/

GSTயில் கட்டமைக்கப்பட்ட சிதைவுகள் ஏன் நொறுங்கி விழுகின்றன?

Published Date: June 7, 2021

ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை அல்லது GST வருவாய் தொகுப்பிற்கு அதன் பங்களிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வாக்களிப்பதற்கான விகிதாசார பிரதிநிதித்துவம் GST மன்றத்தில் இருந்திருந்தால், கோவிட் சார்ந்த மருந்துகள், சாதனங்கள் என அனைத்தின் மீதும் எவ்வித வரிகளும் தற்போது இருந்திருக்காது. 

பழனிவேல் தியாக ராஜன், பிரவீன் சக்ரவர்த்தி

 

கோவிட்-19  பெருந்தொற்றை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த பெரும்பாலான நாடுகள் வழக்கமான நடைமுறைகளை நிறுத்திவைத்த நேரத்தில், இந்தியாவில், உயிர் காக்கும் மற்றும் எளிதில் கிடைக்காத பொருட்களுக்கு வரி விதிக்கவேண்டுமா என்பது குறித்த "விவாதத்தில்" GST மன்றம் ஈடுபட்டுள்ளது. கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட அத்தியாவசியமான பொருட்கள் மீதான 0% GST விகிதம் குறித்த ஒருமித்த கருத்து மே 28 அன்று நடந்த கூட்டத்தில் எட்டப்படவில்லை. சில மாநிலங்களின் மன்ற உறுப்பினர்கள் (அமைச்சர்கள்) அத்தகைய தயாரிப்புகள் மீது தொடர்ந்து வரி விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர், சில நேரங்களில் ஆக்ரோஷமாக மீண்டும் மீண்டும் வாதிட்டனர். இந்த மனிதாபிமானமற்ற தன்மையை  GSTயின் சிதைந்த வடிவமைப்பு மற்றும் ஊக்க கட்டமைப்பை கொண்டு விளக்கமுடியும்.

31 மாநிலங்களின் பிரதிநிதிகள் GST மன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். GSTயின் கீழ் (மாநிலங்களில் இருந்து) வசூலிக்கப்படும் வரிகள் ஒன்றிய அரசால் திரட்டப்படுகின்றன. திரட்டப்பட்ட நிதியில் இருந்து ஒரு பகுதி குறிப்பிட்ட ஒரு விதிமுறையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மீண்டும் வழங்கப்படுகிறது. பெரும்பாலான கூட்டாட்சி நாடுகளைப் போலவே, மாநிலங்களுக்கு இடையேயான வரி வசூலிப்பு மற்றும் விநியோகிப்ப்பிலும் ஒரு மிகப்பெரிய சமநிலையற்ற தன்மை இங்கும் உள்ளது. மேலும், GST தொகுப்பிலிருந்து பெறப்பட்ட, பகிர்ந்தளிக்கப்பட்ட வருமானத்திற்கும் இடையிலும் இதே நிலை காணப்படுகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்கள் மீதமுள்ள 27 மாநிலங்களின் ஒட்டுமொத்த பங்களிப்பிற்கு கிட்டத்தட்ட இணையான (~45%) பங்களிப்பை வழங்குகின்றன. பெரும்பாலான கூட்டாட்சி நாடுகளில் இந்த நிலையை காண முடியும். அங்கு ஒரு சில பெரிய, பணக்கார, மாகாணங்கள் அல்லது மாநிலங்கள் விகிதாசாரமற்ற முறையில் பங்களிக்கும். உதாரணமாக, அமெரிக்காவில், கூட்டாட்சி வரி வருவாய்களுக்கு 44 மாநிலங்களின் பங்களிப்பிற்கு இணையான பங்களிப்பை ஆறு மாநிலங்கள்  வழங்குகின்றன. 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயிலும் இரு முக்கிய கூறுகள் உள்ளன - மாநிலத்தின் சொந்த வருவாய் மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் தொகைகள். இதில் ஒன்றியத்தால் சேகரிக்கப்பட்ட வரிகளில் இருந்து வரவேண்டிய பங்கு மற்றும் மானியங்கள் ஆகிய இரண்டும் அடங்கும். மேலே குறிப்பிட்ட மாநிலங்களின் (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா) ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 30 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசிடமிருந்து வருகிறது. ஆனால் மீதமுள்ள 27 மாநிலங்களுக்கு, அவற்றின் வருவாயில் சுமார் 60 சதவீதம் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் தொகைகள் அவற்றின் மொத்த வருவாயில் 80-90 சதவீதமாகும். நடைமுறையில், GST தொகுப்பிற்கு அதிக பங்களிக்கும் மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் இருந்து பெரும் தொகைகளை குறைவாகவே சார்ந்துள்ளன. அதே வேளையில், குறைந்த பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள் அதிகமாக சார்ந்துள்ளன. இத்தகைய நிகர பணப்பரிமாற்றங்கள் இந்தியாவுக்கு தனித்துவமானவை அல்ல. பெரும்பாலான நாடுகளில் இவை வழக்கம் தான் என்றாலும், இந்த அளவிற்க்கான வேறுபாடுகள், பல பத்தாண்டுகளாக தொடர்ந்து  காணப்படுவதில்லை,

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை, இரண்டு தனித்துவமான பிரச்சினைகள் உள்ளன - ஒன்று நீண்ட காலமாக உள்ளது, மற்றொன்று கடந்த ஏழு ஆண்டுகளில் வளர்ந்துள்ளது. நீண்ட கால நிலையின் பிரச்சினை என்னவென்றால், அத்தகைய நிகர பணப்பரிமாற்றங்கள், குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் அல்லது அதற்கும் மேலாக, அதிக அளவில் ஒருதலைப்பட்சமாக மாறிவிட்டன. கிட்டத்தட்ட ஒவ்வொரு கூட்டாட்சி ஒன்றியத்திலும், காலப்போக்கில் மாநிலங்களுக்கு இடையிலான வளர்ச்சியில் வேறுபாடுகளைக் குறைக்க இந்த நிகர பணப்பரிமாற்றங்கள் தேவைப் படுகின்றன. அதாவது, இத்தகைய பணப்பரிமாற்றங்கள் மூலம் மாநிலங்கள் சமமாக மாறுவதால், நிகர பணப்பரிமாற்றங்களின் அளவு காலப்போக்கில் குறைகிறது. ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறான நிலை நீடிக்கிறது. 

கடந்த ஏழு ஆண்டுகளில் ஒன்றிய அரசு இரண்டு நடவடிக்கைகளின் மூலம் இந்தப் பிரச்சினையை மேலும் அதிகரித்துள்ளது. முதலாவதாக, மறைமுக வரிகளின் உள்ளார்ந்த, பிற்போக்குத்தனமான, நியாயமற்ற வரிவிதிப்புகள் காரணமாக நேரடி வரிவிதிப்பின் நியாயமான, முற்போக்கான வழியிலிருந்து விலகி வரிவிதிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மேலும் மோசமாக்க, வரிவிதிப்பின் பெரும் பகுதியை (அதன் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 18 சதவீதம்) செஸ்களின் தொகுப்பாக மாற்றியுள்ளது, இது GST தொகுப்பிற்கு வெளியே இருக்கும் ஒரு சிறப்பு வரி வடிவமாகும், எனவே இந்த பணத்தை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டியதில்லை. 2014ல் இருந்து, செஸ் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் 21 சதவீதம் வளர்ந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கின் அடிப்படையில் இரட்டிப்பாகும். அதாவது, சாதாரண குடிமகன் ஒவ்வொரு ஆண்டும் அதிக வரி செலுத்தி வரும் நிலையில், இந்த வரிகளில் பெரும்பகுதி ஒன்றிய அரசுக்கு மட்டுமே சென்றுள்ளது. 

இந்தப் பிரச்சினைகளின் ஒருங்கிணைந்த விளைவு என்னவென்றால், அனைத்து மாநிலங்களும் (கூட்டாக) ஒட்டுமொத்த வருவாயில் குறைந்த பங்கைப் பெறுகின்றன. மேலும் குறிப்பிட்ட மாநிலத்திலிருந்து ஒன்றியத்தால் சேகரிக்கப்பட்ட வரிகளின் விகிதாச்சாரமாக, ஒன்றியத்திடமிருந்து பெறப்படும் நிதியின் பங்கில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை மாநிலங்கள் எதிர்கொள்கின்றன. இது நிதிய கூட்டாட்சிக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை மட்டுமின்றி "கூட்டுறவு கூட்டாட்சி" மீது கட்டவிழ்க்கபட்ட தாக்குதலும் ஆகும்.

இந்த சூழ்நிலையில் தான் "ஒரு மாநிலம் ஒரு வாக்கு" எனும் மாதிரி (GST தொகுப்பிற்கு ஒரு மாநிலத்தின் பங்களிப்பின் அளவை பொருட்படுத்தாமல் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது) ஏற்கமுடியாத அநீதியை ஏற்படுத்தி வருகிறது. GST மன்றத்திற்க்கான இந்த மாதிரி முந்தைய UPA அரசாங்கத்தால் நிறுவப்பட்டது என்பது உண்மைதான், இது GST எனும் யோசனைக்கு மாநிலங்களை ஒப்புக்கொள்ள வைக்க ஒரு ஊக்கமாக இருந்தது. இது சிதைவை உண்டாக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் இருந்து கிடைக்கும் பணப்பரிமாற்றங்களை அதிகம் சார்ந்திருக்கும் மாநிலங்கள் GST வசூலை அதிகரிக்க விரும்புகின்றன, அதே வேளையில் இந்த பணப்பரிமாற்றங்களை குறைவாக சார்ந்துள்ள மாநிலங்கள் குடிமக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட முடியும். 

கோவிட் பொருட்கள் மீதான வரிகள் இதுபோன்ற வேறுபாடுகளுக்கு அப்பட்டமான ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. பெரும்பாலான பெரிய மாநிலங்கள் மனிதாபிமான அடிப்படையில் இந்த வரி வருவாயை கைவிட தயாராக உள்ளன. இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டு மாநிலங்கள் தங்கள் மக்கள் மீது கோவிட் வரிகளை விதிக்க விரும்பவில்லை.

ஆனால் மீதமுள்ள 30 சதவீத மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 19 மாநிலங்கள் கோவிட் தயாரிப்புகளுக்கு தொடர்ந்து GST விதிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. இவை பெரும்பாலும் சிறிய மாநிலங்கள். அவற்றின் அரசாங்கங்கள் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் ஒரே அரசியல் அணியாக உள்ளன. இதுபோன்ற மாநிலங்களின் சிறிய மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டால், கோவிட் வரிகளின் பாதகமான தாக்கம் அவர்களுக்கு குறைவாக இருக்கும். ஆனால் பெரிய மாநிலங்களின் மிகப்பெரிய மக்கள்தொகைக்கு விதிக்கப்படும் கோவிட் பொருட்கள் மீதான GST வருவாயின் நன்மைகளை இவர்கள் அறுவடை செய்வார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் கோவிட் பெருந்தொற்றிற்கு தொடர்ந்து மடிந்து வரும் நிலையில், இந்த பிரச்சினை GST மன்றத்தின் அமைச்சர்கள் குழுவிற்கு (குழுவின் அமைப்பே வரி வேண்டும் எனும் நிலையை எடுப்போரை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது) விவாதத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது ஒரு "சிறுபான்மையினர் உரிமைகள்" (சிறிய மாநிலங்களின்) பிரச்சினை அல்ல. மக்கள் வரி செலுத்துகிறார்கள். அரசாங்கங்களை அல்ல. ஒரு ஜனநாயகத்தில் மக்களின் தேவைகளையும், கனவுகளையும் தான் வரிக் கொள்கைகள் பிரதிபலிக்க வேண்டும். GST மன்றத்தில் ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை அல்லது GST வருவாய் தொகுப்பிற்கு அதன் பங்களிப்பின் அடிப்படையில் வாக்களிப்பதற்கான விகிதாசார பிரதிநிதித்துவம் இருந்திருந்தால், கோவிட் பொருட்கள் மீதான வரி தற்போது இருந்திருக்காது. 

எந்த கூட்டாட்சி கட்டமைப்பிலும், ஒன்றிய அரசு நியாயமான நடுவர் பொறுப்பை  வகிக்க வேண்டும். நேரடி வரிக் கொள்கை முடிவுகள் சார்ந்து பாராளுமன்றத்தில் சட்டமியற்றப்படும் போது, மாநிலங்களின் மக்கள்தொகைக்கேற்ப விகிதாசார பிரதிநிதித்தும் கடைபிடிக்கப்படும் போது, மறைமுக வரிக்கொள்கை முடிவுகள் ஏன் "ஒரு மாநிலம் ஒரு வாக்கு" விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்? GSTயின் கீழ் "ஒரு மாநிலம் ஒரு வாக்கு" கட்டமைப்பு ஏற்கமுடியாதது. அது தற்போது நொறுங்கி விழுந்துவருகிறது. 

ஜூன் 7, 2021 அன்று "Uncooperative Federalism" என்ற தலைப்பில் INDIAN EXPRESSல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

Source: IndianExpress.com

 

 Articles Year Wise: