Published Date: February 8, 2022
கூட்டாட்சி என்ற ஒட்டுமொத்த கருத்தாக்கமே உடைக்கப்பட்டுள்ளது
பொருளாதார மந்த நிலை ஒன்றிய மாநில உறவுகளில் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக ஜிஎஸ்டி சட்டத்தின்படி மாநிலங்களுக்கு 14% இழப்பீடு வழங்கும் காலவரையான ஐந்து ஆண்டு காலம் நிறைவடையும் இந்த சூழலில், கமலிகா கோஷுக்கு அளித்த பேட்டியில் மாநிலங்களின் நலன் கருதி ஜிஎஸ்டி அமைப்பை எப்படி மாற்றி அமைக்கலாம் என்பதைக் கூறுகிறார் தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்.
ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க வேண்டிய காலத்தை ஒன்றிய அரசு நீட்டிக்கவில்லை எனில் மாநிலங்கள் என்ன செய்யும்?
ஜிஎஸ்டி முறையை கடந்த காலங்களில் பலர் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களில் நரேந்திரமோடி மற்றும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரும் முக்கியமானவர்கள். அன்று முதல் இன்று வரை ஜிஎஸ்டி மீதான எதிர்ப்புக்கான காரணங்கள் அது மாநிலங்களின் நிதி சுதந்திரத்தின் பெரும் பகுதியைப் பறித்து விடுகிறது என்பதே.
ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக நல்ல விளைவை உருவாக்கும் எனில் பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் நிதி சுதந்திரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுக்க விரும்புகின்றன. ஆனால் இதன் விளைவுகள் தொடக்கத்திலேயே மோசமாக இருந்தன. கோவிட் தொற்றினால் நிலைமை மேலும் மோசமாகியது. 14% வருவாய் ஆண்டு வளர்ச்சியை ஒரு சராசரி வளரும் பொருளாதாரம் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கோவிட் தொற்றுக்கு முன்பே மோசமான ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகியவை 3 இல் இருந்து 4 ஆண்டுகள் அளவிற்கு வரி வளர்ச்சியை குறைத்து விட்டது. கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டபோது இது மேலும் இருமடங்கு, மும்மடங்கு சரிந்தது.
ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலவரையறை குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காவது நீட்டிக்கவில்லை எனில் மாநிலங்களுக்கு அது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரும் நிதி சீர்கேட்டை விளைவிக்கும். கோவிட் மூன்றாவது அலை கடந்த இரண்டு அலைகளை விட தீவிரம் குறைவாக இருப்பதால் ஒப்பீட்டளவில் சிறிய அளவே பொருளாதார பாதிப்புகளை விளைவிக்கும் என்று யூகித்துக் கொண்டாலும் கூட தமிழ்நாடு போன்ற மாநிலங்களால் இந்த சூழலை சமாளிக்க முடியும். ஆனால் பல மாநிலங்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும், மற்றும் மத்திய அரசின் மனசாட்சியே ஏற்கனவே பாதிப்படைந்துள்ள மாநிலங்களுக்கு மேலும் நெருக்கடிக்யை உருவாக்கிவிடும் என நான் நினைக்கவில்லை.
ஜிஎஸ்டி கட்டமைப்புக்கு வெளியே மாநிலங்களால் வளர முடியுமா?
நிச்சயமாக ஜிஎஸ்டி க்கு முன்பே நாங்கள் அதை சாதித்து காட்டியுள்ளோம். நிச்சயம் ஜிஎஸ்டி இல்லாமல் எங்களால் வளர்ச்சியை அடைய முடியும். ஆனால், அதே சமயம் நாங்கள் நாடு முழுமைக்கும் எது சரியானதோ அதைச் செய்ய விரும்புகிறோம். மக்களின் நன்மையை மனதில் கொண்டு ஜிஎஸ்டி குறித்த நீண்ட விவாதம் மேற்கொள்ளவும், அதில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டு வரவும், இன்னபிற வழிகளை முயற்சிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். டிசம்பர் 31 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏற்கனவே கவுன்சிலில் அறிவிக்கப்பட்டு ஆனாலும் முறையாக செயல்படுத்தாத பல விஷயங்கள் குறித்த பிரச்சினையை எழுப்பினேன். உதாரணமாக சூதாட்டம், இணைய வழி விளையாட்டுகளுக்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது. ஆனால் அக்குழு ஒரு முறை மட்டுமே கூட்டப்படுகிறது. முன்பே நடைமுறை சிக்கல்களால் அதற்கு வழங்கப்பட்ட கால வரையறையான ஆறு மாதங்கள் முடிவடைந்துவிட்டது. ஜிஎஸ்டி முறை அனைத்து மக்களையும், அனைத்து பொருட்களையும் உள்ளடக்க முயற்சிக்கிறது. இது தவறான வரையறை மற்றும் தவறான நோக்கமாக இருக்கலாம்.
தற்பொழுது மது மற்றும் பெட்ரோல் போன்றவற்றை தவிர்த்து மற்ற அனைத்தும் ஜிஎஸ்டி யின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, ஆனால் பெரும்பாலும் மாநிலங்களுக்குள்ளே கையாளப்படும் விஷயங்களை ஜிஎஸ்டி அமைப்பிற்கு வெளியே வைத்தால்தான் அவற்றை மேலும் சிறப்பாக கையாள முடியும்.
ஜிஎஸ்டி நிதி கூட்டாட்சி கோட்பாட்டிற்கு நன்மை விளைவிக்குமா?
பிற பெரிய நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா, அரசியலமைப்புச் சட்டம் என்ற அளவில்கூட நிதி கூட்டாட்சியில் சிறப்பான நிலையில் இல்லை. நிதியை பொருத்தவரையில் முதலாளித்துவ நாடான அமெரிக்கா மற்றும் கம்யூனிஸ்ட் நாடான சீனாவை விட குறைந்த அளவே கூட்டாட்சித் தன்மை கொண்டதாக நமது நாடு உள்ளது. அமெரிக்காவில் நகராட்சியால் வருமான வரி வசூலிக்க முடியும், நேரடி விற்பனை வரி அங்கே ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாவட்டத்திற்கும் வேறுப்படும். சீனாவில் தேசிய அளவிலான வங்கி உரிமம் என்கிற ஒன்றே கிடையாது, மாநில அளவில் வங்கி உரிமங்களைப் பெற வேண்டும்.
ஜிஎஸ்டி அமைப்பில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் வரி வருவாய் பங்களிப்பின் விகிதம், மாநில உற்பத்தியின் அளவு, மக்கள்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகள் வழங்கப்படாமல் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்கிற நடைமுறை உள்ளது. ஜனநாயகம் என்பது ஒரு மனிதருக்கு ஒரு வாக்கு என்பதே தவிர, ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு அல்ல. ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற என்ற நடைமுறை உள்ளவரை ஒன்றிய அரசு விரும்பாத எந்த முடிவையும் நிறைவேற்ற வாய்ப்பில்லை. ஒன்றிய அரசு விரும்பாத ஒன்றை நிறைவேற்ற மொத்தம் உள்ள 14 மாநிலங்களில் 12 மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும்.
நடைமுறையில் ஒன்றிய அரசுதான் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் ,எவையெல்லாம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. சிறிய மாநிலங்கள் அல்லது வறுமையில் உள்ள பெரிய மாநிலங்கள் தங்கள் நிதி நிலைக்கு ஒன்றிய அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களையே நம்பி இருக்கின்றன. எனவே பணக்கார மாநிலங்களிலிருந்து பங்கை பெற்று தங்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஒன்றிய அரசை நம்பியுள்ள சிறிய மற்றும் ஏழை மாநிலங்கள் ஒருபோதும் அதற்கு எதிராக வாக்களிக்க சாத்தியமில்லை. இந்த நடைமுறை யதார்த்தத்தின் மூலம் கூட்டாட்சி என்ற ஒட்டுமொத்த கருத்தாக்கமே உடைக்கப்படுகிறது.
செஸ் மற்றும் சர்சார்ஜ் போன்ற மேல் வரிகள் வரி பகிர்மானதிற்குள் சேர்க்கப்படவேண்டுமா?
அவை நீக்கப்பட்டு, அடிப்படை வரிவிதிப்பு விகிதமாக மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் நம் அனைவருக்கும் வர வேண்டிய நிதியை பெற முடியும். இல்லையெனில் வசூலிக்கப்பட்ட மொத்த வரியில் 20% அளவுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகுப்பிலிருந்து நீக்கப்படும்.