செய்ய எங்கள் ஒருதலைப்பட்ச உரிமைகளை தியாகம் செய்தது நாம் தான். ஜிஎஸ்டி கவுன்சிலில் தற்போதைய 'ஒரு மாநிலம், ஒரு வாக்கு' முறை நீக்கப்பட வேண்டும், நான் முன்வைத்த வழிகளில் விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் மாற்றப்பட வேண்டும். தற்போதைய முறை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு பல வழிகளில் அநீதி இழைக்கிறது.

திமுக அரசின் கீழ் கோவில் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் வெளிப்படைத்தன்மை குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இந்துகளுக்கு எதிரான கட்சி என வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு திமுகவின் பதில் இதுவா?

தொடக்கத்தில் இருந்தே இந்து சமய அறநிலையத்துறை திராவிட இயக்கத்தின் கீழ் இருந்த முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. கோவில் செயல்பாடு குறித்த புரிதல் இல்லாத யார் யாரோ வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1910களில் இருந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் காலம் முதலே இத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம், இனம் மற்றும் வரலாற்று அடையாளங்களை பற்றி அறிய இந்த கோவில்கள் நமக்கு மிக முக்கியம். எனது கொள்ளு தாத்தா எம் டி சுப்ரமணிய முதலியார் மற்றும் எனது தாத்தா பிடி ராஜன் அவர்கள் முக்கிய பங்கு வகித்த நீதிக்கட்சி மட்டுமல்லாமல், நமது அடையாளத்தின் அடிப்படையான இந்த பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் திமுகவும் கவனம் செலுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு திமுக ஆட்சியில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர் கலைஞர் தான் திருவாரூர் தேரை ஓட வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். 2021இல் மட்டுமல்லாது, 1960கள் முதலே திமுக கோவில்களுக்கென சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம்முடைய அடையாளத்தின் ஒரு பகுதியாக விளங்கும் கோவில்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். எங்கள் தலைவர் செயல்திறன் மிக்க அமைச்சர் திரு பிகே சேகர்பாபு அவர்களிடம் இத்துறையை அளித்து, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இத்துறைக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.  

ஆக, ஒரு அரசியல் நோக்கத்துடனோ பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலடியாகவோ இதை செய்யவில்லையா?

பாஜக நிறுவப்படும் முன்னரே நாங்கள் கோவில்களை பாதுகாத்து வந்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை மசோதா 1920களில் மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சி புரிந்த நீதிக்கட்சியால் கொண்டு வரப்பட்டது. 1920களில் பாஜக என்ற இயக்கம் கூட இருக்கவில்லை. ஆக, எதற்காக அதை செய்தோம்? நான் எடுத்துரைத்தது போல, எங்களது கொள்கைகளுக்காக இதை செய்தோம். மற்றவர்கள் கூறியதற்கு "பதிலடியாக" இதை செய்யவில்லை. ஒரு கட்சி அல்லது ஒரு நபருக்காக தான் அனைத்தும் நடக்கிறது என்று கூறுவது அவர்களின் தற்பெருமையையே காட்டுகிறது.

மதகுரு ஜக்கி வாசுதேவ் பல விதிமுறைகளை மீறுவதாகவும், "Free TN temples" நிகழ்ச்சியை கண்டித்தும் நீங்கள் விமர்சனம் எழுப்பியிருந்தீர்கள். ஆனால், சில தினங்களுக்கு பின் நீங்கள் இதற்கு மேல் அதை பற்றி கருத்து தெரிவிக்க போவதில்லை என்றும் அறிக்கை வெளியிட்டீர்கள். அவர் குறித்து கருத்து தெரிவித்ததற்கு வருந்துகிறீர்களா?

நான் என் நிலைப்பாட்டை மாற்றவில்லை. அவர் (ஜக்கி வாசுதேவ் ) கடவுளை வைத்து பணம் சம்பாதித்து தொழில் செய்பவர். அது குறித்த என்னுடைய கருத்தை நான் மாற்றவில்லை. 10 வெவ்வேறு துறைகள் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.  சில கட்டமைப்புகளின் ஒழுங்குமுறை பற்றி விசாரிக்கும் போது ஈஷா அமைப்பே விதிமீறல்களை ஒப்புக்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களே ஒப்புக்கொண்டு, மத்திய தணிக்கை குழுவே இதை ஆவணப்படுத்திய பின், இதை பற்றி ஏன் வாதாட வேண்டும்? உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி பரவி வந்ததால் நான் இதை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதில் எந்த விதிமீறலும் என் துறையை சார்ந்தது இல்லை என்பதால் இது குறித்து நடவடிக்கை எடுப்பது எனது கடமை அல்ல என்று கூறினேன். ஆனால், இது மேலும் ஒரு பெரிய சிக்கலை குறிக்கிறது. வருமான வரி விலக்கு பெற்ற அறக்கட்டளைகள் சிறப்பு வகை நிறுவனங்களாக கருதப்படுவதால், அரசு தனது ஒழுங்குமுறை பொறுப்பை பல நேரங்களில் துறந்து விடுகிறது. ஒன்றிய அளவில் உள்ள வருமான வரித்துறை மறைமுகமாக மாநில அரசுடன் பதிவாகியிருக்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது நாட்டின் நலனுக்கு எதிரானது.

இந்த அமைப்பு நீண்ட நாள் நிலைக்கக் கூடியது அல்ல. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற பரிந்துரையின் படி முந்தைய அரசு "அறக்கட்டளை ஒழுங்குமுறை சட்டம்" மசோதா பிறப்பித்தது. கடுமையாக மற்றும் மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ள காரணங்களால் நாங்கள் அதை எதிர்த்தோம், அதன் பின் அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. ஆனால் கொள்கை அளவில், இரு நீதிமன்றங்களும் கூறுவது போல, அறநிலையத்துறை & வக்ப் போர்டின் கீழ் வராத தொண்டு அறக்கட்டளைகளை ஒழுங்கு படுத்துவதற்கு மாநில அரசு தனியாக சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை நான் ஆமோதிக்கிறேன். இதற்கென ஒரு சட்டம் தேவை, ஆக நன்றாக வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டத்தை கொண்டு வர நான் முதலமைச்சரிடம் கோரிக்கையை முன்வைப்பேன்.

Source: DeccanHerald.Com

 

 Articles Year Wise: