Published Date: December 5, 2021
CATEGORY: HUMAN RESOURCES POLICY
"அரசு துறைகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் தேர்ச்சி கட்டாயம் என கொண்டு வந்தது ஏன்? என்பது குறித்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் விளக்கம்
அரசு துறைகளுக்கான அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ்மொழித்தாள் தேர்ச்சி கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டது,
இந்த புதிய முறை கொண்டுவந்தது ஏன்? என்பது குறித்து சென்னையில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவாது:-
தமிழ் புலமை இல்லை
அரசு பணிகளில் அமரக்கூடிய, தினமும் தமிழக மக்களை அணுகக்கூடிய பொறுப்புகளில் இருப்பவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தரத்தில் 40 சதவீதம் புலமை இல்லை என்றால், அந்த பொறுப்புக்கு பொருந்தாது. அதை செயல்படுத்தும் வகையில் தமிழ்மொழித்தாள் தேர்ச்சி கட்டாயம் என்று கொண்டுவரப்பட்டு இருக்கிறது. சில சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. உதாரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழ் புலமை இல்லாமல் பணிக்கு சேர்த்திருக்கின்றனர். அதை திருத்தும் வகையில் இந்த அரசாணை அமையும். இது சமூக நீதியையும், அனைவருக்குமான வாய்ப்பையும் அதிகரிக்கும். அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு அதிகரிக்கும். ஏதோ ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் பணியாற்றவில்லை.
அரசு பணியாளர்கள் நிரந்தரம்
அரசுப் பணிகள் மிகவும் முக்கிய பணிகள். அரசியல்வாதிகள் தற்காலிகம், அரசுப் பணியாளர்கள் நிரந்தரம். அவர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதுதான் எங்களுக்கு நியாயமாக தோன்றியது. இதில் பாதிப்பு இருப்பவர்கள் கோர்ட்டை நாடுவது அவர்களுடைய உரிமை.
எந்த ஒரு நிர்வாகம், அரசாங்கத்துக்கும் பணம் எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு மனிதவளமும் முக்கியம். அதனால் பணியாளர்களை சரியான வகையில் தேர்வு செய்து. பயிற்சி கொடுக்க வேண்டும். அது அரசின் கடமை. கொரோனா காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசுப் பணிகள் தொடர்பான அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
அடிப்படையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. அரசுப் பணிக்காக பயிற்சி பெற்று காத்திருப்பவர்களின் வேதனை, தாகம் எனக்கு புரிகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விரும்புகிறார்.
சில திருத்தங்கள் வரும்....
தமிழ்நாடு அரசில் ஒதுக்கப்பட்ட அரசுப் பணியிடங்கள் சுமார் 14 முதல் 15 லட்சம். அதில் தற்போதுள்ள எண்ணிக்கை சுமார் 9 லட்சம் தான். கிட்டத்தட்ட 35 சதவீதத்துக்கு மேல் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இப்போது வயது வரம்பை உயர்த்தி இருக்கிறோம். இன்னும் சில வாரங்களில் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான அட்டவணை வெளிவரும். டி.என். பி.எஸ்.சி., மாநகராட்சி, பேரூராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம் என ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதி முறை என்றால் அது நல்லதுக்கு இல்லை. இவை அனைத்தையும் நிலையாக மாற்றுவோம் என்று கூறியிருக்கிறோம். அதை நிறைவேற்றுவோம்,
எனவே இது போன்ற தேர்வுப்பணிகளில் பல்வேறு விவாதங்கள் எழுந்து இருக்கின்றன. இப்போது இருக்கும் தேர்வு முறைகள் அனைத்தும் இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றது இல்லை . இதை மாற் றுவதற்கு ஆலோசித்துக் கொண்டு இருக்கிறோம். சில திருத்தங்களும் வரும். முதல் அமைச்சரோடு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை கொண்டுவர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்."
Media: DAILYTHANTHI