ஊக்கத்துடனும் நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்றுவீர்: ஆதார பயிற்சி தொடக்க விழாவில் அமைச்சர் பேச்சு

Published Date: December 2, 2021

CATEGORY: EVENTS & CONFERENCES

பயிற்சியே முயற்சியின் முதல்படி’ என்பதை உணர்ந்து தலைசிறந்த பணியாளர்களாக  

ஊக்கத்துடனும் நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்றுவீர்!

ஆதார பயிற்சி தொடக்க விழாவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

 

நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதாரப் பயிற்சி தொடக்க விழாவில் பேசியதாவது:

மனிதவள மேலாண்மை என்பது ஒரு நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நியமித்தல், பயிற்சி அளித்தல், அங்கீகரித்தல், ஒழுங்குபடுத்துதல் என்கின்ற நான்கு தூண்களின் அடிப்படையில் செயல்படுவதே மனிதவள மேலாண்மை.

எங்கெல்லாம் மனித வள மேலாண்மை சிறப்பாக இருக்கிறதோ அங்கெல்லாம் பணிகள் முயல் வேகத்தில் முடுக்கி விடப் படுகின்றன. மக்கள் மகத்தான பணிகளையும் ஈடுபாட்டோடு செய்கிறார்கள் .அவர்கள் மிகக் கடினமான பணியைக்கூட விரைவில் முடித்து விடுகிறார்கள். அதனால் தான் உலகெங்கிலும் தற்போது மனிதவள மேலாண்மை அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!

சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தகுதியும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது ,மிகவும் சிரமமான சூழலிலிருந்து தன்னுடைய முயற்சியால் முன்னுக்கு வந்தவர்களாகவும் இருக்கவேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசு பணியை உடனடியாக புரிந்து கொண்டு செம்மையாக செயலாற்றி விட முடியாது .அவர்கள் பணியை குறித்து பயிற்சி பெறவேண்டும் நிர்வாகத்தின் நுணுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும். பயிற்சியினால் மட்டுமே அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியாது. நம்மைச் சுற்றியுள்ள மூத்த அலுவலர்களிடம் நமக்குத் தெரியாத அவற்றைக் கேட்டறிந்து கொள்ள வேண்டும்.. அப்போதுதான் அவர்கள் எந்தக் கோப்பையும் சிக்கலில்லாமல் செயல்படுத்த முடியும். அரசுப் பணியை பொறுத்தவரை அது மிகவும் முக்கியமான ஒன்று. எண்ணற்ற எளிய மக்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்துகிற வாய்ப்புகள் கொண்டது.

 

பணியாளர்கள் அனைவருமே பதிலளிக்க கட்டுப்பட்டவர்கள். ஆங்கிலத்தில் அக்கவுண்டபிலிட்டி என்று கூறுவார்கள். நாம் எந்த கோப்பை எப்படி கையாளுகிறோம் என்பது இன்று அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிற சூழல் உருவாகிவிட்டது .நாம் எழுதுகிற ஒவ்வொரு எழுத்துமே பகிரங்கப்படுத்தப்படும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதை மனதில் வைத்து நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் கடமையாற்ற வேண்டும்.நேர்மையாகவும் ,உண்மையாகவும் செயல்படுவது அவசியம்.எந்தக் காரணத்தைக் கொண்டும் விதிகளை மீறக்கூடாது.

 

யாருக்காகவும் வளைந்து கொடுக்கக் கூடாது!

யாருக்காகவும் அனாவசியமாக வளைந்து கொடுக்கக் கூடாது. முடிந்த அளவிற்கு நாம் ஒரு நேர்வு குறித்து அனைத்து விதிகளையும் நீதிமன்ற தீர்ப்பு களையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்தக் கோப்பில் தெளிவாகவும் விரிவாகவும் குறிப்புகளை எழுத வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாலாயமாக கையாளக்கூடாது.

 

மொட்டைக் கைப்யொப்பம் போட்டு விடக்கூடாது.

நாம் எந்தெந்த விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அறிமுகப்படுத்துகிற ஒரு நிகழ்வுதான் ஆதாரப் பயிற்சி. இது ஒரு பாலம் தானே தவிர இதுவே ஊர் அல்ல .இது அடித்தளம் தானே தவிர, கட்டடம் அல்ல. இது வெற்றுத் தாள் தானே தவிர அச்சடிக்கப்பட்ட புத்தகம் அல்ல .இது வரை படம் தானே தவிர ,போய் சேருகிற இடம் அல்ல இது அரிசி தானே தவிர, அறுசுவை உணவு அல்ல. இது குற்றால அருவியின் படமே தவிர குளியல் போடுகிற அதன் சாரல் அல்ல.

 

இறுமாப்புடன் கையாளக் கூடாது!

இதை உணர்ந்து ஆதார பயிற்சியை முடித்து விட்ட காரணத்தால் அனைத்தும் தெரிந்து கொண்டோம் என்ற இறுமாப்புடன் கோப்புகளை கையாளக் கூடாது.

நாம் முதற் படியை முழுமையாக ஏறி விட்டோம் என்று திருப்தி வேண்டுமானால் அடையலாம். ஆதாரப் பயிற்சியைப் பொறுத்தவரை இங்கே வருகிற அலுவலர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். நறுமணம் மிக்க பூங்காவில் மல்லிகை மலர்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிற ஒருவன் அதன் வாசனையை உள்வாங்கிக் கொள்வதற்கு நன்றாக காற்றை உள்ளிழுத்து விடுவது போல இந்த பயிற்சியில் அனுபவம் வாய்ந்த  பயிற்றுனர்களிடமிருந்து எவ்வளவு திறக்க முடியுமோ அவ்வளவு நீங்கள் உறிஞ்சு கொள்ளுங்கள் .ஒரே மலைதான் கற்களில் பெய்தால் வழிந்தோடி விடுகிறது. களிமண்ணில் பெய்தால் அது உறிஞ்சு விடுகிறது.

 

பாத்திரத்தில் பெய்தால் குடிநீராகிறது.பாத்தியில் பெய்தால்  பயிர்களுக்கு உயிர் நீராகிறது கடலில் மறுபடியும் முகிலாகிறது.இங்கே அனுபவம் வாய்ந்தவர்களை நீங்கள் பாத்தியாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா அல்லது கட்டந்ததரயாகக் கருதி விடப் போகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

 

கரும்புச் சாறு பருகி அவர்களுக்கு ஒரு செய்தி தெளிவாகத் தெரியும். கரும்பை ஒருமுறை மட்டும் அதை அரைக்கும் இயந்திரத்தில் செலுத்தினால் கால்வாசி கரும்புச்சாறு கூட கலத்தில் வராது. மீண்டும் மீண்டும் செலுத்தி கரும்புச்சக்கை ஆகும்வரை பிரிந்தால்தான் முழுமையாக சாறெடுக்க முடியும். எனவே,திரும்பத் திரும்ப பயில்வதன் மூலம் தான் பொறுப்பான அரசு பணியை செய்ய முடியும்.பயிற்சியைப் பொறுத்தவரை நாம் சிறிது கற்றாலும் நடைமுறைப்படுத்தப்படும் போது தான் அது ஆழமாக மனதில் பதியும்

அனுபவம்தான் ஒன்றை முழுமையாக்குகிறது.மனிதன் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறான்.நீங்கள் பணியில் சேர்கிற போது பயிற்சியாக அதைக் கருதிக் கொண்டால்,ஒவ்வொரு கோப்பிலும் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். அதன் மூலம் நீங்கள் பெற்ற பயிற்சி முழுமை அடையும்.

இதயத்தை கடற் பஞ்சாக வைத்திருங்கள்!

ஒவ்வொர் அலுவலகத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட பலர் இருப்பார்கள். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு விதிகளை சொல்வார்கள். ஒரே நொடியில் நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டுவார்கள். அவர்கள் கல்வித்தகுதி அதிகம் இருக்காது. ஆனால் அனுபவமோ கடல் போல் விரிந்திருக்கும். பயிற்சி பெருகிற நீங்கள் 'நான் நிறையப் படித்திருக்கிறேன்'. இவர்களைவிட எல்லாம் படித்து பட்டம் பெற்றிருக்கிறேன் என்று நினைத்தால் அந்த மகத்தான மனிதர்களிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாது. உங்கள் இதயத்தை கடற்பஞ்சாக வைத்திருங்கள்; அனைத்தையும் உறிஞ்சு கொள்ள முடியும். சிக்கலான கோப்புகள் வருகிறபோது அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சிலருடைய அறிவு நமக்கு சிக்கிமுக்கி கற்களாக இருக்கும். அவர்களிடம் அறிவுரை கேட்டு பழைய கோப்புகளை புரட்டி தெளிவாக குறிப்பு எழுதுகிற திருப்தியே அலாதியானது.

 

ஆதார பயிற்சியின் போது நீங்கள் எத்தகைய முக்கியமான பணியில் சேர்ந்திருக்கிறீர்கள் என்பது தெரியும். கற்றுக் கொள்வது எப்போதும் தொடர்ந்து நடக்க வேண்டிய ஒன்று என்பதையும் நீங்கள் உணர முடியும். அரசு நிர்வாகம் அனைவருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்ட ஒன்று. இன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த ஒரு நபரும் நீதிமன்ற வில்லையை ஒட்டி நம் கோப்புகளில் இருந்து தகவல்கள் கேட்கலாம். எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் .பொறுப்புணர்வுடன் கோப்பைக் கையாள வேண்டும்.ஒரு காகிதம் நம்மிடம் இருக்கும் வரைதான் ரகசியமானது. அலுவலர் கையொப்பமிட்ட பிறகு அது பொதுமக்களுக்குச் சொந்தமானதாகி விடுகிறது. ஒருகாலத்தில் அரசு ஆணையை அந்த அலுவலகம் மட்டுமே அறியும். ஆனால் இன்று இணையதளத்தில் அது உடனே வெளியிடப்பட்டு பட்டி தொட்டிகளில் இருக்கிறவர்களும் அறிந்து கொள்ள முடிகிறது.

உழைப்பை உன்னத உடற்பயிற்சி!

இதையெல்லாம் மனதில் வைத்து நீங்கள் பணியாற்ற வேண்டும். உழைப்பை உன்னத உடற்பயிற்சி. அடுத்தவர்களுக்காக நீங்கள் பணியாற்றினால் நீங்கள் வேலைக்காரர்களாக இருப்பீர்கள். உங்களுக்காகப் பணியாற்றினால் எஜமானர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் சொல்வதற்காக நாம் பணியாற்ற வேண்டும் என்று நினைக்காமல் நம் திருப்திக்காக, நம்முடைய மகிழ்ச்சிக்காக ,நம்மால் எளிய மக்கள் இதழ்களில் புன்னகை சிந்த வேண்டும் என்பதற்காக நீங்கள் பணியாற்ற தொடங்கினால் அலுவலகத்திற்கு வருவதற்கு ஆசையாய் இருக்கும். உற்சாகத்துடன் அலுவலகம் வந்து விட்டு திருப்தியுடன் இல்லம் திரும்பி விடுங்கள். அப்போது நீங்கள் பெருகிற ஊதியம் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

ஒரே பணியில் இருந்தாலும் நன்றாக பணியாற்றுபவர்களை மேல் அதிகாரிகளும் கௌவுரமாக நடத்துகிறார்கள். நம் பணியின் தரத்தைப் பொருத்தே நமக்கு மதிப்பு கூடுகிறது என்பதை உணருங்கள்.

உண்மையை விட உயர்ந்த நெறி இல்லை!

நாம் காளைகளின் கொம்பைப் பிடித்து அடக்குகின்ற பணியாளர்களாக இருக்க வேண்டும். சவால்களைச் சந்திக்க வேண்டும்.நெருக்கடிகள் நெருங்குகிற போது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போராட வேண்டும். கடினமான பணிகள் வருகிறபோது களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். நீங்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்ற வேண்டும். நேர்மையை விட உயர்ந்த நெறி இல்லை.

நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் வருபவர்களை கனிவோடு நடத்துங்கள். கருணையோடு நடந்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன நிலைமை என்பதை யோசித்துப் பாருங்கள்.

அப்போதுதான் அவர்களுக்கு விரைவாகவும் நிறைவாகவும் தீர்வு காண முடியும். ஆதார பயிற்சியைப் பவானிசாகரில் வழங்குவது தான் நடைமுறை. பணியாளர்கள் மாலைப் பொழுதிலும் தங்களுக்குள் கலந்து பேசி இன்னும் சிறப்பாக அலுவலக நடைமுறைகளை தெரிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால் பயிற்சியைப் பெற வேண்டியவர்கள் நிறைய இருக்கிற காரணத்தால் பரவலாக்கப்பட்ட பயிற்சி முறையை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரீட்சார்த்தமாக செய்தது. இது பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த அரசு அறிவித்ததற்கு இணங்க , இப்போது பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைபப்தற்காக , மீண்டும் அந்த நடைமுறையை சென்னையில் இன்று நான் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் முழு முயற்சியுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதற்காக வகுப்பறைகளைத் தந்து, பயிற்சியாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய கிருஷ்ணசாமி கல்லூரி தாளாளர் அவர்களையும், முதல்வர் அவர்களையும் மனதாரப் பாராட்டி நன்றி கூற விரும்புகிறேன்.' பயிற்சியே முயற்சியின் முதற்படி' என்பதை உணர்ந்து நீங்கள் இப்பயிற்சியில் வெற்றி பெற்று தலைசிறந்த பணியாளர்களாக ஆக வேண்டும் என்று என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.

 

Media: Murasoli