/

நீட்டின் கொடூரமும் பகுத்தறிவற்ற கொடுங்கோன்மையும்

நீட் என்னும் ஆத்திரமூட்டும் கபடநாடகம் நமது விருப்பத்திற்கு எதிராக சர்வாதிகார முறையில் நம் மீது திணிக்கப்படுகிறது.

Published Date: September 15, 2020

மருத்துவ சேர்க்கைகளுக்கான வருடாந்திர தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு (நீட்) நடைபெறவிருந்ததற்கு முந்தைய நாள், மருத்துவ படிப்பைக் கனவாகக் கொண்ட ஜோதி ஸ்ரீதுர்கா, ஆதித்யா, மற்றும் மோத்திலால் ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்த செய்தி என்னில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி, இவர்களைப்போன்ற மாணவர்களிடையே காணப்படும் மன உறுதியின்மை குறித்து புலம்பவும், ஒரு தேர்வை எதிர்கொள்ளும் மன அழுத்தம் காரணமாக இதுபோன்ற தீவிர முடிவுகலை எடுப்பது ஏற்கக்கூடியதாக இல்லை என்று அறிவுரை வழங்கவும் பலரைத் தூண்டியது.

ஆனால் இந்த மூவரும் முதல் முறையாக இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அல்ல. முன்னர் சந்திக்காத ஒரு அறியப்படாத சோதனை ஏற்படுத்தும் பகுத்தறிவற்ற அச்சத்தின் காரணமாக இந்தக் கடுமையான முடிவை அவர்கள் எடுக்கவில்லை. இவர்கள் ஒவ்வொருவரும் முன்பே நீட் தேர்வை எடுத்திருந்த போதிலும் மருத்துவக் கல்லூரியில் சேர தேவைப்படும் மதிப்பெண்களைப் பெறத் தவறிவிட்டனர். பின்னர் ஒரு முழு ஆண்டை (ஒருவர் மட்டும் இரண்டு ஆண்டுகள்) தேர்வுக்கு தயாராகும் பொருட்டு எடுத்துகொள்ள முடிவுசெய்து (பெற்றோர் வழங்கிய முக்கிய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு) மீண்டும் நீட் முயற்சிக்குத் தயாராவதற்கு முடிவு செய்தனர். எனவே, அவர்களின் இந்த அபாயகரமான முடிவு மிகக்குறுகிய துன்பகரமான, வழிமுடிந்த ஓர் பாதையை குறிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிப்படிப்பின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களில் மருத்துவம் சார்ந்த பாடங்களைத் தேர்ந்தெடுத்த காரணத்தினாலும், கூடுதல் ஆண்டு(கள்) நீட் மீது மட்டுமே கவனம் செலுத்திய காரணத்தினாலும், மருத்துவ படிப்பிற்கு இணையான மற்ற படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பைத் தவறவிட்டனர். வாய்ப்புகளை குறுகிக்கொண்ட நிலையில், நாம் இம்முறையும் மருத்துவ சேர்க்கைக்கான "கட்-ஆஃப்" மதிப்பெண்களை கடக்க மாட்டோம் என்ற பயமும், அதுபோன்ற ஓர் விளைவு ஒரு இருண்ட எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சமும், அந்த இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை பெரிதும் பாதித்திருக்கும்.

இந்த மாணவர்களின் எண்ணங்களை பொறுத்தவரை, அவர்களைப் போன்ற பலருக்கும், மருத்துவராக வேண்டும் என்ற உன்னதமான கனவை நோக்கி அவர்கள் செல்லும் பாதை விரக்தியின் தாழ்வாரமாக நீண்டு கனவுகளின் தூக்கு மேடையான NEETஐ அடைகிறது.

 

 

NEETஐ நம் மீது திணிக்கும் - அதிகரித்துக்கொண்டே செல்லும் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் டெல்லி பாஜக அரசாங்கமும், உணர்வற்ற உச்சநீதிமன்றமும் - இந்நிலைக்கு பெருமளவில் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும், ஒட்டுமொத்த சமூகமும் வேதனை நிறைந்த மனநிலையில் தான் இருக்கும். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு, நம் இளைஞர்களுக்கு இவ்வளவு வேதனையை ஏற்படுத்திய ஒரு அமைப்பின் முழுமையான அறிவீனத்தில் இருந்து விடுவிக்க முடியாமல் போகும் விரக்தி, இந்த துக்கத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

எதற்காக நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கிறோம்?

ஒரு அடிப்படை கேள்வியுடன் தொடங்குகிறேன்: IIT-JEE அல்லது IIM-CAT (தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் என அழைக்கப்படுபவை) போன்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொதுவான தேர்வுகள் ஏன் தேவை? தரப்படுத்தப்பட்ட தேர்வுகளின் நோக்கம், ஒரு சீரான மதிப்பீட்டு அளவை (சமமான நிலை) உருவாக்குவதோடு, பல்வேறு கல்வித் திட்டங்களிலிருந்து (உதாரணமாகசிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில வாரியம்) விண்ணப்பித்த மாணவர்களை மதிப்பிட உதவும் என்பது தான்.

தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் இந்தியாவிலும் உலக அளவிலும் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது, இத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது NEET தேர்வு சற்று புதியது.

இந்த காலகட்டத்தில், தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் ஒரு முன்கணிப்பை உண்மை என்று பலமுறை நிரூபித்துள்ளன: அதிக மதிப்பெண்களை பெற்ற விண்ணப்பதாரர்கள் ஒரு கல்லூரியில் அனுமதிக்கப்படும் போது, அந்த பாடநெறி நிறைவுக்கான தேவைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால் விண்ணப்பதாரர்களை வேறுபடுத்துவதற்கு கல்லூரிகள் விரும்பாத/பயன்படுத்தாத பரிமாணங்களில் உள்ளார்ந்த பாகுபாடு இருப்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர் - செல்வாக்கு மற்றும் இன/சமூக அடையாளம். சமீபத்திய கட்டுரை ஒன்று இந்த பாகுபாடு குறித்து பெருகி வரும் ஆதாரங்களை எடுத்துரைத்தது. இந்த ஆதரங்களினால் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியா பல்கலைக்கழகம் அதன் சேர்க்கை செயல்பாட்டின் போது இதுபோன்ற தேர்வு மதிப்பெண்களின் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றியுள்ளது.

இந்தியாவின் IIT-JEE மற்றும் IIM-CAT ஆகியவற்றின் வெளிப்பாடு மற்றும் முடிவுகளில் சாதி மற்றும் பொருளாதார நிலை சார்ந்த சலுகைகளின் தாக்கத்தை நிரூபிக்கிறது. இந்திரா நூயி, மற்றும் சுந்தர்பிச்சை போன்ற தமிழர்கள் அமெரிக்காவில் குடியேற நுழைவு வாயிலாக இருக்கும் GRE, TOEFL, மற்றும் GMAT போன்ற சர்வதேச தரநிலை தேர்வுகளின் முடிவுகள், சாதி மற்றும் பொருளாதார செல்வாக்கில் உள்ள சலுகைகளுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த கட்டுரையில் நான் விரிவாகக் கூறியுள்ளேன்.

முழு வெளிப்பாட்டிற்காக எனது சொந்த கல்வி பயணத்தில் Regional Engineering College அல்லது REC யில் (தற்போது NIT திருச்சி) நான் பயின்ற பொறியியல் கல்வி அடங்கும் என்பதை நான் பதிவு செய்ய வேண்டும். பொது ஒதுக்கீட்டின் கீழ் மதிப்பெண் தகுதி அடிப்படையில் நான் 1983 இல் அனுமதிக்கப்பட்டேன். அப்போது மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, நுழைவுத்தேர்வை அல்ல. வெளிநாட்டு படிப்பிற்கான சேர்க்கைக்குத் தேவைப்படும்போது நான் பல தரப்படுத்தப்பட்ட தேர்வுகளையும் (GRE, TOEFL & GMAT) எழுதியுள்ளேன், மேலும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில், நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பொது) மற்றும் MIT ஸ்லோன் ஸ்கூல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (தனியார்) மேலாண்மை படிப்புகளுக்கு அனுமதி பெற போதுமான அளவு சிறப்பாக செயல்பட்டேன்.

எனது பன்னாட்டு கல்வி பயணத்தின் எந்த கட்டத்திலும் தரநிலைப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே சேர்க்கையைத் தீர்மானிக்கும் அளவுகோலாக இருந்ததில்லை. உண்மையில், 1987 (எம்.எஸ்) மற்றும் 1997 (எம்பிஏ) ஆகியவற்றில் எனது விண்ணப்பங்களில் தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தில் கணிசமான குறைப்பு இருந்தது - இதுபோன்ற தேர்வுகளில் உள்ளார்ந்த பாகுபாடுக்கான சான்று இது.அப்போதிருந்து உலகளவில் பல பல்கலைக்கழகங்கள் இத்தகைய தேர்வு மதிப்பெண்களைக் குறிப்பிடுவதை விருப்பமாக்கியுள்ளன, அல்லது தற்போதைய COVID19 தொற்றுநோய்க்கு முன்பே அவற்றை முற்றிலுமாக நீக்கியுள்ளன. தொற்றுநோய்க்குப் பிறகு இவற்றின் நிராகரிப்பின் வேகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் அனைத்து நெருக்கடிகளும் தேர்வு நடத்துதல் மற்றும் எடுத்துக்கொள்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை சீர்குலைக்கின்றன, இதனால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் (பொருளாதார ரீதியாக, மருத்துவ ரீதியாக) பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் பயன்பாட்டை பொறுத்தவரை உலகில் இந்தியா தனித்து நிற்கிறது. முதலாவதாக, இதுபோன்ற தேர்வுகள் மூலம் மட்டுமே கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான ஒரே நுழைவுப்பாதையாக பயன்படுத்தப்படும் சில நாடுகளில் இந்தியா ஒன்றாகும். இரண்டாவதாக, இதுபோன்ற தேர்வுகள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அல்லது நீதிமன்றங்களால் கட்டளையிடப்பட்டு நடத்தபடும் ஒரு அரிய நாடு.

இந்தியாவில் உள்ள கட்டாய தரப்படுத்தப்பட்ட தேர்வுகளை பொறுத்தமட்டும் கூட, நீட் மூன்று முக்கியமான அம்சங்களில் IIT-JEE அல்லது IIM-CAT ஆகியவற்றிலிருந்து மிகவும் வேறுபடுகிறது. பொறியியலுக்கான IIT-JEE மற்றும் மேலாண்மை ஆய்வுகளுக்கான IIM-CAT ஆகியவற்றின் அம்சங்கள்:

1) ஒரு சில குறிப்பிட்ட கல்லூரிகள் சேர்க்கைக்கு மட்டும் இது தேவைப்படுகிறது (அனைத்து பொறியியல் கல்லூரிகள் அல்லது மேலாண்மை படிப்புகளுக்கும் அல்ல)

2) இந்த கல்லூரிகளுக்கு 100% மத்திய அரசு நிதியளிக்கிறது (மாநிலங்கள் அல்ல)

3) எந்தவொரு தனியார் கல்வி நிறுவனமும் இந்த தேர்வுகளின் முடிவுகளைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்படவில்லை

இதன் விளைவாக, ஒருவர் JEE அல்லது CATல் படு தோல்வியடைந்தாலும், அல்லது அத்தேர்வுகளை எழுதவே இல்லையென்றாலும், இந்தியா முழுவதும் பொறியியல் அல்லது மேலாண்மை படிப்புகளில் ஏராளமான வாய்ப்புகளை பெறக்கூடும். தமிழ்நாட்டில், நூற்றாண்டு காலமாக திகழ்ந்து வரும் திராவிட கொள்கைகள் நூற்றுக்கணக்கான கல்லூரிகளை தொடங்க வழிவகுத்தன. மேலும் கல்லூரி மாணவர்கள் சேர எந்த நுழைவுத் தேர்வையும் எடுக்க வேண்டியதில்லை என்ற நிலைப்பாடு (மத்திய அரசு நிதியளிக்கும் நிறுவனங்களான IIT-JEE மற்றும் IIM தவிர). இத்தகைய கல்வித்திட்டம் தமிழ்நாட்டின் மூன்றாம் நிலைக் கல்வி (கல்லூரி) மட்டத்தில் மொத்த சேர்க்கை விகிதத்தை 49% ஆக உயர்த்துவதில் பெரும்பங்கு வகித்துள்ளது, இது அமெரிக்காவின் 47% ஐ விட அதிகமாக உள்ளது, அது மட்டுமின்றி இந்தியாவின் மாநிலங்களில் 26% சராசரியை விட மிகவும் சிறப்பானது. உண்மையில், இந்தியாவின் மாநிலங்களுக்குள், தமிழகம் பெரிய இடைவெளியைக் கொண்டு #1 இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு நேர்மாறாக, மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் வலியுறுத்துவது என்னவென்றால் இத்தகைய நுழைவுத் தேர்வு மத்திய அரசு 0% நிதியளிக்கும் மருத்துவ கல்லூரியானாலும் சரி அல்லது 100% மாநிலங்களால் நிதியளிக்கப்பட்ட மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களானாலும் பின்பற்றபட வேண்டிய கட்டாயமுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவ சேர்க்கைகளுக்கும் ஒரே தேர்வு அடிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இது நீட் தேர்வு செயல்படுத்தப்படும் முறையில் அதன் சர்வாதிகார அடக்குமுறையை வெளிபடுத்துகிறது.

நான் அறிந்த வரை, இந்தியாவில் வேறு எந்த தேர்வும், அல்லது உலகில் எங்கும் , நீட் போன்ற ஒற்றை தேர்ச்சி முறையைக் கொண்டதில்லை. இந்தியாவின் உயர்நிர்வாகிகளில் பெரும்பகுதியை உருவாக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் கூட இரண்டு தேர்ச்சி முறைகளைக் கொண்டுள்ளன - தேர்வு எழுதுதல் மற்றும் நேர்காணல் சுற்று.

நீட் தேர்வு எல்லா இடங்களிலும் சர்வ வல்லமையுள்ளதாக உள்ளது, எனவே கனவுகளைக் கொன்று, வாழ்க்கை தொடங்கும் முன்னரே அதை அழிக்கும் ஒரு சக்தியாக உள்ளது (மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டில் மட்டும் நீட் தொடர்பான 12 மாணவர் தற்கொலை நிகழ்வுகள் நடந்துள்ளன).

இது மட்டுமின்றி, நீட் தேர்வின் அடக்குமுறை தன்மைக்குள் இன்னும் பல அடுக்குகள் உள்ளன.

நான் இங்கே விவரித்துள்ளபடி, இந்தியா உலகில் மிகவும் அதிகார மையப்படுத்தப்பட்ட, குறைந்த-கூட்டாட்சி கொண்ட பெரிய நாடு. 2014 க்கு முன், குஜராத்தின் அப்போதைய முதலமைச்சரான (& தற்போதைய இந்தியப் பிரதமர்) பாஜகவின் நரேந்திர மோடி, கூட்டாட்சி வாதத்தை ஆதரிக்கும் உரத்த குரலாக இருந்தார். ஆனால் அவரது பதவி மாற்றத்திற்குப் பிறகு, திரு. மோடி தனது போக்கை 180 டிகிரி மாற்றியமைத்துள்ளார், இப்போது இந்திய வரலாற்றில் முன்னர் இல்லாத ஒரு சர்வாதிகார, கூட்டாட்சி எதிர்ப்பு தலைவராக உள்ளார்.

குடிமக்கள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளில் புதிய ஊடுருவல்கள் மிகவும் கச்சிதமாக இயற்றப்படுகின்றன (சமீபத்தில் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கை ஒரு எடுத்துக்காட்டாகும்). பல நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் இந்த வளர்ந்து வரும் சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகத்தின் சரிவு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளன.

கல்வியைப் பொறுத்தவரை மருத்துவத் துறை பல வழிகளில் தனித்துவமானது, ஒருங்கிணைந்த மருத்துவமனை இல்லாமல் எந்த மருத்துவக் கல்லூரியும் இயங்க முடியாது. அரசு சுகாதார மையங்களில் உள்ள நோயாளிகள் (ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் சிறப்பு மருத்துவமனைகள் வரை) உள்ளூர் மொழியை மட்டுமே பேச வாய்ப்புள்ளது, எனவே இந்த மையங்களில் பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்களும் உள்ளூர் மொழியில் உரையாட வேண்டும். மற்றும் பல்வேறு காரணங்களுக்காக, மருத்துவம் ஒரு மாநில மற்றும் உள்ளூர் மட்டத்தில் கையாள்வதற்கு மிகவும் பொருத்தமானது, மேலும் மருத்துவக் கல்வி டெல்லியில் உள்ள அரசாங்கத்தின் தொலைதூரக் கட்டுப்பாட்டுக்கு பதிலாக ஒவ்வொரு மாநிலத்தாலும் (சுதந்திரத்தின் போது வடிவமைப்பால் மொழியியல் ரீதியாக வேறுபட்டது) நிர்வகிக்க மிகவும் பொருத்தமானது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தனிநபர் தேவை பல காரணங்களுக்காக அதிகமாக உள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டலாம். ஒன்று, உயர்நிலை மற்றும் மூன்றாம் நிலை கல்வி இரண்டிலும் (முன்னர் பட்டியலிடப்பட்ட காரணங்களால்) நமது மாநிலம் தனித்துவமாக உயர் விகிதத்தைக் கொண்டுள்ளது. இரண்டு, பல ஆண்டு கால திராவிட பொது சுகாதாரக் கொள்கைகள் மூலம் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைகள் மற்றும் கற்பித்தல் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. மேலும், நமது நீண்டகால தனித்துவம் படைத்த இடஒதுக்கீடு கொள்கையின் (1920களில் தொடங்கப்பட்டது) காரணமாக, நமது மாநிலத்தின் அனைத்து சமூகங்களிலிருந்தும் பகுதிகளிலிருந்தும் உருவான மருத்துவர்களின் எண்ணிக்கை பரவலாக உள்ளது. ஆயிரம் பேருக்கு ~ 4 என்ற எண்ணிக்கையில் இங்கு மருத்துவர்கள் உள்ளனர். இந்திய சராசரியை விட கிட்டத்தட்ட 6 மடங்கு மேலாகவும் மற்றும் அமெரிக்க சராசரியான 2.6 ஐ விட எண்ணிக்கையில் மேலாகவும் விளங்குகிறது தமிழ்நாடு. இந்த மருத்துவர்கள், மருத்துவப் பணியைக் கனவாகக் கொண்டிருக்கும் அனைத்து சமூகத்தினரையும் பகுதியினரையும் ஊக்குவிக்கும் வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.

இதன் ஒட்டுமொத்த விளைவு கீழேயுள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தமிழகம் பல கோணங்களில் உண்மையிலேயே பல அற்புதமான சாதனைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவிலும், உலகெங்கிலும் இருந்து மருத்துவ சுற்றுலாவிற்காக வருவோர்க்கு ஒரு முக்கிய இடமாக தமிழகம் விளங்குகிறது.

 

பகுத்தறிவு கொள்கை கட்டமைப்பைக் கொண்டு செயல்படும் ஒரு ஜனநாயகத்தில், கீழ்க்கண்டவை நினைத்துப் பார்க்க முடியாதவையாக இருக்க வேண்டும்:

1) மருத்துவ கல்வி மற்றும் சுகாதார முன்னேற்றத்தின் ஒவ்வொரு குறிகாட்டிகளிலும் கிட்டத்தட்ட 50% பின்தங்கியிருக்கும் மத்திய அரசு, அதை விட சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலத்திற்கு, மருத்துவம் போன்ற பொது சேவைகளைப் பாதிக்கும் ஒரு துறையைக் குறித்த கொள்கைகளை திணிப்பது. இது ஒரு தொடக்கப் பள்ளி மாணவன் கல்லூரிப் பாடத்திட்டத்தை தீர்மானிப்பது போல அபத்தமானது.

2) இந்திய அரசியலமைப்பின் படி நாம் கூட்டாட்சி முறையை பின்பற்றி வருகிறோம் (நமது அரசியலமைப்பு பிரிவு 1 இல் “இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று கூறப்படுகிறது). அந்நிலையில், மாநில நிதியுதவியோடு இயங்கி வரும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதும் மாநில சட்டமன்றத்தின் விருப்பத்திற்கு எதிராகவும் மத்திய அரசு, தேர்வுகள் மற்றும் விதிகளை திணிப்பது சட்டவிரோதமான செயல்.

பொதுவாக இத்தகைய கடுமையான அரசியலமைப்பு & இயற்கை நியதிகளுக்கு எதிரான மீறல்கள் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் போற்றப்படும் கடைசி பாதுகாவலர் அமைப்பான நீதித்துறையால் சரிசெய்யப்படும், ஆனால் நமது உச்சநீதிமன்றமோ "திரு. மோடியின் பல்துறை செயல்திறன்" மீதான ஆழ்ந்த வியப்பில் உள்ளது. முன்னாள் நீதிபதி ஒருவர் குறிப்பிட்டது போல, அத்தகைய மீறல்கள் அவர்மேல் இவர்களுக்குள்ள அபிமானம் என்ற மூடுபனிக்குள் ஊடுருவாது.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான நமது தனித்துவமான கொள்கைகள் முறையாக சீரழிந்து விடாது என்பதை உறுதி செய்வதற்கும், எங்கள் கட்சித் தலைவர் திரு மு.க. ஸ்டாலின் இங்கே நீட் செயல்படுத்தப்படுவதைத் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். முன்னாள் முதலமைச்சரின் வாழ்நாள் வரை நீட் தேர்வு தமிழ்நாட்டை நெருங்கவில்லை. ஆனால் அவரது கட்சி சந்ததியினர் அவர் கடந்து சென்றபின் அந்த பணிக்கு தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்தனர், இறுதியாக நீட் தேர்வு 2017 இல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது. மக்களின் பெருத்த எதிர்ப்புக்குப் பின்னர், அதிமுக (பாஜகவின் கூட்டணி கட்சி) அரசு இறுதியாக செயல்பட்டது, மருத்துவ சேர்க்கை செயல்பாட்டில் நீட் பயன்பாட்டை நிராகரிக்கும் மசோதாவை தமிழகத்தின் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது. ஆனால், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில், இந்திய ஜனாதிபதி - எந்தவொரு காரணத்தையும் கூறாமல் - ஒப்புதலை வழங்காமல் நிறுத்தி வைத்தார், இது பொதுவாக ஒவ்வொரு மாநில சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர அரசியலமைப்புச் சட்டத்தால் தேவைப்படும் வெறும் சம்பிரதாயமாகும். இது கூட்டாட்சி அரசியலமைப்புக்கான் முறையான எதிர்ப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. அரசியல் நிர்ப்பந்தங்களால் கைகள் கட்டபட்டிருக்கும் ஒரு ஊமைப் பார்வையாளராக தமிழக அரசு திகழ்கிறது.

நீட் தேர்வின் பரிதாபம் என்னவென்றால், நடைமுறைப்படுத்துவதில் உள்ள கடுமையான குறைபாடுகளை அதன் பிழையான நோக்கம் மேலும் சீர்கெடச்செய்கிறது - உள்பரவிய குறைபாடுகள் முதல் (தேர்வெழுத வரும் மாணவிகளைத் தகாத முறையில் பரிசோதிப்பது, தேர்வு கேள்விகளை தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் பெரும் பிழைகள் போன்றவை) வெளிப்படையான மோசடி வரை (“போலி” தேர்வு எழுதுபவர்கள், போலி பூர்விகச் சான்றிதழ்கள் போன்றவை).

சமூக நீதிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் முக்கியமான பாதைகளாக விளங்கும் கல்வி மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திராவிட இயக்கத்தின் தொடர் சட்டத்திட்டங்கள், மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் நீதிக் கட்சி ஆட்சி காலத்திலேயே (பிரிட்டிஷ் அரசு இரட்டை ஆட்சி முறையின் கீழ்) தொடங்கின. அதில் ஒரு பங்காக, 1920களில் முதலமைச்சரும், சமஸ்கிருத அறிஞருமான பனகல் ராஜா, மருத்துவ சேர்க்கைக்கான சமஸ்கிருத-தேர்ச்சி தேவையை (இது பெரும்பாலான மாணவர்களை தடுத்து நிறுத்தக்கூடியது) நீக்கினார். இதன் மூலம் மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் பெண் மருத்துவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட பலருக்கும் மருத்துவ சேர்க்கை வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்று முதல், 2006 ஆம் ஆண்டில் எங்கள் தலைவர் கலைஞர் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை ஒழிப்பதற்கான சட்டத்தை இயற்றியது வரை, மாணவர் சேர்க்கையை மேலும் விரிவுபடுத்துவதற்கான செயல்பாடுகள் பெருகிக் கொண்டே வந்துள்ளன.

நூறாண்டுகள் கடந்த நிலையில், அடக்குமுறை சக்திகளும் ஆதிக்கவாதிகளும் நீட்டைத் தங்களின் உடனடி ஆயுதமாகப் பயன்படுத்தி மீண்டும் பழைய பாணிக்கு திரும்பி, பலருக்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றனர். கடந்த 3 ஆண்டு நிகழ்வுகளின் முன்னேற்றத்தின் இறுதி இலக்கு குறிப்பிடத்தக்க வகையில் தெளிவாக உள்ளது - மாணவர்களின் சேர்க்கை வாய்ப்புகளை மீண்டும் குறைத்து, பணக்காரர்களையும் செல்வாக்கு மிக்கவர்களையும் தவிர வேற எவரும் "மருத்துவ சேர்க்கை பற்றி கனவு கூட காணாதீர்கள்" என்ற வலுவான செய்தியை அனுப்புவதே இதன் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது.

இது மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியோரால் நடத்தப்படும் ஒரு ஆத்திரமூட்டும் கபட நாடகம், சர்வாதிகார முறையில் நமது விருப்பத்திற்கு எதிராக நீட் நம்மீது திணிக்கப்படுவதில் மிகப்பெரிய அநீதி என்னவென்றால் - அவர்களில் ஒருவர் கூட இதுவரை அவர்களது வகிக்கும் பொறுப்பு/பதவியை அடைய ஒரு தரப்படுத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது தான்.

ஆனபோதும், நம்பிக்கை எஞ்சியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முடிவு கொண்டுவருவதாக எங்கள் தலைவர் திரு மு.க. ஸ்டாலின் உறுதிபூண்டுள்ளார். இன்னும் ஒன்பது மாதங்களில், அதாவது மே 2021க்குள், அடுத்த ஆண்டு நீட் க்கு முன்னர் ஒரு பொதுத் தேர்தலை தமிழ்நாடு சந்திக்க உள்ளது. மற்றுமோர் ஒரு விலைமதிப்பற்ற உயிர் கூட தமிழ்நாட்டில் நீட்டின் கொடுங்கோன்மைக்கு இரையாகாமல் இருக்க நாங்கள் பாடுபடுவோம்.

 

Translated from: dailyo.in

 Articles Year Wise: