Published Date: September 4, 2022
CATEGORY: POLITICS
பிரதமர் நரேந்திர மோடியின் “ரேவடி(இலவசங்கள்) கலாச்சாரம்” பற்றிய கருத்துக்குப் பிறகு இலவசங்கள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு நலத் திட்டங்களிலிருந்து இலவசங்களை வேறுபடுத்த முற்பட்டுள்ளது. மாநில நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய அரசின் தோல்வியடைந்த கொள்கைகள் எவ்வாறு பொருளாதாரம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை பாதிக்கிறது என்பதை THE WEEKக்கு அளித்த பேட்டியில் விளக்கினார். நேர்காணலின் பகுதிகள்
மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
அவர்கள் ஆட்சி அமைத்த முதல் நாளில் இருந்தே ஒட்டுமொத்த பொருளாதாரமும் கிட்டத்தட்ட மிகவும் மோசமாக நிர்வகிக்கப்படுகிறது என்றே கூறுவேன். குஜராத் மாடல் ஆழமான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வளர்ச்சியாக, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இல்லை மாறாக தலைகீழான வளர்ச்சியாக இருந்தது. அத்தகைய முறைகேடான உள்பேர வர்த்தகதை கொண்ட, குரோனி-முதலாளித்துவ மாதிரியை தேசிய அளவில் செயல்படுத்த முடியாது.
இப்போது, நாம் ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத மாதிரியில் சிக்கிக் கொண்டுள்ளோம். பலரிடமிருந்து விலகிச் சிலரை நோக்கி நாம் சாய்ந்திருப்பதைக் காணமுடிகிறது . கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான மொத்த வரிவிதிப்பு மற்றும் நேரடி வரிகள் வெகுவாகக் குறைந்து, சாமானியர்களின் மீதான சுமை அதிகரித்துள்ளது. இதேபோல், மாநிலங்களுடான ஒத்துழைப்பு, மாநிலங்கள் சிறப்பாகச் செய்யக்கூடிய பணிகளை அவர்களே செய்ய அனுமதிக்கும் நிலை ஒழிக்கப்பட்டுள்ளது. டில்லி ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்பதும் , ஒரே தேசம் ஒரே கொள்கை என்கிற போக்கும் கட்டமைப்புரீதியாகவே குறைபாடுடையது. இது நிச்சயம் தோல்வி அடையும், அது எப்போது என்பதும், எவ்வளவு சேதத்தை உருவாக்கும் என்பதே இங்கு கேள்வி.
தனிநபர் வருமான வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP), ஏற்றுமதி, மூலதன முதலீடு, மூலதன உருவாக்கம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுடைய புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டு, அதற்கு முந்தைய 10 ஆண்டுகளுடைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதைய நிலை மோசமானதாகவே இருக்கும். பாஜக ஆட்சிக்கு முந்தைய 10 வருடங்கள் மிகச் சரியானதாக இருந்தது என்று நான் கூறவில்லை ஆனால் கடந்த எட்டு வருடங்கள் அதைவிட மோசமாக இருந்தன. எந்த அளவிற்கு மைய அதிகாரக குவிப்பை மேற்கொள்ள முயற்சித்து, நள்ளிரவில் ஜிஎஸ்டி நடைமுறைபடுத்துவது மற்றும் ஒரே இரவில் பணமதிப்பு நீக்கம் போன்ற கதைகளையாடல்களை மேற்கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு நல்ல விளைவுகளை உருவாக்குவது குறையும். இது இயற்பியலில் இயக்க விதிகள் போன்றது
குறிப்பாக இது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதித்தது?
நாங்கள் இந்திய ஒன்றியத்தின் அங்கமாகத்தான் உள்ளோம். அதனால் நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டால், நாங்களும் மோசமாகப் பாதிக்கப்படுவோம். குறிப்பாக பார்க்கவேண்டுமானால், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தேசிய அளவில் அவர்கள் தொடங்கியுள்ள பல திட்டங்களில் இருந்து எங்களுக்கு எந்த பயனையும் கிடைப்பதில்லை , ஏனென்றால் அந்த துறைகளில் தேசிய சராசரியை விட நாங்கள் மிகவும் முன்னால் இருக்கிறோம்.
கடந்த காலங்களில் எங்களது வரிப்பணத்தில் ஒரு பகுதி மானியங்களாகவும் திட்டங்களாகவும் வழங்கப்பட்டது, அத்தோடு வரி பங்கீட்டு தொகையும் கிடைத்தது. ஆனால், இப்போது ஒன்றிய அரசு ஒருவகையில் பங்கீட முடியாத செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தையே அதிகம் நம்பியிருப்பதால், தமிழகம் தன நிதி தேவைகளை சொந்தமாக நிர்வகிக்கும் திறன் குறைக்கப்படுகிறது. எங்கள் கைகளை கட்டிப்போட்டு சுயமாக செயல்பட முடியாதவர்களாக ஆக்குகிறார்கள,. அவர்கள் டெல்லியில் இருந்து அனைத்து முடிவுகளையும் எடுக்க விரும்புகிறார்கள். இது ஏறக்குறைய மக்களின் உரிமைகளைப் பறிக்கும் காலனித்துவ மனநிலைக்கு ஒப்பானது.
நிதி மோசமாகப் பாதிக்கப்பட்டால், மானியங்களையும், இலவசங்களுக்காகச் செலவிடும் பணத்தையும் குறைப்பது அறிவுடைமை அல்லவா?
எது இலவசம், மானியம், எது முதலீடு என்பதை எதைவைத்து முடிவு செய்கிறீர்கள் என்பதே எனது கேள்வி. நான் இலவசப் பள்ளிக் கல்வியை கொடுத்தால், அது முதலீடா அல்லது மானியமா? இந்த முழு விவாதமும் நேரத்தை வீணடிப்பதாகும், FRBM சட்டமும் (நிதிப் பொறுப்புடைமை மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம், 2003) அதற்கிணையான மாநில அளவிலான சட்டங்களும், கட்டுப்பாடுகளும் நம்மிடம் ஏற்கனவே உள்ளன. அதாவது உங்கள் வருவாய்க்கு உட்பட்டு மட்டுமே செலவு செய்தாகவேண்டும். FRBM சட்டத்தின் முதன்மைத் தேவை பூஜ்ஜிய வருவாய் பற்றாக்குறை மற்றும் 3 சதவீத நிதிப் பற்றாக்குறை என்பதாகும்.
எனவே சட்டத்தை பின்பற்றினால், நிதி நிலை சுயமாகவே சமநிலையை அடைகிறது; நீங்கள் இதை அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ செலவு செய்ய முடியாது. சட்டத்தை மீறினால், அச்சுறுத்தல் உள்ளது, ஆனால் அது மாநிலங்களுக்கு அல்ல, ஒன்றியத்துக்கு. ஏனென்றால், ஒன்றிய அரசால் FRBM சட்டத்தை திருத்த முடியும், அதை யாரும் மறுதளிக்க முடியாது. அதேசமயம், மாநிலங்களில், அதற்கிணையான சட்டங்களை நாங்கள் திருத்த விரும்பினால், கவர்னர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் அம்மசோதாக்களில் கையெழுத்திட வேண்டும் , ஏற்கனவே அவர்கள் அந்த பணியை சரிவர செய்வதில்லை - அவர்கள் அரசியலமைப்பை மீறி, தாங்களே முடிவுகளை எடுக்கிறார்கள், அவ்வாறு அவர்கள் செய்யக்கூடாது. சட்டமன்றத்தின் எந்த சட்டத்தை ஏற்க வேண்டும் எதை ஏற்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபர்கள் தீர்மானிப்பது முற்றிலும் சர்வாதிகாரத் தன்மைகொண்டது, அரசியலமைப்புக்கு விரோதமானது மற்றும் ஏற்க இயலாத காரியமாகும்.
அதற்கு மேல் அவர்கள் ஒரு மாநிலம் கடன் பெறுவதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலைக் கோரும் அரசியலமைப்பின் 293 (3) பிரிவை மாநிலங்களின் கடன் வாங்கும் நடைமுறைகளில் தங்களை நுழைத்துக்கொள்ள பயன்படுத்துகின்றனர். எனவே, 5 சதவீதம் வரை கடன் வாங்க எங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட சட்டத்தில் மாநில சட்டசபை திருத்தம் கொண்டு வந்தாலும், ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஆனால், வரி விவேகம் மற்றும் நிதி ஒழுக்கத்தை இழந்துத்தான் மக்கள் நல திட்டங்களை உருவாக்க முடியுமென கூற வருகிறீர்களா?
நான் அப்படி கூறவில்லை. நான் கூறவருவதை வேறு வார்த்தைகளில் முன்வைக்கிறேன். நிதிப்பற்றாக்குறை எந்த அளவிற்கு இருக்கவேண்டும் என்பதை ஏற்கனவே FRBM சட்டம் மற்றும் அதற்கு இணையான மாநில அளவினாலான சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் ஒன்றிய அரசு விரும்பாத ஒன்றை மாநிலங்கள் செய்வதைத் தடுக்க அவர்களிடம் இரண்டாவது கருவியாக அரசியலமைப்பின் 293 (3) பிரிவு உள்ளது. இதற்குமேல் இதுகுறித்து விவாதிக்க என்ன இருக்கிறது?
திமுக அரசு மக்கள் நலக் கொள்கையை எவ்வாறு கையாள்கிறது?
இல்லை, மக்கள் நலக் கொள்கை என்றில்லை. மக்கள் எங்களைத் ஒரு வேலையைச் செய்வதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே பொது நிதியை சிறந்த முறையில் செலவழிப்பதற்கான வழிகளை நாங்கள் கண்டரிகிறோம், ஏனென்றால் சட்டமன்றங்கள்தான் அதைச்செய்ய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. எனவே, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்து ஒப்புதல் பெறுகிறோம். இதை நீங்கள் மக்கள் நலக் கொள்கை என்றோ, இலவசங்கள் என்றோ அல்லது உங்கள் புரிதலைப் பொறுத்து எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். குறிப்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. அவற்றை மக்களுக்காகத்தான் செய்கிறோம். நாங்கள் யாருக்கும் எந்த தத்துவத்தையும் விளக்க வேண்டியதில்லை. நாங்கள் செயல்படுகிறோம், அதைத் தொடர்வோம். அதனால்தான் நான் ஆட்சியில் இருக்கிறோம். எங்களது செயல்கள் சரியானதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
அப்படியானால், பிரதமர் ஏன் அதை ரேவ்டி கலாச்சாரம் என்று அழைக்கிறார்?
இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. வாரணாசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி கூறுவது தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட்டில் நிறைவேற்றியவற்றயும் மீறிய அதிகாரம் கொண்டதென அரசியலமைபுச் சட்டத்தில் ஏதேனும் ஷரத்து உள்ளதா? அதற்கான சட்டம் எங்கே? தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக சட்டமன்றம் தான் அங்கீகரிக்கிறது என்று அரசியல் சாசனம் கூறுகிறது. தமிழகத்தைச் சார்ந்த எம்.பி.க்கள்கூட அதில் தலையிட முடியாது; அதற்கான அரசியலமைப்பு உரிமை அவர்களுக்கு அல்ல. பிறகு எந்த அடிப்படையில் வாரணாசியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் தமிழக அரசிடமோ அல்லது தமிழக மக்களிடமோ அவர்கள் தங்கள் பணத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்பதைக் குறித்து அறிவுரை சொல்ல வேண்டும்.
அவர் ஒரு நிர்வாகியாகப் பேசுகிறார் என்று நீங்கள் கூறினால், அரசியலமைப்புச் சட்டததையும்’தாண்டி நாங்கள் ஒருவர் சொல்வதைக் கேட்க வேண்டிய அளவிற்கு அவரிடம் அப்படி என்ன சாதனை வரலாறு உள்ளது என்பதைக் காட்டுங்கள். ஒருவேளை அவர் அரசியல்வாதியாக பேசினால்,அவரி தன்னுடைய அரசியலை பேசட்டும். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.
பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
இது வீட்டிலிருந்து வெளியே சென்று வேலை செய்யவும், யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் பயணம் செய்யவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது அவர்களுக்கு வேலை மற்றும் தனி வாழ்வை சமநிலைப்படுத்த உதவுகிறது. எனவே, பொருளாதாரம் மற்றும் வீட்டைத் தாண்டிய சமூக நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவிற்கு மேம்பட்டுள்ளது.
எனவே, இது ஒரு ‘இலவசம்’ ஆகாது இல்லையா?
மீண்டும் கூறுகிறேன் 'இலவசம்' என்பது அர்த்தமற்ற சொல். பிரதமருக்கு இதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளார் எனில், கடந்த வாரம் உத்திர பிரதேச முதல்வர் ஏன் இலவச திட்டங்களை அறிவித்தார்? ‘ நான் ஒன்றைச் செய்தால் அது நல்லது, அதையே நீ செய்தால் கெட்டது, என்றும் எவரும் சொல்ல முடியாது, இது போலித்தனமாகும். இதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
தமிழகம் வளங்கள் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சந்தை சார்ந்த பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கு பிடிப்பது ?
எங்களது ஜிஎஸ்டிபியில்(மொத்த மாநில உற்பத்தியில்) 3 சதவீதம் அல்லது 3.5 சதவீதத்துக்கு மேல் கடன் வாங்க முடியாது என்று சட்டம் சொல்கிறது. இதில் விவாதிக்க என்ன உள்ளது? எனது ஜிஎஸ்டிபியில் 12 சதவீதத்தை நான் கடனாக வாங்கி அதை எப்படி திருப்பிச் செலுத்துவது என்று கவலைப்படலாமா? கடன் வாங்கும் திறன் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றில் நாங்கள் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளோம். இந்நிலையில் கூடுதல் சுமை பற்றிய கேள்விக்கான தேவை என்ன? நீங்கள் ஒழுங்காக நிர்வகித்தால், நீங்கள் இன்னும் சில அந்நியச் செலாவணிகளைப் பெறுவீர்கள். மோசமாக நிர்வகித்தால் குறைவான அளவிற்கே பெறமுடியும். எட்டு வருட தொடர் வருவாய் பற்றாக்குறையை நாங்கள் சந்தித்திருந்தோம். நாங்கள் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பற்றாக்குறையை குறைத்துள்ளோம், இந்த ஆண்டு அதை மேலும் குறைப்போம். நான் வரம்பற்ற கடன், வரம்பற்ற செலவு மற்றும் வரம்பற்ற பட்ஜெட் ஆகியவற்றை ஆதரிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தப் பிரச்சனை உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. தமிழ்நாடு மட்டும் இந்த பிரச்னையை சந்திக்கவில்லையே? ஒரே வித்தியாசம் தமிழகத்தில் கடந்த 7-8 ஆண்டுகாலம் முழுமயான நிர்வாகமின்மையும் நிர்வாக சீர்கேடும் நிலவியதுதான். இதற்கு நான் செல்வி ஜெயலலிதாவைக் கூட குற்றம் சொல்லவில்லை. 2014-ல் அவர் சிறைக்குச் சென்ற பின்னர் 2021-ம் ஆண்டு வரை ஆட்சி நடத்தியவர்கள் மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். புள்ளிவிவரங்கள் என் கருத்தை ஆதரிக்கின்றன. அக்ககால கட்டத்தில் வருவாய் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே வந்தது. 2014 முதல் 2021 வரை, ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறை புதிய சாதனையைப் படைத்தது. அது நிதிநிலையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது, ஒவ்வொரு புள்ளிவிவரத்தையும் அதிகரித்தது - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் 16 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்ந்தது. வருவாயில் வட்டி செலுத்துதல் பங்கு 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்ந்தது. நாம் குறைக்க வேண்டியயை இவைகள்தான்.
தமிழக மின்சார வாரியம் முழு சிக்கலில் உள்ளது. இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? மானியங்களும் பிணையெடுப்புகளும் இதற்குக் காரணம் என்று நினைக்கிறீர்களா?
நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது நாங்கள் உருவாக்கிய சிக்கல் அல்ல. 15 வருடங்களாக மாற்றப்படாத கட்டனகளை நாங்கள் திருத்தியுள்ளோம். கசிவை தடுக்க முயற்சித்து வருகிறோம். கண்காணிக்கக் கூடிய ஸ்மார்ட் மீட்டர்களை நோக்கி நகர்ந்து வருகிறோம். எனவே சீரமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
முந்தைய அரசாங்கம் கடந்த ஏழு ஆண்டுகளில் TNEB இன் கடனை ரூ.40,000 கோடியிலிருந்து ரூ.1,45,000 கோடியாக உயர்த்தியுள்ளது. மேலும் இங்கு மிகப்பெரிய கட்டமைப்பு ரீதியான திறன் போதாமை உள்ளது. நான் இதை அரசியல் செய்யவில்லை - இதற்கு முந்தைய ஆட்சிகளும் இந்நிலைக்கு காரணமாக இருக்கலாம்.
ஜிஎஸ்டி நடைமுறை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
ஜிஎஸ்டியின் கருத்தாக்கம் முதல் அதன் வடிவமைப்பு மற்றும் அமலாக்கம் வரை அனைத்துமே சீரற்ற முறையில் செய்யப்பட்டன. உதாரணமாக, ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு பரிந்துரை வழங்கும் அமைப்பு மட்டுமே என்றும், அது சட்டமன்றத்தின் அதிகாரங்களை மீற முடியாது என்றும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறியது உண்மைதான். இன்னொரு உதாரணம் தருகிறேன். நான் கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் தொடர்பான அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளேன். ஆன்லைன் கேமிங்கிற்கு தேசிய அளவிலான கொள்கையும், தேசிய அளவிலான வரி விகிதமும் இருக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஏனெனில் "ஆன்லைன் விளையாட்டு" என்பது ஒரே மாநிலத்தில் செயல்படுவது என்று சொல்வது கடினம். ஆனால் பெரும்பாலான கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் புறவியல் ரீதியாக ஒரு மாநிலத்திற்குள்ளே அமைந்துள்ளன. நான் ஒரு தேசிய அளவிலான சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயத்தில் ஈடுபடும் நிறுவனம் வைத்திருந்தால், அதை வெவ்வேறு மாநிலங்களில்,வெவ்வேறு துணை நிறுவனங்களைக் கொண்டு அவற்றை மாநில சட்டங்களுக்கு உட்பட்டதாக நிர்வகிக்க முடியும். எனவே, இதுபோன்ற செயல்பாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரங்கள் மாநில அரசிடம் இருக்கும் போது, ஏன் வரி விதிப்பு மட்டும் ஜிஎஸ்டியின் கீழ் இருக்க வேண்டும்; பெட்ரோல், டீசல், மதுபானங்கள் போன்று மாநில வரி விதிப்பின் கீழ் ஏன் இருக்கக் கூடாது?
மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் செய்யப்படும் பொருட்களுக்கு, ஜிஎஸ்டி விதிக்கப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக பால், அது ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய அளவில் விற்கப்படுகிறது எனில் தேசிய அளவில் வரி விதிக்கப்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு கிராமத்தில் இருந்து வரும் பால் மற்றொரு கிராமத்தில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டால், ஏன் தேசிய அவாவில் வரி விதிக்க வேண்டும்? மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும், வடமாவட்டங்களிலும் ஏன் ஒரே மாதிரியான வரி இருக்க வேண்டும்.
எனவே, ஜிஎஸ்டியின் லட்சியம் உயர்வானது ஆனால் செயலாக்கம் குறைபாடுடையது. ஒரு நாடாக நாம் இதனை மேம்படுத்துவதற்கும், செயல்படுத்துவதற்கும் போதுமான நேரத்தையும், வளங்களையும், மனித வளத்தையும் செலவிடவில்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியதுள்ளது.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தங்களது உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன. தங்களுக்கான நிதியை விடுவிக்க ஒன்றியத்திடம் கையேந்த வைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் . இதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
நான் இதை பாஜக ஆளாத & பாஜக ஆளும் மாநிலங்கள் என வேறுபடுத்தி பார்க்கவில்லை. எல்லா மாநிலங்களுக்குமான பிரச்சனை என்றே கூறுவேன். ஒன்றியத்தின் திட்டங்களை நிறைவேற்றும் முகவர்களாக மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் அணுகுமுறையாக உள்ளது. இது அரசியலமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கூட்டாட்சி முறைக்கும் எதிரானது. இது நிச்சயமாக பலநிலைகளினான அரசாங்கம் என்கிற உணர்வுக்கு எதிரானது. நம் நாட்டை உருவாக்கிய தந்தைகள் நம் அரசியலமைப்பில் எங்கும் டில்லியில் ஒரு புதிய காலனித்துவ நிலப்பிரபு அமர்ந்துக்கொண்டு யார் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவார் என்று கற்பனை செய்ததில்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்தில், மாநில அரசும் , ஒன்றிய அரசும் தனித்தனியாக இருந்தாலும் சமமான அரசுகளாக உள்ளன. ஒன்று மற்றொன்றின் கிளை நிறுவனமல்ல.
எனவே , 2014ல் இருந்து ஒட்டுமொத்த அணுகுமுறையும் மாநிலங்கள் மீதான நேரடித் தாக்குதல் மற்றும் மாநிலங்களை கிளை நிறுவனமாக்கும் நேரடி முயற்சியாகும். ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், பாஜக முதல்வர்கள் ஏன் இதற்கெதிராக அழுத்தம் கொடுக்கவில்லை என்பதுதான். உத்தரபிரதேசம் அல்லது குஜராத் முதல்வர்கள் கட்சி ஒழுங்குக்காக தங்கள் மாநில நலன்களை தியாகம் செய்ய தயாரா? அவர்கள் ஏன் தங்கள் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் மாநில மக்கள் நலன் பற்றி பேசுவதில்லை?
பா.ஜ.க.வை எதிர்க்கும் மாநில கட்சிகள் துன்புறுத்தப்படுவதாக நினைக்கிறீர்களா?
சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் பிற முகைமைகள் அரசியலாக்கப்படுகிறதா? அல்லது ஒன்றிய அரசின் ஆயுதமயமாக்கப்படுகிறதா? என்று நீங்கள் கேட்டால், ஆம் என்பதே பதில். இப்படி விசாரணையில் இருந்த நிறைய பேர் பிஜேபியில் சேர்ந்த பிறகு சுத்தமானவர்களாக வெளியே வந்தார்களா? என்று கேட்டால் நிச்சயம் ஆம் என்றுதான் பதில் வரும். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பல்லாயிரக்கணக்கான நிலுவைகளை வைத்துள்ளபோதிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது புதிய வழக்குகளை பதிவு செய்கின்றன என்பது எனக்குத் தெரியும்.
Media: The Week